சூத்திரனுக்கு ஒரு நீதியோ?
தண்டச் சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதியோ?
இவ்வாறு சாத்திரம் சொல்கிறது என்றால், அது சாத்திரம் அல்ல… சதி என்று அறி என்று சாதிப் பிரிவினை என்ற மூடக்கொள்கையை முதன் முதலில் சதி என்று உரைத்தவர் தேர்ந்த முறையில் வேதம் ஓதிய மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஆவார்
"சூத்திர னுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரஞ் சொல்லிடுமாயின் அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம்"
இச்சதிக்கு கால் முளைத்தது என்னவோ கைபர் கணவாயில் கயமை கூட்டத்தார் காலடி வைத்தபோதே தீர்மானிக்கப்பட்டதோ நான் அறியேன்
ஆனால், இச்சதி நொண்டி அல்ல! என்பதை பலர் அறிந்தது 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் தான் என்பதை அழுத்தி சொல்வேன்.
இருந்தும், ஏதும் இல்லாத இருள் என்ற விளக்கு தான் வானில் விண்மீன் என்றொரு விஷயம் இருப்பதாகவே நமக்கு காட்டுகிறது.
அதேபோல, அரிய அறிஞர் சிலரே சகலருக்கும் புரியும்படியான, இருந்தும் இல்லாதது போல் நடிக்கும் பல சமூக அடக்குமுறைகளை சத்தமின்றி சுருக்கமாய் சொல்லி வைக்கிறார்கள்.
சர்.பிட்டி, தியாகராயர், டி.எம். நாயர், டாக்டர். நடேசனார், பனகல் அரசர், முத்தையா முதலியார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவர்கள் அனைவரின் அடிமனதின் ஆழ்கருத்தை துணிச்சலோடு பிரகடன படுத்தியவர்தான் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆவார்.
இவர்கள் அனைவரின் பிரதிநிதியாக கலைஞர் சொன்ன அடக்குமுறைக்கு எதிரான ஒற்றை வரி தான், சதிக்கு கால் முளைத்து சாதி ஆனது என்பதாகும்
படித்தவன் குறில் நெடிலாவதை கண்டு புரிவான். பாமரன் குறுக்கப்பட்டதை உணர்ந்து குறி அறிவான்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இவ்வொற்றை வரியின் ஆழம் அப்படி.
தமிழகத்தில் சாதி புகுந்தது பத்தாம் நூற்றாண்டிலோ பதினைந்தாம் நூற்றாண்டிலோ அல்ல.
திருவாரூர் பெரிய கோவிலின் காலத்தை எவ்வாறு அறிய முடியவில்லையோ அதேபோல் இச்சதி பிறப்பையும் அறிய முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் இருக்கும் பூலாங்குறிச்சி மலையில் கிடைத்தது தான் பூலாங்குறிச்சி கல்வெட்டு
இப்போது நாம் வாழும் நூற்றாண்டு 21ஆம் நூற்றாண்டு ஆகும். பூலாங்குறிச்சி கல்வெட்டு தமிழ்நாட்டின் 1ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த செய்தியை பதிவு செய்கிறது. அதாவது ஏறத்தாழ 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு தான் பூலாங்குறிச்சி கல்வெட்டு.
அக்கல்வெட்டு கூறும் செய்தியை கேட்டால் 1ஆம் நூற்றாண்டிலே தமிழகத்தில் சாதி பேதம் எத்தனை அதீதம் என்பதை உணரலாம்.
பூசகர் குடும்பத்தை சாராத வேறொரு ஆளை கட்டும் கோவிலின் கருவறையுள் நுழைக்காதீர்கள்!
தகுதி அற்றோர் எவரும் கோவிலினுள் நுழைய அணுவளவேனும் சம்மதிக்காதீர்கள்!
நால்வருண பாகுபாட்டை எப்போதும் கடைபிடியுங்கள்! என்று ஒரு அரசனின் ஆணை கீழ் செய்யப்பட்டது தான் ஒன்றாம் நூற்றாண்டின் பூலாங்குறிச்சி கல்வெட்டு.
அவ்வாறு ஒன்றாம் நூற்றாண்டிலே வருணாசிரம தர்மம் என்பதற்கு தமிழன் வைத்த பெயர் தான் நாற்பாற்றிணை.
இந்த வருணம் வளர்த்ததே பிரிவு. பிரிவால் வந்ததே சமூகம். சமூகம் தந்ததே சாதி. சாதியால் வருவதே சண்டை. சண்டை பின் வளர்ந்ததே ஆணவக்கொலைகள். இந்த ஆணவக்கொலை பின் எவ்வாறாக பரிணமிக்கும் என்பதை எவரும் அறியமாட்டர். ஆனால் அதன் விளைவு விபரீதம் என்பதை அறிவுள்ளவன் அறிவான்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று மேன்மைபட கூறிய தமிழ் சமூகம் தான் இன்று "யார் தமிழன்?" என்ற கேள்விக்கு சாதியையே வேராக கொண்டு விடை தேடுகிறது.
இந்த சாதிக்காரர்கள் தான் தமிழர்கள். இந்த சாதிக்காரர்களெல்லாம் பிறநிலத்திலிருந்து புலம்பெயர்ந்தோர் எனப்பட்டியலிடுவதும் அநேக சாதிப்பெருமைகளுக்கு வழி வகுக்கிறது.
"சாதிகளை கூட ஒழித்து விடலாம்! சாதி பெருமைகளை ஒழிக்க முடியாது" என்கிறார் தந்தை பெரியார்
எவனொருவன் ஒரு வட்டத்தை ஏற்படுத்தி கொண்டு அதையே தன் வாழ்க்கையாக்குகிறானோ, அந்த வட்டத்தின் வெளியில் இருப்போர் எல்லாம் அவனுக்கு வேற்று வாசிகளாய் ஆகிப்போவர்.
