அண்மை

இப்படிக்கு ராணி - திகில் கதை

இப்படிக்கு ராணி - திகில் கதை


வீட்டின் முத்தத்தில் இரவுக்கு துணையாக வீரையன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து வானத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தார். சுவர்கோழிகளின் சத்தமும் காற்றின் தொடுகையால் தென்னங்கீற்றுகளின் சலசலப்பு சத்தமும் அவ்வபோது அந்த நிசப்த இரவின் அமைதியை குழைத்துக்கொண்டிருந்தது. 


இன்றோடு அவர் மனைவி இறந்து பதினாறு நாட்கள் ஆகிறது. காலையில் அவர் மனைவிக்கு செய்ய வேண்டிய காரியச்சடங்குகள் முடிந்தது.  அதனால் அவர் மகன் நாளை தன் குடும்பத்துடன் ஊருக்குச் செல்கிறான்.  வீரையனை தன்னுடன் அவன் அழைத்தும் அவர் வருவதாயில்லை. சில நாட்கள் சென்று தந்தையின் எண்ணத்தை மாற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையில், தந்தையின் போக்குக்கு இசைந்தான்.


நேற்று கதைச்சொல்லச் சொல்லி நச்சரித்த பேரன்களுக்கு இன்று இரவு கதை சொல்வதாக உறுதியளித்தார். ஆனால் நாளை பிரயாணத்தை முன்னிட்டு இன்று விரைவிலே பேரன்கள் உறங்கச் சென்றுவிட்டனர். 


அதனால் உண்ண வேண்டிய மருந்துகளை உண்டு நாற்காலியில் சாய்ந்தபடியே கண்ணசந்தார்.  


சில நிமிடங்கள் கழித்து ஓடுகள் சரியும் சத்தம் கேட்டது. உடனே நிமிர்ந்து உட்கார்ந்தார். ஒரு முழு ஓடு அந்த நாற்காலியின் நுனியில் தட்டி இரண்டாக உடைந்தது விழுந்தது. நல்ல வேளை அது அவர் தலையில்பட்டிருந்தால் நிச்சயம் காயம் ஏற்பட்டிருக்கும். சரி உள்ளே செல்லலாம் என்று எழுந்தபோது தீடீர் என்று இரண்டு உருவம் இவரை அமைதியாக நெருங்கியது. உற்று பார்த்தார் நிலவின் ஒளி அந்த உருவத்தின் மீது பட்டதும், அது இரண்டு பேரன்கள் என்று கண்டுகொண்டார்.


"ஏன்பா, செல்லங்களா இன்னும் நீங்க தூங்கலையா?''


"இல்ல தாத்தா, போர் அடிக்கிது. தூக்கமே வரமாட்டுது. நீங்க ஏதாவது கதை சொல்லுங்க"


"கதையா?, நாளைக்கு சீக்கிரம் ஊருக்கு போனும்ல போய் தூங்குங்க"


"இல்ல நீங்க கதை சொன்னாதான் போவோம்"


"என்ன கதை சொல்ல?"


"ராஜா கதை சொல்லுங்க" - "டே சும்மா இரு… தாத்தா நீங்க பேய் கதை சொல்லுங்க. அதான் த்ரிலிங்கா இருக்கும்"


"வேணாம் கண்ணு. பயப்புடுவீங்க…"


"இல்ல பயந்தாலும் பரவாயில்லை. நீங்க சொல்லுங்க" - "ஆமா நீங்க சொல்லுங்க" என்று இருவரும் அவர் கையை பிடித்து உலுக்கினர். மீண்டும் நாற்காலியில் சாய்ந்தார்.


"சரி எனக்கு நடந்த ஒரு சம்பவத்த சொல்லட்டா?"


"ம்ம்… சொல்லுங்க" 


"நான் சின்ன புள்ளைல, அதாவது நான் அப்ப ஒரு… நாலாப்பு படிச்சிக்கிட்டு இருப்பேன். அப்ப நைட்டு…வீரையன் சொல்ல தொடங்கினார் - வீரையனின் தந்தை இந்த ஓட்டு வீட்டை வாங்கி சரியாக ஒரு மாதம் இருக்கும். அன்று வீரையன், அவருக்கு அருகில் வலது பக்கமாக அவரது அம்மா, இடது புறம் தந்தை எல்லாரும் உறங்கிக்கொண்டிருந்தனர்‌.


அந்த நடு இரவில், "டக் டக்… டக் டக்" கதவின் இரும்பு பிடியை கதவில் அடிக்கும் சத்தம். வீரையன்‌ அம்மாவை எழுப்ப கையை கொண்டு செல்வதற்குள் உள் தாழ்ப்பாள் திறக்கப்பட்டு இரும்பின் உரசல் ஒலியுடன் கதவு மெல்லத் திறந்தது.  கரிய நிறத்தில் புகைப்போல ஒரு உருவம் உள்ளே வந்ததை பார்த்த வீரையனின் இருதயம் படபடவென அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. வியர்வை துளிகள் நெற்றியை நிறைத்தன. வாயில் இருந்து சொற்கள் வராதவாறு தொண்டை அடித்துக்கொண்டது.  அந்த அருவம் அவனது அம்மாவின் அருகில் அமர்ந்து அவளையே உற்றுப்பாத்திருக்க வீரையன் என்ன செய்வது என்றறியாமல் பயத்துடனே அசையாமல் படுத்திருந்தான். அந்த பேய் எழுந்து  அவன் அப்பாவுக்கு மேல இருந்த மர உத்திரத்தை நோக்கி பிறகு அவனின் அம்மாவை பார்த்தது. வீரையன் தன்னை கவனிப்பதை கண்ட அந்த அருவம் அவனை நோக்கி பாய்ந்தது. வீரையனால் மூச்சு விட முடியவில்லை.  உடலை உதறிக்கொண்டு எழுந்தான் மூச்சின் வேகம் அதிகமாக இருந்தது. இதுவரை நடந்தது கனவு என்று நினைக்கும் போதுதான் அவன் மூச்சின் வேகம் படிப்படியாக சீராகத்தொடங்கியது.  சுற்றி பார்த்தான் அவன் தந்தை 'ஆர்கெஸ்டா' பார்க்கச் சென்றது அப்போது தான் அவன் நினைவுக்கு வந்தது. தன் அருகில் இருந்த படுத்திருந்த அம்மா?.. அவரை  காணவில்லை. வாசல் கதவை பயத்தோடு பார்த்தான்.


பின் எழுந்தவன் இரு அடி எடுத்து வைக்க தலையில் ஏதோ நகம் கீறியது. அசையாமல் நின்றான். கையினால் முக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு, மெதுவாக இரண்டு அடி பின்பக்கம் வைத்து பார்த்தான். அவன் அம்மாவின் கால்கள். அது அந்தரத்தில் இருந்தது மேலும் அன்னாந்து பார்க்க அவன் அம்மா ஆகாயத்தில் பறந்து கெண்டிருந்ததை பார்த்த அவன் ஓடிச் சென்று சுவரின் அருகில் ஒட்டி நின்றான். மீண்டும் மூச்சின் வேகம் அதிகரித்தது. முகத்தில் வியர்வை வழிந்தொடியது, தைரியத்தை வரவழைத்து கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்தான். அவன் அம்மாவின் கழுத்தில் கையிறு கட்டப்பட்டு உத்திரத்தொடு இணைக்கப்பட்டிருந்தது. அவனின் அம்மா தூக்கில் தொங்கி நாக்கு வெளியே வந்து இறந்துகிடந்தாள். அதை பார்த்த அவனுக்கு கை நடுங்கியது. அவனை சுற்றி மல்லிகை பூவின் நறுமணம் பலமாக வீச அதனால் வீரையன்      தலைச்சுற்றி மயக்கம் அடைந்தான். இவ்வாறாக தனக்கு நடந்த சம்பவத்தை கதையாக சொல்லி முடித்த அவர் அருகில் இருந்த சொம்பு தண்ணீரை எடுத்து மடக் மடக் என்று குடித்தார்‌.


"உண்மைலேயேவா தாத்தா?" பெரிய பேரன், முகத்தில் மரண பீதியுடன் கேட்டான்.


"ஆமாம்பா, எங்க அம்மா எப்படி?, ஏன்? இப்படி பண்ணாங்கனு தெரியல!,  அது மட்டும் இல்லாம ரெண்டாலு உயரம் அந்த உத்திரம். அப்பறம் இந்த வீட்ல நாங்க இருக்கல, இந்த வீட்ட வாடகைக்கு போட்டுட்டு‌  நானும் எங்க அப்பாவும் வேலை செய்ய வெளியூர் போயிட்டோம். ஆனா, வாடகைக்கு யாருமே ஒழுங்கா தங்கள ஏதோ அமானுஷ்யமா நடக்குதுனு சொல்லி போயிடுவாங்க.‌‌ இடையில எங்க அப்பா ஒரு நாள் இந்த வீட்டுக்கு வந்தாரு, நான் அப்ப ஊர்ல இருந்தேன் அப்ப அதே மாதிரி கனவு. ஊர்லேந்து அப்பா தவறிட்டாருனு செய்தி.  இப்ப உங்க பாட்டி இறந்து போறத்துக்கு முன்னாடியும் அந்த பேய் கனவுல வந்துச்சி. இன்ன வரைக்கும் அது ஏன்னே தெரியல"


"தாத்தா…"


"ஆங், என்னப்பா?"


"அதோ, அங்க ஏதோ கருப்பா ஒன்னு நிக்கிது… அது வருது…வருது...அம்மா…" என்று அலரி அடித்துக்கொண்டு இரு பேரன்களும் ஒடினர்.


"பயந்துடுவீங்கனு சொன்னா எங்க கேக்குறாங்க?, விளையாட்டு பிள்ளைங்க" என்று கூறியவர், 


"ஏ… வீரையா. அடுத்து நீ தான்…" பேரன் காட்டிய வலது திசையில் பயமுறுத்தும் ஒர் பெண்ணின் குரல் கேட்க, மெதுவாக அந்த திசையை நோக்கினார்‌. அதே அருவம். வீரையனை நோக்கி  விரைந்து வந்தது.  அவர் கழுத்தை நெரித்தது.  சட்டென கண்திறந்தார். "துவ்… துவ்…கனவா"  இது வரை பேரனுக்கு கதை சொல்வது போல கனவு கண்டோம் என்பதை அவர் நினைவிட்டுக்கொண்டார். இடது பக்கம் இருந்த நாற்காலியில் மாத்திரை மற்றும் அதை விழுங்க சொம்பில் தண்ணீர் வைத்திருந்தார். அதையெல்லாம் தாண்டி ஓரத்தில் இருந்த பொத்தான் ஃபோனை எடுத்தார். அதில் குறிப்பிட்ட பொத்தானை அழுத்த அது "டைம் இஸ் டுவெல்" என்றது.  இப்போது காற்று வீசாததால் இரவின் நிசப்தம் தொடர்ந்தது. மூச்சு முட்டும் அளவுக்கு மல்லிகை பூவின் நறுமணத்தை வீரையனின் மூக்கால் உணரமுடிந்தது.


கனவில் பேய் நின்ற திசையை நோக்க ஏனோ அவர் மனம் ஆவல் கொண்டது. பார்த்தார் அங்கு யாரும் இல்லை கண்சிமிட்டி மீண்டும் பார்க்க ஹா… அதே அருவம். அதன் கூந்தல் பறக்க அதன் இரு வெள்ளைக்கண்கள் இவரை விழுங்கும்படி உக்கிரமாக பார்த்தது. இது கனவில்லை. வீரையன் உடல் மயிரெல்லாம், பயத்தில் விரைத்து நின்றது. உள்ளங்கையிலும் வியர்வை நிறையும் அளவு படபடப்புக்கொண்டார். அவரால் சத்தம் போட முடியவில்லை. அந்த பேய் உருவம் ஒரு தாவணி போட்ட பெண்ணாகியது. அதன் கூந்தலில் மல்லிகை பூ. இவரை நோக்கி வேகமாக வந்தது. அதன் கைகளால் இவர் கழுத்தை இருக்கியது. பின்னர் இவரது இதய சதையை குத்தியது. வீரையன் நெஞ்சை பிடித்தபடியே  நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார்.  சத்தம் கேட்டு அவர் மகன், மருமகள், பேர குழந்தைகள் ஓடி வந்தனர். அங்கு யாருமில்லை. வீரையன் நெஞ்சை பிடித்தபடியே கீழே கிடந்தார். வீரையன் மகன் அவரை நெருங்கி அவர் மூச்சை சரிபார்த்தான். அவன் மனைவியை பார்த்து இல்லை என்பது போல தலையசைக்க "மாமா…ஐயோ… அத்தை செத்த கவலைல நீங்களும் போய்டீங்களா?… ஐயோ" என்று தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தாள். சின்ன பேரன் எதர்ச்சியாக எதிரே பார்த்தான். உடலை தூணில் மறைத்துக்கொண்டு, ஒரு பெண் முகத்தை மட்டும் நீட்டி சிரித்தாள். அவன் கண்களை மூடி மீண்டும் பார்த்தான் அங்கு யாருமே இல்லை. 


சில நாட்கள் கழிந்தது. வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும், வீரையனின் மகனும் அவரது பேரன்களும் சுத்தப்படுத்திக்கொண்டிருக்க வேலை, மாலை நேரத்தை தாண்டியும் தொடர்ந்து.


"அப்பா இந்த வீடு என்ன ரேட்டு போவும்?" என்று கேட்டான் மூத்தவன்.


"சுமார் மூனு நாலு கோடி போவும்"


"அப்ப, சீக்கிரம் விற்பனைக்குனு போர்ட் போட்டுடுவோம்" 


"அதுக்கு முதல்ல வீட்டை சுத்தம் பண்ணிட்டு. நம்ம வீட்டுக்கு போனும். என் பிரண்ட் ஒருத்தன் இருக்கான். அவன்ட சொன்னா வித்துக்கொடுத்துடுவான்"


"எனக்கு இந்த வீட்டுலையே, நாம இருக்காலாம்னும் தோனுது. பேசாம இந்த வீட்ட வித்துடாம நாமலே வச்சிப்போம்" என்றான் பெரியவன்.


இப்படி பேசிக்கொண்டிருந்தபோது எரியப்பட்டு ஆங்காங்கே கரிய நிறத்தில் பழைய இரும்பு பொட்டி ஒன்று கிடைத்தது. அதன் பூட்டை உடைத்து திறந்தான் வீரையனின் மகன். அதில் முக்கால் வாசி பூச்சு அரிக்கப்பட்ட நிலையில் வீரையனின் தந்தை, இன்னொரு பெண் முகத்தில் சிரிப்புடன் தோள் வரை மல்லிகை பூவை சூடி சேர்ந்து நின்ற கருப்பு வெள்ளை புகைப்படம் இருந்தது. அதை பார்த்த சின்ன பேரன் "அப்பா, இந்த ஆன்டிய நான் தாத்தா செத்தப்ப, நைட்டு பாத்தேன்" என்றான்.


"நானே இப்ப தான் இத பாக்குறேன். நீ எப்புடி பாத்துருப்ப?, இது எங்க தாத்தா பொட்டி அவர் பயன்படுத்துனதுலாம் இதுல இருக்கு, அவர் நியாபகமா இருக்கட்டும்னு இத துறக்கவே விடல எங்க அப்பா. அது மட்டும் இல்லாம எப்பயாவது இந்த வீட்டுக்கு பொங்கல் அன்னக்கி வெள்ளை அடிக்க வருவோம். அதனால இத நான் இப்ப தான் பாக்குறேன்"


"அப்பா, அவன் ஏதாவது உளறுவான். நீங்க அந்த பிரேம மட்டும் தனியா எடுங்க. இந்த போட்டோவ குப்பைல போட்டுடுங்க"


"ஆமா, பழைய பிரேமா இருந்தாலும் நல்ல கண்டிசன்ல இருக்கு, ஆனா இவுங்க யாரு!? என் தாத்தா கூட?, பிரேமை கழற்ற, புகைப்படத்தின் பின்புறம் புகைப்படம் போன்றே பூச்சரித்த நிலையில் ஒரு காகிதம் கிடைத்தது. அதில் சேர்த்து சேர்த்து எழுதப்பட்ட அந்த தமிழை படிக்க அவரது புருவங்கள் ஆச்சரிய குறியை முகத்தில் காட்டியது.


"என்னப்பா எழுதி இருக்கு!?" என்றான் மூத்தவன்.


"அது… எங்க தாத்தா இவுங்கல கல்யாணம் பண்ணி இருக்காரு, அதுனால இவுங்க அப்பா வீட்ட எங்க தாத்தா பேருல எழுதிவச்சிட்டாரு… ஆனா, எங்க தாத்தா ஏற்கனவே கல்யாணம் பண்ணி ஒரு குழந்த அதாவது எங்க அப்பா பிறந்தது இவுங்களுக்கு தெரிஞ்சிட்டதா எழுதி இருக்காங்க''


"பின்னடி எழுதி இருக்குறத படிக்கல?"


காகிதத்தை திருப்ப "அதனால்  நான் இந்த உலகத்தில் இருக்க விரும்பவில்லை, நான் உங்களுடன் கழித்த நினைவோடு செல்கிறேன். ஆனால் என் வாழ்வையே சீரழித்த உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். உங்கள் பரம்பரையின் விதியே என்  கையில் தான் முடியும். இது சத்தியம் - இப்படிக்கு ராணி" என்று படித்து முடித்தார்


"கொள்ளு தாத்தா பொல்லாத வேலையெல்லாம் பாத்துருக்காருபோல" என்று சிரித்தபடியே கூறினான் மூத்தவன்.


அவர் கையில் வைத்திருந்த கடிதம் எரிய ஆரம்பித்தது. அதை கிழே போட்டார். அவரது முகம் பீதி அடைந்தது. அந்த கடிதத்தில் சிறு துண்டுமட்டும் எரியாமல் இருந்தது அதில் "உங்கள் பரம்பரையின் விதியே என்  கையில் தான் முடியும். இது சத்தியம் - இப்படிக்கு ராணி" என்பதை பார்த்த அவர் குழப்பம் அடைந்தார். 


"அப்பா! மல்லிகை பூ வாசம் அடிக்கிற மாதிரி இல்ல?"


"ஏ… ஒடுங்கடா போய் பொட்டிய எடுத்துவைங்க. ஊருக்கு கிளம்புங்க" என்றவர் மகன்களுக்கு முன்னதாக ஓடினார்.


"என்னங்க ஆச்சு?, என்ன பிரச்சினை?"


"இந்த வீடு தான் பிரச்சினை"


"என்னங்க? என்ன சொல்றீங்க?"


"அடுத்தது நாம தான்னு சொல்றேன்"


"புரியல''


"ஒன்னும் இல்ல, உடனே கிளம்பு நம்ம வீட்டுக்கு"


"ஏங்க? காரியம் இன்னும் முடியல"


"நம்ம காரியம் முடிஞ்சுடும்டி. எதுவும் பேசாத, உடனே கிளம்பு" என்றவர் பெட்டியை எடுத்து வாசலில் பொத்தென்று தூக்கிப்போட்டு. வாசல் கதவை மட்டும் பூட்டிவிட்டு சின்ன பையனை தோளில் தூக்கிக்கொண்டு குடும்பத்துடன் வேகுவேகென்றுகிளம்பினார்.


சின்னவன் "அப்பா" என்றான்.


"என்ன?"


"தாத்தா போட்டா உள்ள இருக்கு…'' 


"ரொம்ப முக்கியம். பேசாம வா" என்றார்.


குகன்

கருத்துரையிடுக

புதியது பழையவை