அண்மை

அன்னையர் தினம் கட்டுரை: குடும்பத்தின் மிகப்பெரிய உழைப்பாளி 

 

அன்னையர் தினம் கட்டுரை


உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படுகின்றது. நாம் நேரில் காண்கின்ற ஒரே ஒரு தெய்வம் எம் அன்னையே. எம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்தவர் எம் அன்னை. அவருக்கு மதிப்பளித்து, வயது சென்றாலும் அன்போடு அரவணைத்து நடத்த வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை எம் வாழ்வில் யாராலும் மறக்க முடியாது. ஈரைந்து மாதங்கள் கருவிலே எம்மை சுமந்து நல்லபடியாக உலகத்தை காணச்செய்த அன்னைக்கு மகத்துவத்தையும், மதிப்பையும் கொடுக்கும் நாளாகத்தான் நாம் யாவரும் இந்த நாளை நினைவுகூர வேண்டும்

முறையாக அன்னையர் தினம் தோன்றுவதற்கு அமெரிக்காவின் மேற்கு வேர்ஜீனியாவின் கிராப்டன் நகரத்தில் வாழ்ந்து வந்த அனா ஜார்விஸ் என்ற பெண்ணே காரணமாய் இருந்தவர். அவரது முயற்சியால்தான் 1914 ஆம் ஆண்டில் இருந்து வருடம்தோறும் உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது

ஒரு பெண்ணானவள் இருமுறை பிறக்கின்றாள். ஒன்று பெற்றோருக்கு மகளாகப் பிறப்பது, மற்றொன்று அந்த பெண்ணின் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்து அக் குழந்தை பிரசவிக்கும் போது அவள் மீண்டும் ஒரு முறை மறுஜென்மம் எடுக்கிறாள். தனது வயிற்றிலே கருவினைச் சுமந்து ஒன்பது மாதங்கள் பூரணமாகி பத்தாவது மாதம் தனது குழந்தையை பிரசவிக்கும் போது தனது வாழ்க்கையில் அதிக வேதனையையும். வலிகளையும் சந்தித்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட பின்னர் அவள் தான் பட்ட வலிகளையும், வேதனையையும் மறந்து போகிறாள்

தான் பெற்றெடுத்த சிசுவை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து, அக் குழந்தை வளரும்வரை மிகுந்த சிரமத்தை சந்திக்கிறாள். குழந்தைக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்து தனது உடல் நலனை கருத்தில் கொண்டு செயற்படாத காரணத்தினால் இளவயதிலேயே உடல் பருமன், மூட்டுவலி, மற்றும் ஏனைய நோய்களுக்கு உள்ளாகின்றாள். தனது பிள்ளையின் வாழ்க்கைக்காக வாழ்கின்றோம் என எண்ணி தனது நலனை கருத்தில் கொள்ளாமல் செயற்படும் ஒவ்வொரு அன்னையும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கிய விடயம் என்னவெனில், தமக்கு ஏதாவது ஒன்று நடந்தால் தமது பிள்ளையை யார் பார்ப்பது என்பதே. தனது நலனை கருத்தில் கொண்டால்தான் தனது பிள்ளையை நாம் சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு செயற்படுவது ஒவ்வொரு அன்னையினதும் மிக முக்கிய கடமையாகும்

குடும்பத்தினை கொண்டு வழிநடத்துகின்ற திறவுகோலாக அன்னையே காணப்படுகின்றாள். தந்தையானவர் சம்பாதித்துக் கொடுப்பதை கொண்டு தமது பிள்ளைகளையும், குடும்ப காரியங்களையும், குடும்பப் பொறுப்புக்களை கொண்டு வழிநடத்துகின்ற ஆணிவேர் தாய்அன்னையின் வளர்ப்பு என்பது மிக முக்கியமான விடயம். ஒரு பிள்ளை நல்லவராகவும், தீயவராகவும் இவ்வுலகில் திகழ்வது அன்னையின் வளர்ப்பைப் பொறுத்துதான் என்று கூறுவார்கள். சமூதாயத்திற்கு ஒருவரை நல்லவராக மாற்றி, சிறந்த பிரஜையாக வழங்குவதற்கான பொறுப்பினை அன்னையே ஏற்றுக்கொள்கின்றாள்

உதாரணமாக உலகில் கொரோனாத் தொற்று பரவிய காலப்பகுதியில் பல்வேறு இக்கட்டான நிலைக்கு மத்தியில் குடும்பத்தைப் பற்றி சிந்தித்து கரிசனை கொண்ட ஒரே ஒரு ஜீவன் அன்னை. ஒவ்வொரு நாட்டிலும் தொற்று நோய் அதிகரித்துக் கொண்டவரும் சூழ்நிலையில் குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் பாதுகாப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை செய்து வந்ததை கண்கொண்டு பார்க்க முடிந்தது. எனது குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் வந்துவடுமோ, பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுமோ, பிள்ளைகள் பரீட்சைகளில் தோற்றி சித்தியடைவார்களா, பிள்ளைகளுடைய தேவைகளை எவ்வாறு நிறைவேற்றப் போகின்றேன், எப்போது நிலைமை சரியாக வரப்போகிறது, வெளிநாட்டில் பிள்ளைகள் இருந்தால் எனது பிள்ளை அந்த நாட்டில் எப்படி இருக்கின்றது, நேரத்திற்கு சாப்பிடுகிறதா, எப்போது எனது பிள்ளை என்னிடம் வந்து சேரப்போகிறது என பல கேள்விகளுக்கு மத்தியில் அன்னையே காணப்பட்டாள்.  

இவ்வாறு அன்னையானவள் தனது ஆயுசின் நாட்களை தமது குடும்பத்திற்காகவே செலவளித்து, குடும்பத்திற்காகவே தம்மை அர்ப்பணிக்கிறாள். அவ்வாறான அன்னையை நாம் மதித்துப் போற்ற வேண்டியது அவசியமாகும். இன்றைய நவீன சமூதாயத்தை பார்க்கும் போது அன்னையை மதித்து நடக்கின்றோமா என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நவீனமயமான உலகில் அன்னைக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும், மரியாதையையும் செலுத்த வேண்டும். நாம் வளர்ந்து விட்டோம், நன்றாக சம்பாதிக்கின்றோம், நாம் எமது சொந்தக்காலில் நிற்கின்றோம், இனி எமக்கு அன்னையின் துணை தேவையில்லை என்ற எண்ணத்தினை எம் வாழ்வில் இருந்து முற்றாக நீக்கிவிடவேண்டும். நாம் இந்த நிலைமைக்கு வர காரணம் யார் என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் இவ்வாறு நாம் எவரும் யோசிக்கவே மாட்டோம்

இன்றைய சமுதாயத்தினை எடுத்துக் கொண்டால் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் அன்னையை மதிக்காத சூழ்நிலைதான் காணப்படுகின்றது. வயது சென்ற நிலையில் அன்னையானவன் காணப்படுகின்ற போது அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவளுடைய கருத்தினை ஒரு பொருட்டாக எண்ணாத சமூகத்தினையே நாம் காண்கின்றோம். எந்தவொரு முடிவு எடுப்பதாய் இருந்தாலும் அன்னையின் கருத்தினை புறந்தள்ளி விட்டு பலர் சுயமாக மற்றும் ஏனைய நபர்களோடு கலந்தாலோசித்து முடிவினை எடுக்கின்றனர். இவ்வாறான நிலையில் ஒரு அன்னையின் மனம் பாதிக்கப்படும் அவலத்தை சொல்வதற்கு வார்த்தையே இல்லை. என்னுடைய கருத்திற்கு மதிப்பில்லையே, என்னை ஒரு பொருட்டாக யாரும் கருதவில்லையே, என்னை புறக்கணிக்கிறார்களே என பலவாறாக சிந்தித்து மனதளவில் உடைந்து போகின்றாள்.

இதேபோன்று இன்னும் சில போலி நபர்களையும் நாம் பார்கின்றோம். வெளி உலகத்திற்காக வேண்டி அன்னையை மதிப்பது போல் நாடகமாடுகிறார்கள். தாயை மதிக்காத மற்றும் அரவணைக்காத நிலையினை யாராவது பார்த்து நம்மை இழிவாக பேசுவார்கள். இவ்வாறு எவரும் தம்மை இழிவாக நினைக்கக்கூடாது என்பதற்காகவும் சிலர் போலியாக செயற்படுகின்றனர். பசுத்தோல் போர்த்திய புலி போல வெளியார் பார்க்கும் போது அன்னையை பார்க்கும் விதம் ஒரு விதமாகவும், வீட்டிற்குள் ஒருவிதமாகவும் வேடம் தரிக்கின்றனர்

மேலும் தாயானவள் சுகவீனமுற்று காணப்படும் போது சரியாக பராமரிக்காத நபர்களையும் நம் சமூகத்தில் காணமுடிகிறது. வயதுசென்ற நிலையில் காணப்படும் போது நோயுறுவது வழமையான செயலாகும். இவ்வாறான நிலையில்தான் நேரத்திற்கு உணவு கொடுத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து, நல்ல உடை அணிவித்து கவலைப்படாமல் சந்தோசமாக வைத்து பராமரிக்க வேண்டும். ஆனால் இன்று பார்க்கும் போது தாயை பார்ப்பதற்காகவே வீடுகளில் பணியாளர்களை அமர்த்துகின்றனர். கடைசி வரைக்கும் தாயை வைத்து பராமரிக்கும் பாக்கியம் எமக்கு கிடைத்திருக்கின்றது என்று நினைப்பவர்கள் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்கள். வேலைப்பளு  காரணமாகத்தான் இவ்வாறு பணியாளர்களை வைத்து பராமரிக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் வேலைநேரம் முடித்து விட்டுவந்து அன்னையை பார்க்காத சில நபர்களையும் நாம் சமூகத்தில் காணுவது கவலையளிக்கின்றது. சிலர் முதியோர் இல்லங்களில் கொண்டு விடுகின்றனர். இதனால் ஒவ்வொரு அன்னையும் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனது பிள்ளைகள் என்னை இவ்வாறு அனாதையாக கைவிட்டுவிட்டு விட்டார்களே, நான் இனி ஏன் வாழவேண்டும் என நினைத்து சிலர் தவறான முடிவுகளினை எடுக்கின்றனர். கடைசி சொற்ப காலத்தில் எம் அன்னையை பார்ப்பதற்கு சிரமப்படுகின்றோமே என்று நினைப்பவர்கள் இவ்வளவு காலம் எம்மை பராமரிப்பதற்கு தாயானவள் என்ன பாடுபட்டிருப்பாள் என்பதை சற்று சிந்தித்து செயற்பட வேண்டும்

குடும்பத்தில் மகள்மார் வாழ்நாள் முழுவதும் தாய்க்கு மகளாகவே இருக்கிறாள். ஆனால்  மகன்மார் தனக்கு திருமணம் நடைபெறும் வரைதான் தாய்க்கு மகனாக இருக்கிறான் என கருதுவது தவறான விடயமாகும். மகளோ, மகனோ யாராக இருந்தாலும் தாய் என்பவள் நம் வாழ்நாளில் எப்போதும் இருக்கிறாள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். தற்காலத்தில் அனேகமான குடும்பங்களினை எடுத்துப்பார்த்தால் குடும்பத்தில் ஆணாக பிறந்த ஒருவர் தன் மனைவி வரும் வரைதான் அன்னையின் பக்கத்தில் இருக்கிறான். அவருக்கு திருமணமாகிய பிறகு அவன் அன்னையின் கருத்தை இரண்டாம் பட்சத்திற்கு புறந்தள்ளி விடுகின்றான். தனது மனைவிதான் பெரிது என்று நினைக்கின்றான். இவ்வாறு எண்ணுவது தவறானதோர் விடயம். ஒவ்வொரு ஆண் பிள்ளைகளும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது எவ்வாறான நிலையிலும் தனது அன்னைதான் தனக்கு பெரிது என்று எண்ணி அன்னையை மதித்து செயற்பட வேண்டும்

உலகிலே உள்ள உண்மையான மற்றும் புனிதமான அன்பு அன்னையின் அன்பு மட்டுமேயாகும். தாயைவிட எம்மிடம் யாரும் அன்பு காட்ட முடியாது. அந்தளவிற்கு எந்தவிதமான கைமாறும் இல்லாத தூய்மையான அன்பினை அன்னையால் மட்டுமே நமக்கு தர முடியும். காதலனையோ அல்லது காதலியையோ அல்லது வேறு எந்த நபர்களையோ பார்த்து நான் உம்மிடம் உண்மையாக அன்பு செலுத்துகிறேன் என்று கூறினாலும் இந்த வார்த்தையை எம் அன்னைக்கு ஒருமுறையாவது சொல்லியிருக்கிறோமா? நீங்கள் ஒருமுறை தாயைப்பார்த்து இந்த வார்த்தையை சொல்லிப்பாருங்கள் அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக இருக்கும்

எனவே அன்னையர் தினமான இன்று வெளியுலகிற்காக சமூக வலைத்தளங்களில் அம்மாவைப் பற்றிய கவிதைகளையும், பாடல்களையும், சிந்தனைகளையும் பகிந்து கொள்வது உண்மையான அன்போடும் பாசத்துடனுமா? என்பதை சற்று சிந்திக்க வேண்டும். இன்று மட்டும் எனது அம்மாவிற்கு வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டுச் செல்லக்கூடாது. எம் வாழ்நாள் முழுவதும் தாயிடம் அன்பாக நடந்து கொண்டு, கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையையும் கொடுத்து, எம்மை ஈன்றெடுத்த தெய்வமாக தாயை கருதி அவருடைய கருத்துக்களை புறக்கணியாது ஏற்றுக் கொண்டு அன்பு செய்வதே நாம் எமது அம்மாவிற்கு கொடுக்கும் மிகப்பெரிய அன்னையர் தின பரிசாகும். அம்மா என்ற பதம் வெறுமனே மனிதனுக்கு மட்டும் சொந்தமுடையதல்ல. அது அனைத்து உயிரிகளுக்கும் சொந்தமான ஒரு பதமாகும். அன்னையர் தினமான இன்று தாயினுடைய விருப்பங்கள் என்ன என்பதை கேட்டு அதை நிறைவேற்றுவது எம் அனைவரினதும் பொறுப்பாகும். ஆகவே என்னையும் இவ்வுலகில் கொண்டுவந்த எனது அம்மாவிற்கும், உலகில் வாழுகின்ற, நாம் நேரில் கண்ட அனைத்து தாய் தெய்வங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு எம் தாய் திருநாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து  பாதுகாப்பதற்கு முயற்சி செய்வதும் எமது முக்கிய பணியாகும்

பஞ்சாட்சரம் ஜோன் டிலக்ஷன் 

சமூகவியல் மற்றும் மானிடவியல் சிறப்புக் கற்கை  

கிழக்குப் பல்கலைக்கழகம்.

அன்னையர் தின கவிதைக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை