அண்மை

பல்லக்கை வெறுத்த பரமாச்சாரியார்

 

பல்லக்கை வெறுத்த பரமாச்சாரியார்

காஞ்சி மகா பெரியவர் என்று எல்லோராலும் போற்றி அழைக்கக்கூடிய ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரசுவதி அவர்கள் எந்த தல யாத்திரை செல்வதானாலும் பல்லக்கு பிரவேசம் தான் செய்வார்.


பக்தர்களும் சுவாமிகளை சுமப்பதை பேறாக எண்ணி சங்கர கோஷத்துடன் சுகமாக அவரை சுமந்து செல்வர்.


அப்படி ஒருநாள் சுவாமிகள் பக்தர்கள் சுமந்துவர பல்லக்கு பயணத்தில் இருக்கும் போது குறுக்கே வந்து ஒருவர் வழிமறித்தார்.


பல்லக்கினை சுமந்த சங்கர கூட்டாத்தார் அனைவரின் முகமும் எரிச்சலை சூடியது. காரணம், வழியில் வந்தவன் கருப்பாடை அணிந்த ஒரு நாத்திகன்.


'எங்கு பரமாச்சாரியாரின் காதில் விழும்படி பாதகமான சொல்லை உதிர்த்துவிடுவானோ?' என்று அனைவரும் அச்சம் கொண்டனர்.


'எங்கே இந்த ஆளை தூக்கி செல்கிறீர்கள்?' அந்த நாத்திகர் கேட்டார்.


'அருகே இருக்கும் அம்பாள் ஸ்தலத்திற்கு' வெறுப்புடன் சொன்னார் பக்தரில் ஒருவர்.


'ஓ.. அருகே இருக்கும் கோவிலுக்கு கூட இந்த ஆள் நடந்து போகமாட்டாரா? நீங்களெல்லாம் தூக்கினால் தான் வருவாரா? இதுதான் உங்களது ஆன்மீகமா?' நாத்திகர் சடசடவென கேள்விகளை அடுக்கினார்.


சட்டென பல்லக்கின் பக்கவாட்டிற்கு வந்த அவர் பெரியவாளிடம் இருந்தே இதற்கான பதிலை எதிர்பார்ப்பது போல் நோக்கினார்.


இதுவரை எதையுமே கேட்காதது போல் பல்லக்கில் சலனமின்றி அமர்ந்திருந்த மகா பெரியவர் அருள் கனிந்த முகத்துடனே அந்நாத்திகனை ஏறிட்டார்.


நாத்திகர் தொடர்ந்தார், 'பெரிவரே! உங்களை பற்றி அதிகமாகவே கேள்விப்பட்டிருக்கேன். மற்ற சாமியார்களை போல் நீங்கள் இல்லை தான். ஆனால் நீங்களே சொல்லுங்கள், மனுசனை மனுசனே சுமப்பது எப்படி நியாயம்?'


பரமாச்சாரியாரிடம் கேட்கக்கூடாததை கேட்டுவிடுவானோ என்று சங்கர கூட்டத்தார் பயந்திருந்தனர். அவனை விலக்கவும் முயன்றனர் ஆனால் இயலவில்லை.


அவர் மேலும் தொடர்ந்தார், 'நீங்கள் வணங்கும் கடவுள்களை சுமப்பதை கூட என்னால் ஒப்புகொள்ள முடியும். கடவுள் மேல் உள்ள பக்திக்கு ஏன் இவர்கள் உங்களை சுமக்க வேண்டும்?'


மகா பெரியவர் பெரும்பாலும் யார் எதை சொன்னாலும் அதை பொறுமையாக கேட்பார். பின் அவர்களுக்கு தன்னிடமுள்ள ஏதும் ஒரு பழத்தை எடுத்து தந்து ஆசிர்வதித்து அனுப்புவார்.


அதேபோன்றே அந்த நாத்திகருக்கு எந்த பதிலும் தராமல் ஒரு பழத்தை எடுத்து கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பவினார்.


ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு மகா பெரியவர் எந்த இடத்திற்கும் பல்லக்கில் சென்றதே கிடையாது. வேற்று மாநில பயணத்திற்கு கூட நடந்தே தான் செல்வார். காரில் கூட செல்ல மாட்டார். 


ஒருநாளுக்கு ஒரே ஒரு பிடி அவலை உண்டு இந்த ஆள் எப்படி இவ்வளவு தூரம் நடக்கிறார் என்று எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.


காஞ்சி மகா பெரியவர் அவர்கள் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர். தனது 90ஆவது வயதுக்கு பிறகும் கூட தமிழகத்தில் இருந்து காசி வரை நடந்தே தான் சென்றார்.


ஆனால் இன்றோ பட்டண பிரவேசம் செய்யத் துடிக்கும் சாமியார்கள் கூட பல்லக்கு பிரயாணத்திற்கு ஆசை படுகிறார்கள்.


மகா பெரியவரை கண்டு கற்றுக்கொள்ளுங்கள். எளிமை, பக்தி இவை தான் ஆன்மீகம். பல்லக்கு, பகட்டு என்பது போலி.


தீசன்

2 கருத்துகள்

  1. காலத்துக்கு ஏற்ற சரியான கட்டுரை. பட்டினபிரவேசத்தில் அரசியல் செய்யும் போலி இந்து அமைப்புகளும், பிஜேபி கட்சியினரும் இதை படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைக்கு தேவையான பதிவு

    பதிலளிநீக்கு
புதியது பழையவை