காருக்கான உதிரிப் பாகங்களை உருவாக்க என்னென்ன பொருட்கள் தேவை எனக் கேட்டால், அனைவரும் இரும்பு, ரப்பர், நெகிழி என்று சொல்வோம். தற்போது அத்துடன் சோளம், கரும்பு, கிழங்கு, கோதுமை, நெல் ஆகியவற்றையும் சேர்த்துச் சொல்லவேண்டும். ஃபோர்டு காருக்கான மெத்தைகள் மற்றும் பெயிண்ட் ஆகியவை சோயாவிலிருந்து உருவாக்கப்படுவதை அறிந்தோம். காரின் கதவில் பொருத்தப்படும் உட்புறப் பைகள் சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து உருவாக்கப்படுகின்றன. ஒலித்தடுப்பானில் நெல் உமியும் ஒரு பாகமாக உள்ளது. அத்தோடு வேறு சில தாவரப் பொருட்களும் காரின் உதிரிப் பாகங்களாகச் சேர்க்கப் பட உள்ளன. கோதுமை வைக்கோலை உயிரிப் பிசினாக மாற்றுவதற்குக் கனடா நாட்டின் பல்கலைக்கழகங்களோடு இணைந்து ஃபோர்டு நிறுவனம் ஆய்வுசெய்து வருகிறது. தேங்காய் நாரை நெகிழியைப் போல மாற்றும் தொழிற்நுட்பமும்; ஐரோப்பாவில் விளையும் டேன்டலியன் எனும் செடியின் வேரிலிருந்து செயற்கை ரப்பர் தயாரிப்பதற்கான தொழில் நுட்பமும் சாத்தியமாகிவிட்டன. இவ்வகை ஆய்வுகள், பிற உணவுப் பயிர்களிலும் நீட்டிக்கப்படலாம். அதனால்தான் தன் காரின் 85% பொருட்கள் மறுசுழற்சிப் பொருட்களால் உருவாக்கப்படுவதாக அந்நிறுவன விளம்பரமொன்று சொல்கிறது. அது சொல்லாமல் சொல்லும் செய்தி - 'இனி விளையப்போகும் பயிர்கள் கார் உருவாக்கத்திற்கே' என்பதுதான். ஒரு காரின் பாகங்களில் பொருத்தப்படும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள், நெகிழியில்தான் உருவாகின்றன. அதனால், 'பயோ பிளாஸ்டிக்' எனும் உயிரி நெகிழி உருவாக்கும் முயற்சிகள் சூடுப்பிடிக்கிறது. ஃபோர்டு நிறுவனம் 2010 ஆம் ஆண்டிலிருந்தும், டொயோட்டா நிறுவனம் 2011 ஆம் ஆண்டிலிருந்தும் உயிரி நெகிழியைத் தம் கார்களில் பயன்படுத்துகின்றன. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் காரின் மொத்த எடையில் 20% அளவுக்கு உயிரி நெகிழியைப் பயன்படுத்தவும் அவை தீர்மானித்துள்ளன. உயிரி எரிபொருள் நிறுவனங்களைப் போலவே, உயிரி நெகிழி நிறுவனங்களும் 'நீடித்த வளர்ச்சி, மறுசுழற்சி, மட்கும் தன்மையுடையன, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்டவை' போன்ற கவர்ச்சிகரமான சொற்களைத் தம் விளம்பரங்களில் பயன்படுத்துகின்றன. மக்களுக்கும் இது முறையான ஒன்றாகவே தோன்றுகிறது. ஆனால், உயிரி நெகிழி எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் அறியவேண்டும். பெரும்பான்மையான உயிரி நெகிழிகள் சோளம், கோதுமை, உருளைக்கிழங்கு, மரவள்ளி போன்ற உணவுப் பொருட்களின் மாவிலிருந்தும்; மரக்கூழ், சணல், பருத்தி ஆகியவற்றின் செல்லுலோசிலிருந்தும்; மரங்கள், சோளம், காகித ஆலை கழிவுப் பொருட்கள் ஆகியவற்றிலுள்ள லிக்னைன் என்கிற தாவரப் பொருளிலிருந்தும்; சோளத்திலுள்ள செய்ன் (Zein) எனும் புரதத்திலிருந்தும் என்று வெவ்வேறு முறைகளில் உருவாக்கப்படுகின்றன. உயிரினங்களுக்குச் சேரவேண்டிய புரதச்சத்து, உயிரற்ற பொருட்களுக்கான நெகிழியாக மாறவுள்ளன. ஆலைக்கழிவிலிருந்தும் இதை உருவாக்குவதாகச் சொன்னாலும், எதிர்காலத்தில் கழிவுகளை உற்பத்தி செய்யவே இங்குப் பயிர் உற்பத்தி மேற்கொள்ளப்படும். 'மறுசுழற்சிப் பொருட்களைப் பயன்படுத்துவதால், நீர் மிச்சமாகிறது' என நிறுவனங்கள் சொன்னாலும், பயிர்களின் 'மறைநீர்' அளவு கணக்கிடப்படுவதில்லை. உயிரி நெகிழி உற்பத்தியில் 30% முதல் 80% அளவு வரை கரிக்காற்று வெளியாவது தடுக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு 22 லட்சம் கிலோ பெட்ரோலியம் மிச்சமாவதாகவும் நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் இவை மட்கும் பொருட்கள் என்றும் அறிவிக்கின்றன. கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது. மட்கும் பொருட்கள் என்ற சொல்லில் ஒரு நுண் அரசியல் உள்ளது. 'டிகிரேடபிள்' அல்லது 'பயோ டிகிரேடபிள்' என்கிற இரு ஆங்கிலச் சொற்களை மட்கிப்போதல் என்கிற சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இரு சொற்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. டிகிரேடபிள் என்ற சொல்லுக்கு 'வேதிப்பொருட்களால் மட்கும் பொருள்' என்பதுதான் உண்மையான பதம். அதாவது, அவை நுண்ணுயிர்களால் மட்குவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் மேற்கு நாடுகளின் அங்காடிகளில் பொருட்களைச் சிப்பமிடப் பயன்படுத்தும் உயிரி நெகிழி, 'ஆக்சி - டிகிரேடபிள்' ( Oxy - Degradible ) என்கிற வகையாகும். இவை, மட்கும் நெகிழி என்று கூறுகின்றனர். ஆனால், நுண்துணைப்பொருளான பாலிபுரோபலைனும் இதில் கலக்கப்படுகிறது இதில் 1 : 1 என்கிற விகிதத்தில் உயிரிநெகிழியோடு பெட்ரோலியத்துக்குப் இந்த உண்மைகளை மறைத்து உயிரி நெகிழிச் சூழலுக்கு இசைவான பொருளென விளம்பரப்படுத்தப்படுகிறது. அனைத்து உயிரி நெகிழிகளையும் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாது என்பதே உண்மை. எனவே, இதுவும் குப்பைக் கிடங்குகளை அடைக்கும். குப்பையில் சேர்ந்து மட்கும்போது காற்றோட்டச் சூழல் இருந்தால்தான் அது கரிவளியாகவும் நீராகவும் சிதையும். காற்றற்றச் சூழலில் மட்கினால் அது மீத்தேன் வளியாக மாறும். இது கரிவளியைவிட 23 மடங்கு அதிக வலுவுள்ளது. சுற்றுச்சூழலைக் காப்பதற்காக இங்கு உயிரி நெகிழியும், உயிரி எரிபொருளும் வரவில்லை. பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏறி வருவதால் அதற்கு மாற்றாகவே இதை நாடுகின்றனர். உணவு தானியங்களை எரிபொருளாகவும், நெகிழியாகவும் மாற்றி மக்களைப் பட்டினி போட்டால், அவர்களை யார் கேள்வி கேட்பது? பெட்ரோலிய நிறுவனங்களுடன் மோதுவதைக் காட்டிலும் உழவர்களை ஏய்ப்பது எளிது. அதனால்தான், காருக்கான பாகங்கள் மட்டுமன்றி உயிரிநெகிழியைக் கொண்டு பாட்டில், கரண்டி போன்ற வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களும், நெகிழித் தாள்களும் உருவாக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகள் மட்டும் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் டன் உயிரி நெகிழியைப் பயன்படுத்துகின்றன. அதற்கான சந்தை ஆண்டுக்கு 20% - 30% வளர்ந்து வருகிறது. ஏற்கெனவே, உணவுத் தானியங்கள் பயிரிடும் நிலங்களோடு, உயிரி எரிபொருள் உற்பத்திக்கான தானியங்கள் பயிரிடும் நிலங்கள் போட்டியிலுள்ள நிலையில் தற்போது, உயிரி நெகிழியும் போட்டியில் குதித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு லட்சம் டன் அளவுக்கு உயிரி தெகிழி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதற்கு மூன்றரை டன் வரை உணவுத் தானியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு, மதிப்பீட்டின்படி மொத்த நெகிழிச் சந்தையில், உயிரி நெகிழியின் சந்தை, வெறும் 0.1% மட்டுமே இருந்தது. அதற்குக் காரணம் அதன் தயாரிப்புக்குத் தேவையான பயிர்களை விளைவிக்கும் நிலப்பரப்புக் குறைவாகக் கிடைத்ததே. எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்காவின் சோளம் பயிரிடும் பரப்பில் உயிரி நெகிழி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சோளத்தை விளைவிக்கக் கிடைத்த நிலம் 0.1 சதவிகிதம் மட்டுமே. தற்போதைய சூழலில் பெட்ரோலியத்தில் 8% அளவு நெகிழி உருவாக்கத்துக்குப் பயன்படுகிறது. அதனைக் குறைப்பதே நிறுவனங்களின் இலக்கு. அதன் பொருள், உயிரி நெகிழியின் தேவைக்காகச் சாகுபடிப் பரப்பு அதிகரிக்கப்படும். அதற்காகக் கோடிக்கணக்கான ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உயிரி நெகிழி உற்பத்தியில் கார்கில் நிறுவனம், உலகின் மிகப்பெரிய நெகிழி நிறுவனமான டெய்ஜின் (Terjin) நிறுவனம் ஆகியவையும் இறங்கியுள்ளன. அதன் பொருளைச் சில்லறை வணிகக் கார்ப்பரேட்களான வால் மார்ட் மெக்டொனால்ட் போன்றவை பயன்படுத்துகின்றன. உயிரி நெகிழி உற்பத்திக்கு மரபணு மாற்றப்பட்ட உணவுத் தானியங்களே அடிப்படை. மரபணு மாற்றுப் பயிர்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊக்குவிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மரபணு மாற்றப்பட்ட உணவுத் தானியங்களைத் தடை செய்த நாடுகளிலும், சான்ட்விச் போன்ற உணவுப் பொருட்களைச் சிப்பமிட மரபணு மாற்றப் பயிரிலிருந்து உருவாக்கப்பட்ட உயிரி நெகிழிதான் பயன்படுகிறது .
நக்கீரன்
காடோடி பதிப்பக நூல்களை பெற 8072730977