அண்மை

ஜூன் 26 - சிறுகதை

 

ஜூன் 26

ஆலிவலம் காவல்நிலையம், பல கிராமங்களை சுற்றுவட்டாரமாகக் கொண்ட காவல்நிலையம் அது. எப்போதும் போல பெரிய அளவிலான வழக்குகள் வரவில்லை. வேலிச்சண்டை, கோழிச்சண்டை, குடிபோதை தகராறு, ஆடு மாடு திருட்டு  இவ்வாறான வழக்குகளே நிரம்பிவழிந்தது. அன்று ஜூன் - 26,  இரவு நேரம் பதினாறுவயது சிறுவன் ஒருவன் முகத்தில் ஆங்காங்கே சிராய்ப்புடனும், தலையில் சிறிதாக பேன்டேஜ் கட்டப்பட்டு அந்த காவல்நிலையத்தில் உள்ளே அமர்ந்திருந்தான். அவன் அருகில் அலங்கோலமாக வெட்டப்பட்ட முடியுடன் இரண்டு வாலிபர்கள் தள்ளாடியபடி, கைகட்டி நின்றுகொண்டிருந்தனர். 


அந்த சிறுவனை இன்ஸ்பெக்டர் அழைத்தார். அவனிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க அந்த நேரம்,


வெள்ளைச்சட்டை, வெள்ளை வேஷ்டியுடன் ஒருவர் காவல் நிலையத்தில் உள்நுழைந்ததை கண்ட அந்த சிறுவன் தலை குனிந்தபடி நின்றான். அவர் அந்த சிறுவனை பார்த்தபடியே நிற்க இன்ஸ்பெக்டர் அவரை நாற்காலியில் அமரச்சொன்னார்‌.


சாரதி மளிகை கடை, திருத்தங்கூர் கிராமத்துக்கே அந்த ஒரு கடைதான். சின்ன சின்ன பெட்டிகடைகள் இருந்தாலும் முக்கியமான பொருளான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் சில அரிதான பொருட்கள் எல்லாம் இந்த கடையில் தான் கிடைக்கும். என்ன விலை நிர்ணயம் வைக்கின்றனரோ அதை அப்படியே வாங்கிச் செல்லும் கிராமவாசிகள்‌. அதனால் நல்ல லாபம் கிடைக்கும். சாரதி பொறுப்பாக கடையை ஆறு மணிக்கெல்லாம் திறந்துவிடுவான். அவன் தந்தை ஒன்பது மணிக்குத்தான் வருவார். அவர் வருவதற்குள் நல்ல வியாபாரம் செய்துவிடுவான். அன்று சாரதியின் தந்தை தம்பானு கடையை நோக்கி கால்நடையாக வந்து கொண்டிருந்தார். அவர் வீட்டில் இருந்து கால்நடை தூரம் தான் கடை. வீட்டின் வாசலில் இருந்து பார்த்தாலே கடையில் என்ன நடக்கிறது என்பது ஓரளவு தெரியும். கடையில் இரண்டு போலிஸ் எதையோ தேடிக்கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் வெளியே வர "என்ன சார், நீங்க முன்ன சொன்னபயே அந்த யாவாரத்த எல்லாம் நிறுத்தியாச்சி"


"சரி சரி, புது இன்ஸ்பக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்டு, எங்களுக்கு வேலை கொடுக்குறாரு" என்று புலம்பியவர்கள், அவர்கள் வந்த பைக்கிள் ஏறி புறப்பட்டனர்.


வேகமாக உள்ளே சென்ற தம்பானு, சாரதியை நோக்கி "எங்கப்பா வச்ச?"


"கல்லா பொட்டிக்கு கீழ உள்ள மிளகாய் சாக்குல போட்டு, அதுமேல மிளகாய அள்ளிப்போட்டுடேன்" என்றான்.


"நல்ல வேலை பண்ண" என்று பாராட்டிவிட்டு அதை எடுத்து உள்ளே வைக்குமாறு சாரதியை நோக்கி கட்டளை இட்டார்.


"எப்ப வந்தீங்க"


"வாங்க ஆசாரி, வழக்கம்போல இப்பதான். என்ன வேணும்?, டே தம்பி ஆசாரிக்கு கேக்குற ஜாமான எடுத்துக்கொடு" சாரதியும் எடுத்துக்கொடுத்துவிட்டு கணக்கை கூட்டிச்சொல்ல கணக்கு தவறு என்பதை அவன் தலையில் தட்டிச் சொன்னார் தம்பானு.


ஆசாரியோ "விடுங்க, போவபோவ கத்துபாப்புல. காசு நாளைக்கு வாங்கிக்கலாம், என்ட நோட்டாதான் இருக்கு! சில்லறை இல்ல. காலை காட்டியும் உங்ககிட்டையும் சில்லறை இருக்காது" என்றார். 


"அத பத்தி கவலைப்படாதீங்க, எவ்ளோ இருக்கோ கொடுங்க சில்லறை நான் தரேன்"


"அது, உங்க கிட்ட சில்லறை இருக்காதுன்னு நினைச்சு. காசு வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டேன். நாளைக்கு தரேனே"


"சரி சரி ஒன்னும் அவசரமில்லை'' இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருக்க, அந்த நேரம் இரு சிறுவர்கள் கடைக்கு வந்தனர் "அண்ணன் ஹான்ஸ் ரெண்டு. கூலிப் ஒரு பாக்கெட்டு. காசு இந்தாங்க" அதை பெற்றுக்கொண்டு அந்த பாக்கெட்டின் மேல் பகுதியை விரலின் நுனியால் இரண்டு தட்டு தட்டி, அதை கையில் கொட்டி கசக்கியபடியே சென்றனர் அந்த சிறார்கள். 


"ஸ்கூலுக்கு போற வையசுல கூலிப்பு. இந்த வைசுலையே இதெல்லாம். இன்னும் கொஞ்ச நாள் போனா கஞ்சா இழுப்பானோபோல்தே!" ஆச்சரியமாக சொன்னார் ஆசாரி.


"இவன சொல்லி என்ன பண்றது. இவன் அப்பன செருப்பால அடிக்கனும்‌. பிச்சைகண்ணு மொவன்தான?"


"ஆமா ஆமா. சரி நான் வரேன்.''  ஆசாரி கிளம்பினார். 


இப்படியாக கடையில் வேலை தொடர, பொழுது இரவை தொட்டது. எட்டு முப்பது மணிக்கு தம்பானு, சாரதியை அருகில் இருக்கும் பெட்ரொல் பங்கிற்கு பெட்ரொல் வாங்கிவர அனுப்பினார். கடையில் பெட்ரோல் வியாபாரமும் உண்டு. ஐந்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும் அந்த பங்கிற்கு சாரதியும் ஆக்டிவா ஸ்கூட்டரில், முன் இடைவெளியில் பெட்ரோல் கேன்களை அடுக்கிவைத்துக்கொண்டு கிளம்பினான். இருபதில் சென்ற வண்டியின் வேகம் ஊரை தாண்டியதும் எண்பதாக அதிகரித்தது. எப்போதும் செல்லும் குறுக்கு பாதையில் செல்லாமல் இன்று வேறு வழியில் சென்றான்.  ஆலிவலம் காவல் நிலையத்தை வண்டி நெருங்கியதும் வேகத்தை கட்டுப்படுத்தி மெதுவாக சென்றான். எதிரே போலிஸ் ஒவ்வொரு வண்டியாக பிடித்து சோதித்ததை பார்த்தான். லைசன்ஸ் தன்னிடம் இல்லை, வயதும் பதினாறு வயது தான் ஆகிறது ஆனாலும் அவன் தைரியமாகவே சென்றான். அப்பாவின் பெயரைச்சொன்னால் விட்டுவிடுவார்கள் என்று. எதிரே போலிஸிடம் இருந்து தப்பி ஒரு பைக் இவனது ஸ்கூட்டரை நெருங்கி இவனை சாய்த்துவிட்டு சில மீட்டர் தொலைவில் அதுவும் விழுந்தது. காவலர்கள் ஓடி வந்து சாரதியின் மேல் கிடந்த வண்டியை தூக்கி, பின்னர் சாரதியையும் தூக்கினர். அவன் கட்டி இருந்த கைலி அவிழ்ந்த நிலையில் இருக்க, அவன் இடுப்பில் இருந்து அந்த பொருள் கீழே விழுந்தது. அதை பார்த்த காவலர்கள் அவன் விவரங்களை விசாரித்தனர். அவனுக்கு காயப்பட்ட இடத்தில் கட்டுகட்டி அவனை உள்ளே உட்காரவைத்தனர். அவன் தந்தைக்கு போன் செய்யப்பட்டது. 


இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். அவர் இருக்கையில் அமர்ந்து சாரதியை சைகையில் அழைத்தார். அவனும் வந்து அவர் எதிரே கைகட்டி தலைகுனிந்து நின்றான்.


"இது உனக்கு எங்க கிடச்சிது?" அமைதியாகவே சாரதி நின்றான்.


"டே சொல்றியா இல்லையா இப்ப" அவர் அதட்டலாக கேட்க "எங்க கடைல தான்"


"கடை பேரு? எந்த ஊர்ல இருக்கு?"


"சாரதி கடை பேரு, திருத்தங்கூர்ல இருக்கு"


"யோவ் காலைல அந்த கடைல செக் பண்ணிங்களா? இல்லையா?" - ''பண்ணோம், சார் ஆனா காலைல கிடைக்கல. அப்ப இந்த தம்பி தான் கடைல இருந்தான்''


"எங்க மறைச்சு வச்சிங்க தம்பி?"


"மிளகாய் சாக்குல"


"ம்ம்…"


அந்நேரம் சாரதியின் தந்தை தம்பானு காவல் நிலையத்துக்கு உள்ளே வந்து  சாரதியை பார்த்தபடியே நிற்க அவன் தலைக்குனிந்த படியே நின்றான்.


"உட்காருங்க"


"சார், ஏன் வரசொன்னீங்க!? என்ன பண்ணான்?"


"அவன் ஒன்னும் பண்ணல, நீங்க தான் இரண்டு தப்பு பண்ணி இருக்கீங்க"


"என்ன சார், என்ன சொல்றீங்க!?"


"ஆமா சார். முதல் தப்பு பையனுக்கு இன்னும் பதினாறு வையசு தான் ஆகுது‌, அவன பைக்ல பெட்ரோல் வாங்கிட்டு வர சொல்லி இருக்கீங்க. இரண்டாவது ஒரு அப்பாவா, என்ன பண்றான்னு கவனிக்காதது. மூனாவதும் ஒன்னு இருக்கு, தடைசெஞ்ச ஹான்ஸ கடையில் விற்பனை பண்றது."


"அது இல்ல சார் அதெல்லாம் நாங்க…"


"இதோ, உங்க பையன் வச்சிருந்தான். யாரோ கேட்டாங்க அதான் அவுங்களுக்காக எடுத்துட்டு போறேன்னு சொன்னான். ஆனா, உண்மை அது இல்ல, உங்க பையன் இத ரெகுலரா யூஸ் பண்றான்"


"இல்ல சார், அந்த பழக்கம்லாம் அவன்ட இல்ல" 


"டே தம்பி, இங்க வா" அவன் உதடை பிடித்து இழுத்து "இங்க பாருங்க" என்றார். தம்பானு எழுந்து பார்த்தார். உதட்டின் உள் புறமும், ஈரலிலும் புண் இருந்தது.


"இது தான் ப்ரூஃப்"


தம்பானுக்கு சரியான அதிர்ச்சி. வாயடைத்து போனார். சாரதியை கொல்வது போல் முறைத்துவிட்டு இன்ஸ்பெக்டரை நோக்கினார்  "சார், என்ன நான் செய்யனும் சொன்னீங்கனா…" 


"பிஸ்னஸ். பிஸ்னஸ் பேசுறீங்க, இப்ப உங்க பையன் இத ஆரம்பிச்சி இருக்கான் எங்க போய் நிறுத்துவான்னு தெரியல.  இன்னும் கொஞ்ச நாள் இத இவன் யூஸ் பண்ணான்னா இவன் கேன்சர் வந்து செத்து போயிருவான். இவன மாதிரி எத்தனை சின்ன பிள்ளைங்க, சின்ன சின்ன பொடி பயலுங்க கையில கசக்கி உதடு இடையில வச்சிக்கிறானுங்க. இது தடை பண்ணியும் சேல்ஸ் பண்ற உங்களமாதிரி கடைகாரனுங்களதான் சொல்லனும், அதுவும் அவன் பதினெட்டு வையசு கீழனு தெரிஞ்சும் இத விற்பனை பண்றவன‌… ஜட்டியோட உட்காரவச்சி முட்டிக்குமுட்டி தட்டனும். சரி, அதவிடுங்க. நீங்க கிளம்பலாம். இனி என்ன பண்ணா நல்லதுன்னு உங்களுக்கே தெரியும். கிளம்புங்க"


