எரியும் தீபத்திற்கு இதமான குளிர் காற்று கூட எவ்வாறு எரிச்சலை தருமோ அதே போல் தான் நம் மக்களின் கடவுள் பக்தி எனக்கு எரிச்சலை தருகிறது.
சிறு தெய்வ வழிபாட்டில் பெரும் பலிகள் தரப்படுகிறது. இதனால் வள்ளல் பெருமான் சிறு தெய்வ வழிபாடு கூடாதென்றார்.
பலிகளை பற்றி சிந்திக்கையில் எனக்கு சிறு தெய்வங்களின் மேல் கோபமே, இருந்தும் பலிகளை கேட்பதும் பெறுவதும் மனிதனே. தெய்வமல்ல.
தவறான இடத்தில் வைக்கும் தவறான கோபம் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்தாது.
கொஞ்சம் யோசித்து பார்க்கிறேன். கடவுள் பக்தி என்னத்தை தருகிறது?
கோவிலுக்கு போய் விளக்கு போடுவதில் என்ன பயன்? தேங்காய் உடைப்பது எதற்காக?
சிலர் சொல்கிறார்கள், தேங்காயில் உள்ளிருக்கும் நீர் தெய்வத்தை குறிக்கிறதாம். அதன் பருப்பு பகுதி ஆசைகளும் மயக்கங்களும் மற்றும் அதன் ஓட்டு சிரட்டை பகுதி பாவமாம்.
பாவத்தை உடைத்தெறிந்து ஆசையை கடந்தால் இறைவனை அடையலாம் என்பதே தேங்காயை சிதறடிப்பதன் தத்துவமாம்.
சன்னதி முன் தேங்காயை சிதறடிக்கும் எவனுக்காவது இது தெரியுமா?
அதுவும் இந்த தத்துவமே முழு தவறு. உடைத்தெறியும் போது தேங்காய் தண்ணீரும் தான் கீழே ஓடி விடுகிறது எனில் எவ்வாறு நாம் தெய்வத்தை அடைந்தோம்?
ஏதோ குருட்டு வேதாந்தி உருவாக்கிய சில கட்டுகளை இன்றளவும் உருட்டி கொண்டுள்ளார்கள் அவ்வளவே.
மன்னிக்கவும், உங்களது நம்பிக்கைகளை பாழ்படுத்தும் நோக்கமல்ல எனக்கு.
நீங்கள் செய்வதில் அர்த்தமில்லை. தெய்வ வழிபாடு இதுவல்ல.
காவடி எடுப்பதும் அலகு குத்துவதும் தீ மிதிப்பதும் உங்களது தீவிரமான பக்தியை வெளிப்படுத்தலாம் ஆனால் இவைகளெல்லாம் வேண்டியதில்லை.
தியானத்தின் மூலம் இறைவனை அடையலாம் என்று சொல்வது கூட பொய்யே.
தியானம் உங்களுக்கு நிம்மதியை தான் தருகிறது இறைவனை அல்ல. இறைவனை அடைய நீங்கள் எந்த சன்மானமும் அவருக்கு தரவேண்டியதில்லை.
கடன் நிவர்த்தி, பாவ நிவர்த்தி, பித்ருதோஷ நிவர்த்தி, சகல தோஷ நிவர்த்தி என்றெல்லாம் எந்த தெய்வமும் கிடையாது.
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்றபடி தான் இங்கு எல்லோரது வாழ்க்கையும். அதனால் விதி என்பதே நமது கடந்த கால பலன் தானே தவிர வேறொன்றுமில்லை.
இன்றைய நாளின் செயல்களே நாளைய பொழுதினை ஆக்குகிறது.
துன்பம் நேர்ந்தால் அதுவும் இறைவன் அளித்ததே. இன்பம் வந்தால் அதும் இறைவன் தந்ததே.
இருந்தும் மனநிம்மதிக்காக நிவர்த்தி ஸ்தலங்களுக்கு செல்வதில் தவறொன்றுமில்லை,
சிலர் 'இதை செய்தால் கடன் சுமை குறையுதாம்! அதை செய்தால் பிள்ளை பாக்கியம் கூடுதாம்' என்று கூறினால் மட்டும் நம்பாதீர்கள்.
இறைவனிடம் "எனக்கு என்ன நன்மையோ அது உனக்கு தெரியும்' என்று வேண்டுங்கள்.
உங்களுக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும்.
உங்களது வினைக்கேற்ற விளைவை இறைவன் அளிக்காமல் இருக்க மாட்டார்.
பேராசையின் காரணமாக இறை பக்தி கொள்ளுதலும் பாவம் செய்து கொண்டு பக்தி கொள்வதும் வீணே. எந்த பலனும் கிடைக்காது. காரணம் உண்மையான இறை பக்தி இவை அல்ல.
இறை பக்தி ஆன்மீகத்தை தருகிறது. எந்த தொழிலும் நம்மால் ஆக்கப்படவில்லை எல்லாம் இறைவனின் திருவருளாலே என்ற பக்குவத்தை தருகிறது.
இதனால் தொழில் மீதான மோகம் விலகுகிறது. மோகமில்லாத தொழிலால் பலன் நோக்குவதை தவிர்க்கலாம்.
வினையின் பலனை நோக்குவதாலே தன்னுடையது என்ற எண்ணம் வந்து பொதுநலம் இல்லாது போகிறது. இதனால் 'நான் தான்' என்ற ஆணவமும் அகங்காரமும் தோன்றும்.
இந்த எண்ணமே நாத்திகமாகும்.
உண்மையில் ஆத்திகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளை களைந்தால் ஆத்திகம் தான் உண்மையான பகுத்தறிவு என்பதை நாத்திகர்கள் உணரலாம்.
"சரி… இதுவரை உங்களது இறை பக்தி உங்களுக்கு என்ன தந்தது?" கேட்டார் ஒருவர்
"இறை பக்தி எனக்கு ஒன்றையும் தரவில்லை. ஆனால்... என்னிடமுள்ள ஆசையை எடுத்தது. ஆணவத்தை நீக்கியது. அகங்காரத்தை வேரறுத்தது. இயலாமையை இழக்கச் செய்தது. முதலும் முற்றுமாக என்னிடமுள்ள துன்பத்தை ஓடச் செய்தது." சொன்னார் விவேகானந்தர்
ஈசதாசன்