இந்து சமயமானது இந்தியா, இலங்கை மட்டுமன்றி மேலைத்தேச நாடுகளிலும் செல்வாக்கு செலுத்தி வருகின்றமையை நாம் கண்டுகொண்டிருக்கின்றோம். அதற்கான காரணங்கள் இந்துமதத்தில் உள்ள உண்மை தன்மை அதன் ஈர்ப்பு, பற்று எனக்கூறலாம். இவ்வாறு மேற்கத்தைய நாடுகளில் இந்துமதம் செல்வாக்கு செலுத்துகின்றமைக்கான காரணங்கள் பல. அவற்றில் ஒன்று இந்துஇலக்கியங்களின் மொழிபெயர்ப்பாகும். 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் கிறுஸ்தவ மதமாற்றம் நடைபெற்றது. அதில் கிருஸ்தவ மதத்தை பரப்புவதற்காக வந்த மேலைத்தேச அறிஞர்கள் இந்துசமயம் தொடர்பான எதிர்ப்பை தெரிவிக்க அவைபற்றிய பூரணஅறிவை பெறவிரும்பி இந்து இலக்கியங்களை கற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இவ் இலக்கியங்களில் கண்ட தத்துவசிந்தனைகள் தங்களோடு மறைந்துவிடாமல் இருக்க மொழிபெயர்ப்புச் செய்தனர். மேற்கத்தவர்களின் காலனித்துவ ஆட்சியில் பல பாதகமான விளைவுகள் நடைபெற்றாலும் இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது இந்துசமயத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமே ஆகும்.
இந்துசமய மூலங்களான வேதங்கள், ஆகமங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், பகவத்கீதை, புராணங்கள், ஸ்மிருதிகள், அர்த்தசாஸ்திரம், இதிகாசங்கள் என்பன மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பாளர்களுள் முதன்மையானவர் மாக்ஸ்முல்லர், ஜேர்மனியில் 1823ஆம் ஆண்டு பிறந்தஇவர் மேல்நாட்டு இந்தியவியலாளர்களில் முதன்மையானவர். கிறிஸ்தவசமயத்தில் எவ்வாறு சீர்திருத்தம் ஏற்பட்டதோ அவ்வண்ணமே இந்துசமயத்திலும் சீர்திருத்தம் ஏற்படவேண்டுமென்று கூறியவர். வேதகாலரிஷி என விவேகானந்தரால் அழைக்கப்பட்டார். இராமகிருஸ்ண பரமகம்ஷருடைய வேதாந்தசிந்தனைகள் இவரைக்கவர அவற்றைப்பற்றி பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிவெளியிட்டார். இந்தியவியல் பற்றிய முதலாவது நூலான கீதோபதேசத்தை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். மேலும் ரிக்வேதத்தை ஆங்கிலமொழி பெயர்த்தார். இறைதத்துவக் கோட்பாட்டினை ஒருகடவுட்கோட்பாடு, பல கடவுட்கோட்பாடு, ஒருதெய்வக்கோட்பாடு, பரம்பொருள்கொள்கை எனப்பிரித்துக் கூறியுள்ளார். உபநிடத்தை பகுதி ஒன்று, பகுதி இரண்டு எனப்பிரித்து ஆராய்ந்துள்ளார். இந்தியச்சமயங்கள், இந்துசமய வரலாறு, இந்துமெய்யியல் தொடர்பக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். “இந்தியா எமக்கு எதை புகட்டியது” என்ற நூலில் இந்துகளின் மேன்மையினையும் அவர்களின் வாழ்வியல் சிறப்பையும் எடுத்துக்கூறியுள்ளார்.
இந்தியாவின் புராதன மொழிகள் கலாசாரம் பற்றிய ஆராட்சிகளின் முன்னோடிகளில் ஒருவர் வில்லியம் ஜோன்ஸ், ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தின் மிகச்சிறந்த புத்திஜீவியாகிய இவர் 1783இல் இந்தியாவின் சுப்ரீம்கோட்டின் நீதிபதியாக கடமையாற்றியவர். இந்திய மெய்யியல் தொடர்பான விடயங்களினை ஓரேஇடத்தில் இருந்து கற்கவேண்டும் என்பதற்காக ஆசியகழகத்தினை உருவாக்கினார்.
1789இல் காளிதாசரின் அபிக்ஞசாகுந்தலம், மனுஸ்மிருதி, பகவத்கீதை, கருடபுராணம், ருதுசம்காரம், கீதோபதேசம் என்பவற்றை மொழிபெயர்த்தார். காயத்திரி மந்திரத்தினையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். உபநிடதங்களில் ஈசஉபநிடதத்தின் பதினெட்டு செய்யுற்களையும், மைத்திராயினி உபநிடதத்தின் ஏழு பகுதிகளில் ஒன்றையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இந்துகளின் இசைமரபு, தத்துவமரபு, பௌராணிக இதிகாசமரபு ஆகியவற்றை நினைவுகூர்ந்துள்ளார்.
எச்.எச் வில்சன், லண்டன் தோமஸ் வைத்தியசாலையில் மருத்துவம் கற்று கிழக்கிந்திய வர்த்தக கம்பனிப் பணிப்பின்பேரில் உதவிசத்திரசிகிச்சை நிபுணராக இந்தியாவிற்கு வருகை தந்தவர். இந்தியாவின் மொழி மற்றும் இலக்கியங்களில் கொண்ட பற்றின் காரணமாக ஆசியகழகத்தின் செயலாளராக இருந்து இந்துஇலக்கியங்களை மொழிபெயர்த்தார். 1813இல் காளிதாசருடைய மேகதூதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சாங்கியகாரிகை பற்றி நேரடிவர்ணணை வழங்கியுள்ளார். விஷ்ணுபுராணம், 18மகாபுராணங்கள் இருக்குவேத 3பகுதிகளையும் ஆங்கிலமொழிபெயர்ப்புச் செயதுள்ளார். இந்துக்களிடையே நிலவும் உட்சமயபிரிவுகளை விளக்கும்வகையில் “இந்துகளின் சமயபிரிவுகள்” எனும் புகழ்மிக்க நூலில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரெல்லாகிராம்ஷிஸ், இந்துக்கலைகள் பற்றி ஆய்வுகளைமேற்கொண்ட பெண்மணியாவார். பலேநடனத்தை பயின்றதோடு அவ்நடனத்தில் மிகுந்த ஆர்வம்கொண்டவராகவும் விளங்கினார். ஒருநாள் பகவத்கீதையை படித்தவேளையில் என் மூச்சை நிறுத்துமளவிற்கு என்னைக் கவர்ந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்துக்கோயில்கள், இந்தியகலைக்கொள்கைகள், சிவனின் சன்னிதானம் முதலானவை இவருடைய நூல்களாகும்.
சார்லஸ் வில்கின்ஸ், இந்துக்கற்கைகள், இந்தியவியல்சார் ஆய்வுமுயற்சிகளை முன்னெடுக்கப்படுவதற்கு முன்னோடியகளாக இருந்தவர்களுள் முதன்மையானவர். 1785ஆம் ஆண்டு இந்துசமயத்தின் புனிதநூலாக கருதப்படும் பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். 1786 கீதோபதேசத்தை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் காணப்பட்ட சமஸ்கிருத கல்வெட்டுகளைக் கண்டறிந்து அதனைப் படியெடுத்து ஆங்கிலமொழிபெயர்ப்புச் செய்தார். மகாபாரதத்தை மொழிபெயர்ப்பு செய்துவந்த காலத்தில் அதனை பூரணப்படுத்தமுடியவில்லை.
மேலைத்தேசத்து அறிஞர்கள் இந்துசமயம், கலை, விழாக்கள், இலக்கியம் முதலான இந்துப்பண்பாட்டு அம்சங்களில் ஆர்வம் கொண்டு அறியவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்துசமய இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். மேலைநாட்டு மக்களும் நம்நாட்டு மக்களும் இன்றுவரை இந்துசமய மூலங்கள் அழிவுறாமல் கற்று கொண்டிருப்பதற்கு இவர்களுடைய பங்களிப்பு முக்கியமானதேயாகும்.
இ.சஞ்சிகா
கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை,
இலங்கை
இந்து மதம் எல்லோரையும் கவரும். வெளிநாட்டவர்கள் இன்றும் இந்து மதத்தின் ஈடுபாட்டினால் இந்தியாவுக்கு வருகிறார்கள். மிக்க மகிழ்ச்சி.. நல்ல கட்டுரை வாழ்த்துகஅகள் 🌷🌷
பதிலளிநீக்குஅரிதான தரவுகளின் வரிசையான தொகுப்பு..
பதிலளிநீக்குதேடுபொறியில் இதுபற்றிய தேடலில் நுழைவோருக்கு நல்லதோர் கலங்கரைவிளக்கமாய் அமையும்..