அண்மை

தமிழக அரசு சினிமா படம் எடுத்தால் என்ன?

 

தமிழக அரசு சினிமா படம் எடுத்தால் என்ன

எல்லா துறைகளும் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது. ஆனால் மக்களுக்கு சினிமா துறையின் மீதிருக்கும் மோகம் அளக்க முடியாததாய் உள்ளது. 


வருடத்தின் அனைத்து வாரமும் ஒரு துறை இத்தனை பணப்புழக்கத்தை கொண்டிருக்குமா? என்று கண்கள் விரிய ஒரு ஆய்வு செய்து விடலாம்.


பிற துறைகள் அனைத்துமே வருடத்தின் பண்டிகைகளுக்கேற்ப காலங்களுக்கு ஏற்ப மக்களின் தேவைக்கு ஏற்ப வளர்ச்சியை உயர்த்துகிறது ஆனால் சினி துறையில் மட்டும் எவ்வித சலனமும் இன்றி 300 கோடி, 500 கோடி, 1000 கோடி என்கிறார்கள்.


நிச்சயமாக! உழைப்பின்றி ஊதியம் இல்லை. 1000 கோடியை சம்பாதிக்கிறதென்றால் அதற்கு தகுந்த விஷயம் அங்கு இல்லாமல் இருக்காது.


ஆனால் இங்கு நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, 'இத்தனை வருவாய் தரும் துறையை அரசு தனதாக்கி கொண்டால் என்ன?' என்பதே


சமீபத்தில் தமிழுக்கான OTT தளமொன்று 'ஆஹா 100% தமிழ்' என்ற பெயரில் வெளியானது. அந்நிகழ்வில் நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பங்கு கொண்டார். 


எந்த OTT தளமும் தராத வகையில் மாதம் 30 ரூபாய் என்ற கட்டணத்தில் அச்செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டது. 


ஆனால் உண்மையென்ன? 'ஆஹா 100% தமிழ்' என்பது உண்மையில் தமிழ் நிறுவனமே அல்ல. 'ஆஹா' என்று பெயரிருக்கும் போதே நாம் சுதாரித்து கொண்டிருக்க வேண்டாமா!


இந்த செயலியின் வெளியீட்டின் போது 'தமிழுக்கென்றால் எப்போதும் முன்னே வருவேன்' என்றார் முதல்வர். அவருக்கு பின்னே வந்த எவரும் தமிழே பேசவில்லை.


எல்லோருமே தெலுங்கு காரர்கள். பாமர மக்களை கூட எளிதில் சென்றடையும் ஊடகமென்றால் அது சினிமா தான், அதில் வரும் ஒப்பனைகளை தான் மக்கள் செய்து பார்க்க ஆவல் கொள்வர். ஆடைகளை அணிய விரும்புவர். இது என்ன! ஆங்கில மோகமும் ஆங்கிலநாட்டு கச்சை, அலங்கரிப்பு ஆசையும் கூட சினிமாவின் விளைவு தானே.


இந்த 'ஆஹா 100%' செயலியின் நிறுவனர் அல்லு அரவிந்த் ஸ்டாலின் அவர்களிடம் தமிழுக்கென்று ஒரு OTT தளத்தை செய்வதற்கான தனது அபிப்ராயத்தை வெளியிட்ட போது முதல்வர் அவர்கள் ஓகே சொல்லிவிட்டார்கள்.


ஆனால் என் நிலைப்பாடு என்னவெனில், முதல்வர் இந்த யோசனைக்கு அனுமதி தந்ததற்கு பதிலாக தானே அரசு சார்பில் தமிழுக்காக ஒரு OTT தளத்தை ஆக்க ஆணை தந்திருக்கலாம்.


தமிழகத்தில் தமிழக மக்களுக்காக எடுக்கப்படும் தமிழ் படங்களை ஒளிபரப்பு செய்ய ஏன் தெலுங்கு நிறுவன தலையீடு வேண்டும்?


OTT அறிமுகப்படுத்தப்பட்ட போது மக்களின் பார்வை இங்கு வரவில்லை ஆனால் இன்று சினிமாவின் புது மற்றும் பெரு வரவுகளும் கூட OTT தளத்தினுள்ளே எட்டிப் பார்ப்பதை காண முடிகிறது.


தமிழக அரசு சினி துறையை தன் வசப்படுத்த OTT தளத்தை பிள்ளையார் சுழியாக உபயோகித்திருக்கலாம்


வெறும் வருவாய்க்கு மட்டுமல்லாது பெரும் கலாச்சார சீர்கேட்டினையே அரசு சினிமா துறையை கையகப்படுத்துவதால் தடுக்க முடியும்.


மாஸ் காட்டி படம் எடுப்பதால் மட்டுமே இன்றளவும் உயிரோடு இயங்கும் அற்ப இயக்குநர்களை புறந்தள்ளிவிட்டு நல்ல கதையுள்ள புது நபர்களுக்கு வாய்ப்புத் தரலாம்.


நல்ல கதையாக இருந்தாலும் 10 கோடி செலவு செய்து எடுத்துவிட்டு ஓடுமோ ஓடாதோ என்று எதிர்பார்க்க விரும்பாமல் 300 கோடிக்கு படமெடுத்தோமா, 350 கோடி சம்பாதித்தோமா என மனநிறைவு பெற விரும்பும் சன்பிக்சர், லைகா போன்ற பெரிய பெரிய நிறுவனங்களால் தான் நல்ல தரமான எளிய கதைகள் படமாக்கப்படுவதில்லை.


கோடை காலத்தில் இருந்து கொண்டு வேனிற் காற்றை எதிர்பார்ப்பது போல் தான் உள்ளது.


படங்களை தயாரிக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் 10 கோடிக்கு உள்ளாக நல்ல கதையாக இருந்தாலும் படமாக்க தயங்குகிறது. காரணம், இந்த விலைக்கு புதிய முகங்களே காட்டப்படும். படத்தின் வெற்றி தீர்க்கமானதா என்ற சந்தேகம்.


'பத்து வைத்தால் நூறு' என்று பகடை உருட்டுபவன் ஸ்திரமாக சொன்னாலும், காய் சரியாக விழுவது என்னவோ காலத்தின் கையிலே. 


இதனாலே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் புதிய முகங்கள், புதிய இயக்குநர்கள், புதிய பாணிக் கதைகளை புறக்கணிக்கின்றனர். 


பெரிய நடிகர், பெரிய இயக்குநர், பழகிய முகங்கள், கலவை கதை 300 கோடி செலவு செய்தாலும் நிச்சயம் லாபம் என்ற கணக்கில்தான் இன்று கால் மணி நேரம் கூட பார்க்க தகுதியில்லாத படங்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது.


இந்த அத்தனை கொடுமையினையும் அரசு சினி துறையை ஆட்சி செய்தால் ஒழித்து கட்டலாம்.


'பெரிய பட்ஜெட்' படங்கள் அனைத்திலுமே பெரிய பட்ஜெட்டை பெரும் நடிகரே GST யோடு வாங்கிச் செல்கிறார். இதனாலே அதன் விற்பனை விலையும் கூடுகிறது.


மூன்று நாளுக்கு மேல் படம் ஓடுமோ ஓடாதோ என்று எண்ணும் திரையரங்காளரும் முதல் மூன்று நாள் டிக்கெட் விலையில் அதகளம் செய்வார்.


இதற்கெல்லாம் மூலக்காரணம் யார் என்று யோசித்து பார்த்தால் சம்பளம் அதிகமாக வாங்கும் நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் போன்றவர்களே. ஆனால் பாதிக்கப்படுவதோ ஒரு இரண்டு மணிநேரம் பொழுதை போக்க விரும்பும் பாமர மக்கள்.


அரசாங்கமே படம் எடுக்கத் தொடங்கினால் இவைகளிலோர் முறைமையை கொண்டு வரலாம். சரியான சம்பளங்களையும் விற்பனை விலையினையும் நிர்ணயிக்கலாம். டிக்கெட் விலை மோசடிகளை மேற்பார்வையிட்டு தடுக்கலாம்.


கலைஞர் ஆட்சியில் படங்களுக்கு நல்ல தமிழ் பெயர் வைத்தலை ஊக்கப்படுத்த 'தமிழ் பெயர்' வைத்து வரும் படங்களுக்கு கேளிக்கை வரியை தள்ளுபடி செய்தார் ஆனால் இப்போதோ அது மத்திய அரசு வரியோடு சேர்ந்து விட்டது. எப்படியும் பணம் கட்டித்தானே ஆக வேண்டுமென்று இவர்களும் தமிழ் பெயர்களை புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள்


அத்தி பூத்தாற் போல சில தூய தமிழ் பெயர் கொண்ட படங்களும் வருவதுண்டு. ஆனால், மக்கள் கவனித்தம் இருக்கும் படங்களாய் அவை இருப்பதில்லை


இந்தச் சிக்கலும் கூட தமிழக அரசு படமெடுக்கத் தொடங்கினால் மாறும். சினிமாவை பொருத்த வரை ஒரு பாணி கலாச்சாரங்கள் வெற்றி இருக்கும் வரை அதே பாணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.


இந்த நடிகருக்கு இது போன்ற கதை தான் இவருக்கு இப்படியான வேடம் தான் என்பதை கூட எளிதாக ஊகித்து விடலாம். இவ்வாறு மக்கள் இருக்கும் வரை புதிது புதிதாக பெயர் கொண்ட படத்தை பார்ப்போமே தவிர புதிய கதை கொண்ட படத்தையோ கருத்துள்ள படத்தையோ காண மாட்டோம்.


தமிழகம் பேசுவதில், வாழ்வதில், உண்பதில், பாடல் கேட்பதில் கூட தனது பெருமையை கலாச்சாரத்தை இழந்துவிட்டது. மிஞ்சியதை தக்க வைத்து கொள்வதற்காவது


தமிழக அரசாங்கம் படத்தயாரிப்பாளராக வேண்டும்.


தீசன்

2 கருத்துகள்

  1. நன்றாகத்தான் இருக்கும். ஆனால். எந்த கட்சியின் கீழ் அரசாங்கம் செயல்படுகிறதோ, அந்த கட்சி - படங்களில் தன் கொள்கைகளை திணிப்பதையும் தன் கட்சியை விளம்பரப்படுத்துவதிலும் அது கவனம் காட்டும். இல்லை அதை கட்டாயம் ஆக்கும். இது போன்ற பாதகமான விஷயமும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. தீசனார் முன்மொழிவுகளெல்லாம் யதார்த்த யோசனைகளுக்கு அப்பாற்பட்டதாகவும்.. அதேநேரம் அசரடிக்கரமாதிரியும் இருக்கும்.. ஏற்கனவே அஞ்சல்துறை மை அமேசான் போல ஆக்குவதற்கு ஐடியா தந்திருந்தார். அதைவிட இது தூள்கிளப்புகிற யோசனைதான்.

    அக்கறையுள்ள எந்த அரசும் இதை ஏற்கும். ஆனால் அரசுகள்யாவும் தனியார்கம்பெனிகளால் இன்று ஆளப்படுகிறது. தன்கம்பெனிக்கு போட்டியாக தானே எவன் மூக்கை நுழைக்கபோகிறான்?

    பதிலளிநீக்கு
புதியது பழையவை