தை முதல் நாளா?
சித்திரை முதல் நாளா?
எப்படி அரசாங்கத்தால் ஒரு பண்டிகையையே தன் இஷ்டப்படி மாற்றியமைக்க முடிகிறது??
"அட எல்லாம் இந்த அரசியல்வாதிகள் செய்கிற கூத்துங்க.. தேவை இல்லாமல் காலங் காலமா மக்கள் கொண்டாடுகிற ஒரு பண்டிகையை அரசியலாக்கி நாடகம் நடத்துறாங்க...!" என்கிற எண்ணம் தோன்றுகிறதா..?
அப்படியானால் கேளுங்கள்..
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் புத்தாண்டு என்பது எந்த காலத்திலும் மக்களின் விழாவாக இருந்ததே இல்லை.. எல்லா காலத்திலும் அது ஒரு அரசியல் விழா...!
ஆதலால் அதனை நிர்ணயிக்க கூடிய அதிகாரம் அரசாங்கத்திற்கும் அதனை நடத்துகிற அரசியல்வாதிகளுக்கும் உண்டு.
'ஆண்டு'களின் அவதார கதை..
ஒருமுறை தமிழக சட்டமன்றத்தில் காரசாரமான விவாதமொன்றின் முடிவில் உறுப்பினர் ஒருவர்..., "இந்த பிரச்சனைக்கு அந்த ஆண்டவனால் கூட தீர்வு சொல்ல முடியாது.." என்று கூறி அமர்ந்துவிட்டார்.
அடுத்து எழுந்த கலைஞர் , " எனக்கு முந்தி பேசிய உறுப்பினர் இதற்கு தீர்வு சொல்ல ஆண்டவனாலும் கூட முடியாது என்று சொன்னார்.. நானும் இதற்கு முன் தமிழகத்தை 'ஆண்டவன்' என்ற முறையில் சொல்கிறேன்..." என ஆரம்பிக்க.,, அவை அதிர தொடங்கியது.
இங்கு அவர் சாதூர்யமாக ஆண்டவன் என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தாலும்... உண்மையிலுமே....
ஆண்ட = ஆண்டவன் = ஆட்சி = ஆளுகை = ஆளு= ஆண்டு
எல்லாமே ஒன்றோடொன்று பொருள் இயைந்தவை.
நம் மனங்களை ஆள்வதால் இறைவன் ஆண்டவன்.!
இறைவனையே மனதால் ஆண்டவள் ஆண்டாள்..!
இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பேரரசர்கள் பலர் தங்கள் ஆட்சி தொடக்கத்தையே ஆண்டுத்தொடக்கமாக அறிவித்தனர்..
அந்நிய ஆக்கிரமிப்பாளர்களாம்
'சாகர்' என்றொரு இனக்கூட்டத்தை வென்று விரட்டியடித்தபிறகு 56 தேசங்களை மீட்டெடுத்து ஒன்றிணைத்து கட்டியாண்ட விக்கிரமாதித்த மாமன்னனால் "விக்கிரம சம்வத்" என்கிற 'விக்கிரம ஆண்டு'
தொடங்கப்பட்டது.
இது விக்கிரமனின் ஆட்சித்தொடக்கத்தையே குறிக்கிறது. (கிமு 56 ~ 57)
120 ஆண்டுகளுக்கு பிறகு,,
சாலிவாகனன் என்றொரு நாகர் குலவேந்தன் விக்கிரமாதித்த பரம்பரை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அதிகாரத்தை கைப்பற்றி "சாலிவாகன சகாப்தம்" தொடங்கியிருக்கிறான்.
சாலிவாகன ஆண்டு இந்தியாவில் நாகர்கள் கோலோச்சிய காலங்களில் வழக்கில் இருந்திருக்க வேண்டும். இது ஒரு சந்திரனை அடிப்படையாகக்கொண்ட கால கணக்கீடு முறை.
இதே காலக்கணக்கீடு முறையை அதிகாரபூர்வ மாக கிபி-78ல் வேறுபெயரில்... தென்னிந்திய மன்னர் ஒருவர் பிரபலபடுத்தினார்.
அதுதான், "சக சகாப்தம்" என்கிற ஆண்டு தொடக்கம். கௌதமி புத்திர சதகர்ணி எனும் சாதவாகன பேரரசர் (சிலப்பதிகாரத்தில் வரும் 'நூற்றுவர் கன்னர்' ) இதை அறிவித்தார்.
இதுவே தற்போதைய நவீன இந்தியாவின் தேசிய நாள்காட்டி யாகவும் விளங்குகிறது..!!
அதாவது,, ஆங்கில நாள்காட்டியின் படி நாம் தற்போது 2022ல் வாழ்கிறோம். ஆனால் இந்திய தேசிய நாள்காட்டியின்படி நாம் இன்னும் 1944 ஆம் ஆண்டில் தான் இருக்கிறோம்!!!
இதுமட்டுமல்ல..கேரளத்தில் கொல்லம் ஆண்டு..
வடக்கில்.. குப்தர் ஆண்டு, வல்லபி ஆண்டு,
காலச்சூரி ஆண்டு,
சமண மற்றும் புத்த சமய ஆண்டுகள் - என பல்வேறு ஆண்டு கணக்கீடு இந்தியா முழுவதும் வழக்கில் உள்ளது.. அவை அனைத்தும் அரசியல் ஆட்சி மாற்றத்தினால் விளைந்தவை. புத்துயிர் பெற்றவை.
இவ்வளவு ஏன்...,
கிமு, கிபி என்று தமிழில் கிறிஸ்துவுக்கு முன் பின் என சொல்லினாலும்... இதன் ஆதாரமூலமான இலத்தீன் சொல்லாடலில் BC & AD என்பதில் AD (ANNO DOMINI) என்பதற்கு
"இறைவனின் ஆட்சியில்.." என்றுதான் பொருள்...!
முகமதியர்களும் கூட.. அரபுநாடுகளில் அரசியல் மாற்றம் உண்டாக விதைபோடப்பட்ட (நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து மெதீனா யாத்திரை புறப்பட்ட) நாளைத்தான் 'ஹிஜ்ரி'ஆண்டு பிறப்பாக (கிபி 622) கணக்கிடுகிறார்கள்.
வருஷம் பிறந்த கதை..
வருஷம் என்கிற சொல்லை பயன்படுத்துகிறோமே..
இது எங்கிருந்து வந்தது தெரியுமா?
பழங்காலத்தில் ஒரு மழைக்காலம் போய் அடுத்த மழைக்காலம் வருவதற்கான இடைவெளியைதான்.. ஒரு 'வருஷை' என்றார்கள்.
மழை வருஷித்தல் என்றால் மழை பொழிதல் என்பதுதானே பொருள்?
வருடுதல்/தொடுதல்/பிடித்தல்..
வருடை~ வருஷை
வருடம் ~ வருஷம்.
இந்த வருஷம் போகட்டும்.. அடுத்த வருஷம் பாத்துக்கலாம்.. என்றால் என்ன பொருள்..?
இந்த மழைக்காலம் போகட்டும் அடுத்த மழைக்கு பாத்துக்கலாம்
சரி..
எதற்காக மழையை வைத்து கணக்கிடவேண்டும்?
ஏன்னா... உயிரினங்களை பூமியில் பிறப்பித்தும்.. அவற்றுக்கு உணவளித்து இயக்குவதும் மழை. வாழ்வின் ஆதாரமே மழையை நம்பிதான் இருக்கிறது..
கடவுள் வாழ்த்து எழுதிய கையோடு வள்ளுவனார் அடுத்து வான்சிறப்பை எழுதியதும்..
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! என்று இளங்கோவடிகள் மங்கலம் பாடியதும் கூட அதனால் தானே.
சரி...
அப்படி பார்த்தால் கார்கால மாதங்களான ஐப்பசி யோ அல்லது கார்த்திகையோ அல்லவா வருட தொடக்கமாக இருக்க வேண்டும்...?
அப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தது...
அதனால் தான் அந்த மாதங்களில் தீபாவளி திருநாளையும் கார்த்திகை தீபத்திருநாளும் கொண்டாடுகிறார்களோ என்னவோ?
(இராமன் அரியணை ஏறிய நாள் என்ற வாய்மொழி வரலாற்றை எடுத்துக்கொண்டாலும்..
ராமனின் ஆட்சி தொடக்கிய 'ஆண்டு'.. என்கிற பொருளில் அதுவும் ஒரு அரசியல் புத்தாண்டையே குறிப்பதை கவனியுங்கள்)
அட இந்த கதையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.. தமிழ்ப்புத்தாண்டு தை மாதமா? சித்திரை மாதமா??
வரலாற்று ரீதியாக அணுகினால்
இந்த இரண்டு மாதம்மட்டுமல்ல..
ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, வைகாசி முதலியனவும் இந்த போட்டி பட்டியலில் உண்டு!!!
வானியல் ரீதியாக அணுகும் போதுதான் இது தை Vs சித்திரை இடையிலான துவந்த யுத்தமாக மாறுகிறது.
சூரியன் உதிக்கும் திசை எது?
கிழக்கு!
இது எல்லாமாதத்திலும் சரியான பதில் இல்லை!
பூமியில் இடத்துக்கு இடம் நாளுக்கு நாள் இது மாறும்.
அதாவது சூரியன் தென்கிழக்கிலோ..
வடகிழக்கிலோ ... சற்று தள்ளி தான் உதிக்கும்.
ஆண்டில் இரண்டு மாதங்களில் மட்டும் சூரியன் சரியாக கிழக்கில் உதிக்கும்.
12 ராசிகளிலும் மாதத்திற்கு ஒன்றாக சூரியன் உதிக்கிறது..
தற்போதைய தமிழக நிலப்பரப்பை பொறுத்தவரை மேஷமும் (சித்திரை), துலாமும் (ஐப்பசி) அதற்கு தோதாக உள்ளது.
தைமாதம் மகர ரேகையிலும்
சித்திரையில் மேஷ ரேகையிலும் சூரியன் பிரகாசிக்கிறது.
ராசிபலன்களில் சோதிடர்கள் மேஷத்தை முதலாவதாக கொண்டிருப்பதாலேயே மேஷம் முதலாவது அட்சரேகையாக ஆகிவிடாது.. வான ராசிமண்டல சக்கரத்தில் முதலும் இல்லை முடிவும் இல்லை. ஒரு வட்ட சக்கரத்தில் எந்த இடத்தைபோய் தொடக்கப்புள்ளி என்று கருத முடியும் சொல்லுங்கள்?
இப்போதைய தமிழக ஆந்திர பகுதிகளில் சித்திரையில் துல்லியமான கிழக்கில் சூரியன் உதிக்கிறது.
ஆனால் முன்னர் குமரிகண்டபகுதியில் தமிழர்கள் வசித்திருப்பார்களேயானால் அங்கு சூரிய உதயம் தைமாதத்தில்தான் துல்லியமான கிழக்கில் உதித்திருக்கும். மேலும் தை மாதம் முதல்தான் சூரியன் வடக்கு நோக்கி நகரத்தொடங்குகிறது..! அந்த குறிப்பிட்ட நாளினை 'ரதசப்தமி' என்றுகூட இன்றும் ஆலயங்களில் கொண்டாடுவதுண்டு..!
ஆக, மரபுவழி புத்தாண்டாக தைத்திங்களை கருதலாம்..
தற்போதைய தமிழக நிலப்பகுதி சித்திரையில்தான் சூரியதரிசனத்தை கிழக்கில் பார்க்கிறது.. மற்றமாதங்களில் அது வடகிழக்கிலோ /தென்கிழக்கிலோ உதிக்கும்.
இதை சாதரணமாக புரிந்து கொள்ள வேண்டுமெனில்..
ஒருநாளின் துல்லியமான தொடக்கம் சூரிய உதயமா?
அல்லது சூரியன் தலைஉச்சிக்கு வருகிற நேரமா?
சூரிய உதயம் என்று நீங்கள் கருதினால் நீங்கள் தைப்புத்தாண்டு ஆதரவாளர்.
(தை யிலேயே சூரியன் தெற்கிலிருந்து வடக்குநோக்கிய பயணத்தை தொடங்கிவிடுகிறது)
சூரியன் தலைஉச்சிக்கு வருகிற நேரம்தான் நாள் தொடக்கம் என்றால் நீங்கள் சித்திரை புத்தாண்டு ஆதரவாளர்.
(சரியாக கிழக்கை அடைந்து மேலும் வடக்கு நோக்கி நகருகிறது)
யோசியுங்கள்..இரண்டுமே தவறில்லை. இரண்டும் ஓர் ஒப்புமை அளவீடு அவ்வளவுதான்.
அதெல்லாம் சரி...எண்களை கண்டுபிடித்த இந்தியர்கள் ஏன் தங்கள் மரபுகளில் ஆண்டுகளுக்கு தொடர்எண் இடவில்லை?
அளவுக்கு மிஞ்சிய அறிவுதான் காரணம்..!
ஆரம்பத்தில் அவர்களும் தொடர் எண் கணக்கிட முயன்றுதான் இருக்கிறார்கள்..
ஆனால் பிறகு,, ஆள் ஆளுக்கு ஒரு எண்கணக்கு வைத்து அவரவருக்கு என ஒரு காலக்கணிதம் செய்ததாலும்..
நிரந்தரமான வருட தொடக்கமோ.. துல்லியமான வருட முடிவு என்றோ
ஒன்று எக்காலத்திலும் இல்லை என்பதை உணர்ந்திருந்ததாலும் அவர்கள் அதனை தவிர்த்திருக்க கூடும்.
ஆரம்ப கால மனிதன் இரண்டு இரண்டாக மட்டுமே எண்ண கற்றிருந்தான்.
பிறகு ஐந்து ஐந்தாக.. (உதாரணமாக ரோமன் எண்முறை ஐந்து எண்களுக்கு ஒருமுறை வடிவம் மாறும்.)
இன்றைய ஈரான்- ஈராக்கில் அன்று வாழ்ந்த (பாரசீகம்) மெசபடோமிய /
சுமேரியர்கள் ஆறு என்ற எண்ணை அடிப்படையாக கொண்டிருந்தனர். அது பின்னாளில் அறுபது அறுபதாக பரிணமித்தது. அதனால்தான் இன்றளவும்கூட நாம் கடிகாரங்களில் 60நிமிட கணக்கை பின்பற்றுகிறோம்.
தமிழில் பருவகாலங்களும்..
பெரும்பொழுது.. (கார்/கூதிர்/முன்பனி/பின்பனி/இளவேனில்/முதுவேனில்)
சிறுபொழுது.. (வைகறை/காலை/நண்பகல்/எற்பாடு/மாலை/யாமம்)
முதலியன ஆறு ஆறாகவே பகுக்கப்பட்டுள்ளதை சிந்தியுங்கள்..!!
இதேபோல, ஏழு ஏழாக, எட்டு எட்டாக.. ஒன்பதோடு முடிவதாக.. கூட கணிதம் நின்றுபோயிருக்கிறது..
பத்து பத்தாக எண்கள் வந்த பிறகுதான் ஒரு அடங்கா நீட்சிக்கு கணிதம் வளர்ச்சி பெற்றது.
இன்னும் சொல்லப்போனால் ஒரு சுழியம் (zero) புகுந்து தான் எண்களை அதன் அடுத்த பரிமாணத்திற்கு அழைத்துச்சென்றது.
அதுவரை அறிஞர்கள் இடையே நிலவிய ..., காலம் / பிறவி / வாழ்வு.. எல்லாம் ஒரு சுழற்சி என்கிற கருதுகோளை வேருடன் தகர்த்தெறிந்து அவை எல்லாம் முடிவை நோக்கி நகருகிற முடிவிலா தொடர்ச்சி என்ற கண்ணோட்டத்திற்கு இட்டுச்சென்றது.
வேதகாலத்தில் இருந்ததாக குப்தர் காலந்தொட்டு கூறப்படும் யுக கணக்கீடுகளில் ( சத்ய யுகம் , திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்) எல்லாம் ஆயிரங்கள்...லட்சங்களில்.. ஆண்டுகள் கணக்கிடப்பட்டபோதிலும் அவையும் ஒரு சுழற்சி சுழலில் சிக்கிக்கொள்கிறதாக இருந்தன.
அதாவது கலியுக முடிவில் மீண்டும் சத்ய யுகமான கிருதயுகம் தொடங்கிவிடுமாம். அப்படி நடந்தால் அது ஒரு Time loop (காலசுழல்) ஆகிவிடும்!
அண்டவெளியில் பூமியோ அதுசுற்றுகிற சூரியனோ அல்லது இவையாவும் அமைந்திருக்கிற பால்வழித் திரளோ எதுவுமே முன்பிருந்த அதே இடத்தில் இன்னொருமுறை இருக்க போவதில்லை!! எல்லையில்லா பரவெளியில் உலா வரும் அவற்றுக்கு வருடங்கள் ஏது? ஒவ்வொரு நொடியும் புதியதுதான்.
ஆதலால் ஞானமயக்கத்தில் எல்லாரும் உளறுவதுபோல "வாழ்க்கை ஒரு வட்டம்.. பிறவி ஒரு சுழற்சி.." என்பதெல்லாம் வடிகட்டிய பொய்யாக இங்கு அடிபட்டு போகிறது!!
ஒரு ஜனவரி முடிந்து அடுத்த ஜனவரி வரும்போது தேதிகள் வேண்டுமானால் திரும்ப வரலாம்..
கடந்துவிட்ட வயதோ வாழ்வோ திரும்பாது.
இன்று 2000 கடந்து ஆங்கில நாள்காட்டி ஜீவித்து வருகிறது..
இப்போதே அதை முழுசாக எழுதவும் கூறவும் அலுப்பு பட்டுக்கொண்டு 90s,, 2k,, என்று சுருக்கி கையாள்கிறோம்.
யார் கண்டார்கள்?? நாளை ஒருநாள் ஆங்கிலேயரை விஞ்சுகிற இன்னொரு காலக்கணக்கீட்டை உலகம் கண்டடைந்து வசீகரித்துவிட்டால் எல்லாமே அதற்கு மாறிவிடும். நாம் வாழ்கிற இக்காலப்பகுதியை கூட அவர்கள் தங்கள் காலண்டர் படிதான் குறிப்பார்கள். அப்போது இந்த 2022 என்பது வெறும் எண் என்றளவில் அர்த்தமற்றதாகிவிடும்.!!!
இதற்கிடையே புத்தாண்டு பிறந்தால் என்ன ? இறந்தால் என்ன?
அதெல்லாம் நாமாக வைத்துக்கொள்வதுதான். ஆட்சியாளர்கள் எதை அறிவிக்கிறார்களோ அதையே ஒன்றாக சேர்ந்து கொண்டாடலாம். பிடிக்காவிடில் அவரவர் விரும்பிய நாளில் கொண்டாடிக்கொள்ளலாம்.
அந்த நாளில் வானை பிளந்து கொண்டு எந்த ஒருஅதிசயசக்தியும் வந்து உங்களை ஆசீர்வதிக்கபோவதில்லை...,
சபிக்கவும் போவதில்லை!
கொண்டாடுவதற்கு ஒரு விழா வேண்டும்.. அதற்கு ஒரு காரணம் வேண்டும்.. பெயர்வேண்டும்..
இவை மனிதனின் மகிழ்சிக்காக சுகத்துக்காக ஆனந்தத்திற்காக நிகழ்த்தப்படுகிறது..
"கடவுள் படைத்த உலகம் இது..
மனித சுகங்கள் மறுப்பதில்லை..!" என்று கண்ணதாசன் சொல்லுவார்.
ஆதலால்,,தை யில் வேண்டுமானாலும் கொண்டாடுங்கள்..
சித்திரையில் வேண்டுமானாலும் கொண்டாடுங்கள்..
அல்லது இரண்டையுமே கூட கொண்டாடுங்கள்..!!!
ஒன்று உறுதி..
கொண்டாடாமல் விடுவதால் காலச்சக்கரம் ஒன்றும் நின்றுவிட போவதில்லை...!
சூரியராஜ்
ஆழ்ந்து, ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. பல புதிய செய்திகளை அறிய முடிகிறது.
பதிலளிநீக்குஅற்புதம்.
நான் இதுவரை அறியாத பல தகவல்கள் உள்ளன. மிகச் சிறந்த கட்டுரையாக அமைந்துள்ளது. சாலமன் பாப்பையா போல இரண்டு பக்கமும் சாதகமாக தீர்ப்பு அமைந்துள்ளது.
பதிலளிநீக்குபேர.தி.நடராசன்
பதிலளிநீக்குதென்றல் இணைய இதழ் சிறப்பு தமிழ் புத்தாண்டு சித்திரையா தையா என்பதற்கான விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது சுருளிராஜன் பல கட்டுரை பல ஆண்டுகளை ஆய்ந்து எழுதியுள்ளார். ஏன் தமிழ் புத்தாண்டு கையில் வர வேண்டும் என்பதற்கான ஆய்வை அவர் முறையாக செய்ததில்லை.
வடக்கிருத்தல் என்ற ஒரு மரபு வீர சுவர்க்கம் அடைவதற்காக வீரர்கள் உண்ணாநோன்பு இருந்து சூரியனின் வடதிசை பயணத்தை அறிந்து அக்காலம் வரை காத்திருந்து உயிர் விடுவர். என புறநானூறு முதலான இலக்கியங்கள் கூறுகின்றன எனவே சூரியனுடைய வடதிசைப் பயணம் தென்திசை பயணமும் தமிழர்கள் நன்கு அறிந்திருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
சூரிய பயணத்தை அடிப்படையாகக் கொண்டே ஆங்கில ஆண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21 செப்டம்பர் 21 ஆகியவை நீண்ட இரவு நாட்கள் மார்ச் 21 ஜூன் 21 ஆகியவை நீண்ட பகல் நாட்கள் டிசம்பர் 21 என்பது முன்காலத்தில் ஜனவரி 1 அதாவது மார்கழி 15 ஜனவரி 15 அதாவது தை 1 இதில் ஓரிரு நாட்கள் முன் பின் இருக்கலாம் ஆனால் சூரிய பயணமானது கட்டுரையாளர் கூறியதுபோல மழை என்னுடைய முடிவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் இருக்க வேண்டும் எனவேதான் தமிழர்கள் கார்த்திகையின் அடைமழை மார்கழியில் முடிவடைவதால் தை முதல் நாள் சூரியனுடைய வடதிசைப் பயணம் தொடங்குவதை கொண்டு புத்தாண்டை வரை யறத்திருக்க வேண்டும். வடவர்கள் மார்ச் 21 நீண்ட பகல் நாள் ஆதலால் அதைத் தொடர்ந்து வந்த சித்திரை மாதத்தை ஆண்டின் முதல் நாளாக கொண்டு இன்றைய வருட பிறப்பை கொண்டாடி வருகின்றனர். எனவே மழை முற்றுப்பெற்று வெயில் காலம் தொடங்கக்கூடிய மாதமாகிய தை மாதத்தை ஆண்டின் முதல் நாளாக கொள்வது சரியானதாக இருக்கும் ஆனால் கோடை உச்சம் பெறக்கூடிய மாதமாகிய சித்திரையை தமிழ் வருடப்பிறப்பின் முதல் நாள் என கொண்டது வடபழனி ஏற்பாடாகவே தோன்றுகிறது இது சார்ந்து நிறைய ஆய்வுகளை மறைமலை அடிகள் பரிதிமாற்கலைஞர் உள்ளிட்டோர் செய்து இருப்பதின் அடிப்படையில்தான் தமிழ் புத்தாண்டு தை முதல் நாள் என கடந்த கலைஞர் ஆட்சியில் முடிவு ஏற்கப்பட்டது அதுவும் பல தமிழறிஞர்களின் கடுமையான போராட்டமாக இருந்தது ஆனால் மக்கள் பழகிய சமூக விழாவாக கொண்டாடக்கூடிய சித்திரை முதல் நாளை மாற்றுவதன் மூலம் மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என்பதால்தான் கடந்த ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் மீண்டும் அது சித்திரை ஆகவே அது அறிவிக்கப்பட்டது. கட்டுரையாளர் கூறுவது போல் நமக்கென்ன என்று எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துவது வந்து வருவோர் போவோர் எல்லாம் தமிழக இடத்து இல்லாத ஒற்றுமையை பயன்படுத்தி தாங்கள் மேல்நோக்கி வளர்கின்றனர் தமிழர்களின் ஒற்றுமை தமிழ் பண்பாட்டின் பழமை வலிமை ஆகியவற்றை அதன் தனித் தன்மையோடு சமூகத்திற்கு புரிய வைக்க வேண்டும் எந்த முயற்சியை இந்த இதழ் முன்னெடுக்கும் என்று நம்புகிறேன் தமிழர்கள் மாதங்களுக்கும் தமிழ் பெயரிட்டேன் வழங்கியிருந்தனர் என்பதை நாம் நினைவு வைத்துக் கொள்வதன் மூலம் தமிழர்கள் உலகுக்கு வழிகாட்டிகளாக மாற வேண்டும் என்ற முன்னெடுப்பை இதன் மூலம் செய்வீர்களா
வாழ்த்துக்களுடன்.
தி. நடராசன்
கடிதம் வாய் மொழியின் வரி வடிவம்.
பிழை இருப்பின் பொருத்தருள்க.
மதிப்பிற்குரிய பேராசிரியரின் கருத்துகளுக்கு வணங்குகிறேன்..!
நீக்குகீழ்வானில் கதிரவனின் வட தென் திசை பயணங்களை பழந்தமிழர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.
ஒளிமாசற்ற இரவுவானின் தெளிவான விண்மீன் நகர்வுகளை பார்த்தவண்ணம் உறங்கும் வாய்ப்பு ஒரு நூற்றாண்டு முன்புவரை கூட நம்மவர்களுக்கு கிடைத்த ஒன்றுதான். தற்போதுதான் அது ஏதோ அரிதான நிகழ்வாகிவிட்டது.
"வடக்கிருத்தல்" என்பது சமணர்களின் "சல்லேகனம்" என்கிற வழக்கத்தோடு ஒப்புநோக்க தக்கதாகவே நான் படித்திருந்தேன்.. அதில் வடதிசை பார்த்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்விடுவதாக கூறுவர்.
ஆனால் நீங்கள் சொன்ன வடக்கிருத்தல் என்பது.... மகாபாரத பீஷ்மர் உத்ராயண காலம் வரை காத்திருந்து உயிர்துறக்கிற நிகழ்வை போல உள்ளது. விரும்பும் நேரத்தில் உயிர் துறக்கிற வரம் பீஷ்மரை போல எல்லாருக்கும் கிடைக்குமா என்ன?
ஆடி மாதம் உண்ணாநோன்பை தொடங்கிய ஒருவரால் தொடர்ந்து ஆறுமாதகாலம் காத்திருந்து தைமாதம் வரும்வரை தாக்குபிடிக்க இயலுமா..?
எனினும் வடக்கிருத்தல் தொடர்பான உங்கள் கூற்று எனக்கு பிடித்துதான் இருக்கிறது. நிச்சயம் அதுபற்றிய தேடலில் ஈடுபடுவேன்.
கதிரவனின் பயணத்தில்.. மார்ச் 21, ஜூலை21, செப்டம்பர் 21 (சிலநேரம் 22/23), டிசம்பர் 21..(22/23).. ஆகியன முக்கிய தினங்கள்தாம்.
ஆனால் அதில்..
மார்ச் 21 -என்பது நீண்ட பகல் அல்ல..
சம இரவு பகல் நாள்.
அது போன்றே செப்டம்பர் 22..ம்
(இது தமிழகத்தில் என்றில்லை.. உலக உருண்டையின் எல்லா இடத்திலும் சமம்)
ஆனால்
மார்ச் முதல் ஜூலை வரை பகல்பொழுது மெல்ல மெல்ல நீள்கிறது என்பது உண்மை.
பிறகு ..
செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை இரவு நீளும்.. பகல் குறையும்.
(இது பூமியின் வடபகுதிக்கு மட்டுமே..
தென்பகுதிக்கு மாறும்..)
பழந்தமிழர்களின் வகைபாடு என கருதப்படுகிற இளவேனில் முதுவேனில் கார்காலம் முதலிய பருவ கணக்கீடு தற்போதைய தமிழக நிலப்பரப்பிற்கு பொருந்தாததாக உள்ளது.
உதாரணமாக ஐப்பசி கார்த்திகை அடைமழை... காலம்.
என்பது வழக்கு.
ஆனா ஆவணி & புரட்டாசி- யைதான் கார்காலம் என தமிழ்ப்பாடப்புத்தக ஏடுகள் வரையறுக்கின்றன.
நடைமுறையில் அனுபவத்திலும் ஐப்பசி கார்த்திகை தான் தமிழகத்தில் மழைக்காலம்..
மார்கழி , தை பனிக்காலம் ..
தமிழகத்தில் உச்ச வெப்பநிலை நிலவும் ஏப்ரல் மே (சித்திரை, வைகாசி) மாதத்தினை இளவேனில் என்று குறிப்பிடுவதை எப்படி ஏற்பது??
ஆச்சரியம் என்னவெனில் இது தமிழகம் தவிர்த்த மற்ற அனைத்து இந்திய மாநிலங்களுக்கு ஓரளவு பொருந்துகிறது!!!
டெல்லி வாசிகளுக்கு சித்திரை இளவேனில் தான்.
ஆனி ஆடி தான் முதுவேனில்.
அது முடிந்த உடனே ஆவணி புரட்டாசி அவர்களுக்கு கார்காலம் தொடங்கி விடுகிறது..
நமக்கு எப்படி என்பதை நான் சொல்ல வேண்டிய தேவையிராது....!
ஆதலால் இந்த பருவ பகுப்பாய்வே குழறுபடியாக இருப்பதால்..
இவை வெறும் மரபு வழக்கே அன்றி
இயற்கை அல்ல..
அல்லது குறைந்தது..,
வடவேங்கடம் தென்குமரி-யாயிடை நிலப்பரப்புக்கான காலநிலை அல்ல..
அதுபோல சிலர் வடமொழி வருடங்களுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுகிறேன் பேர்வழி என அப்படியே அபத்தமாக மொழிபெயர்ப்பு செய்து உலவ விடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை.
அறுபது ஆண்டுகளில் ஏதேனும் வானியல் சுழற்சி நிகழ்வதற்கு உகந்த சான்று ஏதும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. ஆதலால் தவறான கருதுகோள் தமிழிடம் இருப்பதாக கூற விரும்பவில்லை.
எது எப்படியாயினும் இந்தியாவின் தென்கோடி தமிழகத்தை கதிரவன் தென்கோடிக்கு நெருங்கிவந்து தொட்டு நகரும்படி மகர ராசியில் சஞ்சரிக்கும் தை மாதமே தலைநாளாக இருக்கும் என நானும் நினைக்கிறேன்..
எனினும் போதிய தரவுசான்றுகள் தெளிவானதாக கைவசம் இல்லை. உடன் எழும் ஒருசில ஐயங்களுக்கு பதிலும் கிட்டவில்லை.
நீங்கள் விழைந்ததுபோல அதனை எப்பாடு பட்டேனும் கண்டறிந்து ஆய்ந்து தெளிவடைந்து நாளைய இளையோரிடம் கொண்டுபோய் சேர்த்தே தீருவோம்.
இதனை பல அறிஞர்கள் சொன்னார்கள் என வெறுமனே அவர்களின் பெயர்களை பட்டியலிடுவதை விட அவர்கள்
சொன்னதிலுள்ள மெய்ப்பொருள் ஒன்றிரண்டு கண்டறிந்து தருவீர்களேயானால் ...
ஆரம்பத்தில்
உங்கள் கருத்துகளுக்கு வணங்கிய நான் , முடிவில் இணங்கவும் செய்வேன்..
நன்றி ஐயா.!