1968 ஆம் வருடம் ஜுலை மாதம் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் "தில்லானா மோகனாம்பாள்". இந்தப் படத்தை பார்க்காதவர்கள் பெரும்பாலும் இருக்க முடியாது. நாதசுர வித்வானான சிக்கல் சண்முகசுந்தரத்துக்கும் நாட்டியத்தாரகை திருவாரூர் மோகனாவுக்கும் ஏற்படும் மெல்லிய காதலே கதையின் கரு. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையை தனது அற்புத திறமையால் காவியாமாக்கி இருப்பார் ஏ பி நாகராஜன். சங்கீதக்கதை என்பதால் தனது இசைப்புலமை அனைத்தையும் பயன்படுத்தி இசை அமைத்து இருப்பார் இசை அமைப்பாளர் கே வி மகாதேவன்.
அதில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல்தான் நலந்தானா? நலந்தானா? சண்முகசுந்தரத்தின் மீது மோகனா காதல் வயப்பட்டுள்ளதை மோகனாவின் தாய் அறிகிறாள். அக்காதலை எதிர்க்கவும் செய்கிறாள். திருவாரூரில் நடக்கும் தில்லானா போட்டியில் இருவரும் கலந்து கொள்கிறார்கள். அதனால் அந்த போட்டியில் பங்கேற்கும் சண்முக சுந்தரத்தோடு எந்த பேச்சும் வைத்துக் கொள்ளக் கூடாது என மோகனாவுக்கு கண்டிஷன் போட்டு அனுப்புகிறாள் அவளது தாய்.
போட்டி தொடங்குகிறது. சண்முகசுந்தரமாக நடித்திருப்பவர் சிவாஜி கணேசன். நாட்டியக்காரி மோகனாவாக நடிப்பவர் நாட்டிய பேரொளி பத்மினி. நடிப்புக்கு கேட்கவா வேண்டும்? MPN சேதுராமன் பொன்னுசாமி நாதசுரத்துக்கு நாடி நரம்புகள் புடைக்க வாசித்து நடிக்கிறார் சிவாஜி. சுழன்று சுழன்று ஆடுகிறார் மோகனாவாக நடிக்கும் பத்மினி.
மோகனாவின் ஆடலுக்கு தகுந்தபடி உயிரைக் கொடுத்து நாதசுரம் வாசிக்கும் சண்முக சுந்தரத்தின் கையில் ஏற்கனவே பட்ட காயத்திலிருந்து இரத்தம் கொட்டுகிறது. துடித்து போகிறாள் மோகனா. காதலனின் கரத்தை தொட்டு ஆறுதல் படுத்த அவள் விரும்புகிறாள். தாயின் கட்டளை அவளைத் தடுக்கிறது. ஆடலின் போது, தான் பாடும் பாடலில், அவளது உள்ளத்தை திறந்து காட்டுகிறாள்.
நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா
நலம் பெற வேண்டும் நீ என்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு.
இலை மறை காய் போல் பொருள்கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று
கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறிவேன்.
புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?
நடந்தெல்லாம் மறந்திருப்போம் இனி நடப்பதையே நினைத்திருப்போம்.
கட்டுண்டோம். காலம் மாறும். சந்திப்போம்.
இந்த பாடல் வரிகளை சுசீலாவின் குரலில் கேட்பவர்கள், தங்களுக்கே இத்துன்பம் வந்தது போல துடிதுடிப்பார்கள். அந்தக் காட்சி அமைப்புக்கு கவிஞரின் பாடல் வரிகள் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த பாடல், படத்தில் வரும் அந்தக் காட்சியை நினைத்து கவிஞரால் எழுதப்படவில்லை, மாறாக புற்று நோயால் மரணப்படுக்கையில் இருந்த தனது அன்பு மாறாத அண்ணன் அறிஞர் அண்ணாவுக்காக எழுதப்பட்டது என்பது பலரால் அறியப்படாத ஒன்றாகும்.
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்பது போல, அண்ணாவுக்காக மறைமுகமாக இந்த பாடலை எழுத வேண்டிய அவசியம் கண்ணதாசனுக்கு ஏன் ஏற்பட்டது? அதை தெரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கி செல்லவேண்டும்.
கதை எழுத வேண்டும், பாடல் எழுத வேண்டும், என்ற கனவுகளோடு சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வந்த கண்ணதாசனுக்கு கோயமுத்தூர் உணவு விடுதியில் எம்ஜிஆர் அவர்களின் சகோதரர் எம் ஜி சக்கரபாணியோடு பழக்கம் ஏற்பட்டது. கண்ணதாசனும் சக்கரபாணியும் அங்கு அம்பிகா தியேட்டரில் இரவு நேரத்தில் அபிமன்யூ என்ற திரைப்படத்தை பார்க்க சென்றார்கள். அந்தப் படத்தில் கண்ணதாசன் கேட்டத் தமிழ் வாழ்வில் மறக்க முடியாத இன்பத் தமிழாகும். "ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்" "அண்ணன் எழுதியதை கண்ணன் மாற்ற முடியாது" "கண்ணன் மனது கல் மனதா" "அர்ஜுனன் உடைக்க முடியாத சக்கர வியூகத்தை அபிமன்யூ உடைக்கிறான் என்றால் அங்கேதான் இருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷன வேலை" போன்ற வசனங்கள் கண்ணதாசனையே கட்டி போட்டது . ஆச்சாரியார் என்பது அப்போது இராஜாஜியை குறிக்கும். தொடர்ந்து ஆறு நாட்கள் அந்த படத்தை பார்தது ரசித்தார் கண்ணதாசன்.
அபிமன்யூ படத்திற்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. அவரை தமக்கு நன்றாக தெரியும் என்றும் இப்போது மருத நாட்டு இளவரசி என்ற படத்துக்கு அவர் வசனம் எழுதிக் கொண்டு இருக்கிறார் என்றும் சக்கரபாணி தெரிவித்தார். கருணாநிதியின் எழுத்துக்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, நேரில் காணாமலேயே அவர் மீது கண்ணதாசனுக்கு காதல் வந்துவிட்டது.
இருவரும் மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரத்திடம் சொல்லி, கருணாநிதியை வரவழைத்து, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாக்காவில் மாதம் 500 ரூபாய் சம்பளத்துக்கு சேர்த்து விட்டார்கள். அப்போது அது பெரிய பணம். மந்திரி குமாரி மலைக்கள்ளன் போன்ற படங்கள் வந்த பிறகு, கருணாநிதி சம்பளம் நடிகர்களின் சம்பளத்தையும் தாண்டி விட்டது.
கருணாநிதியும் கண்ணதாசனும் நாடார் விடுதியில் தங்கினார்கள். ஒன்றாகவே உண்டு ஒன்றாகவே உறங்கினார்கள். படங்களுக்கு வசனம் எழுதினாலும் முரசொலியில் எழுதுவதையும் பொதுக்கூட்டங்களுக்கு செல்வதையும் தனது முதன்மை பணியாக கருணாநிதி கருதினார். ஒரு முறை பொள்ளாச்சி பொதுக்கூட்டத்துக்கு சென்றார் கருணாநிதி. அப்போது கவிஞரும் கூடவே சென்றார். யாரும் எதிர்பாராத போது "இப்போது கவிஞர் பேசுவார்" என்று மேடையில் அறிமுகப்படுத்திவிட்டார் கருணாநிதி. அவசரம் அவசரமாக விபூதியை அழித்துவிட்டு பேசிய கண்ணதாசன், அன்று முதல் திமுக ஆகி விட்டார்.
இலக்கிய நயத்தோடு பேசும் கண்ணதாசனுக்கு என்று ஒரு கூட்டம் கூட ஆரம்பித்தது. இது கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. சென்னையில் முதல் திமுக மாநாடு நடந்த போது, "இரண்டாவது தொடுப்பு வைத்திருக்கிறாய் அதனால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும். நீ மாநாட்டில் பேச வேண்டாம்" என கருணாநிதி தடுத்துவிட்டாராம். அவமானப்பட்ட கண்ணதாசன் மாநாடு நடக்கும் நாளில் கல்கத்தா சென்று விட்டார்.
கல்கத்தாவிலிருந்து வந்த கண்ணதாசன் நாவலர் நெடுஞ்செழியனை சந்தித்து கருணாநிதி பற்றி புகார் செய்துள்ளார். அவர் அண்ணாவை பார்க்க சொல்லி உள்ளார். கண்ணதாசனும் அண்ணாவை பார்க்க காஞ்சிபுரம் போயிருக்கிறார். கண்ணதாசனை அன்புடன் வரவேற்ற அண்ணா இராணிப்பேட்டை வேட்பாளர் வரதராசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சொன்னார்.
கண்ணதாசன் ஏதோ சொல்ல வர "எனக்கு எல்லாம் தெரியும் நீ சாப்பிட்டுவிட்டு போ" என சொல்லியிருக்கிறார். பருத்த உடம்பு கொண்ட கண்ணதாசன் இரண்டு இலைகளுக்கு நடுவே சாப்பிட உட்கார்ந்து உள்ளார். அதைப் பார்த்து அண்ணா "என்ன உனக்கு எல்லா இடத்திலும் இரண்டு இரண்டாய் தேவைப்படுது" என்று கேலி செய்தாராம். தனது இரண்டாம் திருமணத்தை அண்ணா சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று உணர்ந்த கண்ணதாசன் திமுகவில் தீவிரமாக ஈடுபட தொடங்கினார்.
டால்மியாபுரத்தை கல்லக்குடி என்று மாற்றும் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தடியடி வாங்கி, பதினெட்டு மாத சிறை தண்டனை பெற்ற கண்ணதாசனின் தியாகம் மறைக்கப்பட்டு மூன்றுமாத சிறை தண்டனை பெற்ற கருணாநிதி தியாக சீலராக முன்னிலைப் படுத்தப்பட்டது கண்ணதாசனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. சிறை சென்ற கண்ணதாசனுக்கு திமுகவும் எந்த உதவியையும் செய்யவில்லை.
சென்னை மாநகராட்சி தேர்தல் வந்த போது, கண்ணதாசனும் டி வி நாராயணசாமியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். கண்ணதாசன் எப்போதுமே சொந்தக்காசை செலவு செய்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார். மற்றவர்கள் கட்சி காசை செலவுக்கு பயன்படுத்திப் பிரச்சாரம் செய்வார்கள். திமுகவுக்கு அண்ணா,கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன், ஈ வெ கி சம்பத், எம்ஜிஆர், எஸ் எஸ் ஆர், மதியழகன், இராஜாராம், முனுசாமி எனப் பலர் வேலை செய்ததார்கள். அதில் கருணாநிதியின் பிரச்சாரம் முதன்மையாக அமைந்தது.
சென்னை மாநகராட்சி திமுக கைக்கு வந்ததும் தேர்தலில் பாடுபட்டவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை அண்ணா நடத்தினார். அதில் பேசிய அண்ணா, வெற்றிக்கு வியூகம் அமைத்து பாடுபட்ட கருணாநிதியை வெகுவாக பாராட்டினார். அது மட்டுமல்ல கருணாநிதிக்கு ஒரு மோதிரத்தை அணிவித்து, "எனது மனைவிக்குக் கூட கடை கடையாக அலைந்து ஒரு கணையாழியை நான் வாங்கியதில்லை. ஆனால் என் தம்பி கருணாநிதிக்காக வாங்கினேன்" என கூறி அணிவித்தார்.
சிவகங்கை சீமை படத்துக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தையெல்லாம் செலவழித்து பல கட்டுரைகளை எழுதி பாடுபட்ட தனக்கு அண்ணாவிடம் இருந்து ஒரு பாராட்டுச் சொல் கூட வராதது கண்ணதாசனை கலங்கடித்துவிட்டது. அண்ணாவும் சாதி சார்ந்த அரசியலில் இறங்கிவிட்டாரோ என மனவேதனை அடைந்தார். இதை அண்ணாவிடம் கண்ணதாசன் கேட்டபோது, "நீயும் ஒரு மோதிரம் வாங்கி கொடுத்திருந்தால் உனக்கும் அணிவித்து இருப்பேனே"என்று அண்ணா சொன்னதாக வனவாசத்தில் தெரிவிக்கிறார் கண்ணதாசன்.
அண்ணாவின் மீது வைத்திருந்த பற்று குறைந்த காலகட்டத்தில் ஈ வெ கி சம்பத் அண்ணாவை சில விஷயங்களில் எதிர்த்ததால், சம்பத் மீது கவிஞருக்கு ஈடுபாடு உண்டாயிற்று. கட்சியை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த சம்பத் உடல்நிலை மோசமான போது அண்ணாவின் வீட்டிற்கே சென்று சமாதனம் செய்தவர் கண்ணதாசன்.
கருணாநிதி வசனம் எழுதிய படங்கள் எல்லாம் வெற்றி பெறவே, சென்னை கோபாலபுரத்தில் சொந்த வீடு வாங்கிவிட்டார். முரசொலியும் பரபரப்பாக விற்பனை ஆனதால் முரசொலிக்கும் சொந்த கட்டிடம் வாங்கிவிட்டார். சொந்தக் காரும் வாங்கிவிட்டார். 1957 - 1962 தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதால் சட்டமன்ற வாதங்களால் கருணாநிதி புகழ் பரவியது.
மாறாக திருக்கோஷ்டியூரில் தோல்வியுற்ற கண்ணதாசன், சொந்த படங்களான சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன், கருப்புப் பணம் போன்றவை தோல்வியடையவே ஏழு லட்சம் கடனாளியானார் கண்ணதாசன். தென்றல் பத்திரிக்கையும் விற்க வேண்டிய துர்பாக்கிய நிலை. ஒரே கட்டிலில் படுத்து உறங்கிய ஒருவருக்கு வளர்ச்சி. ஒருவருக்கு வீழ்ச்சி. கண்ணதாசன் வீழ்ச்சியில் மதுவுக்கும் மாதுவுக்கும் பெரும்பங்குண்டு. ஆனால் திரைப் பாடல்களில் அவரை மிஞ்ச யாரும் அந்த காலகட்டத்தில் இல்லை.
சம்பத் கட்சியில் சேர்ந்த பிறகு தென்றலில் சகட்டுமேனிக்கு எல்லோரையும் தாக்கி எழுதத் தொடங்கினார் கண்ணதாசன். காமராஜரையும் விடவில்லை, கருணாநிதியையும் விடவில்லை. அது போல "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என முழங்கிய அண்ணா, பிரிவினை கேட்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என நேரு சட்டம் இயற்றியதும் திராவிட நாடு கொள்கையை கைவிட்டுவிட்டார்.
இதை விமர்சித்து அண்ணாவை கடுமையாக தாக்கி கண்ணதாசன் எழுதினார். கண்ணதாசன் எழுதியது பற்றி அண்ணாவிடம் கேட்டபோது கண்ணதாசனை தாக்கி ஏதாவது கூறுவார் என்று நினைத்தார்கள். ஆனால் அண்ணா "கண்ணதாசன் சொன்னதை நான் ஏற்கவில்லை என்றால் எனக்கு தமிழே தெரியாது என்று அர்த்தம்" என்று கூறினார்.
ஒரு முறை திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலுக்கு போனார் சிவாஜி. அப்போது அவர் திமுகவில் இருந்தார். அந்த நிகழ்வை திமுகவினர் கேலி செய்தததால் சிவாஜி திமுகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.
பின்னர் ஒருமுறை வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடித்த போது, அந்த நாடகத்தை பார்க்க அண்ணாவும் வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் நடந்த விழாவில் திமுகவில் இல்லாத சிவாஜியின் நடிப்புத்திறமையை வெகுவாக பாராட்டிய அண்ணா "எங்கிருந்தாலும் வாழ்க" என வாழ்த்தினார்.
அண்ணாவின் "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற வரிகள் கவிஞரின் நெஞ்சிலே நிலைத்துவிட்டது. ஸ்ரீதரின் " நெஞ்சில் ஓர் ஆலயம்" திரைப்படத்தில் காதலி, தனது கணவனை காப்பாற்ற காதலனிடமே உதவி கேட்டு வருகிறாள். இக்கட்டான சூழ்நிலை. அந்த சமயத்தில் அண்ணாவின் வரிகள்தான் கவிஞரின் மனதில் தோன்றின.
"வருவாள் என நான் தனிமையில் நின்றேன்.
வந்ததும் வந்தாய் துணையுடன் வந்தாய். துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்.
தூயவளே நீ வாழ்க! வாழ்க! எங்கிருந்தாலும் வாழ்க!"
என சரியான இடத்தில் அந்த வாசகத்தை எடுத்து போட்டார்.
அண்ணாவோடு காரில் பாண்டிச்சேரி போன போது எழுதிய பாடல்தான்
"அத்தான் என்னத்தான் அவன் என்னைத்தான்" என்ற பாடல்.
ஈ வெ கி சம்பத்துக்கு பிறகு காமராஜரோடு நாட்டம் ஏற்பட்டது கண்ணதாசனுக்கு.
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி சேரும் நாள் பார்த்து சொல்லடி
வேறு யாரோடும நான் பேச வார்த்தை ஏதடி வேலன் இல்லாமல் தோகை ஏதடி என்று காமராஜரோடு சேர பாடலிலே தூது விட்டார்.
"சிவகாமி உமையவளே முத்து மாரி உன் செல்வனுக்கும் காலம் உண்டு முத்துமாரி". என்று ஆருடம் சொன்னார்.
1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. சென்னை மாகாணம் தமிழ்நாடானது. சீர்திருத்த திருமணம் அமுலுக்கு வந்தது. படி அரசி திட்டம் வந்தது. எல்லோருக்குமான ஆட்சியாக அண்ணா ஆட்சி மலர்ந்தது.
இருந்தாலும் காங்கிரஸ் அண்ணாவுக்கு எதிராக ஏதாவது போராட்டம் நடத்தி கொண்டுதான் இருந்தது. ஒரு போராட்டத்தின் போது அண்ணாவுக்கு புதிதாக அமைக்கப்பட்ட சிலையின் மீது கருப்பு துணியை எறிந்தார் கண்ணதாசன். அவரை போலவே பின் தொடரந்த தொண்டர்களும் கருப்பு துணியை அண்ணா சிலையின் மீது எறிந்தார்கள். இந்த நிகழ்வுக்கு பிறகு இது பற்றி கருத்து தெரிவித்த அண்ணா "நான் இறந்தால் தம்பி கண்ணதாசன் எனக்கு எப்படி அஞ்சலி செலுத்துவான் என இதன் மூலம் தெரிந்து கொண்டேன்" என்றார். இதைக் கேள்விப்பட்ட கண்ணதாசன், அண்ணாவின் மனதை புண்படுத்திவிட்டோமே என கதறி அழுதார்.
கருணாநிதி மீதுதான் கவிஞருக்கு இனம் காண முடியாத கோபம் இருந்ததே தவிர அண்ணாவின் மீது இருந்த அன்பு சிறிதும் குறையவில்லை. அண்ணாவுக்கு வெற்றிலை பாக்கு புகையிலை பழக்கமும் பொடி போடும் பழக்கமும் இருந்ததால் ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டில் புற்று நோய் அவரை பற்றிக் கொண்டது. செய்தி கேள்விபட்ட காமராஜர் சி.சுப்பிரமணியம் உதவியுடன் அமெரிக்க சிகிச்சைக்கு உதவினார்.
காங்கிரஸில் இருந்ததால் கவிஞருக்கு அண்ணாவோடு அப்போது நேரடி தொடர்பு இல்லை. மக்கள் துடிப்பது போல கவிஞரும் துடித்து போனார். அப்போதுதான் தில்லானா மோகனாம்பாள் படம் வந்தது. நலந்தானா பாட்டில் ஒவ்வொரு வரியும் அண்ணாவுக்காக அவர் மனம் எழுதியது.
நலந்தானா? என்று கேட்ட கண்ணதாசன் "உடலும் உள்ளமும் நலந்தானா" என்று கேட்டார். அதற்கு காரணம் அண்ணாவுக்கு அடுத்தது யார் என்ற வாரிசு குழப்பத்தால் உள்ளமும் கெட்டிருந்ததை அவர் அறிவார்.
நலம் பெற வேண்டும் நீ என்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு" என்ற வரி மூலம் காங்கிரஸில் இருந்தாலும் அண்ணா நலம் பெற வேண்டும் என்று தன் நெஞ்சம் ஏங்குவதை குறிப்பிடுகிறார். மாற்றுக் கட்சியில் இருப்பதால் வெளிப்படையாக எதையும் கூற இயலாது என்பதால் "இலை மறை காய் போல பொருள் கொண்டு யாரும் அறியாமல் சொல் இன்று" எனக் கூறுகிறார்.
அண்ணாவின் புகழ் ஓங்கியிருந்த காலம் என்பதால் பலரது கண் பட்டு இந்த புற்று நோய் ஏற்பட்டு இருக்குமோ என்று அஞ்சிய கவிஞர் "கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன்" என்கிறார்.
அண்ணா மரணம் வெகு தூரத்தில் இல்லை செய்தி கேட்டு துடித்து போனார் கவிஞர். அதைத்தான் "புண்பட்ட செய்தியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?" என்ற வார்த்தைகளால் விவரிக்கிறார்.
பொதுவாகவே அண்ணா ஒரு முடியாத விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அடிக்கடி சொல்லும் வாரத்தை, "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்! இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்பதுதான். அதை மனதில் கொண்டே கவிஞர் "நடந்தெல்லாம் மறந்திருப்போம் இனி நடப்பதையே நினைத்திருப்போம்" என்று எழுதினார்.
அந்தப் பாட்டின் இறுதியில் காலம் மாறும் சந்திப்போம் என்று முடிப்பார்.
அமெரிக்காவில் புகழ் பெற்ற மருத்துவர் மில்லர் அண்ணாவுக்கு தொண்டை மற்றும் உணவுக் குழாயில் ஏற்பட்டு இருந்த தீராத புற்றினை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார். அடுத்த சில மாதங்களில் நோய் முழுமையாக தீராமலேயே அண்ணா சென்னை திரும்பினார்.
திரும்பிய பின் முதல் நிகழ்ச்சியாக சி.பா ஆதித்தனாரின் தினத்தந்தி வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார். விழா மேடையில் MPN சகோதரர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அண்ணா அரங்கத்தில் நுழைந்தவுடன் அதுவரை இசையமைத்த கீர்த்தனையை நிறுத்திவிட்டு, "நலந்தானா" பாடலை நாதசுரத்தில் இசைக்கிறார்கள். மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறது. நலம் என்பது போல் அண்ணாவும் கை அசைக்கிறார். அந்த மகழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை.
இந்தோ சோவியத் விழாவில் கண்ணதாசனை "வீட்டுக்கு வா" என்று அழைத்தார் அண்ணா. கண்ணதாசன், அண்ணா உதவியாளர் கஜேந்திரனிடம் சொல்லிவிட்டு R S பாண்டியனோடு அண்ணா வீட்டுக்கு போனபோது, புற்றினால் தொண்டை அடைபட்டு பேச முடியாமல் கிடந்தார். என்றோ போட்ட புகையிலை தன் வேலையை காட்டத் தொடங்கிவிட்டது. மில்லர் கைவைத்த பிறகு புற்று வளராது என்பதெல்லாம் பொய்யாகி போனது. அண்ணா மறு வருடம் பிப்ரவரி 3 ஆம் தேதி நம்மை விட்டு மறைந்தார்.
"மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று"
"கடவுள் சிரிப்பதுண்டு பாவம் மனிதன் என்று"
என்று முன்பே எழுதிவிட்டாரே கண்ணதாசன்.
அண்ணா இறந்த போது கடவுள் மீதே கோபம் ஏற்பட்டதாக கண்ணதாசன் சொன்னார். "அக்கிரமக்காரர்கள் அநியாயக்காரர்களை வாழவைக்கும் கடவுள், அண்ணாவை அறுபது வயதுக்குள் அழைத்து கொண்டது என்ன நியாயம்?" என்று வேதனைப்பட்டார்.
அறுபது வயதிலேயே போய்விட்ட அண்ணாவை பார்த்து ஆதங்கப்பட்ட கண்ணதாசன், ஐம்பத்து மூன்று வயதிலேயே போய்விட்டார் என்பது வேறு கதை.
"இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதாலே உயிரை மீண்டும் தருவானா?"
என்று பாடல் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, இன்று அந்த இறைவன் மீதே வேதனைப்பட்டு என்ன பயன்?
ஜெ மாரிமுத்து
ஒரு சம்பவத்தை சொல்லப்புகுந்து கண்ணதாசனின் முக்கால்வாசி அரசியல் சரித்திரத்தையே சொல்லிமுடித்துள்ளது வியக்கவைக்கிறது.
பதிலளிநீக்குசம்பவங்கள் நடந்த சமகாலத்தை சேர்ந்தவர்களால்கூட இவ்வளவு சிரத்தையோடு இதனை விளக்கமுடியுமா என்பது சந்தேகமே..!