அண்மை

ஔவையின் கொன்றை வேந்தன் பாடல்

 

கொன்றை வேந்தன் பாடல்

தமிழில் நல்வழி காட்டும் அற நூல்கள் பல உள்ளன. ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களை கொண்ட திருக்குறலும், நானூறு பாடல்களை கொண்ட நாலடியாரும், நூற்றியொரு பாடல்களை கொண்ட  நான்மணிக்கடிகையும், இன்னா இனிய நாற்பதுகளும், மூதுரையும், சிறுபஞ்ச மூலமும், ஆசாரக்கோவையும் வாழும் வழியை வகைப்படுத்தும் நூல்களாக உள்ளன.


அதில் அறநூல்கள் ஆரஞ்சு பழம் என்றால்,  அதில் உள்ள சாற்றை மட்டும் எடுத்துக் கொடுப்பதே கொன்றை வேந்தன். ஒரே வரியில் நச்சென தன் கருத்தை எடுத்து இயம்பும் ஆற்றல் ஔவைக்கே வாய்த்த ஒன்றாகும். ஆதி முதல் அந்திமக்காலம் வரை வாழ்வியலை நெறிப்படுத்தும் தொன்னூற்று ஒரு பாடல்கள் இதில் உள்ளன.


அதில் சில பாடல்களையும் பொருளையும் கீழே தருகிறேன்.


"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"


ஆயிரம் தெய்வங்களை வணங்கலாம்.  ஆனால் தாய் தந்தையை தாண்டிய தெய்வம் ஒன்று இல்லை.


"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"


மனதில் உள்ள பாரங்களை யாரிடமோ இறக்கி வைத்து விட்டால் மனம் இலேசாகிவிடும். யாரிடம் நம் வேதனைகளை கூறுவது? அதற்குதான் கோயில், அதற்குதான் தெய்வம். உள்ளத்துக்கு உள்ளேயே ஒரு வேதனையை  ஒளித்து வைத்து, உழன்று கொண்டிருந்தால் மனநலம்தான் பாதிக்கும்.  கோவிலுக்கு சென்று பத்து முறை பிரகாரம் சுற்றி வந்தால், உடலுக்கும் நல்லது, உள்ளத்துக்கும் நல்லது.


"இல்லறமல்லது நல்லறமன்று."


இல்லற வாழ்க்கை மட்டுமே மனிதனை முழுமை அடையச் செய்வது. இல்லற வாழ்வியலில் ஈடுபட்டவனுக்கு மட்டுமே,  வாழ்க்கையை எதிர்நோக்கும் அறிவு வாய்க்கிறது.


"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்."


பிறருக்கு உதவாமல் சேர்த்து வைத்த பொருள், அவனுக்கும் பயன்படாமல், அவன் வாரிசுகளுக்கும் பயன்படாமல், தீயோரிடமே போய்ச் சேரும்.


"உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு அழகு"


குறைவாக உண்டு உடலை போற்றிக் காப்பது பெண்டிருக்கு அழகைத் தரும். இந்த இலக்கணம் ஆணுக்கும் பொருந்தும் என்பது என் கருத்து.


"ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்"


நம்மைச் சுற்றி உள்ளவர்களை பகைத்துக் கொண்டால், நமக்கு ஒரு துன்பம் வரும் போது நம்மை காப்பது யார்? ஊரோடு ஒன்றி வாழாது பகை கொண்டவன் குடும்பம் வேருடன் அழியும்.


"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"


கற்றோனுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல் உடலுக்கு ஆதாரமான கண்ணை போன்றது,  எண்ணும் எழுத்தும் ஆகும்.


"ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்"


வேதம் ஓதுவதினாலேயே ஒருவன் வேதியனாகிவிட முடியாது. அவன் நல் ஒழுக்கமே அவனை வேதியராகக் காட்டும்.


"கிட்டாதாயின் வெட்டென மற."


நாம் ஒரு பொருளை விரும்பி அது கிடைக்காவிட்டால், அதை உடனே மறந்து விட வேண்டும். குறுக்கு வழியில் அதை அடைய முயற்ச்சித்தால் அதுவே நமக்கு கேடாக முடியும்.


"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை."


"பத்திரிக்கையில் பெயர் போடவில்லை, நேரில் வந்து கூப்பிடவில்லை" என்றெல்லாம் உறவினர் குறைபடுவதை பார்த்திருப்போம். இப்படிப்பட்ட சிறு குறைகளைக் கூட குற்றம் கூறித் திரிபவர்களுக்கு சுற்றம் என்பதே இல்லாமல் போய்விடும்.


"கீழோராயினும் தாழ உரை."


தன்னைவிட தாழ்ந்தோராயினும் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து நயம்பட உரையாட வேண்டும்.


"கைப்பொருள் தன்னில் மெய் பொருள் கல்வி."


கையில் உள்ள பொருள், வங்கி இருப்பு, எல்லாவற்றையும் விட உண்மையான செல்வம் கல்வியாகும்.


"சீரைத் தேடின் ஏரைத் தேடு."


ஒருவன் பலர் வாழ்த்த, புகழுடன் வாழ விரும்பினால், அவன் அதற்கு செய்ய வேண்டிய தொழில் பயிர்த்தொழிலான உழவு ஆகும்.


"சூதும் வாதும் வேதனை செய்யும்."


பாரத யுத்தமே சூதாட்டத்தினால் வந்து, சகோதரர்களை அழித்தது. தேவையற்ற விவாதங்களின் போது நாவினால் சுட்டபுண், வடுவாக நின்று வாட்டும். அதனால் சூதும் வாதும் வேதனையைத்தான் கொடுக்கும்.


"சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்."


உழைப்பு இல்லாமல் சோம்பல் பட்டு சோம்பி திரிபவர்களுக்கு,  வறுமையில் வாடுதலைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.


"திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு."


நம் நாட்டில் உழைக்கவும் ஊதியம் ஈட்டவும் வழி இல்லை என்றால், கடல் கடந்தாவது சென்று சம்பாதிக்க வேண்டும். அதுவே ஆண்மக்கட்கு அழகு.


"தீராக் கோபம் போராய் முடியும்."


கோபம் என்பது இருக்க வேண்டியதுதான். அது சில வினாடிகளில் முடிந்துவிட வேண்டும். மாறாக அதை மனதில் பூட்டி வைத்து  தீராத கோபமாக மாற்றினால், அது இருதரப்பையும் அழிக்கும் போராகவே முடியும்.


"சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்."


உடல் உழைப்போ, சுறுசுறுப்போ இல்லாத ஒருவனுக்கு செல்வம் எப்படி வரும்? அவர்கள் வறுமையில்தான் வாடுவார்கள்.


"தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை."


தந்தை என்பவர், தன்பிள்ளை தன்னைக் காட்டிலும் பெயரிலும் புகழிலும் மேன்மை அடைய வேண்டும் என அனுதினமும் நினைப்பவர். அவர் எது சொன்னாலும் அது தனது பிள்ளையின் நல்வாழ்வுக்காகவே இருக்கும். அதனால் தந்தை சொல் கேட்பதில் தவறில்லை. தந்தை சொல்லை தாண்டிய மந்திரச் சொல் எதுவுமில்லை.


"தாயிற் சிறந்த ஒரு கோவிலுமில்லை."


இதற்கு விளக்கம் தேவையில்லை. பிள்ளையாய் பிறந்த ஒவ்வொருவருக்கும்,  தாயைக் காட்டிலும் மேம்பட்ட தெய்வம் ஒன்றில்லை என்பது  தெரியும்.


"தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது."


பிறரை தொழுது பெற்று உண்ணும் உணவைவிட, உழுது பயிரிட்டு உண்ணும் உணவே இனியது ஆகும்.


"நுண்ணிய கருமமும் எண்ணித் துணி."


சிறிய காரியம்தானே என்று எடுத்தோம் கவிழ்த்தோம் என முடித்துவிடக் கூடாது. நன்றாக யோசித்து செயல்பட வேண்டும்.


"நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு."


