அண்மை

மொலாய் காடுகளின் பிறப்பு! எறும்புகளின் சிறப்பு

 

மொலாய் காடுகளின் பிறப்பு

அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாத்தி நகரத்தில் இருந்து ஏறத் தாழ 400 கி.மீ தொலைவில் உள்ளது அந்தச் சிற்றூர். அந்த ஊருக்குள் ஒருமுறை நமது தொலைக்காட்சி செய்திகளில் சொல்லுவார்களே அந்தப் பாணியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து, அட்ட காசம் செய்தன. கான் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யானைக் கூட்டத்தை அதன் பின்னாலேயே விரட்டிச் சென்றனர். தம் வாழிடத்தை இழந்துகொண்டிருக்கும் அவை, பிரம்ம புத்திரா ஆற்றில் இறங்கி அதற்குள் இருந்த ஓர் ஆற்றிடைத் தீவின் காட்டுக்குள் புகுந்துவிடுகின்றன. அக்காட்டைக் கண்ட கான் துறையினர் திகைத்து நின்றனர். ஏனெனில், அதுவரை அங்கு ஒரு காடு இருப்பதாக அவர்களுடைய ஆவணத்தில் எந்தப் பதிவும் இல்லை. கான் துறையினரின் ஆவணத்தில் அந்தத் தீவு வெறும் மணல் திட்டாகத்தான் பதிவாகியிருந்தது. 1360 ஏக்கர் பரப்பளவுள்ள அந்த மணல்திட்டு எப்படித் திடீரெனக் காடாக மாறியது? சிறு விலங்குகள் மற்றும் உள்ளூர்ப் பறவைகளோடு வலசைப் பறவைகளும் அங்கிருந்தன. கடமான்கள், காண்டாமிருகங்கள், புலிகள் மற்றும் யானைகள் வசிக்கும் காடாக அது மாறியிருந்தது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அது நியாயமான வியப்புதான். ஏனெனில், அது கடந்த 1979 ஆம் ஆண்டு வரைக்கும் மணல் திட்டாகத்தான் இருந்தது. அந்த மணல்திட்டு காடாக மாறியதற்கு ஒரு தனி மனிதரின் உழைப்பே காரணம். 'ஜாதவ் பாயேங்' என்பது அம்மனிதரின் பெயர். அவருடைய செல்லப் பெயரான 'மொலாய்' என்ற பெயரில்தான் அக்காடு இன்று 'மொலாய் காடு' என்று அழைக்கப்படுகிறது .


அவர் பதினாறு வயது சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை பிரம்ம புத்திராவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வடிந்ததும் அத்தீவுக்குச் சென்று பார்க்கிறான் அச்சிறுவன். அங்கு ஏராளமான பாம்புகள் இறந்து வெயிலில் உலர்ந்து கிடந்தன. விலங்குகளின் மீது இயல்பாகவே வாஞ்சை கொண்ட அச்சிறுவன் பாம்புகளுக்காக இரக்கம் கொண்டு அழத்தொடங்கினான். இங்கு மரங்கள் இருந்திருந்தால் நிழலில் பாம்புகள் பிழைத்திருக்கக்கூடும் என்பதை அவன் உணர்கிறான். பிறகு மனதைத் தேற்றிக் கொண்டு கான்துறையினரை அணுகி, அத்தீவில் மரங்கள் வளர்க்க ஏற்பாடு செய்ய முடியுமா? என்று வினவுகிறான். அவர்கள் நகைக்கின்றனர். "அங்கு எந்தவொரு மரமும் முளைக்காது . ஒருவேளை மூங்கில் மட்டும் முளைக்கலாம்" எனப் பதில் அளித்தனர், அவனுக்கு அந்தப் பதில் போதுமானதாக இருந்தது. பிறகு அவன் அங்கு மூங்கிலை வளர்க்கும் முயற்சியைத் தொடங்குகிறான். மூங்கில் மட்டும் என்றால் அது வெறும் தோப்பாக மட்டுமே இருக்கும். எனவே, காடாக இருந்தால்தான் நல்லது என்று வேறு சில மரங்களையும் வளர்க்க முயற்சி செய்கிறான். கான்துறையினர் சொன்னது போலவே அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒருநாள் அச்சிறுவனுக்கு ஒரு யோசனை பளிச்சிடுகிறது. பிறவகை மரங்கள் வளர வேண்டுமானால் முதலில் மண்ணின் தன்மை மாறவேண்டும். மண்ணை வளமாக்கும் தன்மை அந்தவொரு சிற்றுயிருக்கு உண்டு. அதை இங்குக் கொண்டுவந்து விட்டால் என்ன? என்று அவன் யோசிக்கிறான். அந்தச் சிற்றுயிர் வேறெதுவும் அல்ல. எறும்புதான். அதுவும் சிவப்பெறும்பு. தன் கிராமத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அவ்வகை எறும்புகளைப் பிடித்துவந்து மணல்திட்டில் விடுகிறான். பலமுறைகள் கடிகள் வாங்கியும் தன் முயற்சியில் அவன் சிறிதும் பின்வாங்கவே இல்லை. இறுதியில் அவன் முயற்சி வீணாகவில்லை. இன்று உலகிலேயே மிகப்பெரிய ஆற்றிடைத்தீவுக் காடு என்று அந்த 'மொலாய்க் காடு' கருதப்படுகிறது. இந்தப் பெருமையை அடைய ஜாதவுக்கு உதவியவை எறும்புகளே. எறும்புகள், சூழலுக்குச் செய்யும் நன்மைகள் குறித்து ஏற்கனவே 'கார்ல் கோஸ்வால்ட்' என்ற பேராசிரியர் அறிவியல்பூர்வமாக அறிந்திருந்தார். அவர், 1940 களில் எறும்புகளை வளர்க்கும் முறையைக் கண்டறிந்தார். அவர் பத்தாயிரம் செவ்வெறும்புகளின் கூட்டங்களை ஜெர்மனியில் உருவாக்கினார். அங்கிருந்த மோலின் காடுகளில் அந்த எறும்புக்கூட்டங்களை உருவாக்கினார். அவற்றை மரங்கொத்திப் பறவைகளிடமிருந்து வலைபோட்டுக் காப்பாற்றும் அளவுக்கு அங்கு வாழ்ந்த மக்களிடையேயும் விழிப்புணர்வு பெருகியிருந்தது . இதனைப் பின்பற்றி இத்தாலியிலும் எறும்புப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இத்தகைய அறிவியல் செய்திகள் குறித்து ஏதுமறியாத, படிக்காத பாமரனான ஜாதவுக்கு எறும்புகள் பற்றிய அறிவு எப்படிக் கிடைத்தது? இது காலம்காலமாக எல்லா உயிர்களையும் தம்மைப் போலவே கருதி அன்பு செலுத்திய எளிய மனிதர்களுக்கு உரியது. இதைத்தான் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிறது திருக்குறள். இந்த மனது ஜாதவுக்கு இருந்ததால்தான் ஒவ்வொரு நாளும் பல முறைகள் கடிவாங்கியும்கூட எறும்புகளைப் பாதுகாத்து மணல்திட்டுக்குக் கொண்டு சேர்க்க அவரால் முடிந்தது. இது, நாம் தொலைத்துவிட்ட மனது. ஆனால், தொல்குடிகள் தொலைக்காத மனது.


நக்கீரன்


காடோடி பதிப்பக நூல்களை பெற 8072730977

கருத்துரையிடுக

புதியது பழையவை