அண்மை

சுப்ரீம் கோர்ட் நடவடிக்கையில் நியாயம் உள்ளதா?

 

பாலியல் தொல்லை

தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்த  கால்நடை மருத்துவர் பிரியங்கா. 27 வயதான இளம்பெண்.  ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரை சேர்ந்தவர்.  தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்படும் பிரியங்கா கொல்லூர் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.


வழக்கமாக சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச் சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு பொதுப் போக்குவரத்தில்,  கொல்லூருக்கு செல்வார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி வண்டியை  நிறுத்துவதற்காக சுங்கச் சாவடிக்கு வந்த போது, ஒருகும்பல் நோட்டமிட்டு உள்ளது. இதை அந்த அப்பாவி பெண் கவனிக்கவில்லை. மாலை வீடு திரும்ப வாகனத்தை எடுத்த போது பின்பக்க டயர்  பஞ்சராகி இருந்தது.


வாகனத்தை தள்ளிக்கொண்டே பழுது நீக்க சென்ற போது, அவருக்கு உதவுவது போல் வந்த மது அருந்திய கும்பல் ஒன்று, அவரை ஏமாற்றி ஆள் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் ரீதியான கொடும் கூட்டு  பலாத்காரத்தில் ஈடுபட்டது. பின்னர் அந்த இளம்மருத்துவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தார்பாயில் சுற்றி, லாரியில் போட்டு எடுத்துக் கொண்டு சென்றது.  கட்டபள்ளி என்ற இடத்துக்கு சென்றுதும், பாலத்தின் அடியில் பிணத்தை கிடத்தி பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. போலீசார் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டபோது கிடைத்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.


சுங்கச் சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் உள்ள சி சி டிவி கேமாராவை வைத்து,  ஆராய்ந்த போது

திட்டமிட்டு அவரது வண்டியை பஞ்சராக்கி, இளம் பெண்ணிடம்  உடல் ரீதியான பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் லாரி டிரைவர் பாஷா கிளினர் சிவா மற்றும் ஆட்டோ டிரைவர்களான நவீன், மற்றும்  கேசவலு ஆகிய நான்கு பொறுக்கிகள்தான் என்பதை காவல்துறை உறுதி செய்தது.


தெலுங்கானா, ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் தீ போல இச்செய்தி பரவி மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. அவர்களை உடனே தூக்கில் போட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் ஆவேசப்பட்டார்கள்.


தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு வந்த புதிது என்பதால் மிகவும் ஆத்திரமடைந்த அவர், குற்றவாளிகளை என்கவுன்டரில் கொல்ல வாய்மொழியாக உத்தரவிட்டார்.


சம்பந்தபட்ட மாவட்ட எஸ்.பி யுடன் புறப்பட்ட பத்து காவலர்கள், குற்றவாளிகளை குற்றம் நடந்த இடமான பெங்களுர் ஹைதராபாத் நெடுஞ்சாலைக்கு அழைத்து சென்றனர். எப்படி குற்றம் செய்தார்கள் என்பதை நடித்து காட்ட சொன்னார்கள்.


அதே வேளையில்,  போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்ததாகவும்,  அதனால் தற்காப்புக்காக சுட்டதாகவும் கூறி, போலீசார் நால்வரையும் என்கவுன்டரில் சுட்டு கொன்றார்கள்.


உடனுக்குடன் தண்டனை அளித்த தெலுங்கானா போலிசாரின் என்கவுன்டருக்கு, சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்தன.  என்கவுன்டர் செய்த போலீசாரை பாராட்டாத ஊடகங்களே இல்லை.


மார்வாடி பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொன்ற கார் டிரைவரை, என்கவுண்டர் செய்து கொலை செய்ய ஏற்கனவே தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இது ஒரு முன் உதாரணமாக அமைந்தது.


கொலையாளிகளுக்கு போலீசாரே தண்டனை கொடுத்ததை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஒரு சுப்ரீம் கோர்ட முன்னாள் நீதிபதி, ஒரு சிபிஐ அதிகாரி உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து, இவ்வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயக் கூறியது.


மூன்று முறை, ஆறுமாத நீட்டிப்பு பெற்ற இந்த விசாரணை குழு, கடந்த வாரம் 500 பக்கங்கள் கொண்ட  அதன் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் குற்றவாளிகள் நால்வரும் விசாரனை இல்லாமல் திட்டமிட்டு  போலீசாரால், கொலை செய்யப்பட்டிருப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இது போலியாக உருவாக்கப்பட்ட என்கவுன்டர் என்றும் முடிவு செய்து உள்ளது.


அது மட்டுமல்லாமல், என்கவுன்டரில் ஈடுபட்ட பத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், பரிந்துரை செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கொடுத்த பரிந்துரை என்பதால் இது ஏற்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக  உச்ச நீதிமன்ற பதிவாளர் வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


உடனுடக்குடன் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதால், இனி வரும் காலத்தில் குற்றம் செய்பவர்களுக்கு பயம் ஏற்படும். ஒரு கொலை வழக்கு முப்பது வருடம் ஒவ்வொரு கோர்ட்டாக நடந்து கொண்டிருந்தால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி எப்போது கிடைக்கும்?


பொது மக்களின், உயர் அதிகாரிகளின், விருப்பத்திற்கு ஏற்ப என்கவுன்டர் செய்யும் போலீசார் இப்படிப்பட்ட வழக்குகளில் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.


தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமானது என நீதிமன்றம் அறியும்.  பலரது முன்னிலையில் எந்த தவறும் செய்யாத ஒரு அப்பாவி பெண்ணுக்கு ஒரு கொடூர குற்றம் இழைத்த குற்றவாளிகளுக்கு,  போலிசார் தண்டனை அளித்ததில் என்ன தவறு இருக்க முடியும்?


தகுந்த தண்டனை கொடுக்காவிட்டால்,  திரும்ப திரும்ப இந்த குற்றம் நடைபெறாதா?


சட்ட விதிகளை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு கடைபிடிக்கும் நீதிபதிகள், சந்தர்ப்ப சூழ்நிலை நியாயம் தர்மம் எதையும் அறிய மாட்டார்களா?


கொலை செய்த குற்றவாளிகளை கொன்றால், போலிசார் கொலையாளி ஆகிவிடுவார்களா?


கொலையாளியின் மனித உரிமையை பார்க்கும் நீதிமன்றம், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு உள்ள மனித உரிமையை பார்க்காதா?


என் மனதில் உள்ளதை எழுதினேன். உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.


ஜெ மாரிமுத்து

3 கருத்துகள்

  1. பெயரில்லா22 மே, 2022 அன்று 7:37 PM

    சரியான நீதியை உடனே வழங்காத கோர்ட் மீதும் தவறு உள்ளது. சரியான முறையில் சட்டத்தை பின்பற்றாமல் மேலதிகாரிகள் சொன்னதை யோசிக்காமல் செய்த காவலர்கள் மீதும் தவறு உள்ளது. அந்த கொடும் பாவிகளுக்கு சட்டமே நல்ல தீர்ப்பை தந்திருக்கும். காவலர்கள் அவசர பட்டிருக்க வேண்டாம். ஆனால் தீர்ப்பும் இதுவாகவே தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. உடனடி தீர்ப்பை விரும்புவர்கள், காவலர்கள் அளித்த இந்த தண்டனையை வரவேற்கிறார்கள்... குற்றங்கள் பல்கிப் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில். இதுபோன்ற அதிரடி காவல் துறை நடவடிக்கைகள்தான்.. குற்றங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதற்கான ஒரு வழியாகு.ம்.
    குற்றவாளிகளின் மனித உரிமை பற்றி பேசுபவர்களை, குற்றத்தை ஆதரிப்பவர்களாகவே கருத வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்பை காலத்தோடு வழங்கினால் ஏன் இந்த நிலை ஏற்படுகிறது

    பதிலளிநீக்கு
புதியது பழையவை