நீர் நிறைந்த ஊரில்தான் குடியிருக்க வேண்டும்.


"நோன்பு என்பது கொன்று தின்னாமை."


மனம் ஒப்பி செய்யாத நோன்பு பயன் தராது.  பிற உயிரைக் கொன்று உண்ணாமல் இருப்பது கூட நோன்பின் ஒரு வகைதான்.


"பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்."


நல் ஒழுக்கம் கொண்டோர், நல் மனம் கொண்டோர் செய்யும் புண்ணியம், அவர் பயிரிட்ட பயிர் விளைச்சலிலேயே உணரலாம்.


"பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்."


சிறந்த உணவு என அறியப்பட்ட பாலாக இருந்தாலும்,  அதையும் காலம் பார்த்து உண்ணவேண்டும். இல்லையென்றால் அதையும் உடல் ஏற்காது


"பிறன்மனை புகாமை அறம் எனத் தகும்."


அடுத்தவன் மனைவியை விரும்புவது மிகவும் தவறான செயலாகும். பிறன் மனை நோக்காததே, பேராண்மை என்பார் வள்ளுவர்.


"பீரம் பேணில் பாரம் தாங்கும்."


தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பலமான குழந்தையாக வளரும்.


"புலையும் கொலையும் களவும் தவிர்."


புலால் உண்ணுதல், கொலை செய்தல், திருடுதல் இம்மூன்றும் பாவச்செயலாகும்.


"பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்."


அறியாதவர் போன்று இருப்பது கூட பெண்களுக்கு ஒரு அணிகலன் ஆகும்.


"பையச் சென்றால் வையம் தாங்கும்."


நிதானமாக, பரபரப்பு இல்லாமல், அமைதியாக செய்யும் செயல்கள் யாவும் வெற்றியே கொடுக்கும்.


"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்."


கிடைப்பது எதுவென்றாலும் அதை பகிர்ந்து உண்ண வேண்டும். கிடைத்தற்கரிய தேவாமிர்தமே  கிடைத்தாலும், அதை உறவுக்கு கொடுத்தே உண்ண வேண்டும்.


"மாரி அல்லது காரியம் இல்லை."


கடவுள் வாழ்த்தில் மாமழை போற்றுதும் என்பார் இளங்கோ அடிகள். மழை பெய்யாவிடில் மண்ணுக்கும் உணவில்லை, மனிதன் உணவுக்கும்  வழியில்லை. அதனால் மழையின்றி எக்காரியமும் ஆகாது.


"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."


பிறருக்கு நாம் செய்யும் நன்மைகள்,  பிற்காலத்தில் நமக்கு நன்மைகளாகவே முடியும். அதுவே தீமையாக இருந்தால் தீமைதான் வரும்.


"மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்."


நல்லது கெட்டது அறிந்து, வாழ்ந்து முடித்தவர்கள் சொல்லும் அறிவுப்பூர்வமான, அனுபவ வார்த்தைகள் அமிர்தம் போன்றதாகும். அதை காது கொடுத்து கேட்க வேண்டும்.


"மைவிழியார் தம் மனை அகன்றொழுகு."


மைவிழி கொண்டு மயக்கும் விலைமாதர் தொடர்பற்று விலகி இருத்தல் வேண்டும்.


"மொழிவது மறுக்கின் அழிவது கருமம்."


பெரியோர் சொல்லும் வார்த்தைகளை கேளாது புறக்கணித்தால், எடுத்த  காரியங்கள் கெட்டு போகும்.


"வானம் சுருங்கின் தானம் சுருங்கும்."


மழை பெய்யாத சூழல் வந்தால் பயிர் விளையாது போகும். பயிர் விளையாது போனால் செல்வம் சேராது போகும். செல்வம் குறைந்தால் தானம் கூட கை கூடாது.


ஔவையின் வார்த்தைகளை வாசித்தீர்கள். வாசித்ததை வாழ்க்கையில் பின்பற்றி வாழத் தொடங்குங்கள்.


ஜெ மாரிமுத்து

கருத்துரையிடுக

புதியது பழையவை