அண்மை

வில்லனான வில் ஸ்மித்! ஆஸ்காரின் 'பளார்' கதை

வில்லனான வில் ஸ்மித்


காமெடி நடிகர்கள், தங்களை வருத்திக்கொண்டு பிறரை சிரிக்கச் செய்த காலம் சென்று, ஒருவரை தாக்கி அதன் மூலம் மற்றவருக்கு சிரிப்பு வரச் செய்வது இப்போது வாடிக்கையாகிவிட்டது. பலருக்கு நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை பிடிக்காது. காரணம், அவர் மற்றவரை அடித்து, உதைத்து முகம்சுளிக்க வைக்கும் வார்த்தைகளை பேசி நகைச்சுவை செய்வார். அதே போல தற்போது சந்தானம் போன்ற நடிகர்களும், அடுத்தவரின் உருவத்தை வைத்து கேலி செய்து அதில் மற்றவருக்கு சிரிப்பை வர வைக்க முயன்று வருகின்றனர்.


ஒருவரையும் காயப்படுத்தாத நகைச்சுவை எல்லாம் முக்கால் வாசி மரணம் அடைந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இப்படியான முறையற்ற நகைச்சுவை தான் இப்போது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.  அதில் கிறிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகரை, ஹாலிவுட் பிரபல நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தார். இது தான் உலக அளவில் தற்போது சர்ச்சை ஆகியுள்ளது. என்ன நடந்தது என்று பார்ப்பதற்கு முன், கிறிஸ் ராக் யார்? வில் ஸ்மித் யார்? என்பதை கொஞ்சம் பார்ப்போம்.


கிறிஸ் ராக், தென் கரொலினாவில் பிறந்தவர், நியூயார்கில் வளர்ந்தவர். இவர் மேடை சிரிப்புரையாளர் (stand up comedian) ஆவார். காமெடி சென்ட்ரல் தொலைக்காட்சி இவரை ஐந்தாவது மிக சிறந்த மேடை சிரிப்புரையாளராக அறிவித்தது. இவர் Dr. Dolitle படத்தில் நடித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் Madagascar என்ற கார்ட்டூன் திரைப்படத்தில் வரும் Marty என்ற பெயருடைய வரிக்குதிரைக்கு குரல் கொடுத்தவரும் இவரே. 


வில் ஸ்மித், ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ராப் பாடகராக இருந்தவர். The Fresh Prince of Bel-Air என்ற காமெடி தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் பேட் பாய்ஸ் போன்ற படங்களின் மூலம் ஹாலிவுட் உலகத்தில் நடிகராக நுழைந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் தான். இவர் பல கிராமி விருதுகள், ஒரு தங்க கோள் விருது வென்றவர்.  இவரை அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக் "உலகில் மிக வன்மையான நடிகர்" என்று புகழ்ந்துள்ளது. இவர் நடித்துள்ள பிரபல படங்கள் The Pursuit of Happyness, Men in black, Ali, Bad Boys மற்றும் Aladdin போன்றவை. கிட்டத்தட்ட 32 வருடமாக ஆஸ்கர் விருது கைக்கு கிடைக்காமல் தற்போது நடந்த 94 வது ஆஸ்கர் விருது விழாவில்,  செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸை அவரது தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸ் எப்படி டென்னிஸ் வீராங்கனைகளாக ஆக்கினார் என்பதை கதையம்சமாக கொண்ட King Richard படத்துக்கு சிறந்த நடிகருக்கான தனது முதல் ஆஸ்கரை வென்றார் வில் ஸ்மித். இவருக்கு 2006 ம் ஆண்டு வெளிவந்த The Pursuit of Happyness படத்துக்காக, ஆஸ்கரில் இவர் சிறந்த நடிகருக்கான பட்டியலில் இருந்தாலும் அவருக்கு அப்போது ஆஸ்கர் விருது எட்டா கனியாகியது. இவரை போலவே இவரது மகன் ஜேடன் ஸ்மித்தும் 'The Karate Kid' படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். வில் ஸ்மித்துக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர்.


வில் ஸ்மித் மனைவி பெயர் ஜெடா பிங்கத் ஸ்மித் இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் நடிகை ஆவார். The Matrix Resurrections, The Matrix Reloaded, Bad Moms போன்ற படங்களில் நடித்தவர்.  Madagascar படத்தில் Gloria என்ற நீர்யானைக்கு குரல் கொடுத்தவர். இவருக்கு அலோபிசியா என்ற பெயருடைய முடி கொத்து கொத்தாக உதிரும் நோய் இருந்ததால் இவர் தனது தலை முடியை முழுவதுமாக மழித்து மொட்டை தலையுடன் தான் வாழ்ந்து வருகிறார். இவர் மொட்டை அடித்துக்கொண்டபோது பல ஊடகங்கள் இவரை விமர்சனம் செய்ய, 'ஒரு குறைபாட்டை வைத்து ஒருவரை விமர்சனம் செய்வது நல்லதல்ல' என்று ஜெடா கூறியுள்ளார்.  இவரும் தற்போது நடந்த ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்டார்.  அப்போது கிறிஸ் ராக், ஜெடா ஸ்மித்தை நோக்கி "ஜெடா, நீ  விரைவில் ஜே. ஐ. ஜோன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்" என்றார் சிரித்தபடியே.  


ஜே.ஐ.ஜோன் என்ற படத்தில் கதாநாயகி மொட்டை அடித்தவாறு நடித்துருப்பார். அதை ஜெடாவுடன் சம்பந்தப்படுத்தி பேசினார் கிறிஸ் ராக். முதலில் இதற்கு வில் ஸ்மித் சிரித்தார், பின்னர் தான் அவருக்கு புரிந்தது. அவர் மனைவி ஜெடாவின் முகம் சோக மானதை பார்த்த அவர். உடனே எழுந்து சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். கிறிஸ் ராக் அதை லாவகமாக சமாளித்தது மீண்டும் விழாவை தொடங்கியது பாராட்டுக்கூறியது. இருக்கையில் அமர்ந்த வில் ஸ்மித் "உன்னோட கேவலமான வாயில இருந்து என்னோட மனைவி பெயர தள்ளிவை" என்றார். 


இந்த சம்பவம் நடந்து முடிந்தப் பிறகு தான் வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.  அப்போது அவர் ''காதல் சில கிறுக்குத்தனமான விசயங்களை செய்ய வைக்கும்!" என்று கூறி ஆஸ்கர் குழுவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "வன்முறை அனைத்து வடிவங்களிலும் விஷமானது மற்றும் அழிவை தரக்கூடிய ஒன்று. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகளில் எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. எனது கால செலவில் நகைச்சுவைகள் என் வேலையின் ஒரு பகுதியாகும், ஆனால் என் மனைவி ஜாடாவின் உடல்நிலை குறித்த நகைச்சுவை என்னால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது, நான் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தேன். நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், கிறிஸ்!. நான் கோட்டுக்கு வெளியே இருந்தேன், நான் தவறு செய்தேன். நான் வெட்கப்படுகிறேன், எனது செயல்கள், நான் இருக்க விரும்பும் மனிதனைக் குறிக்கவில்லை. அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. அகாடமி, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். வில்லியம்ஸ் குடும்பத்தினரிடமும், கிங் ரிச்சர்ட் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மற்றபடி நம் அனைவருக்கும் ஒரு அழகான பயணமாக இருந்ததை, எனது நடத்தையின் மூலம் கறைபடுத்தியதற்கு நான் ஆழ்ந்து வருந்துகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். 


ஆச்சரியம் என்னவெனில் கிறிஸ் ராக் எந்த ஒரு வழக்கும் வில் ஸ்மித் மீது போடவில்லை. தன் தவறை அவர் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால் தான் எதிர்வினை ஏதும் இதுவரை செய்யவில்லை. கிறிஸ் ராக் மற்றும் ஜெடா ஸ்மித் மடகாஸ்கர் போன்ற படங்களில் டப்பிங் பேசும் போதும் மற்ற பல படங்களில் பணியாற்றும் போதும் துறை ரீதியாக  சந்தித்தவர்கள் தான். முன்பு ஒரு முறை கூட கிரிஸ் ராக்,  ஸ்மித் மற்றும் ஜெடாவை குறித்து நகைச்சுவையாக ஒருமேடையில் பேசியுள்ளார் என்று ஹாலிவுட் வட்டாரம் கூறுகிறது. 


