அண்மை

மேலைத் தேசத்தவர்களின் இன்றைய இந்து ஆச்சிரமங்கள்

மேலைத்தேசத்தவர்களின் இன்றைய இந்து ஆச்சிரமங்கள்


இந்தியாவில் தோன்றியதும் இலங்கையிலும் சிறப்பான வளர்ச்சியை திகழ்ந்ததுமான இந்து சமயமானது தென்கிழக்காசியாவிலும் பரவிச் சிறப்படைந்துள்ளமையினை வரலாற்று குறிப்புக்கள் எடுத்துணர்த்துத்துகின்றன. இன்றைய நவீன உலகில் அதையும் மீறி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்துப் பண்பாடானது சிறந்த முறையில் பயில் நிலையில் இருந்து வருகின்றது. அதில் மேலைத்தேசங்களில் இந்து சமயம் சிறப்பான வளர்ச்சி பெற இரண்டு பிரதான காரணங்களை குறிப்பிடலாம். அவையாவன

• இந்துக்களின் மேலைத்தேசத்திற்கான பயணங்கள்

• மேலைத்தேசத்தவர்களின் வருகை

இவற்றில் இந்துக்களின் வெளிநாட்டுப் பயணம் என்று பார்த்தோமானால் குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய மேலைத்தேய நாடுகளுக்கு கடந்த இரு நூற்றாண்டுகளாக இந்து அறிஞர்கள் மற்றும் இயக்கங்களின் செல்வாக்கு மற்றும் இந்துக்களது குடியேற்றங்கள் ஆகியவற்றின் மூலமே மேலை நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. வெளிநாடுகளில் இந்து சமயமானது தனி நபர்களினாலும், குழுக்களினாலும், சுதேச இந்து அமைப்புக்களுடன் இணைந்தும், சிறந்த முறையில் தற்சமயம் கடைப்பிடிக்கப்பட்டும், பேணப்பட்டும் வரப்படுகின்றதுஅந்தவகையில் மேலைத்தேசத்தவர்களினால் உருவாக்கப்பட்டு தற்சமயம் சிறப்பாக இயக்கப்பட்டு வரும் இந்து ஆச்சிரமங்கள் பற்றி நோக்குவோம்

இந்து சமய மூலங்களான அதாவது வேதங்கள், உபநிடதங்கள், இதிகாச புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் போன்றவற்றில் பொதுவாக ஆச்சிரமம் என்பது உலக இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டு இறை இன்பத்தினை நாடுபவர்கள் வாழும் இடம் என்ற பொருளிலேயே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்து சமய பாரம்பரியங்களை சிறந்த முறையில் பேணுவதோடு இறை உண்மையானது அறியப்பட வேண்டிய ஒன்று அதனாலேயே இவ்வுடல் கிடைக்கப்பெற்றுள்ளது என்ற உண்மையை உணர்ந்து இந்து வழி நின்று உண்மையை அறிய முற்படும் ஆச்சிரமங்களாகவே இவ் ஆச்சிரமங்களும் காணப்படுகின்றன.

1.சுவாமி கீதானந்த ஆச்சிரமம்  {Svami Gitananda Ashram}

ஐரோப்பிய நாடான இத்தாலியில் அமையப்பெற்ற இவ்வாச்சிரமமானது 1984ஆம் ஆண்டு யோகானந்த கிரி என்பவரால் புஜ பரமஹம்ச மஹாராஜ் யோகசிரோமணி புராணாச்சாரிய சுவாமி கீதானந்த கிரி அவர்களில் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டு உலகம் பூராகவும் இந்து உண்மைகளை பரப்பி வருகின்றது. தற்சமயம் சுவாமி யோகப் பயிற்சியினை உலகளாவிய ரீதியில் வழங்கி வருகின்றார் இவரது யோகா சம்மந்தமான அறிவானது இந்திய சித்தர் பரம்பரை வழியாக கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகின்றது

யோகா பயிற்சியினை மையமாக் கொண்டிருந்தாலும் சைவ சித்தாந்தம், சாக்த தந்திரவியல், சங்கராச்சாரியார் போன்ற பாரம்பரிய கோட்பாடுகள் பற்றியும் இவ்வாச்சிரமத்தில் கற்பிக்கப்படுகின்றன. அதாவது தென்னிந்தியாவில் சிறந்த முறையில் வளர்ச்சி கண்ட சைவ சித்தாந்தத்தில் சக்திக்கு கொடுக்கப்பட்ட இடத்தினை அடிப்படையாகக் கொண்டு சாக்த நெறியை இவர்கள் முதன்மைப் படுத்திய அதேவேளை சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் முத்தியானது சங்கரரின் அத்வைத முத்தியோடு நெருங்கிய தொடர்புடையமையால் சங்கராச்சாரியரையும் இணைந்திருக்கக் கூடும் என்பது புலனாகிறது.

2. திவ்விய லோகா ஆச்சிரமம் {Divya Loka Ashram of Russia}

ரஸ்யாவில் பல காலமாக இயங்கி வரும் இவ்வாச்சிரமமானது தனி ஒரு நபரால் உருக்கப்பட்டதன்று இது யோகா பயிற்றுவிப்பாளரும், வேத தத்துவபியலாளருமான சுவாமி விஷ்ணு வேதானந்த குருஜீ மஹாராஜா அவர்களின் கருத்துக்களை மையமாக வைத்துக் வேதம் கூறும் வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதன் ஊடாகவும் யோகா பயிற்சியினை மேற்கொண்டு வருவதன் ஊடாகவும் இந் நாட்டில் வாழ்ந்த ஒரு பகுதியினர் இந்து சமய ஆச்சிரம தர்மத்தினை நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்துள்ளனர்.

முதல் முதலாக இவ்வாச்சிரமத்திற்கென 2001 ஆம் ஆண்டு கட்டடத் தொகுதியொன்று கட்டப்பட்டு அங்கு பல மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்து யோகா மற்றும் வேதத்தில் கூறப்பட்ட வாழ்வியல் என்பன பாதுகாக்கப்பட்டதோடு விஸ்தீரணமும் செய்யப்பட்டது. இதன் விளைவால் உயர் சமூக கலாசாரத்தில்  இருந்த பலர் சாந்தி, சமாதானம், சந்தோசம், போன்றவற்றை தரக்கூடிய இவ்வமைப்பால் ஈர்க்கப்பட்டு உள்வாங்கப்பட்டனர்.

பின்பு படிப்படியான வளர்ச்சிப்பாதையில் வந்து கொண்டிருந்த இவ்வமைப்பானது ஒரு கட்டக்கில் வேதாந்தத்தில் ஈர்க்கப்பட்டதோடு கட்டடவியல், பொறியியல் துறை, கலைகள் என அனைத்துமே இந்து சமய ரீதியானதாக வளர்ச்சிகண்டு வந்து கொண்டிருக்கின்றது. இதன் ஒரு கட்டமாக 2007 ஆம் ஆண்டு முதலாவது இந்துக் கோயில் அமைத்ததோடு தொடர்ந்து நடமாடும் சேவைகள், திவ்ய லோகா அமைப்புக்கென தனி பேருந்து சேவை என்பன வளர்ச்சிக்கட்டத்தில் ஏற்பட்டன.

இவ்வாறான படிப்படியான வளர்ச்சிப்பாதையில் வந்த இவ்வமைப்பு தற்சமயம் முழு உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு ரஸ்யா நாட்டில் இந்து ஆச்சிரமமாக இயங்கி வருகின்றது. அதிகளவான மக்கள் இவ்வாச்சிரமத்திற்கு வருகை தந்து யோக பயிற்சிகளில் ஈடுபாடு அதேவேளை அன்றாடம் வாழ்க்கையில் வேதனைகளையும், கஸ்டங்களையும் சந்திக்கும் பல மக்கள் இங்கு அமைதியை பெறுவதற்காக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

யோக பயிற்சியினையும், வேத பாரம்பரியத்தினையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆரம்பித்து இவ்வமைப்பானது தற்சமயம் இவைகளை சிறந்த முறையில் பாதுகாத்து வருவதோடு அதனையும் கடந்த மிஷனாகவும், பல துறவிகள் வாழும் ஆச்சிரமமாகவும் செயற்பட்டு வருவதனை மேற்கூறிய விடயங்களில் இருந்து சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.

  3. பக்தி வேதாந்த ஆச்சிரமம் [The Bhaktivedanta  Ashram]

2003ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தி வேதாந்த இராமகிருஸ்ணானந்த சுவாமி மகாராஜா என்பவரால் பக்தி வேதாந்த மிஷன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படடு வைணவ பாரம்பரியத்தினை முதன்மைப்படுத்தி இலாப நோக்கம் இல்லாமல் இயங்கிவருகின்ற ஒரு மிஷனாக இந்து சமய உண்மைகளை புத்தகங்கள், CDகள், DVDகள், இணையதளங்கள், கற்கை நெறிகள், கருத்தரங்குகள், தியானப் பயிற்சிகள் என பல்வேறுப்பட்ட வழிகளிலும் மாணவர்களை மையமாகக் கொண்டு மக்களுக்கு பரப்பி வந்த நிலையில் 2007ஆம் ஆண்டு பக்தி வேதாந்த இராமகிருஸ்ணாந்த சுவாமி மகாராஜா அவர்களால் வைணவ பாரம்பரிய ஆச்சிரமம் ஒன்றும் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் இயக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாச்சிரமம் அமெரிக்காவில் நியுயோர்க் மாநிலத்தில் அமைந்துள்ள கட்ஸ்கில் மலையில் அமைந்துள்ளது. இதன் அமைவிடமும் இங்கு நிலவும் சூழ்நிலையும் இந்து சமயத்தில் ஆச்சிரமமானது எவ்வாறான இடத்தில் எப்படியான சூழ்நிலையில் அமைய வேண்டும் என்று கூறுகின்றதோ அதற்கேற்றவாறு அமைந்தாற் போல் காணப்படுகின்றது.

இவ்வாச்சிரமம் உருவாக்கப்பட்டதிலிருந்து சில காலங்கள் கட்ஸ்கில் மலையின் கிழக்குப் பகுதியில் ஒரு சிறிய இடத்திலேயே இயங்கி வந்தது பின்பு 47 ஏக்கர் பரப்புள்ள பகுதியினை கொள்ளளவு செய்து தற்போது சிறப்பாக இயங்கி வருகின்றது. இயற்கையால் சூழப்பட்ட இவ்வாச்சிரமத்தில் இந்து சமய குருகுலக்கல்வியும், தியான பயிற்சிகளும், யோகா பயிற்சிகளும் சிறந்த முறையில் குரு தேவரான பக்தி வேதாந்த இராமகிருஸ்ணானந்த சுவாமி மாகாராஜாவினால் ஆச்சிரம மாணவர்களுக்கம் சிந்தை தெளிய வைக்கப்படுகின்றது.

4.ஆக்கிரா இந்து ஆச்சிரமம் [Tha Hindu Monastery of Accra]

இவ்வாச்சிரமமானது மேற்கு ஆப்பிரக்காவிலிருந்து கானா எனும் நாட்டில் அதன் தலைநகரம் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதன் உருக்கம் பற்றி பார்த்தோமானால் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் 1937ல் பிறந்த கெவிஸி ஈஸெஸ் {Guide Kwesi Essel} உண்மையை அறிய மேற்கொண்ட நீண்ட பயணத்தில் 1962ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிவானந்த ஆச்சிரமத்துடன் தொடர்புகொண்டு இந்துவழி பிராத்தனைக்காக சங்கம் ஒன்றை ஆப்பிரிக்காவில் ஏற்படுத்தினார். பின்பு மீண்டும் 1970ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து சிவானந்த ஆச்சிரமத்தில் இரண்டு வருடங்களாக இருந்து ஆச்சிரமம் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் நன்கு அறிந்து கொண்டு தனது அறிந்து கொண்டு தனது நாடு திரும்பி பல தடைகளையும் தாண்டி 1975ஆம் ஆண்டு சுவாமி கானானந்த சரஸ்வதி என நாம தீட்சையினையும் பெற்றதோடு ஆக்ரா இந்து ஆச்சிரமம் [Tha Hindu Monastery of Accra] எனும் பெயரில் இவ்வாச்சிரமத்தினை நிறுவினார்

இவருடைய இந்த ஆச்சிரமத்தில் உறுப்பினர்களாக இணையும் பல சமயத்தினரும் இவரது வழிகாட்டலினால் இந்து சமய பாரம்பரியங்களை சிறப்பாக கடைப்பிடித்து வருகின்றனர். ‘யாரையும் இந்து சமயத்திற்கு மாற்றமுடியாது. ஏனெனில், ஏனைய சமயங்களை போல் அது ஒரு வாழ்க்கை முறை. ஒருவார பயிற்சிக்குப் பின்னர் இந்துவாக வாழ விரும்புவர்களை ஏற்று தொடர்ந்து இந்துவாக வாழ அவர்களுக்கு உதவி செய்கின்றோம்என்று உரைக்கின்றார் சுவாமி கானானந்த சரஸ்வதி அவர்கள்

இவ்வாச்சிரமத்தில் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. இவ்வாலயத்தின் கோபுர உச்சியில் ஓம் என்ற சின்னமானது அமையப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ்வாலயத்தில் சிவன் முதன்மைப்படுத்தப்பட்டாலும் விஸ்ணு, பிள்ளையார், முருகன் போன்ற இந்துக் கடவுளர்களும் வழிப்படப்பட்டு வருகின்றனர். இவ்வாலயத்திலே கீரத்தனைகள் மற்றும் பஜனைகள், ஆராதனைகள், ஹோமம் வளர்க்கும் செயற்பாடுகள், வேத மந்திர உச்சாடனங்கள், என பல விடயங்கள் இந்து பாரம்பரிய முறைப்படி நிகழ்கின்ற அதேவேளை அங்கு நிகழும் பல நிகழ்வுகள் அந்நாட்டு மொழியிலையே நிகழ்த்தப்படுவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

எனவே இவ்வாறான விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கின்ற பொழுது இந்து சமயத்தில் மேலைத்தேசத்தவர்களுக்கு காணப்பட்ட ஈர்ப்பானது அவர்களின் இந்து சமயம் என்ற ஒரு பண்பாடு இந்தியாவில் காணப்படுகின்றது என்ற அறிவு எப்போது ஏற்பட்டதோ அப்போழுதிருந்தே இந்து சமயத்தால் அவர்கள் ஈர்க்கப்பட்டு விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அன்றிலிருந்து இன்றுவரை அவர்களில் நாட்டம் இந்து சமயத்தினை நோக்கி அதிகரித்து வருகின்றதே தவிர குறைவதாக தெரியவில்லை. இவ்வாறிருக்க மேலே பார்த்த நான்கு ஆச்சிரமங்களும் இந்து பாரம்பரியத்தினை இன்றும் வளர்த்து வருகின்றது என்பது சிறப்பிற்குரியதாகும்.


கி. டிலானி

இந்து நாகரிகத்துறை,

கிழக்குப் பல்கலைக்கழகம்,

வந்தாறுமூலை, இலங்கை.

கருத்துரையிடுக

புதியது பழையவை