கடந்த மூன்று வருடங்களுக்கு பிறகு GROUP 2 தேர்வுகள் சென்ற ஜுன் 21 ஆம் தேதி நடைபெற்றது.
சென்ற மூன்று ஆண்டுகளில் 12 லட்சம் பேர் கலை, அறிவியல், வணிகவியல், பொறியியல் போன்ற டிகிரி முடித்திருந்தும் 5529 பதவிகளுக்கு நடந்த இந்த தேர்வுக்கு பதினோரு லட்சத்து எழுபத்தெட்டாயிரம் பேரே விண்ணப்பித்து இருந்தார்கள்.
அதாவது ஒரு காலியிடத்துக்கு சுமார் 200 பேர் மனு செய்திருந்தார்கள். இந்த முறை நடந்த தேர்வுக்கு காலை 9 மணிக்கு மேல் தேர்வுக்கூடத்துக்கு வந்த யாரையும் ஆணையம் அனுமதிக்கவில்லை. அதனாலோ என்னவோ, ஒரு லட்சத்து என்பதாயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. முடிவில் ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஐந்து ஆயிரம் பேரே தேர்வு எழுதினார்கள்.
இதனால் ஒரு காலி இடத்துக்கு போட்டியிடும் போட்டியாளர் எண்ணிக்கை 180 ஆக குறைந்தது.
தேர்வு எழுதி வந்தவர்கள் பெரும்பாலும் தேர்வு எளிமையாக இருந்ததாக கருத்து தெரிவித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன?
தமிழுக்காக கேட்கப்பட்ட நூறு கேள்விகள் எளிமையாக இருந்தது உண்மைதான். ஏனெனில் கேள்விகள் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டு இருந்தது. சுமார் எழுபது கேள்விகள் சுலபமாகவும், சுமார் இருபது கேள்விகள் சற்று கடினமாகவும் இருந்தது. பத்தாம் வகுப்பில் நானூற்று ஐம்பது மதிப்பெண் எடுத்த மாணவர்களால் நிச்சயம் என்பது கேள்விகள் சரியாக எழுதியிருக்க முடியும்.
கணக்கில் கேட்கப்பட்ட இருபத்தைந்து கேள்விகளில் பதினைந்து கேள்விகள் மிகவும் எளிமையாகவே இருந்தன. தனி வட்டி,கூட்டு வட்டி, விகிதங்கள், மீ சி ம, கால அளவு போன்றவை யோசிக்கவே தேவையில்லாத அளவுக்கு நேரடியாக கேட்கப்பட்டு இருந்தன. மீதமுள்ள பத்து கேள்விகளை சரியாக எழுத கொஞ்சம் சிந்தனைத் திறன் வேண்டும். வரலாறும் கூட பரவாயில்லை.
ஆனால் பொது அறிவு மற்றும் திறன் சார்ந்த கேள்விகள் யாரும் எதிர்பார்க்காத பகுதிகள் மூலமே கேட்கப்பட்டு இருந்தது.
பகுதி இரண்டில் கணக்கு தவிர கேட்கப்பட்ட எழுபத்தைந்து கேள்விகளில், சுமார் பத்து கேள்விகள் மட்டுமே பாட புத்தகம் அடிப்படையில் கேட்கப்பட்டவை.
முந்தைய முறைப்படி குருப் 2 ஏ தேர்வுகள், மெயின் இல்லாமல் நடந்திருந்தால் 170 கேள்வி வரை சரியாக அடித்தவர்களுக்கு பணி வாய்ப்பு நேரடியாக கிடைத்திருக்கும்.
ஆனால் தற்பொழுது 1:10 என்ற விகிதத்தில் 5500 இடங்களுக்கு 55000 பேர் வரை மெயின் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளார்கள். ரிடையர்மென்ட் வயது 60 என்பதை அரசு உறுதிசெய்துவிட்டால் மேலும் 500 காலியிடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகிவிடும். அப்படி பார்த்தால் அறுபது ஆயிரம் பேர் வரை மெயின் செல்ல வாய்ப்பு ஏற்படும்.
ஒரு வேளை குரூப் 2 கட் ஆஃப் மார்க் உதாரணத்துக்கு 145 என்று வைத்துக்கொள்வோம், அந்த 145 மதிப்பெண் பெற்றவர்கள் 15000 பேர் இருந்தால், மேற்படி பதினைந்தாயிரம் பேரும் மெயினுக்கு செல்வார்கள். அதனால் நம் எதிர்பார்ப்பை காட்டிலும் அதிகமாக 60000 முதல் 65000 பேர் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
2019 ஆம் ஆண்டு முதல் நேரடி வகுப்பு, மற்றும் நேரடி தேர்வு நடைபெறாததால், மாணவர்களின் திறன் குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பட்டம் பெற்றவர்களுக்கும் திறன் குறைவாகவே இருக்கும். அதனால் போட்டி தேர்வு பயிற்சி மையங்களில் படிப்பவர்களே போட்டியை ஏற்படுத்துபவர்களாக உள்ளார்கள்.
பயிற்சி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும், கூகுல் ஃபார்ம் மூலமாகவும் தேர்வுக்கு பிறகு சர்வே எடுத்துள்ளார்கள்.
அதன் முடிவுகளை காணும்போது பொதுப் பிரிவினர் 150 கேள்விகள் சரியாக எடுத்தாலே மெயினுக்கு வர வாய்ப்புள்ளது. பிற்பட்டவர், மிக பிற்பட்டவர், பிற்பட்ட முஸ்லீம்கள் 140 கேள்விகள் சரியாக எழுதினாலே உள்ளே வர வாய்ப்புள்ளது. SC ST போட்டியாளர்கள் மேலும் 10 மதிப்பெண் குறைவாக எடுத்தாலே போதும்.
2016, 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளில் குறைவான இடத்துக்கு தேர்வு நடந்ததால் (1200 to 3000) Cut off அதிகமாக இருந்தது. அதாவது(155 to 160).
பத்து லட்சம் பேர் எழுதினாலும் அதில் பாதி பேர் வேலை வாங்கிவிடவேண்டும் என்ற முனைப்போடு எழுதுபவர்கள் அல்ல. அப்பா சொன்னார் என்றும், மாமா சொன்னார் என்றும், பிரெண்டு போட்டிருக்கிறான் நாமும் போடுவோம் என்றும், பட்டம் படிச்சாச்சு ஒரு எக்ஸாம் எழுதி வைப்போம் என்றும், ஏனோ தானோ என எழுதுபவர்களே அதிகம். வேலையை உண்மையிலேயே நாடுபவர்களுக்கு, இவர்கள் போட்டியாளர்களே அல்ல.