வில் ஸ்மித் வன்முறையை கையில் எடுக்காமல், நீங்கள் பேசுவது தவறு என்று கூறி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அறைவாங்கிய கிரிஸ் ராக் திரும்பி வில் ஸ்மிதை தாக்கி ஆஸ்கர் விழாவை அமர்க்களம் செய்திருக்கலாம். இல்லை, வழக்கு போட்டு வில் ஸ்மித்தை பழிவாங்கி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.


ஆஸ்கர் குழு வில் ஸ்மிதை 10 ஆண்டுகள் ஆஸ்கர் விழாக்களில் இருந்து தள்ளி வைத்துள்ளது.  அது மட்டும் இல்லாமல் அவருக்கு கொடுத்த ஆஸ்கர் விருதை திரும்ப பெற்றுக்கொள்வதா?, வேண்டாமா? என்று ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது.


இந்த சம்பவம் உலக அளவில் சர்சையாகி இன்று வரை அதன் தாக்கம் தணியவில்லை. இந்த சம்பவம் காரணமாக வில் ஸ்மித் நடிக்க இருந்த  Bad Boy பாகம் நான்கை சோனி நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் நெட்பிளிக்ஸ் உடன் ஸ்மித் நடக்க ஒப்பந்தம் ஆன படமும் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது. ஒரு ஐந்தாண்டு காலம், வில் ஸ்மித் துறை ரீதியாக பாதிக்கபடுவார்.


ஆனால் இதற்கு அப்படியே மாறுதலாக கிறிஸ் ராக் நடத்தும் மேடை நகைச்சுவை நிகழ்ச்சியின் டிக்கெட், விலை உயர்ந்து அதிக நபர்களால் வாங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வில் ஸ்மித்துக்கு கிறிஸ் ராக் பதில் கூறுவார் என்று மக்கள் எதிர்பார்கின்றனர்.  


பெரும்பாலான மக்கள் வில் ஸ்மித் செய்தது தவறு என்கின்றனர். ஆனால் வில் ஸ்மித் ரசிகர்கள் அவர் செய்தது சரிதான் என்கின்றனர். நேரலையாக ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவியை பற்றி பேசியது தவறு என்றாலும் அதற்கு வன்முறையாக ஸ்மித் தாக்கி இருப்பது தவறு தான்! ஸ்மித் சாந்தமாக தன் வாதத்தை கூறி கிறிஸின் வாயில் இருந்தே மன்னிப்பை வர வைத்திருக்கலாம்.  இதே போன்று pirates of the caribbean நடித்த ஜானி டெப்,  துணை பெண் நடிகரை தாக்கினார் என்ற தகவலால் அவர் பல படங்களில் நடிக்க முடியாமல் போனது. இப்போது அந்த நிலைமையில் தான் இருக்கிறார் வில் ஸ்மித்.


படங்களில் ஹிரோவான வில் ஸ்மித் இப்போது ஹாலிவுட் துறையிலும், பல மக்கள் மத்தியிலும் வில்லனாகிவிட்டார்!.


காமெடியனாக இருந்த கிறிஸ் ராக் அமைதியாக இருந்தே ஹீரோவாகிவிட்டார்.


இயேசு சொன்னது சரிதான்! ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு..


குகன்


1 கருத்துகள்

  1. நோயினால் முடி உதிர்தல் ஏற்பட்டு மொட்டை தலையுடன் இருப்பதே ஒரு பெண்ணுக்கு வேதனையானது.அதை வைத்து அவர் கணவர் முன்பே கேலி செய்வது தவறு என்றே எனக்கு தோன்றுகிறது. வில் ஸ்மித்தும் அறையாமல் கொஞ்சம் எடுத்து சொல்லியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை