ஒவ்வொரு பெண்ணும் இதுநாள் வரையில் வயது அதிகமுள்ள ஆணைத்தான் திருமணம் செய்துள்ளாள். பெண்ணியவாதிகள் பலர் இதில் நிறைய ஆணாதிக்க அரசியல் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆணும் பெண்ணும் சமம் தானே. எனில், ஆண் எவற்றையெல்லாம் செய்கிறானோ அவற்றை பெண்களும் செய்ய அனுமதி உண்டு. பெண்ணை புனிதமாகவும் தனித்தன்மையுடனும் காண்பதில் வரும் சிக்கல்கள் தான் இவை.
ஒரு சமூகம் தன் இன பெண்களை பாதுகாப்பாகவும் அவளது கற்பை புனிதமாகவும் கருதி வீட்டுக்குள்ளே பூட்டி வைத்தும் அரண் செய்வதாலும் பெண்களுக்குரிய ஒழுக்க நியதிகளை வரையறை செய்வதாலும் அந்த பெண் அக்கோட்டிலிருந்து சிறிதாக விலகினாலும் அவள் செய்கின்ற சிறு தவறும் கூட பெரிய பாவமாக பார்க்கப்படும்.
உதாரணமாக, சாலையில் ஒரு புங்கை மரத்தடியில் நின்று கொண்டு ஓர் ஆண் சிகரெட் பிடிக்கிறார். உங்களுக்கு என்ன தோன்றும்?
இதே ஒரு பெண் சிகரெட் பிடிக்கிறார். இப்போது என்ன தோன்றும்?
இது தான் நம் நாட்டில் இருக்கும் பிரச்சனை. ஆண் சிகரெட் பிடிப்பதும் தவறுதான் இருந்தும் மக்கள் அதை பெரிதாக கருதமாட்டார்கள். இதே பெண் சிகரெட் பிடித்தால் அது பெரிய பாவமாக கருதப்படும்.
சிகரெட் பிடிப்பதில் சமஉரிமை கோரவில்லை. சிகரெட்டை விட கேவலமான ஒரு பொருள் இருக்க முடியாது. அதை ஆணாகட்டும் பெண்ணாகட்டும் யார் இழுத்தாலும் தவறே. சிகரெட்டினால் குடிப்பவருக்கு மட்டுமல்ல பூமி, மரம், பிற உயிர் என அனைவோரையும் பாதிக்கக்கூடிய நஞ்சு அது.
ஈசனார் தன் உடலின் சமபாதி உரிமையை உமையவளுக்களிப்பார். இயற்கையில் ஆண் பெண் என்ற பால் வேறுபாடு அண்டத்தை சமநிலையோடு இயங்க வைப்பதற்காகவேயன்றி வேறாக இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் நிலைமை நம் நாட்டிலெல்லாம் வேறு. ஒரு பெண் ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் அது ஆச்சரியமாக பார்க்கப்படும். பெயர் கிடைக்காத தமிழ் செய்யுளுக்கெல்லாம் ஆண் பெயரை வைப்பார்கள் தமிழ் புலவோர்.
இவ்வாறாகவே நாம் வளர்ந்துவிட்டோம். ஆணாதிக்கம், பெண்ணடிமை என்றெல்லாம் பெண்ணியவாதிகள் இதனை குறிப்பிடலாம். ஆனால் எனக்கப்படி தோன்றவில்லை.
வலது கைகளால் தான் சாப்பிட வேண்டும் என்பது பண்பாடு. இல்லை இடது கையும் நம் உடலின் ஒரு நல்ல அங்கம் தான் அதன் வழியே உணவு உண்பதில் ஒரு தாழ்வும் தவறும் இல்லையென்று நான் சொல்கிறேன் எனினும் இதை நன்கு உணர்ந்து தெளிந்த பெரும்பாலானோர்க்கு இடது கையினால் எடுத்து சாப்பிட வராது. அதை இயல்புக்கு எதிராகவோ அல்லது அசிங்கமாகவோ தான் நினைப்பார்கள்
அதே போல் தான் இன்று வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்வதும். பெரும்பாலான ஆண்களுக்கு அது இயல்புக்கு எதிராக தெரியும் அல்லது தன் ஆண்மைக்கு ஏற்பட்ட அவமானமாகத் தோன்றும்.
நடுவுநிலையோடே சொல்கிறேன். இன்றைய ஆண், ஒரு பெண் தன்னை விட அனைத்து விஷயத்திலும் குறைந்தே இருக்க வேண்டும் என்று திடீரென நினைத்து அதுபடி வாழவில்லை. அதுபடியே அவன் செய்யப்பட்டு விட்டான்.
ஏன், பெண்ணும் இச்சமூகத்தால் அவ்வாறகவே தான் ஆக்கப்பட்டிருக்கிறாள். இப்போதும் ஒரு பெண்ணிடம் போய் இதைப் பற்றி கேட்டால், தன்னை விட வயது குறைவான பையனை திருமணம் செய்வதைத் தான் அவளால் ஏற்க முடியாமல் போகும். வயது அதிகமான ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதில் அவளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
பெரும்பாலும், 'தன்னைவிட வயது அதிகமான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளலாமா?' என்ற கேள்வியே ஆண்களின் குரல் தான்.
ஏனென்றால், பெரும்பாலான பெண்கள் தன்னை விட வயது அதிகமான ஒருவரைத் தானே திருமணம் செய்கிறார்கள். அதனால் இந்த கேள்வியே அவர்களுள் எழாதே.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்! பொதுவாக ஆணுக்கு வந்த இச்சந்தேகம் பெண்களுக்கு வந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்?
வயது அதிகமுள்ள ஆணை திருமணம் செய்வதை அவர்கள் இழுக்காக கருதி இருந்தால் இன்று பல குடும்ப பெண்களின் வாழ்வே சூன்யமாகி இருக்காதா?... எனில் இதுதான் என் பதில்,
தன்னைவிட வயது அதிகமான ஒரு பையனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழும் பெண்ணுக்கு இருக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு இருந்தால் கேள்வியே வேண்டியதில்லை. தாராளமாக உங்களைவிட வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
தீசன்
நன்றி நீண்ட நாள் குழம்பி போய் இருந்தேன். மிக்க நன்றி. பெண்கள் வயது அதிகமானவர்களை தானே திருமணம் செய்கிறார்கள். நல்ல சிந்தனை. நன்றி
பதிலளிநீக்கு