அண்மை

பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!

பொது நோக்கு ஒழிமதி


காரி வள்ளலை அனைவரும் அறிந்திருப்பர். கடை ஏழு வள்ளல்களுள் அவரும் ஒருவர்.


காரியும், பாரியும் வள்ளல்களுள் இத்தனை புகழ் பெற்று இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு, அந்த புகழ் கபிலரை சேரும்.


கபிலர் யாரையெல்லாம் பாடினாரோ அவரெல்லாம் சரித்திரத்தில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்கள் அல்லது அத்தகைய தகுதி கொண்டோரையே கபிலர் பாடியுள்ளார். 


இவ்வாறு நற்குணமிக்க பன்முகத்தன்மையுள்ள அரசர்களையே பாடிய கபிலர் மாவண் தோன்றல் மலையமான் தி்ருமுடி காரிக்கு சொல்லும் அறிவுரை தான் இது,


"பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!"


இதன் அர்த்தம், எல்லோரிடமும் காட்டும் உன் தயாள குணத்தை புலவர்களிடையே காட்டாதே என்பதாகும்.


மலையமான் திருமுடிக்காரி சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே ஆர்ப்பரிக்கும் தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள மலைப்பகுதியை ஆண்டு கொண்டிருந்தார். 


அந்த மலைப்பகுதியின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பெயர் முள்ளூர் ஆகும். அது தான் காரியின் வசிப்பிடம்.


முள்ளூர் என்பதன் காரணம், அந்த ஊரினை அடைய நாம் பாதைகளில் ஊர்ந்து நெடிந்து வளர்ந்த முட்செடிகளை தாண்ட வேண்டும் என்பதாகும்.


பெரும் வள்ளலரசன் தன் இருப்பிடத்தை பழக்கமல்லாத எவராலும் கடக்க முடியாத முட்கள் சூழ்ந்த பகுதியில் கொண்டுள்ளார். 


இருப்பினும் நாள்தோறும் அவரிடம் பரிசு பெறுவதற்கென்று மக்களும் புலவோரும் வந்த வண்ணமே இருக்கிறார்கள். காரியும் தன் அருகில் குவித்து வைத்திருக்கும் செல்வக்குவியலில் இருந்து அள்ளி தந்து கொண்டே இருக்கிறார்.


இக்காட்சியினை கண்ட கபிலர் மலையமான் திருமுடிக்காரிக்கு சொல்கிறார்,


"ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்

பலரும் வருவர், பரிசில் மாக்கள்;

வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்

ஈதல் எளிதே


நீ அள்ள அள்ள அளவில்லாமல் கைகளில் அடங்கும் செல்வத்தினை அள்ளி அள்ளி தந்து கொண்டே இருக்கலாம் ஆனால் இது அவர்களின் நிலைக்கு தேவையானதா என்பதை அறிவதே அரிது! மற்றபடி அள்ளித்தருவது தான் ஈதல் என்றால் "பெரிதும் ஈதல் எளிதே"


மலர்தலை ஞாலத்தில் நமக்கு சொந்தமென்று காட்டும் பொருளனைத்தும் இயற்கை நமக்கு ஈந்ததே, அவ்வாறிருக்க அதை இன்னொருவருக்கு எடுத்து தருவதென்பது அத்தனை சிரமமான காரியம் அல்லவே.


உண்மையில் கபிலர் இங்கு சொல்ல வருவது யாதெனில், ஈதல் என்பது யாருக்கு என்ன தேவையோ அதை தருவதே என்பதாகும். 


காரியை காண வரும் புலவர் அனைவோரும் ஒரே அளவிலான பரிசையே பெறுகின்றார்கள். அவன் குறள் வெண்பா சொல்கின்றானா? கலி வெண்பா சொல்கின்றானா? என்ற அளவீடே காரியிடம் கிடையாது. கைப்பிடி பொன்னே காரியின் கணக்கு.


ஒரு புலவனின் தேவை சமுதாயத்தினை மையமாக நோக்கக்கூடியது. தன் வீட்டுத்தேவைக்கு அடுத்த உலகத்தேவையும் புலவனின் பார்வைக்கு பங்குண்டு. 


சில புலவர்க்கோ அங்கீகாரம் என்ற தேவையே போதுமானதாகிறது. இவ்வாறு வரும் ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு வகையறாக்களாக இருக்க காரி அனைவருக்கும் ஒரே பொன்முடியை நீட்டுவது சாதாரண மக்களிடையே அவனது வள்ளல் தன்மையை காட்டும் தான் ஆனால் அதோடு தேவை அறியும் பக்குவமும் பாடலின் தரத்தை அறியும் பக்குவமும் அரசனுக்கு இல்லையோ என்ற ஐயத்தையும் புலவரிடையே ஏற்படுத்தும்


இதனால் தான் பொது நோக்குடன் 'பரிசில் மாக்கள்' என்று குறிப்பிட்ட கபிலர் இறுதியாக புலவோர்க்கு மட்டும் பொதுநோக்கு 'ஒழிமதி' என்கிறார்


ஞானம், தேவையில் வெளிப்படும் போதே பெரும் விளைவை தருகிறது. மன சஞ்சலங்களுக்கு மருந்தாகிறது. சும்மா இருக்கும் ஒருவனிடம் சென்று இராமகிருஷ்ணரின் நாலு தந்துவங்களை சொல்வதால் ஒரு நன்மையும் வராது. 


யாருக்கு என்ன தேவையோ அதை வழங்குவதே ஈகை. வருவோர்க்கெல்லாம் வாரிவழங்குவது கொடை. இதைச் செய்யத்துடிக்கும் நெஞ்சமே ஞானம்.


எனில், காரியின் தேவைக்கு சொன்ன கபிலரின் மாஞானத்தில் சிறு துளி தான் இவ்வொற்றை வரி.


தீசன்

1 கருத்துகள்

புதியது பழையவை