எவன் தனது சாதியை பெருமையாகக் கருதி தன் அடையாளமாய் இணைத்து கொள்கிறோனா, அவனுக்கு பிறவினத்து மனிதர் கூட புறவினத்தவராய் தெரிகின்றான்.
சமூகம் ஒடுக்கப்பட்டவர்களாய் கருதுவோரின் ஓட்டுவீட்டின் சன்னலுக்கு ஓட்டை இருக்க கூடாதென்ற சட்டம். அவர்களின் மூச்சி காற்றை கூட தாழ்த்தப்பட்டதாய் நினைக்கும் அவலம். வெளிர் நிறத்து மாந்தரெல்லாம் வேடிக்கையாக வேந்தன் மனதை மாற்றிய சூழ்ச்சி. இதுவே தலையான அறம்பாடிய தரணித்தமிழன் தாழ்ந்த நிகழ்ச்சி.
சாதி ஒழிப்பை பற்றி வடலூர் வள்ளலார், அயோத்தி தாசர், பெரியார், பாரதியார் என பலர் சொன்னவை பல. ஆனால் இயேசு கிறிஸ்து சொன்னபடி சத்தியவானே இவர்களது சத்தத்தை கேட்கிறான்.
கி.பி 600களில் நபிகள் நாயகத்தின் சமூகத்தை சேர்ந்த பெண் திருட்டு தொழிலில் ஈடுபடும் போது, அந்த சமூகத்தை சார்ந்தோர் நபிகளிடம் வந்து மன்னிக்கும்படி வேண்டினார்கள். அவர்களிடம் நபிகள் நாயகம் சொல்கிறார், "என் மகள் ஃபாத்திமா திருடி இருந்தாள் அவளது கைகளையும் வெட்டுவேன்" என்று
எங்கே சதிக்கு கால் முளைக்க வில்லையோ அங்கே இதயங்களின் மொழி ஒற்றுமையாகிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மூலர் வாக்கே மூலமாகிறது.
உலகத்தை திருத்த ஐந்து வழி கிடைக்குமாயின் அதில் சாதி ஒழிப்பே சச்சரவு நிறைந்தது. ஆனால் வேறுகதியின்றி அது ஒன்றே நிம்மதியை நித்தியமாக்குவதாகும்.
ஆனால் இன்றைய நிலை என்ன?
இந்த இனத்து மக்கள் சமைத்த உணவை நாங்கள் உண்ணமாட்டோம். இந்த ஜனங்கள் தரையில் அமர்வதே உசீதம். இந்த ஜனங்களுக்கெல்லாம் சட்டை எதற்கு? இவர்களெல்லாம் இப்படித்தான்!
என்ற மூடக்கருத்துகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்தபாடில்லை. கால் மட்டும் முளைத்திருந்த சதிக்கு இன்று கூர் பல்லும் நீள் வாலும் கூட முளைத்திருப்பதாய் தோன்றுகிறது.
ஒரு புதுகவிஞர் சொல்கிறார்,
"திருக்குறளில்
மட்டும்
முப்பால் இல்லை,
சமூகத்திலும்
உண்டு!
அவை,
ஆட்டுப்பால்
மாட்டுப்பால்
சாணிப்பால்" என்று
எத்தனை வேதனையான வரிகள் இவை.
அன்று 'வறுமை கொடிது' என்றாள் ஔவைப்பாட்டி ஆனால் மனிதரென்ற வகையில் கூட ஒற்றுமையல்லாத பூமியில் வாழ்வது தான் எத்தனை கொடியது.
இன்னொரு மனிதரை தாழ்ந்தவராய் எண்ணி அவருக்கு பாலில் சாணி கலந்து கொடுத்த சமூதாயத்தில் தான் நாமெல்லாம் இருக்கிறோமா? என்று நினைக்கையில் எல்லாம் பெருமையாய் நினைக்கும் அத்தனை பேறும் அழுக்கு நிறைந்த சேறுக்கு சமானமாய் தெரிகிறது எனக்கு.
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக் கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றமென்றும் சொல்லலாமோ
சாதி பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதி பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதி கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னிற் செழித்திடும் வையம்
என்று சிறுபிள்ளைக்கு கூட புரியும்படி சொல்லிய மகாகவி பாரதியைத்தான் இன்று சில மூடக் கூட்டம் அவரது சாதியை கண்டே, அவர் மகாகவி அல்ல மகாகாவி என்கிறார்கள்.
சாதியை ஒழித்தல் வேண்டும் என்று பீடுபட உரைப்போர் கூட திருமணப்பத்திரிக்கையில் பெயருக்கு பின் சாதியை இணைத்து கொள்கிறார்கள். அதுபோல, சாதியை ஒழிக்க செயல்படும் சில முற்போக்கு கூட்டங்கள் கூட மேடைப்பேச்சுகளில் இன்னொருவரின் சாதியை பற்றி பேசிப்பழித்தல் எந்த வகையில் கொள்கைக்கு உதவும்?
இது போன்றே, கலையுரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்ற மனநிலையே கால் கொண்ட இச்சதி ஆட்டத்தின் ஒழிவுக்கு கதியாகும்.
இறுதியாக,
ஒருகால் இந்த இருகால் கொண்ட சதி வளருங்கால் அம்மூடக்கொள்கைக்கு துணைக்கால் சேராமல் இருப்பதே நலம்.
அதன்பால் எப்பாலும் அதற்கு அப்பால் நின்று அன்பால் தண்பால் பண்பால் இச்சதியை அடக்குவதே அறம்.
தீசன்