குறுந்தொகை 29 சிறுகதை
"டே… இங்க பாரு, இத கேளேன்
விடியற்காலையில் விரைந்து நீ வந்து
மெலிந்த கையினாலே, இடை மெலிந்து கோலம் போட
உன் ஆடை விலகி அங்கம் தெரியுதடி…
என் தங்கமே!
உன் ஆடை விலகி அங்கம் தெரியுதடி…
என் தங்கமே!
உன் மானம் காத்திடவே மறைத்தேனடி
உன் மானம் காத்திடவே மறைத்தேனடி
என் கண்களை, என் இமையால்…
எப்படி மச்சி மை காதல் கவிதை?"
"இது காதல் கவிதையா?"
"என்ன மச்சி?"
"இல்ல, புது காதல் கவிதையானு கேட்டேன்"
"ஆமா, பாத் ரூம்ல தான் இந்த கவிதை தோனுச்சி, நல்லா இருக்கா?"
"ம்ம்…"
"இந்த கவிதைல மயங்கியாவது சுகு என்ட பேசுவாளா?"
"பேசுவா, கண்டபடி பேசுவா'' என்றபடியே டவலை உதறி அதை தோளில் போட்டுக்கொண்டு குளிக்க சென்றான் ரத்தீஸ்.
"நம்ம டேலண்ட் பாத்து இவனுக்கு பொறாமை" என்று முனுமுனுத்தபடியே தனது ஐ ஃபோனை நோண்ட ஆரம்பித்தான் ராகவன்.
கடிகாரத்தின் முற்கள், மணி எட்டை காண்பிக்க இருவரும், ரூமின் கதவை பூட்டிவிட்டு ஆபீஸ்சை நோக்கி கிளம்பினர். கால் நடையாக சென்றாலே ஆபீஸ் சற்று நேரத்தில் வந்துவிடும். இருப்பினும் அபார்ட்மெண்ட் கீழே நிறுத்தப்பட்டுள்ள மூன்றே முக்கால் லட்ச ரூபாய் பெருமானமுள்ள சூப்பர் பைக்கான கவாஸ்கி நிஞ்சாவில் தான் இருவரும் ஆபீஸூக்கு செல்வார்கள். இருவரும் சென்னையின் பிரபல சாப்ட்வேர் கம்பெனியில், சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ்சாக இருக்கின்றனர். அந்த வேலைக்கு ஏற்றாற்போல முழுவதாக மழித்து எடுக்கப்பட்ட தாடி மீசையுடன் இருவரும் இருப்பார்கள். ராகவனும், ரத்தீஸூம் பள்ளி முதல் காலேஜ் வரை ஒன்றாகவே படித்தவர்கள். இப்போதும் ஒரே கம்பெனியில் ஒன்றாக வேலை பார்க்கின்றனர்.
அன்று சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிறு ஹாலிடே என்பதால், இன்று சற்று விரைவாகவும், சுறுசுறுப்பாகவும் வேலைக்கு கிளம்பினர். இவ்வளவு விரைவாக அவர்கள் வேலைக்கு செல்ல இன்னொரு காரணமும் உண்டு. முக்கியமான பிராஜக்ட்டை இவர்களது குழு இன்றுக்குள் முடித்து தரவேண்டிய நிர்பந்தம். இவர்களது குழுவில் மொத்தம் ஆறு பேர், இவர்கள் இருவர் மற்றும் இவர்களது காதலி இருவர் மேலும் இரண்டு பேர். ரத்தீஸின் காதலி பெயர் மோனிகா, ராகவனின் காதலி பெயர் சுகுணா - முழுப்பெயர் சுகுணாதேவி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமபுறத்தை சேர்ந்தவள். அவள் இந்த கம்பெனியில் சேர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. முதல் சந்திப்பிலே ராகவனுக்கு பிடித்துபோனது. அவளிடம் தன் காதலை எவ்வாறு சொல்வது என்று தெரியவில்லை. எல்லோரும் போல அல்லாமல் வித்தியாசமாக அவன் சுகுணா வேலை செய்யும் கணினியில், தன் காதல் கடிதத்தை 'கோடிங்' மூலம் தயார் செய்தான். அவள் கணினியை திறந்தவுடன் அவன் காதலை வெளிப்படுத்தும் வகையில் அந்த கோடிங் அமைந்தது. அவளும் அவன் காதலுக்கு கீரின் சிக்னலை கோடிங் மூலமே தெரிவித்தாள். இவ்வாறாக இருவரும் கோடிங் காதலர்களானார்கள். காலம் செல்லச்செல்ல, உள்ளத்தை தொட்ட காதல் உடலையும் தொட்டு உறவாடத் தொடங்கி இருந்தது.
சுகுணா வேலைக்கு சேர்ந்த முதல் ஒரு மாதம் சுடிதார் அணிந்துவந்தாள், பிறகு மற்ற சக பெண் எம்பிளாயர்ஸ்களை பார்த்து உடையை மாற்றிக்கொண்டாள். இப்போது ஸ்சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்துதான் ஆபிஸூக்கு வருகிறாள். அவளது உடை மாறினாலும் அவளது உள்ளம் மாறவில்லை. எப்போதும் போல சாந்தமான முகமும் அமைதியான பேச்சும் இப்போது வரை அப்படியே இருக்கிறது.
ஒருவாரமாகவே சுகுணா, ராகவனுடன் பேசவில்லை அவனது அழைப்புகளையும் தடுத்து வைத்திருந்தாள். என்ன காரணம் என்று ராகவனாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால் அதை பற்றி பேசவும் யோசிக்கவும் அவனுக்கு நேரமும் இல்லை. வேலை என்று வந்துவிட்டாள் வேறு எதையும் கருத்தில் கொள்ளமாட்டான் ராகவன். வேலையை சரியாக செய்து முடித்து ஒப்படைப்பான். அதனால் தான் இந்த பிராஜெக்ட் இவனது தலைமை பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.
இருவரும் பைக்கை பார்கிங்கிள் நிறுத்திவிட்டு, ஐடியின் உதவியுடன் உள்ளே நுழைந்தனர். லிப்டில் ஏறி இரண்டாவது பிளோரில் நுழைந்தனர். வெள்ளை நிற ஒளி பிரகாசிக்கும் வகையில் மின் விளக்குகள். முழுவதும் குளிருட்டப்பட்ட கண்ணாடிகளால் ஆன ஹால் அமைப்பு அதில் தடுப்பு அமைக்கப்பட்டு ஒவ்வொரு தடுப்பிலும் ஒரு கம்பியூட்டர், அதற்கு இணைய வசதி ஈதர் நெட் கேபிள் மூலம் வழங்கப்பட்டது. அதில் முதலாவதாக அமைக்கப்பட்டிருந்த கணினியில் அமர்ந்தான் ராகவன். அவனுக்கு அருகில் உள்ள கணினியில் ரத்தீஸ் அமர்ந்தான். வேலை தொடங்கியது. சிறிது நேரம் கழித்து சுகுணாவும், மோனிகாவும் வந்தனர்.
'ஹாய்..' சுகுணாவை பார்த்து கை காட்டினான் ராகவன். அவள் ஏதும் பேசாமல் தலையை திருப்பிக்கொண்டு சென்றாள். மோனிகா மட்டும் கையால் சைகை செய்தாள்.
பின்பு சில மணிநேரம் கழித்து சுகுணா வந்து ராகவனின் அருகில் நிற்க கணினியை விழுங்கிய அவனது கண்கள் சற்றே அவளை கண்டது. கண்ணாலேயே 'என்ன?' என்பது போல கேட்க "என்னனே தெரியல, எரர் காட்டுது. பிளிஸ் கொஞ்சம் செக் பண்ணுங்க"
"ஓ எஸ்! ஒன் மினிட், ஐ வில் கம்" என்றான் நுனிநாக்கு ஆங்கிலத்தில். அவள் அருகிலேயே நின்றாள். ஒருநிமிடத்திற்கும் மேல் ஆகியதால் அவள் அவளது இடத்திற்கு திரும்ப அவளை பின் தொடர்ந்த ராகவன். அவளது பிரச்சனையை சரி செய்தான். மதியம் உணவு இடைவேளை மட்டுமே அவர்கள் சற்று இளைப்பாற முடிந்தது.
ஒருவழியாக வேலை நள்ளிரவு மூன்று மணிக்கு முடிந்தது. இடையில் மேனேஜர் பலமுறை வந்து நேரத்தாமதம் ஆனதால் அவர்களை திட்டியபடி சென்றார். ஆனால் பிராஜக்ட் முடிவாகி ஒப்படைக்கப்பட்ட ஒரு சில நிமிடம் கழித்து அவர்களை தன் அறைக்கு அழைத்தார்.
"வெல் டன், எக்ஸ்சலன்டா பண்ணிருக்கீங்க, பேசுனது மனசுல வச்சிகாதிங்க!, நீங்க போகலாம் டுமாரோ மீட் பண்ணுவோம்" என்றதும் அனைவரும் கிளம்பினர். சுகுவை இடைமறித்து "இன்னக்கி நைட்டு நான் வரேன், கிளம்பி இரு வெளில போவோம்" என்றான் கட்டளை போடுவதுபோல. அவள் முகம் இதை கேட்டதும் மேலும் சோகமானது. ராகவனும், ரத்தீஸூம் பைக்கிள் தங்கள் ரூமிற்கு வந்து தொப்பென்று படுக்கையில் சாய்ந்தனர். பின்பு மதியம் இரண்டு மணி போல எழுந்து ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து அதை சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்கினர். ராகவன் மட்டும் மாலை ஆறு மணிபோல எழுந்தான். ஞாயிற்று கிழமை அவன் இரவு பொழுதை சுகுவுடன் கழிப்பான். இப்போது சண்டை அதனால் அவளை சமாதானம் செய்து அழைத்துப் போகவேண்டும். ஆகவே உடனடியாக எழுந்து குளித்து வந்தான். அவளுக்கு பிடித்த கலரான பிளூ கலர் சட்டை அணிந்தான் அதற்கு மேட்சான பேண்ட் போட்டுக்கொண்டு வாசனை திரவத்தை சட்டையில் தெளித்து தயாராகியவன், பைக்கிள் கிளம்பினான். அவனுக்கு அப்போது தான் சென்ற ஞாயிற்று கிழமை இரவு நடந்தது நியாபகம் வந்தது. அன்று அவளை தோளோடு அணைத்தபடி கடற்கரையில் அமர்ந்திருந்தவன் "இப்ப சிக்ஸ் மன்த்தா லவ் பண்ணுறோம். நான் உன்ட முன்னமே சொல்னாம்னு இருந்தேன், அடுத்த ஒன்மன்த் நாம தனியா ஒரு ரூம்ல தங்குவோம். அப்புடியே லிவிங் டூ கேதரா இருப்போம். எல்லா விதத்துலையும் ஒத்துபோனா மேரேஜ் பண்ணிப்போம்" இப்படி அவன் சொன்னபோது அவனது கைப்பிடியில் இருந்து தன்னை விளக்கிக்கொண்டவள்
"ராகவ், டைம் ஆயிடுச்சு. நாளைலெந்து நாமக்கு நியூ பிராஜெக்ட் வேற ஸ்டார்ட் ஆகுது. நாளைக்கு எர்லி மார்னிங் ஆபீஸ் கிளம்பனும் சோ, என்ன வந்து டிராப் பண்ணு"
"இல்ல எதோ சொல்லனும்னு சொன்னியே''
"இல்ல, ஒன்னும் இல்ல"
அவனுடன் கடைசியாக பேசியவார்த்தை இதுதான். அன்று மறுநாளிலிருந்து அவள், அவனிடம் முகம் குடுத்து பேசவில்லை. இவனும் வேலையில் மும்முரமாக இருந்ததால் பெரிதாக அதை எடுத்துக்கொள்ளவில்லை. இந்த சம்பவத்தை யோசித்துக்கொண்டே வந்தவன்
அவள் தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்ட்டை நெருங்கினான். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு லிப்டில் ஏறி அவளது அறையின் கதவை தட்டினான். கதவு திறக்கப்பட்டது. கதவை திறந்தவள் சுகுணாவின் தோழி மோனிகா.
"ராகவ், உள்ளவா"
"இல்ல, சுகு இருக்களா?''
"அவ ஊருக்கு போயிட்டா"
"ஏன்!? எப்ப ஊருக்கு போனா?"
"நீ உள்ளவா முதல்ல" என்றவுடன் உள்ளே சென்று சோஃபாவில் அமர்ந்தான்.
"அவுங்க வீட்ல அவசரமா வர சொன்னாங்க அதான் கிளம்பிட்டா"
"ஏன்! என்ன ஆச்சு?"
"மேரேஜ் விசயமா வர சொன்னாங்க அதான்"
"இத பத்தி என்ட ஒரு வார்த்த கூட அவ சொல்லல?"
"அத பத்தி தான் போன சன்டே உன்ட பேச வந்தா, ஆனா அதுக்குள்ள நீ வேற பேசுனதுனால அவ அத உன்கிட்ட சொல்லல"
"அப்பறமாவது அவ இத பத்தி என்ட செல்லி இருக்கலாமே!"
"இப்ப ஒன்னும் பிரச்சனை இல்ல, அவள நீ சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கிற மாதிரி இருக்கும்"
"மேரேஜூக்கு இப்ப என்ன அவசரம்!?''
"இப்ப என்ன அவசரமா?, அவளுக்கு மேரேஜ் ஏற்பாடு பண்றாங்கடா, உனக்கு புரியலையா?''
"புரியுது, பட் பழகி சிக்ஸ் மன்த் தான் ஆகுது அதுக்குள்ள மேரேஜா?, முழுசா அவள நான் இன்னும் புரிஞ்சிகல!"
''முழுசா புரிஞ்சிகாமதான், அவள்ட ரோமான்ஸ் பண்ணியா?''
"இல்ல… அது…"
"சீ அவ நீ நினைக்கிற மாதிரி இல்ல. வில்லேஜ் கேர்ள். இந்த லிவ்விங் டூ கேதர்லாம் அவளுக்கு ஒத்துவராது. நீ அவள மேரேஜ் பண்ணிகனும் ஆசைப்பட்டா நாளைக்குள்ள ஒரு நல்ல முடிவ எடு!"
"ம்ம்…"
"அவ உன்ன அவாய்ட் பண்ண காரணம் நீ அவ மைன்ட பேசியே மாத்திடுவ, உன்னோட ஆசைக்கு அவள நீ கொண்டுவந்துடுவ, அதான் இப்படி ஒரு சுட்சிவேசன். என்னைய உன்ட பேச சொன்னா. இன்னக்கி நீ இங்க வரலைனாலும் நானே வந்து உன்ட இத பத்தி பேசி இருப்பேன். ஓகே, நல்ல முடிவா சொல்லு"
தலையை ஆட்டிச் சைகை செய்தவன். உடனே எழுந்து வெளியே சென்றான். உள்ளே ரூமின் கதவை திறந்து வந்த சுகுணா, மோனிகாவை கட்டிப்பிடித்து தன் நன்றியை தெரிவித்தாள்.
"சரி, நீ ஊருக்கு கிளம்பு, டூ டேஸ் பாரு அவன்டேந்து எந்த பதிலும் வரலைனா, அவன பிரேக்அப் பண்ணிட்டு வீட்ல கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு"
"என்னடீ சொல்ற!?"
"ஆமா, அவன் பொழுத ஓட்டுறதுக்கு கூட உன்ன லவ் பண்ணி இருக்கலாம். இப்படி நான் சொல்லல, என் ஆளு ரத்தீஸ் தான் சொன்னான். ராகவ் அப்புடிபட்ட கேரக்டர் தான்"
"ம்ம்"
"டூ டேஸ் பாரு இல்ல… உன் டீஸிசன எடு. அங்கையும் உம்முனு இருக்காத எந்த டீஸிசனா இருந்தாலும் அத போல்டா எடு" என்றாள் மோனிகா.
அப்பார்ட்மெண்டில் இருந்து கீழே வந்தவன் தனது பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக செல்லாமல் மிக மெதுவாக சென்றான். அங்கு சைக்கிளில் சென்ற கிழவர் கூட அவனை முந்திச்சென்றவாறு மேல்கீழ் பார்வையில் அவனை நோக்கிய படியே சென்றார்.
"நாம உன்னு நினைச்சா வேற உன்னு நடக்குதே!, மினிமம் ஒரு பொண்ணுக்கூட ஒன் இயராவது எல்லாவிதத்திலையும் அவ சரிப்பட்டு வந்தா தான, நாம அவள நம் லைப்புக்கு செட் பண்ணிக்க முடியும், இது கூட அவளுக்கு புரியலையே!, கேரக்டர் வைஸ் அவ ஓகே ஆனா… என்னதான் இருந்தாலும் நம்ம ஆசைய இங்க யாரு புரிஞ்சுக்க போறா?" என்று நினைத்தபடியே பைக்கை வளைத்து வளைத்து ஓட்டிச் சென்றான்.
குகன்
குறுந்தொகை பாடல் 29:
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
ஔவையார்
நல்ல சொற்கள் நீங்கி பயன்படாத சொற்களே மிகுதியாக கூறப்படுகிறது. மழை நீரை சேமித்து வைக்க பச்சை மண்ணால் (சுடப்படாத மண்) செய்யப்பட்ட பாத்திரத்தை பயன்படுத்துவதை போல, உள்ளத்தால் ஏற்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்துவதற்கு நீ (தலைவன் நீ எனக்கூறிப்பது ; தன் நெஞ்சினை) ஆசைப்படுகிறார். உன்னுடைய போராட்டம் மிக பெரியது. உயரமான மரக்கிளைகளில், பெண்குரங்கு தன் குட்டியால் தழுவப்பெற்று அமைதி அடைவதை போல, மனம் பொருந்திய உன் கருத்தை ஏற்று உன் குறையை நிறைவேற்றுவோரை நீ பெற்றால் அது மிக பெருமைக்குரியதாகும்.
ராகவ் எதிர்பார்ப்பதைத்தான் தற்கால பெண்ணியவாதிகளும் எதிர்பார்கிறார்கள்.
பதிலளிநீக்குCoding-யில் காதலை சொல்வது எத்தனை கஷ்டம் தெரியுமா?
இந்த குறுந்தொகை பாடலுக்கு தகுந்த கதை எழுதுவது சற்று கடினம்தான். பரவாயில்லை கதை பொருந்தி வருகிறது. பாராட்டுக்கள். சாஃப்ட்வேர் கம்பெனிக்கு போனாலும் என்ட, உன்ட என்ற சொல்லாக்கங்கள் மாறவில்லையே. இது தான் திருநெல்லிக்காவல் வட்டார மொழியா?
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு"என்னுடைய, உன்னுடைய என்னோட, உன்னோட"போன்ற வார்த்தைகளையே நான் கேட்டிருப்பதால் எனக்கு இது வித்தியாசமாக தெரிகிறது. வேறு ஒன்றுமில்லை.
பதிலளிநீக்குha ha
நீக்கு