அண்மை

காது குத்துதல் தேவையில்லாத ஒன்று

 

காது குத்துதல்

சித்திரை பிறந்துவிட்டால் எங்கு பார்த்தாலும் சிறுதெய்வ கோவில் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். மக்கள் பக்தி மயமாக உலவும் இந்த திருவிழாவின் போதே பிள்ளைக்கு மொட்டை அடித்து காது குத்த வேண்டுமென்று சில பெற்றோர்கள் விரும்புவர்.


காது குத்த வேண்டுமா? வேண்டாமா? என்பதெல்லாம் அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். இருந்தாலும் மெய்பொருள் காண்பதே அறிவு என்பதால் பிஞ்சு குழந்தைகளின் காதில் ஓட்டை போடுவது நலந்தானா? என்பதை பெற்றோர்கள் சிந்தித்தல் வேண்டும்.


காது குத்துதல் பற்றி வள்ளலார் கருத்து


காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வரவிடுத்த ஆண்டவர் - ஆணுக்குக் கடுக்கன் இடுதலும், பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் - காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வர விட்டிருக்க மாட்டாரா?" என்று விசாரித்துத் தெரிந்து கொள்கிற பக்ஷத்தில், காதில் கடுக்கன் இடவும், மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா?


இயற்கை நம் உடலுக்கு தேவையான துவாரங்களை தேவையான பகுதிகளில் அமைத்துவிட்டது. ஒருவேளை பலர் சொல்வது போல் காதுகளில் இரண்டு துளை இட்டு அதில் தோடுகளை தொங்கவிடுவதன் மூலம் நமக்கு ஏதும் நன்மை விளையுமாயின் பரிணாமத்தின் போதே காதுமடல்களில் இரண்டு துளைகள் ஏற்பட்டிருக்கும். 


செவிச்செல்வம் செல்வங்களுக்கு எல்லாம் தலை. பிறர் பேசுவதை கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை கருதியே இறைவன் இரண்டு செவிகளிலும் துளை தந்திருக்கிறார். ஒருவேளை காதுமடல்களில் துளை இருப்பதை அவர் முக்கியமாக கருதியிருந்தால் அங்கேயும் துளை தந்திருப்பார்.


ஆனால் பிறக்கும் குழந்தைக்கு கேட்பதற்கென ஓட்டை இருக்கிறதே தவிர தோடு தொங்கவிடுவதற்கென்று ஓட்டை இருப்பதில்லை. இதனால் காது மடலில் ஓட்டை இட்டு கொள்வது அநாவசியம் என்று அறியுங்கள். 


பொதுவாக காது குத்துதலும் மூக்கு குத்துதலும் சடங்கு என்பதை தாண்டி இன்று அழகு பொருட்களாகிவிட்டது. பெண்களை விடவும் ஆண்கள் காது குத்திகொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் இது அநாவசியமாகவே இருந்தாலும் அவரவர்களின் விருப்பத்திற்கு விடுவதே நல்லது.


ஆனால் நம் சமுதாயத்திலோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்கு உலகம் தெரியாத காலத்திலே சடங்கு என்ற பெயரில் காதிலும் மூக்கிலும் ஓட்டை போட்டு விடுகிறார்கள். வளர்ந்த பிறகு அப்பிள்ளைக்கு இவைகள் தேவையற்றதாக தெரியுமானால் காதிலும் மூக்கிலும் உள்ள ஓட்டைகளும் தேவையற்றதாகிப்போகும். பெரும்பாலான ஆண்களுக்கு காதுமடல்களில் இருக்கும் ஓட்டை அவ்வாறே.


அதனால் சின்ன குழந்தைகளுக்கு காது,மூக்கு குத்துவதை காட்டிலும் அவர்கள் முற்றிய பதின்ம (டீன்) பருவத்தை அடைந்த பிறகு அவர்களின் விருப்பத்தை கேட்டு செய்வித்தலே நலம்.


வளர்ந்த பிறகு இவை எல்லாம் வீண் என்று கருதுவோர்களையும் கட்டாயப்படுத்தாமல், 'காது குத்தினால் தான் கல்யாணம் நடக்கும்' என்ற பழைய கருத்துகளை அவர்களின் மேல் திணிக்காமல், அவர்களின் வாழ்வை அவர்களே வாழ வழியமையுங்கள்.


காதணி விழா ஒன்றை செய்து மொட்டை அடித்து காதிலும் மூக்கிலும் துளையிட்டு அணிகலன் அணிவித்து கொள்வது நூறு சதவீதம் அநாவசியமே. இந்த அநாவசியத்தை அறிந்து கொள்ள கூட முடியாத ஒரு குழந்தைக்கு இதை செய்வித்துவிடாதீர்கள். 


குழந்தை திருமணங்கள் கூட இப்படித்தான்.


ஈசதாசன்

4 கருத்துகள்

  1. புதிய கருத்தை சொன்ன பயனுள்ள கட்டுரை. நன்று

    பதிலளிநீக்கு
  2. தமிழர்களில் குழந்தைகளுக்கு பிறந்த 11 ஆம் மாதம் காது குத்துதல் என்ற சடங்கு செய்யப்படுகிறது. அக்குபஞ்சர் மருத்துவ முறையில் காதின் முனையில் இடது மூளையும் வலது மூளையும் இணைக்கும் உடலியல் காந்த சக்தி மையப்புள்ளி இருப்பதாக நம்பப்படுகிறது. அது துளையின் மூலம் தொங்கும் தோடு, தொங்கட்டான் மூலம் தூண்டப்படுவதால் ஞாபகத்திறன் மேம்படுகிறது. அக்கால ஆசிரியர்கள் தண்டனையை கூட நல்வழியில் காதை பிடித்துக் கொண்டு தொங்கும் தோப்புக்கரணம் மூலம் நிறைவேற்றினார்கள். மதுரைப் பக்கம் உள்ள காதில் தண்டடி பாம்படம் அணிந்த கிழவிகள் ஆண்களுக்கே புத்தி சொல்லும் அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். மூக்குத்தி அணிந்த பெண்களுக்கு மாதவிடாய் கால வலி குறைவாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணிக நோக்கங்கொண்ட காரணங்கள் தானே இவை தவிர வேறொன்றும் இல்லை. காதின் முனைகளை பிடித்து இழுப்பது என்பது வேறு.. ஓட்டை இடுதல் வேறு. ஒருவேளை இழுப்பதால் ஞாபகத்திறன் கூடுமானால் தோப்புக்கர்ணம் ஒன்றே போதுமே, ஏன் காதணி விழா எடுத்து காதில் ஓட்டை போட்டு.. இத்தனை வேலை.. எது எப்படியோ.. இதை அவரவர் விருப்பத்தில் விடுதலே உசிதம்..

      நீக்கு
  3. அதெல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை