அதோ அந்த பறவை போல வாழவேண்டும் என்றார் கவிஞர் கண்ணதாசன். வானில் வட்ட மடிக்கும் அந்த பறவையின் வாழ்விலே பொய்யில்லை புரட்டு இல்லை, கொலை கொள்ளை வஞ்சம் எதற்கும் வாய்ப்பே இல்லை. அதுபோல மனிதனை நெறிபடுத்தவே கி.பி. 571 ல் நபிகள் நாயகம் ஏக இறைவனால் கடைசி தூதராக அனுப்பப்பட்டார். நபிகள் வாழ்வை இந்த ஒரே பதிவில் அடக்குவது கடல் நீர் முழுவதும் ஒரு குடத்தில் அடைப்பதற்கு ஒப்பாகும்.
தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தை அப்துல்லாவையும் ஆறாம் வயதில் அன்னை ஆமினாவையும் இழந்தார். எழுத படிக்க இயலவில்லை அவரது பொருளாதாரத்தில், அடுத்தவர் கை ஏந்தாமல் ஆடு கூட மேய்த்தார் உள்நாட்டிலும் சிரியாவிலும் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் செய்த அவரது வியாபார திறமையை பார்த்த செல்வ சீமாட்டியும் விதவையுமான கதிஜா, நபிகளை மணம் செய்ய விரும்பினார். நபிகளும் சம்மதித்து அவரை மணந்தார். மதினா நகரம் அன்றைய கால கட்டத்தில் மதினாவில் நானூறுக்கும் மேற்பட்ட சிலைகளை நிறுவி, கடவுளென்று சொல்லி, பில்லி சூன்யம் பித்தலாட்டம் என மக்களை துன்புறுத்தினர் மேல் சாதியினர், அந்த சூழலில் தன்னை இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டார் நபிகள் நாயகம். நம்மை படைத்தவன் அல்லா ஒருவனே! அவனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்றார். வட்டி, சூதாட்டம், விபச்சாரம், மோசடி, பில்லி சூன்யம் போன்ற அனைத்தையும் அல்லா தடை செய்திருப்பதாக தனக்கு செய்தி வந்திருப்பதாக அறிவிக்கிறார். மனிதராய் பிறந்த அனைவரும் சமம் என்றார்.
நபிகள் நாயகம் பிறந்தது குரைஷி எனும் உயர்குலம் ஆகும். அக்குலத்தை சேர்ந்தவர்கள் இழி குலத்தோரும், கருப்பரும், கீழ் சாதிக்காரர்களும் நம்மோடு சமமா? என கேட்டு நபிகளை எதிர்த்தார்கள். நபிகளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் பைத்தியக்காரன் எனும் பட்டம் சூட்டி, கல்லாலும் கம்பாலும் அடித்து நபிகளையும் அவரது தோழர்களையும் மக்காவை விட்டுத் துரத்தினார்கள். மதினா நகரம் அவரை வாரி அனைத்துக் கொண்டது. மதினா வாழ்க்கை மதினாவில் நபிகள் அவரது 40 வயது முதல் 63 வயது வரை வாழ்ந்த போது தினசரி வாழ்க்கையில் அருளப்பட்டதே திருக்குர்ஆன் ஆகும்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் இந்திய அரசியல் சட்டம் 103 முறை திருத்தப்பட்டது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகளால் மொழியப்பட்ட சட்ட திட்டங்கள் இன்றளவும் 80 கோடி இஸ்லாமியர்களால் கடை பிடிக்கப்படுகிறது. மதினா நகரம் நபிகள் ஆட்சியின் கீழ் வந்தது. வசதி படைத்தவர்கள் மூலம் ஏழைகள் வாழ்வு மலர ஸகாத் எனும் வரிவிதிப்பு முறை அமுல்படுத்தப்பட்டது. தாங்கள் ஈட்டிய பொருளின் ஒரு பகுதியை வரியாக அரசக்கு வழங்குவதே ஸகாத் ஆகும். ஸகாத் நிதி ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. கஜானா நிரம்பி வழிந்தாலும் அதில் ஒரு பொருளை கூட நபிகள் தொடமாட்டார். அவர் மக்காவை விட்டு வந்த போது கொண்டு வந்த சொற்ப நாணயங்களை கொண்டு 100 ஆடுகளை வாங்கி பண்னை அமைத்து இருந்தார். அந்த பண்னையில் 101 ஆவது ஆடு குட்டி போடும்போது ஒரு பெரிய ஆட்டை தனக்குரிய செலவுக்காக தனக்கு சொந்த மாக்கி கொண்டார்.
மகாத்மா காந்தியின் சத்திய சோதனையில் ஒரு சம்பவம், தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் கருப்பின பிரச்சினைக்காக சென்ற காந்தி ஓரளவு அதில் வெற்றி பெற்றவுடன் நாட்டுக்கு புறப்பட்டார். அங்கு வாழ்ந்த இந்தியர்கள், தங்கள் அன்புப் பரிசாக நகைகளையும் ஆபரணங்களையும் ஆடைகளையும் அவருக்கு கொடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க போராட்டத்தில் தன் உடமைகள் அனைத்தும் இழந்த காந்தியின் மனைவி கஸ்தூரிபா அதை ஏற்றுக் கொள்ள விரும்பினார். ஆனால் காந்தியடிகள் அதை ஏற்காமல் ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி அந்த மக்களுக்கே அதை திரும்பக் கொடுத்தார்கள். தர்ம கர்த்தாக்களிடம் செல்வம் குவிந்திருக்கும். அதை தான தர்மம் செய்யலாமே தவிர ஒரு தம்படி கூட அவர்கள் எடுக்க முடியாது.
அதுபோல ஒரு முறை நபிகளின் பேரன் ஒரு பேரீட்சையை எடுத்து வாயில் போட்ட போது அது ஸகாத் பொருளாக இருக்கும் என அஞ்சி அதை துப்பச்செய்தார். நபிகளின் பெரிய தந்தை மகன்கள் ஸகாத் வசூலிக்கும் வேலை கேட்டபோது கூட அதற்கும் மறுத்துவிட்டார் நபிகள் நாயகம். இறைக்க இறைக்க கிணறு ஊறுவது போல், எடுக்க எடுக்க ரத்தம் உடலில் உற்பத்தி ஆவது போல், கற்றுக் கொடுக்க கற்றுக்கொடுக்க கல்வி குறையாது கூடுவதுபோல் ஸகாத்தும் நோன்பும் 10 மடங்கு பயன்தரும் என்கிறார் நபிகள்.
ஸகாத் என்பது அல்லாவுக்கு கொடுக்கும் கடன் என்றும் அல்லா வாங்கிய கடன் பல மடங்காக திரும்பவரும் என்றும் போதிக்கிறார். பெண்கள் நலன் இந்திய நாட்டில் ஒரு நூற்றாண்டு முன்பு வரை இளவயதில் திருமணம் செய்வதும், அத்திருமணத்தில் இளவயதில் கணவன் இறந்தால் அந்த பெண்னை சிதையில் கணவனோடு சேர்த்து எரிப்பதும், இல்லையென்றால் மனைவியே கணவனின் உடலோடு உடன் கட்டை ஏறுவதும் வழக்கமாக இருந்தது. பிராமணர் குல பெண்களை இருட்டு அறையில் அடைத்தும் மொட்டை அடித்தும் வண்ண உடைகள் உடுத்த தடைவிதித்தும் கொடுமை படுத்தினார்கள். இராஜாராம் மோகன்ராய், டாக்டர் முத்துலெட்சமி ரெட்டி போன்றவர்கள் இதற்காக போராடினார்கள். ஆனால் நபிகள் 14 ஆம் நூற்றாண்டிலேயே விதவைத் திருமணத்தை ஆதரித்தார். அவரே விதவையை திருமணம் செய்தார். சிறுமிகள் திருமணத்தை எதிர்த்தார். கணவன் இறந்த பிறகு 4 மாதம் 10 நாள் இத்தா எனும் மறைந்து வாழும் நாட்கள் முடிந்ததும் திருமணம் செய்ய அனுமதித்தார். அவரது மனைவிக்கு துணி தைத்து கொடுத்தும், உணவு தயாரிக்க உதவிகள் செய்தும் சம உரிமை வழங்கியதாக அவர் மனைவி ஆயிஷா தெரிவிக்கிறார். சமூக குற்றங்களை தவிர்க்க ஹீஜாப் எனும் மறைவு உடையை அணிய வற்புறுத்தினார்.
கந்து வட்டிக் கொடுமை நாம் இன்றும் பார்க்கிறோம், சுய உதவிக் குழுக்கள் என்ற பெயரில் சில மைக்ரோ பைனாஸ்காரர்களும் சில தனியார் நிதி நிறுவனங்களும் பெண்களின் அறியாமையை பயன்படுத்தி அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வாரா வாரம் ஒரு தொகையை வசூலிக்கின்றனர். சாலையோர வியாபாரிகளும், பெட்டிக் கடைகாரர்களும் அவர்களிடம் மாட்டிக் கொண்டு தற்கொலையில் வாழ்வை முடிக்கின்றனர். கணவரின் வருமானத்தை மட்டும் நம்பி கடன் வாங்கும் பெண்களின் பரிதாப வாழ்க்கை கொலையிலும் தற்கொலையிலும் முடிகிறது. அப்படி வட்டி வாங்குவதை இஸ்லாத்தில் பல நூற்றாண்டுக்கு முன்பே தடை செய்தார் நபிகள் நாயகம். அதை இன்றும், இஸ்லாமியர்கள் கடை பிடிக்கிறார்கள். அரபு நாடுகளில் வட்டி இல்லா கடன் வழங்கும் வங்கிகள் ஏராளமாக உள்ளன. தனது பெரிய தந்தை அப்பாஸ் வட்டித் தொழில் செய்த போது இனி வட்டி வாங்கக் கூடாது என உத்தரவிட்டார் நபிகள் நாயகம்.
என்னுடைய தனிபட்ட வாழ்க்கையில் கூட ஒரு சம்பவம், ஒரு இஸ்லாமிய சகோதரன் மனைவிக்கு, பிரசவ காலத்தில் வெறும் இருநூறு ரூபாய் தேவைப்பட்டபோது உதவி செய்தேன். அதை மனதில் வைத்து அவன் வெளிநாட்டில் இருந்தபோது ஒரு இக்கட்டான சூழலில் எனக்கு பணம் தேவைப்பட்ட போது ரூ .50000 கடன் கொடுத்து நபிகள் காட்டிய வழிப்படி வட்டி இல்லாமல் பெற்றுக் கொண்டான். திருமண முறை பல பல மாதரை திருமணம் செய்வது இஸ்லாம் அனுமதிக்கிறது.
நபிகளும் பல மாதரை திருமணம் செய்தவர்தான். ஆனால் அதற்கு தகுந்த காரணங்கள் உள்ளன. அவர்களுக்கு வாழ்க்கையிலும் சொத்திலும் சம உரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மனைவிகளை திருமணம் செய்யலாம் என்றாலும் எல்லா முஸ்லீம்களும் பல மனைவிகளோடு திரிவதில்லை.
இந்திய முஸ்லீம்களில் 89% பேர் ஒரு மனைவியோடு மட்டுமே வாழ்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 1000 பேருக்கு 910 பெண்களே பிறக்கும் இந்த காலத்தில் இது சாத்தியமுமில்லை. இன்றைய காலத்தில் விவாகரத்து வேண்டுபவர்கள் கோர்ட் படியேறி காலங்கள் போவதால் வாழ்க்கையை தொடர முடியாமலும் தொடங்க முடியாமலும் தவிக்கிறார்கள். அதனால், தலாக் முறையை நபிகள் அமுல்படுத்தினார்.
மூன்று முறை தலாக் சொல்வதாலேயே, ஒருவர் மனைவியை பிரிந்துவிட முடியாது. முதல் முறை சொல்லும் தலாகிற்கும் இரண்டாம் முறை சொல்லும் தலாகிற்கும் மூன்று மாத இடைவெளி இருக்க வேண்டும். அதுவரை கணவன் வீட்டில்தான் அந்த பெண் இருக்க வேண்டும். திருந்துவதற்கு பல கட்டங்களில் பல வாய்ப்புகள் பெண்ணுக்கு வழங்கப்படும். மூன்று முறை தொடர்ந்து ஒருவர் தலாக் சொன்ன போது அதை ஒரு முறை சொன்னதாக கருத வேண்டும் என உத்தரவிட்டார் நபிகள். கள்ளக் காதலால் மனைவி கணவரைக் கொல்வதும், கணவர் மனைவியை கொல்வதும் போன்ற சமூக குற்றங்கள் இதனால் தடுக்கப்படுகிறது. மனைவியும் கணவனை விவாக முறிவு செய்யலாம். தனக்கு கொடுக்கப்பட்ட மஹரை பள்ளி நிர்வாகிகளிடம் கொடுத்து, தகுந்த காரணத்தை சொல்லி, அவர்கள் அனுமதியுடள் திருமண முறிவு செய்து கொள்ளலாம். இஸ்லாமிய திருமணங்களில் கன்னி பெண்ணாக இருந்தாலும், விதவையாக இருந்தாலும் பெண்ணின் சம்மதம் முக்கியமாகும்.
திருடினால் கையை வெட்டலாம் என ஷரியத் சட்டம் கூறுகிறது. இது காட்டுமிராண்டித்தனம் போல தோன்றலாம். திருடியவனை சிறையில் அடைத்து சோறு போட்டு ஒரு குறிப்பிட்ட நாள் கழித்து வெளியே விடுவதால் அவன் மீண்டும் திருட வாய்ப்பு ஏற்படுகிறது. 100 முறை திருடி 100 முறை சிறை சென்றவர்கள் உள்ளார்கள். கையை வெட்டினால் திருட முடியாது என்பது மட்டுமல்ல, திருடினால் கையை வெட்டிவிடுவார்கள் என்ற பயம் அனைவருக்கும் ஏற்படும். இதனால் திருட்டு முற்றிலும் தடுக்கப்படும். உயர் குலத்தை சேர்ந்த ஒரு பெண் திருடியபோது அதற்கு மன்னிப்பு வழங்க உயர்குலத்தவர்கள் கேட்ட போது என் மகள் பாத்திமாவே திருடியிருந்தாலும் இதுதான் தண்டனை என்று கூறினார் நபிகள். விரைவான தண்டனையும் குற்றங்களை குறைக்க உதவுகிறது. முப்பது வருடங்களாக ராஜிவ் காந்தியின் கொலைக்கு விடை தெரியவில்லை. பாக்கிஸ்தானில் ஜியாவுல்ஹக் சென்ற விமானத்தில் குண்டு வைத்து கொலைசெய்தவர்கள் 4 மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பபட்டார்கள்.
மன்னராகவும் மக்கள் தலைவராகவும் இருந்த நபிகள் தன் துணியை தானே தைத்து கொண்டார். கூளம் நிரப்பிய தலையணையை பயன்படுத்தினார். தோலுடன் கூடிய கோதுமையை உண்டார். வரிசையில் நின்று உணவு வாங்கினார். போர்வையை வேட்டியாக அணிந்தார். பாயையே வீட்டின் கதவாக பயன்படுத்தினார். ஒரு நாள் வைத்த குழம்பை பல நாள் உண்டார். பக்கத்து வீட்டுக்காரனுக்கு உணவு கொடுத்துவிட்டுத்தான் உண்ண வேண்டும் என்பார். வலது பக்கமிருந்து உணவு பரிமாற வேண்டும் என்று விதி ஏற்படுத்திய நபிகள் இடப்புறம் நபி தோழர் அபுபக்கர் அமர்ந்திருந்தும் வலது பக்கம் உள்ள கிராமத்து தாழ்ந்த சாதி மனிதருக்கு உணவு படைத்தார். இணை கற்பிக்கக் கூடாது என்று சொல்லும் நபிகள் படைத்தவன் படைத்த ஒன்றை வணங்கக்கூடாது என்றார். தன் அடக்கஸ்தலத்தை வணக்கஸ்தலமாக்கக் கூடாது என்றார். மனிதரை வணங்கத் தேவையில்லை என்று சொன்ன நபிகள், யூதர் ஒருவரின் உடல் அடக்கத்துக்கு சென்ற போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். இன்றும் கிராமங்களில், தாழ்த்தப்பட்ட இந்து சகோதரியை இஸ்லாமிய வீடுகளில் வேலைக்கு சேர்த்து, அவர்கள் சமைத்த உணவை உண்பதும், அதையே அவர்களுக்கு கொடுப்பதும், பின்னர் திருமண வயதில் உறவினர்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதும் சாதாரண நிகழ்வாக பார்க்கலாம்.
இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வாழும் அடியக்கமங்கலத்தில் பிறந்தவன் நான். ரமலானும் பக்ரீத்தும் வந்தால் பண்டங்கள் பல வீட்டில் இருந்து எங்களுக்கு வரும். தீபாவளி பொங்கல் என்றால் அங்கு போகும். அன்பும் மனித நேயமும் இஸ்லாமியர்களுக்கு அதிகம். உண்ணக் கொடுத்து மகிழ்பவர்கள் அவர்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அன்றே சொன்னாரல்லவா அண்ணா. அர்த்தமுள்ள இந்து மதம் பத்து தொகுப்பு எழுதிய கண்ணதாசன் தான் இயேசு காவியமும் எழுதினார். பல மதங்கள் இருந்தாலும் அதன் நோக்கமும் மார்க்கமும் ஒன்று தான். பல நதிகள் பாய்ந்தாலும் அவை சேருமிடம் கடல்தான், நல்ல வழிகள் சொன்ன நபிகள் நாயகத்தின் கருத்துக்கள் 80 கோடி இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல, 800 கோடி உலக மக்களும் பின்பற்றத் தகுந்தவையே என்று எழுதி முடிக்கிறேன்.
ஜெ மாரிமுத்து