அண்மை

குறள் குரல் - தவறை திருத்து

 

குறள் குரல்

வாழ்வில் தவறுகள் இல்லாமல் வாழுவது கடினம். எத்தனை பெரிய மனிதரும் வாழ்வில் ஒரு கட்டத்தில் தவறுகள் செய்ய நேருகிறது. நாமும் நம் வாழ்வில் பல தவறுகளை செய்திருப்போம். ஆனால், சில தவறுகளை நம்மால் திருத்திக் கொள்ள முடிகிறது, சில தவறுகளை திருத்திக் கொள்ள முடிவதில்லை. 


தவறுகளை திருத்திக் கொள்ள தெரியாதது விலங்கின் குணம். தவறுகளை திருத்திக்கொள்வதே மனித குணம். இறைவன் பகுத்தறிந்து நல்வழி நடக்கவே ஆறாம் அறிவை மனிதனுக்கு கொடுத்துள்ளான். அதை பயன்படுத்த வேண்டும். நான் தவறுகள் பல செய்துள்ளேன். எனக்கு நடக்கும் அனுபவத்தில் இருந்து என்னை மாற்றிக்கொள்ள முயல்கிறேன். பல தவறுகளை‌ திருத்தியும் ‌உள்ளேன். 


நண்பர்கள் பகுத்தறிவாய்ந்தவர்களாக கிடைத்தால், நாம் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும் என்பற்கு‌ உதாரணமாக, நான் ஓடிடியில் வெளிவரும்‌ திரைப்படங்களை தவறான முறையில் வெளியிடுவதில் பணம்‌ செலுத்தாமல் பார்த்து வந்தேன். எனது நண்பர்கள் அதனை தவறு என்றும் அப்படி பார்ப்பதால் கடினமாக உழைத்து படத்தினை தயாரித்தவர்களுக்கு பயனில்லாமல் இருக்கிறது என்று கூறி எனது தவறினை உணர வைத்தனர். அதன்பின் இது போன்ற தவறினை செய்ய‌ மறுத்தேன். அனைவரும் இதனை உணர்ந்தால், நேர்வழி நடப்பது சுலபமாகவும், மனதளவில் அமைதியும் கிடைக்கும்.


நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. (783)


மனிதனுக்கு எத்தனையோ துன்பங்கள் வரும். கவலைகள் பல இருக்கும் வாழ்க்கை என்றாலே அப்படித்தானே. எனது நண்பன் ஒருவன் ஒரு பெண்ணை இரண்டு வருடமாக காதல் செய்து வந்தான். அது நிலைக்கவில்லை அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். அதற்கு அவன் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டான். அதற்காக தன் கவலைகளை மறக்க குடிக்க ஆரமித்தான். நான் பல முறை கூறினேன். இருந்தும் அவன் அதிலிருந்து மீள பல நாட்கள் ஆனது. அப்போது ஒன்றை நான் புரிந்து கொண்டேன் கவலைகளை மறக்க குடிப்பது முட்டாள்தனமென்று. இது போன்று ஏற்பட்டால் தன் மத ஸ்தலங்களுக்கு சென்று கடவுளிடம் கவலைகளை கூறி அழுதால் கூட தன் கவலை குறையும் என்பதனையும் படிப்படியாக அந்த காயம் ஆறுவதையும் உணர்ந்தேன். உலகத்தில் நமது கவலைகளை எவ்வித சலனமும் இன்றி கேட்கும் ஆள் கடவுள் மட்டுமே.


மது அருந்துபவர்களுக்கு மட்டும்‌‌ தான் கவலையும் துன்பமும் இருக்குமா? அதை‌ தொடாதவர்களுக்கும் கவலை ஏகபோகமாக இருக்கத்தான் செய்கிறது. மது மட்டும் கவலைக்கு தீர்வாகாது என்பதை அனைவரும் உணர வேண்டும். 


கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. (930)


இரண்டு நண்பர்கள் ஒன்றாக இருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராரில் நண்பனை வெட்டி கொன்று விட்டு அவனை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டான் அதிலொருவன். அவன் தாயிடம் வெளியூருக்கு சென்று விட்டதாக கூறினான். பின்னர் நண்பன் எழுதியது போல் கடிதத்தை எழுதி அவன் தாயிடம் இவனே கொடுப்பான். நலமாக உள்ளதாகவும் என்னைப் பற்றி கவலைக்கொள்ள வேண்டாம் எனவும் அதில் எழுதி இருப்பான். நாட்கள் பல கடந்தன ஓரு நாள் வேறு ஒரு விசாரணையில் சிக்கிய இவன், காவல்துறையிடம் தன்னை அறியாமல் நடந்ததை கூறியும் எங்கே தன் நண்பனைபுதைத்தேன் என்பதையும் கூறி விட்டான். காவல்துறை அங்கு தோண்டி பார்க்க அவனது நண்பனின் எலும்பைப் பார்த்து அதிர்ந்தனர். 


இது ஓர் உண்மை‌‌ சம்பவம். உண்மையை என்றும் புதைக்க முடியாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதனையே கவிஞர் "அந்த இருட்டிற்கும்‌ பார்க்கின்ற விழி இருக்கும் அந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும். சொல்லாமல் கொள்ளாமல் பார்த்திருக்கும்‌ தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்" என்கிறார்.


குறள் மகன்

கருத்துரையிடுக

புதியது பழையவை