அண்மை

குடும்பம் பற்றிய கட்டுரை

குடும்பம் பற்றிய கட்டுரை

 
குடும்பம் மேற்கொள்ளும் பணிகளை நாம் பின்பற்றுகின்றோமா?

மனித சமூகத்தின் மிக தொன்மையான சமூக நிறுவனமாகக் காணப்படுவது குடும்பமாகும். இது அனைத்து சமூகங்களிலும் காணப்படும் இன்றியமையாத சமூக நிறுவனமாக விளங்குகின்றது. ஒர் ஆணும், பெண்ணும் பிள்ளைகளுடனோ அல்லது பிள்ளைகள் இல்லாமலோ அல்லது திருமணபந்தத்தால் இணைக்கப்பட்டு இரத்த உறவினாலும் அல்லது தத்தெடுக்கும் உறவுகளினாலும் இணைக்கப்படுகின்ற நிறுவனம் என கூறலாம். வேறுவகையில் கூறினால், பாலுணர்ச்சியால் நிலைத்து நிற்கக் கூடியதும், இனப்பெருக்கத்தின் மூலமாக குழந்தை வளர்க்கும் தன்மை வாய்ந்ததுமான குழுவே குடும்பமாகும். ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எவ்வாறு தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கின்ற அடிப்படை அலகாக குடும்பம் திகழ்கின்றது என்றால் அது மிகையாகாது


நவீனமயமான இவ் யுகத்தில் தொழில் நிமிர்த்தமாகவும், கல்வி நிமிர்த்தமாகவும் அலைந்து திரிகின்ற அனைவரையும் ஒரு நாளில் சந்திக்க வைத்து, மனம் விட்டு பேச வைக்கும் ஒரு நாள்தான் உலக குடும்ப தினம். அதுதான் இன்று உலக குடும்ப தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத் தினம் எப்போது ஆரம்பமாகி கொண்டாடப்பட்டு வருகின்றது என்று பார்ப்போமானால், 1993 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வாறு அன்று முதல் இன்று வரை இத் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இத் தினம் ஏன் கொண்டாடப்பட்டு வருகின்றது என்று பார்ப்போமானால், பிரிந்து கிடக்கும் குடும்பங்களை ஒரு நாளாவது ஒன்று சேர்த்து, கூடி, பேசி, சந்தோசமாக வைத்திருக்கும் எண்ணத்தினை மையமாகக் கொண்டே ஆரம்பமாகியது.


ஒரு குடும்பமானது பல்வேறுபட்ட பணிகளினை ஆற்றுகின்றது. குடும்பம் ஆற்றுகின்ற பணிகளைப்பற்றி பார்க்கும் போது, சமூகமயமாதலை ஏற்படுத்துகின்ற ஆரம்ப அலகாகக் உள்ளது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையினதும் ஆளுமையை வளர்ப்பதற்கான பயிற்சியையும், வழிகாட்டுதல்களையும் சமூகமே அக்கறையுடன் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்வதே சமூகமயமாக்கல். சமூக நிறுவனங்களான பாடசாலை, ஆசிரியர், ஊடகம், அரசியல், சமவயதுக் குழுக்கள், உறவினர்கள் போன்ற பல நிறுவனங்கள் காணப்பட்டாலும், அவற்றில் மிக முக்கியமான சமூகமயமாக்கல் நிறுவனமாகக் காணப்படுவது குடும்பம்


மதத்தை குடும்பமே கற்றுக் கொடுக்கின்றது. சிறுவயதில் இருந்து, ஒரு பிள்ளை வளர்ந்து வரும்வரை, அந்த பிள்ளைக்கு தனது மதம் எது, மதத்தினுடைய நடைமுறைகள் என்ன, நம்பிக்கை, சடங்குகள், சம்பிரதாயங்கள், இறைபக்தி, மரபுகள், வழக்காறுகள், மதம் கூறுகின்ற கருத்துக்கள் போன்ற பல கருத்துக்களை குடும்பமே ஒரு பிள்ளைக்கு கற்றுக் கொடுக்கின்றது. இவ்வாறு ஒரு பிள்ளைக்கு தனது கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்கின்ற பணியினை குடும்பம் ஆற்றுகின்றது.

பொருளாதார மேம்பாட்டு செயற்பாடுகளைக் குடும்பமே கற்றுக் கொடுக்கின்றது. நாம் வாழுகின்ற இக் காலத்தில் பொருளாதாரம் எந்தளவிற்கு முக்கியமானது என்பதனை தனது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கின்ற பாரிய பணியினைக் குடும்பம் செய்கின்றது. பணத்தினை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், சேமிப்பு பழக்கத்தினை எவ்வாறு கடைப்பிடிப்பது, கிடைக்கின்ற வருமானத்தினை மையமாகக் கொண்டு எவ்வாறு வாழ்க்கையில் முன்னேறலாம் என்பது போன்ற பல விடயங்களினை கற்றுக் கொடுக்கின்ற பாரிய பணியினை குடும்பமே செய்கின்றது.

 

ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாகும் வரை அந்த பிள்ளையினுடைய பாதுக்காப்பில் அதிக கரிசனை செலுத்துகின்ற பணியினையும் குடும்பமே ஆற்றுகின்றது. அது மட்டுமல்லாமல், கல்வி புகட்டுதல், தலைமைத்துவ பயிற்சியை வழங்குதல், உளவியல் ரீதியான மனநிம்மதியை வழங்குதல், சந்ததி பெருக்கத்தினை மேற்கொள்ளல், சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தல், கூட்டொருமைப்பாட்டின் முக்கியத்துவத்தினை எடுத்துக்கூறல் போன்ற பல்வேறுபட்ட பணிகளினை மேற்கொள்ளும் ஓரு சமூக நிறுவனமாக குடும்பமே திகழ்கின்றது என்றால் இது மிகையாகாது.


இன்றைய காலகட்டத்தில் பல குடும்பங்கள் தாம் ஆற்றுகின்ற பணிகளினை மறந்து செயற்படுவதனை எம்மால் காணலாம். நகரக் குடும்பங்களில் சமூகமயமாதல் செயற்பாட்டிற்குப் பதிலாக ஊடகங்கள், ஹோட்டல்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், சமவயது குழுக்கள் போன்றவற்றின் ஊடாக பிள்ளைகள் தாமாகவே சமூகமயப்படுத்தப்படுகின்ற சூழ்நிலையினை நாம் அவதானிக்கலாம். அதேபோன்று பெருநாட்கள், விசேட தினங்கள், போன்றவற்றில் மட்டும் மதச்சடங்குகள், கிரியைகள் நிறைவேற்றப்படுகின்றன


அன்பு, பாசம், பரிவு, போன்றவை தற்காலத்தில் அருகிக் கொண்டு வருவதனையும் நாம் பல குடும்பங்களில் காணமுடிகின்றது. சில குடும்பங்கள் பிள்ளைகளையும், முதியவர்களையும் சுமையாக நினைத்து பராமரிப்பு நிலையங்களில் கொண்டு சேர்ப்பதனையும் நாம் காணமுடிவது கவலை தருகின்றது. பிள்ளைகள் பெற்றெடுப்பதை விரும்பாத பல குடும்பங்களும் தற்கால உலகிலுள்ளது


இன்னும் சில குடும்பங்களினை எடுத்துப்பார்க்கும் போது பிள்ளைகளுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய பெற்றோர்களே பிள்ளைகளை பிற மனிதர்களைப்போல் நடத்துவதனை பார்க்கலாம். பெண்களுக்கெதிரான வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வந்துள்ளமையினை அன்றாடம் நாம் காண்கின்ற நிகழ்வுகளின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. தந்தையே பிள்ளைகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துகின்ற மிக மோசமான, கீழ்த்தனமான  நிலைகளினையும் காணமுடிவது வேதனையளிக்கின்றது.  


தற்காலத்தில் அனேகமான குடும்பங்களில் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக எல்லையற்ற சுதந்திரத்தினை வழங்குவதனை காணலாம். இதனால் பிள்ளைகள் சிறு வயதிலே வழி தவறி செல்வதற்கான வாய்ப்புக்களை குடும்பமே ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பிள்ளைகளின் விருப்பங்களையும், நலனையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கின்றோம் என்ற பெயரில் குடும்பமே தமது பிள்ளைகள் வழி தவறிப்போவதற்கு காரணமாய் அமைகின்றது


இவ்வாறு தற்காலத்தில் குடும்பங்கள் தங்களினுடைய பணிகளை மறந்து செயற்படுவதனை எம்மால் காணமுடிகின்றது. இதற்கான காரணங்கள் என பல காரணங்களைக் குறிப்பிட முடியும். அந்தவகையில் கைத்தொழில்மயமாதல், நகரமயமாதல், உலகமாயமாதல், மேற்குலகுமயமாதல், மதச்சார்பின்மை, ஊடகத்துறையின் வேகமான வளர்ச்சி, நவீனத்துவ சிந்தனைகள், அதிகரித்த வேலை போன்ற பல காரணங்களினை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்


ஆரம்ப காலத்தில் காணப்பட்ட குடும்பங்களிற்கும், இன்று காணப்படுகின்ற குடும்பங்களிற்கும் நிறைய வித்தியாசம் காணப்படுகின்றது. கூட்டுக் குடும்ப முறையிலுருந்து தற்போது தனிக்குடும்ப முறைக்கு சமூகம் மாறியுள்ளதனை காணலாம். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, மாமா, மாமி என கூட்டுக் குடும்பமாகக் காணப்பட்ட நிலைமாறி, இன்று கணவன், மனைவி ஒரு பிள்னை என்ற நிலையில் பிரிந்து சென்று தனிக்குடும்ப முறைக்கு பழக்கப்படுவதனை அவதானிக்க முடிகின்றது


சமூக நிறுவனத்தில் அடிப்படையான நிறுவனமாக விளங்கும் குடும்பம் என்ற அலகு, தான் நிறைவேற்ற வேண்டிய பணிகளையும், கடமைகளையும் மறந்து செயற்படுவதனை எம்மால் காணமுடிகின்றது. குடும்பத்தில் எங்கு பார்த்தாலும் பிரச்சினை, விவாகரத்து, குடும்பத்தை விட்டு பிரிந்து போகும் நிலைதான் காணப்படுகின்றது. அழகான குருவிக் கூட்டினுடைய மகிமை தெரியாத நபர்களின் மூலமே இந்நிலைமை தோன்றுகின்றது. குடும்பம் என்பது மிக முக்கியமான ஒரு நிறுவனம் என்பதை மறந்து, தற்காலத்தில் பல மனிதர்கள் செயற்படுவதனை நாம் காணலாம். ஆகவே குடும்பம் என்பது ஒரு மனிதனுள் பின்னிப்பிணைந்தது. ஒரு  மனிதனுக்கு மிக முக்கியம் குடும்பமாகும். தனது மகிழ்ச்சியினையும், துக்கத்தனையும் பகிர்ந்து கொள்ள நெஞ்சுக்கு நெருக்கமான ஆள் ஒன்று தேவை என்று கூறுவார்கள். ஆனால் அந்த ஆள்தான் குடும்பம் என்பதை பலர் மறந்து விடுகின்றார்கள்


எனவே உறவுகளை ஒன்றிணைக்கின்ற ஓர் ஆலமரமான குடும்பத்தினுடைய மகிமையை நாம் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தை அதன்பின் ஆலயம் என்று கூறுவார்கள். ஓரு நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் எனவும் அழைப்பர். ஆகவே குடும்பத்திற்குள் எந்தவிதமான விரிசல்களும் இல்லாமல் நடந்து கொள்வது ஒவ்வொருவரினதும் மிக முக்கிய கடமையாகும்உறவுகளுக்குள்ளே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலே குடும்பத்திற்குள் விரிசல் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம். குடும்ப தினமான இன்று குடும்பத்திலுள்ள பெற்றோர்கள் பிள்ளைகளினுடைய தேவைகளையும், பிள்ளைகள் பெற்றோர்களின் விருப்பங்களையும் அறிந்து கொண்டு அவற்றினை நிறைவேற்றிக் கொள்வது மிக அவசியமாகும். ஆகவே குடும்பத்தினுடைய அவசியத்தினையும், பணிகளையும், பொறுப்புக்களையும் விளங்கிக் கொண்டு நாம் வாழுகின்ற சமூகத்தில் அனைவராலும் மதித்துப் போற்றக் கூடிய குடும்பமாக விளங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது எம் அனைவரினதும் கடமையாகும்.  


பஞ்சாட்சரம் ஜோன் டிலக்ஷன் 

சமூகவியல் மற்றும் மானிடவியல் சிறப்புக் கற்கை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

கருத்துரையிடுக

புதியது பழையவை