"நான் வரேன் சார்"


"அதோ அங்க நிக்கிறானுங்கள்ல டிரன்க் அன்ட் டிரைவ் ரெண்டு பேர் அவனூகிட்ட நன்றி சொல்லிடுங்க. அவனூ இல்லைனா இந்த விஷயம் எல்லாம் எங்களுக்கும் தெரிஞ்சிருக்காது, உங்களுக்கும் தெரிஞ்சிருக்காது"


"வரேன் சார்"


"இல்ல, நீங்க இனிமே இங்க வரமாதிரி சூழ்நிலை வரக்கூடாது. போங்க"


தம்பானு தலைகுனிந்த படியே வெளியே சென்று. அவர் டிவிஎஸ் பிப்டியில் கிளம்ப அவரை பின்தொடர்ந்தே சாரதி சென்றான். 


"கேஸ் போட்டு உள்ளத்தூக்கி போடாம, விட்டுடீங்களே சார். இனிமே அத விற்பனை செய்யமாட்டாருனு என்ன சார் நிச்சயம்?"


"நிச்சயம் செய்யமாட்டாரு. அவர் பையனே இதுனால பாத்திக்கப்பட்டிருக்கும் போது, இனிமே நிச்சயம் இத யாருக்கும் கொடுக்கமாட்டாரு"


சாரதி இன்று தனக்கு சரியான பூஜை வீட்டில் இருக்கிறது என்று பயந்துக்கொண்டே சென்றான். நேராக அவர் தன் கடையில் வண்டியை நிறுத்தினார். பூட்டப்படாமல் இருந்த ஸ்சட்டரை திறந்து உள்ளே சென்று கூல்லிப், ஹான்ஸ், சிகரெட், பீடி, எல்லாவற்றையும் கடையின் வாசலில் கொட்டினார்.  மேலே க்குடோனில் இருந்த பாக்கெட்டுகளையும் கொட்டிவிட்டு வண்டியை தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.


அவன் கடை வாசலில் அமர்ந்தான். அந்த பாக்கெட்டுகளை உற்றுப்பார்த்தபடியே அமர்ந்தான்.  உள்ளே சென்று பெட்ரோல் இருந்த பாட்டிலை எடுத்து அவற்றின் மீது தெளித்து அவற்றை கொளுத்தினான். அந்த பொருள்களை கீழே கொட்டிவிட்டு வந்ததன் மூலமே தம்பானு திருந்திவிட்டார். தம்பானு வீட்டின் வாசலில் இருந்து கடையை ஒருமுறை பார்வையிட்டார். எப்போதும் கற்பூரம் ஏற்றிவிட்டு வரும் அவர் மகன் இன்று அந்த பொருள்களை எரியவிட்டு வந்ததன் மூலம் அவன் திருந்தியதை அவரால் உணரமுடிந்தது.


அன்று ஜூன்-26 சர்வதேச போதை ஒழிப்பு தினம். சர்வதேசத்திலும் போதை சம்பந்தமான குற்றங்கள் முழுவதும் ஒழிந்ததா என்று சொல்லமுடியாது‌. ஆனால், சாரதியின் கடையிலும் சாரதியின் மனதிலும் அது முழுவதும் ஒழிந்தது.


குகன்

3 கருத்துகள்

  1. எங்கள் கடையிலும் அந்த தவறினை செய்தோம். மூன்றாண்டுகளுக்கு முன்பு நிறுத்தி விட்டோம். நரம்பு தளர்ச்சி வரும். சுவை தெரியாது. ஆண்மை போய்விடும். வாய் புற்று நோய் வரும். வாயை திறக்க முடியாது. இளைஞர்களே இளமை தமிழில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. இளமை திமிரில் இந்த தவறை செய்யாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. வித்யாசமான தலைப்பாக இருக்கிறதே என்று படிக்கத்தொடங்கினேன். கதை போன போக்கில் தலைப்பை மறந்துவிட்டேன்.. முடிவில் அது கதைக்கேற்ற கச்சிதமான தலைப்பாகவே பொருந்திவிட்டது..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை