மே மாதம் முதலாம் திகதி என்றாலே எமக்கு முதலில் ஞாபகம் வருவது தொழிலாளர்களின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துக் கூறும் தொழிலாளர் தினமாகும். தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும், உண்டு, உடுத்து, சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நியாயமான சிந்தனையின் தாக்கத்தால் தமக்குரிய உரிமைகளைப் போராடியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட தொழிலாளர்களின் போராட்டத்தால் ஏற்பட்ட மறக்க இயலாத நினைவு நாளாக இத்தினம் காணப்படுகின்றது.
முதலில் அமெரிக்காவில் நிகழ்ந்த போராட்டத்தால் பலர் தங்களது உயிர்களையும் இழந்தனர். இந் நிகழ்வானது தொழிலாளர்களின் தியாகத் திருநாளாக அமைகின்றது. உலகில் வாழுகின்ற ஒவ்வொருவரினதும் உயிரைக் காப்பாற்றும் உன்னத சேவையினை வழங்கும் தொழிலாளர்களை போற்றுகின்ற தினம்தான் மே தினம்.
நாம் ஒவ்வொருவரும் செய்கின்ற தொழிலே நமக்கு தாய். நாம் எந்த தொழில் செய்கின்றோம் என்பது முக்கியமல்ல நாம் செய்கின்ற தொழிலினை எவ்வாறு செய்கின்றோம் என்பதே மிக முக்கியம். எந்தத் தொழிலிலும் பாரபட்சமும் பார்க்கக் கூடாது. குறிப்பாக நாம் செய்கின்ற தொழிலில் உயர்வு, தாழ்வு என எந்தவிதமான பேதமும் இல்லை. உலகத்தில் காணப்படுகின்ற அனைத்துத் தொழிலும் போற்றப்பட வேண்டியதாகும். நாம் செய்கின்ற தொழிலிலே நம் உயிர் மட்டுமல்லாது பல உயிர்களைக் காக்கும் மகத்தான வேவையைச் செய்கின்றது. ஆகவே நாம் செய்கின்ற தொழிலினை தாயாக மதித்து அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும்.
நமது நாட்டின் தொழிலினை பிரதானமாக நான்கு விதமாக பிரிக்கலாம். அரசதுறை சார் தொழில், தனியார்துறை சார்ந்த தொழில், பெருந்தோட்டத் தொழில், மற்றும் சுயதொழில் - விவசாயம், கூலிவேலை என்பவையே ஆகும். இவ்வாறு நாம் அன்றாடம் செய்கின்ற தொழிலே நமது வாழ்க்கையை வாழ்வதற்கு காரணமாய் அமைகின்றது. ஒரு நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு காரணமாய் அமைபவர்கள் தொழிலாளர்களே. ஒவ்வொரு நாட்டினுடைய அபிவிருத்திற்கு மூலவேர்களாய் அமைபவர்கள் தொழிலாளர்களே.
உதாரணமாக பெருந்தோட்ட தொழிலில் ஒன்றாகக் காணப்படுவது தேயிலை செய்கையாகும். எமது நாடு உலகளாவிய ரீதியில் தேயிலை உற்பத்தியில் தனக்கான ஒரு இடத்தினை பிடித்திருப்பதற்கு காரணமாய் அமைபவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களே. இவர்களினுடைய கடின உழைப்பினாலே எமது நாடு தேயிலை உற்பத்தியில் சர்வதேச மட்டத்தில் முதன்மையான இடத்தினைப் பெற்றுள்ளது. அந்தளவிற்கு தொழிலாளர்கள் ஒரு நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு காரணமாய் அமைகின்றனர்.
இன்றைய சமூதாயத்தில் வாழுகின்ற நாம் ஒவ்வொருவரும் எந்த தொழிலினையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். நாம் எந்தவொரு தொழிலிலும் உயர்வு, தாழ்வு பார்க்கக் கூடாது.
உழைப்பால் உயர்ந்த செல்வந்தர்களின் வாழ்க்கை சரித்திரத்தை நாம் புரட்டி பார்க்கும் போது அவர்கள் எந்த தொழிலினையும் அந்தஸ்து குறைச்சல் என்று கருதவில்லை. அவ்வாறு கருதியிருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றமடைந்திருக்க மாட்டார்கள்.
தொழிலின் மகத்தவத்தையும், தொழிலாளர்களின் உழைப்பை மதித்துப் போற்றாத சமூகம் ஒருபோதுமே எழுச்சிபெற முடியாது. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் எந்த தொழிலினையும் சமமாகக் கருதும் மனப்பான்மை காணப்பட்டதாலேயே தொழிற்துறையில் முன்னேற்றமடைந்து உயர்ந்து திகழ்கின்றனர். நம்மில் பலர் மேசையில் அமர்ந்து செய்கின்ற தொழிலையே விரும்புகின்றனர். வயலில் இறங்கி வேலை செய்வதை விரும்புவதில்லை. அரச தொழிலினையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து எந்த தொழிலும் இழிவானதல்ல என்று கருதி எந்த தொழில்வந்தாலும் செய்வோம் என்ற மனநிலை எமக்குள் உருவாக வேண்டும்.
இன்றைய நவீன உலகில் சில நாடுகள் ஏனைய நாடுகளுக்கு வழிகாட்டும் நிலையிலுள்ளது. காரணம் அவர்களின் கடின உழைப்பே ஆகும். அந்நாட்டு மக்களின் அயராத உழைப்பும், தொழில் சமத்துவமும் அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்கு மூல காரணம் எனலாம். நாம் உழைக்கும் வர்க்கத்தினை உயர்வாக மதிக்க வேண்டும். உழைப்பாளர்களின் கடின உழைப்பே நம் ஒவ்வொருவரையும் வாழ வைக்கின்றது. உழவன் சேற்றிலே கால்களை வைத்ததால்தான் நாம் சோற்றிலே கைவைக்க முடியும். இராப்பகலாய் பாடுபட்டு உழைக்கின்ற ஒவ்வொரு உழவுத் தொழிலாளரையும் நாம் மதிக்க வேண்டும். எத்தொழில் செய்பவராயினும் அவர்களும் மனிதர்களே என்ற எண்ணம் நம் மனதில் இருக்க வேண்டும்.
தொழிலாளராகிய எம்மவர்கள் எம்மை யாரும் மதிக்கவில்லையே என வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. நாம் செய்கின்ற தொழிலாலே பலர் வாழ்கின்றனர் என்று கருத வேண்டும். நாம் சமூகத்தில் கூலிவேலை செய்கின்றோமே எம்மை யாரும் மதிக்கவில்லையே என்று கருதும் நிலைக்கு எந்த ஒரு தொழிலாளரையும் ஆளாக்கக்கூடாது. எந்த தொழில் செய்வோராய் இருந்தாலும் அவர்களையும் நம்மவர்களில் ஒருவராக கருதும் மனப்பான்மை எமக்கு காணப்பட வேண்டும். அவர்களின் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும்.
இன்றைய காலகட்டத்தில் வெறுமனே அரசு மற்றும் தனியார் தொழில் செய்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தினை நாம் கைவிட வேண்டும். அவற்றுக்கு மேலதிகமாக சிறு சிறு கைத்தொழில்களையும் முன்னெடுக்க வேண்டும். அன்றாடம் கூலிவேலை செய்து தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் செய்கின்ற தொழிலை செய்து பார்க்கும்போதுதான் அதனுடைய சிரமம் எமக்குத் தெரியும். அவர்கள் எவ்வளவோ பிரயாசப்படுகின்றார்கள் என்பது எமக்குப் புரியும்.
எனவே தொழிலாளர்களின் உயிர்காக்கும் சேவையினை மதிப்பது எமது மிக முக்கிய கடமையாகும். தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அவர்களுக்கு வேண்டிய அனைத்துவிதமான தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான முயற்சியினை முன்னெப்பதோடு சிறு சிறு தொழிலாளர்களின் தொழில் முன்னேற்ற வளர்ச்சிக்கு உதவுதவதற்கு நாம் முன்வர வேண்டும். இன்றைய காலத்தில் எமது நாட்டில் தற்போது மிகவும் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. எம் நாட்டில் பலர் தற்போது தொழில் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி அனைத்து தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அன்றாடம் கூலித்தொழில் செய்கின்ற தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஆகவே தொழிலாளர்களின் பெருமையைக் கூறும் இந்த மே தினத்தில் ஒவ்வொரு தொழிலாளர்களையும் போற்ற வேண்டும். எந்த தொழிலினையும் குறைவாக மதிப்பிடாமல் சமமாக, அதாவது உயிர்காக்கும் ஒவ்வொரு தொழிலையும் தாய்க்கு சமமாக மதித்து செயற்படுவது எம் ஒவ்வொருவரினதும் மிக முக்கிய கடமையாகும்.
அனைத்து உள்ளங்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள்.
பஞ்சாட்சரம் ஜோன் டிலக்ஷன்
சமூகவியல் மற்றும் மானிடவியல் சிறப்புக்கலை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
சரியாக சொன்னீர்கள். எந்த வேலையும் தாழ்ந்தது அல்ல.
பதிலளிநீக்குஇலங்கை தமிழ் அழகு. கருத்து மிக தெளிவு
பதிலளிநீக்குதொழிலாளர்கள் தம்மை யாரும் தம்மை மதிக்கவில்லையே என கருத தேவையில்லை. பிறருடைய வாழ்வுக்கு நாம் துணை நிற்கிறோம் என்பதே தொழிலாளிக்கு பெருமைதான் என்ற தங்களது கருத்து போற்றத்தக்கது.
பதிலளிநீக்கு