அண்மை

ஓருலக அறம் காணும் தமிழ்

 

ஓருலக அறம் காணும் தமிழ்

தமிழ் இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை உடையவை. தமிழ் வளர்த்த பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் சிறப்புற்றிருந்த தமிழ்மொழி இலக்கியப் படைப்பியல் பல்வேறு களங்களை கண்டது. அகமும் புறமுமாய், அறமும் வாழ்வியலுமாய், இனிமையும் எழிலுமாய் விளங்கும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் மக்கள் வாழ்வாங்கு வாழ நெறிகளை உடையவை. தமிழ் இனிமையான மொழி, செம்மொழி என்று இன்றைக்குப் புகழப்படும் சூழலில் அதன் செம்மொழித் தன்மையினைச் சங்க இலக்கியப் பாடல்கள் வழி எடுத்துக் கூறுவது சாலப் பொருந்தும், 


'இனிமையும் நேர்மையும் தமிழெனலாகும்' என்று தமிழின் சிறப்பினைப் பகர்கிறது பிங்கல நீகண்டு. தனிநாயகம் அடிகள் தமிழைப் பக்தியின் மொழி எனப் புகழ்கிறார். இத்தகைய சிறப்புக்குரிய தமிழ்மொழி ஆழ்ந்து அகன்ற அறக்கோட்பாடுகளைத் தன்னுள் கொண்டு காலம் காலமாக மக்கள் செம்மாந்த வாழ்க்கை வாழ வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. காதல் வாழ்வானாலும், போர்ச்சூழானாலும் இரண்டிலும் எண்ணற்ற அறங்களைத் தன்னுள் கொண்டு விளங்குகிறது தமிழ் இலக்கியக்களம். தலைவன் பரத்தையின்பாற் பிரிந்துசென்று மீளும்போது, என்னைப் பிரிந்து எவ்வாறு ஆற்றியிருந்தீர்கள் என்று கேட்கிறாள். அதற்கு, நெல்பல பொலிக பொன் பெரிது சிறக்க 'விளைக வயலே வருக இரவலர்' என்று, நாட்டுக்கு நல்லறங்கள் விளைய வேண்டிக் கொண்டிருந்ததாக ஐங்குறு நூற்றால் செய்திகள் கிடைக்கப் பெறுகின்றன. இல்லறக் கடமையாற்றுதல் பெண்களுக்கு 'உரிய கடன், தொழிலாற்றுதல் ஆடவர்களுக்கான கடன்' என்று குறுந்தொகை கருத்துரைக்கிறது. இவ்வாறு அறம் ஆளும் தன்மை உடையனவாய்த் திகழும் சங்ககால இலக்கியங்களில் தமிழின் செம்மொழித் தன்மையினைக் கண்டறிதல் நம் தலையாய கடமையாகும். 


தமிழ் இலக்கியங்களில் எட்டுத்தொகைத் தொகுப்பில் அமைந்திருக்கும் புறநானூறு என்னும் இலக்கியம் புறச்செய்திகளைக் கூறும் சிறப்பினது. இவ்விலக்கியத்தின் வாயிலாகப் பண்டைத் தமிழர்களின் வீரம், கொடை, கல்வி மற்றும் இன்னபிற திறன்களை எல்லாம் அறிந்தறிய முடிகிறது. இத்தகைய கருத்து நிலைகளைத்தவிர மக்கள் வாழ்வியலுக்குத் தேவையான அறக் கூறுகளையும் பொதுமை நோக்கில் சிறப்பாக எடுத்தாள்கிறது. இதனை


யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே,

முனிவின், இன்னா தென்றலும் இலமே,

'மின்னொடு வானம் தண்துளி தலைஇ

ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற்

பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல,

ஆருயிர் முறைவழிப் படுஉம்' என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே!

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே


என்னும் பாடல் வழியாக அறியலாம். இப்பாடல் உலக அமைதிக்கான கருத்தமைவுகளைக் கொண்டு விளங்குகிறது. உயர்ந்த அறிவுரையை உயர்ந்தோர்கள் எடுத்துக் கூறும் பொருண்மொழிக் காஞ்சித் துறையில் அமைந்த இப்பாடல் ஓருலகம் என்னும் கருத்து நிலையை வலிமையான கருத்துகளோடு முன்வைப்பதாகத் தோற்றம் கொள்கிறது. 


"எல்லா ஊரும் நம் ஊர்களே; எல்லா மக்களும் நம் மக்களே; தீமையும் நன்மையும் பிறரால் ஏற்படுபவை அல்ல; அவை நம்முடைய செயல்பாடு களினாலேதான் வந்து சேர்கின்றன; துன்பம் வருவதும் தீர்வதும் அதுபோன்றதே; சாவு புதுமையானதல்ல; அது தாயின் கருவில் குடிகொள்கிறபோதே நிச்சயிக்கப்படுகிறது; அதனால், வாழ்க்கை துயரமானது என்று அழவும், இனிமையானது என்று மகிழவும் தேவை இல்லை; வானில் மேகங்கள் மின்னலை மின்னி, மழை பெய்து அவ்வெள்ளம் காட்டாற்றில் பெருக்கெடுக்கையில், அந்நீரில் பயணிக்கும் தெப்பம் எவ்வாறு செல்கிறதோ அதுபோல வாழ்க்கையும் ஊழ்வினையின் வழியாகச் செல்லும், ஆகையினால் உயர்ந்தவர்களை உயர்ந்தவர்கள் என்றோ; குணத்தால் குறைந்தவர்களைச் சிறியவர்கள் என்றோ கூறவேண்டியதில்லை" என்றவாறாக அமையும் மேற்கண்ட பாடலில் கருத்தமைவு பரபரப்பான இன்றைய உலகம் அறக்கோட் பாட்டுடன் வாழ்வதற்கு வழிகோலுகிறது.


கணியன் பூங்குன்றனாரால் பாடப்பட்ட இப்பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாடப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இத்தனை சிறப்புடைய அறக்கோட்பாடுகள் சமுதாயத்தில் நிலவியிருக்கிறது என்றால் அதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்பே இவ்வறங்கள் தோன்றி நிலைபெற்றிருக்க வேண்டும். இத்தகு சிறப்புமிக்க மொழியின் ஆளுமையைக் கொண்டு பாடல் படைக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி தோன்றிப் பண்பட்டிருக்க வேண்டும். இத்தகைய பண்பட்ட நிலையே இப்படியொரு பாடல் தோன்றுவதற்கான களத்தை அமைத்துக்க கொடுத்திருக்கிறது. படைப்பாளனுக்கு மொழியை ஆளும் திறன் தேவை. அம்மொழியை ஆளும் திறன் தேவையானால் அவன் அம்மொழியில் மிக்க புலமை பெற்றவனாக இருக்கவேண்டும். அதுமட்டும் போதாது; சமகாலச் சூழலை அறிந்துகொண்டு அது எக்காலத்திற்கும் பயன்படும் வண்ணம் கருத்தமைவுகளை அமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். இத்தனை வரைமுறைகளையும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் பாடல் பெற்று விளங்குகிறது. எந்தவிதமான சுவை ஊட்டும் தன்மைக்கும் இடம் கொடுக்காமல் உள்ளதை உள்ளவாறே எடுத்துக் கூறும் அறமுறையில் அமைந்து சிறக்கிறது. 


அறிவியல் முன்னேற்றம், தொழில் நுட்ப வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை முறையில் புதுமைகள் எனச் சமுதாயம் எவ்வளவு மாற்றங்களைச் சந்தித்தாலும் அறக்கோட்பாடுகள் மட்டும் எக்காலத்திலும் மாற்றம் அடைவதில்லை. பழைய எடுத்துக்காட்டுகள் கைவிடப்பட்டுப் புதிய எடுத்துக்காட்டுகளால் அறம் கூறப்படும் புறநானூற்றுப் பாடலான 'யாதும் ஊரே' என்பது, மக்கள் தங்களிடையே உள்ள வேறுபாடுகளை, உயர்வுதாழ்வு நிலைகளை, பொறாமை உணர்ச்சிகளை, வெறுப்பு உணர்வுகளை மறந்து ஒற்றுமையாக இருப்பதற்குச் சிறந்த வழிகாட்டுதலாக அமைகிறது. ஏறக்குறைய இருபது நூற்றாண்டுகளுக்குமுன் பிறந்த இப்பாடல் அதற்குமுன் பிறந்த செந்தமிழ் பெற்றெடுத்ததாகும். அறக்கோட்பாடுகள் நிறைந்த செந்தமிழை நாம் போற்றிக் காக்க வேண்டியது நம் கடமை. செம்மொழி என்றால் மொழி வளர்ந்துவிடாது. அதற்கு நாம் பல மொழிகளைக் கற்று நம் அன்னைத் தமிழை உலக அரங்கில் பரவும் வகை செய்யவேண்டும்.


முனைவர் கதி. முருகேசன்

1 கருத்துகள்

  1. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" நமக்கு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு நாமே காரணம்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை