அண்மை

இந்திய மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் கடிதம்

 

ரவீந்திரநாத் தாகூரின் கடிதம்

சிலாயிதக், 9 ஆகஸ்ட் 1894


ஆறு ஒரேயடியாகக் கரை தளும்ப நிரம்பி இருக்கிறது. எதிர்க் கரையே தென்படவில்லை. ஓரோரிடத்தில் சுழல்களாகப் பொங்குகிறது. மீண்டும் ஓரோரிடத்தில் துள்ளி எழும் வெள்ளத்தைத் தன் இருகரங்களாலும் அடக்கி, அமுக்கிச் சமமாகப் பரவச் செய்தவாறு ஓடுகிறது. இறந்துபோன ஒரு சின்னஞ்சிறு பறவை, ஆற்றுவெள்ளத்தில் மிதந்து வருவதை இன்று கண்டேன். அதனுடைய சாவின் வரலாறு மிகவும் நன்றாகப் புரிந்துவிட்டது. 


எங்கேயோ ஓர் ஊரின் எல்லையில் ஒரு தோப்பின் மாமரக் கிளையில் அதன் கூடு இருந்தது. இருட்டும் வேளையில் அது அதன் கூட்டுக்குத் திரும்பித் தன் துணையுடன் மிருதுவான சிறகின் வெம்மையில் தானும் தன் சிறகுகளை விரித்துக்கொண்டு உடல் சோர்ந்து உறங்கியது. திடீரென்று இரவில் 'பத்மா' (கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி) சற்று ஒருபுறமாகப் புரண்டாள். அவ்வளவுதான்! மரத்தின் கீழிருந்த மண் சரிந்து விழுந்தது. கூட்டை விட்டுச் சிதறிவிழுந்த பறவை ஒருகணம் கண் விழித்தது. அதன் பிறகு கண் விழிக்க வேண்டிய அவசியமே அதற்கு இராமல் போய்விட்டது. 


நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, எல்லாவற்றையும் விழுங்கவல்ல இந்த மாபெரும் இயற்கையே சிறந்து விளங்குகிறது. பட்டணத்திலோ, மனித சமுதாயம்தான் மிகவும் முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது. அங்கே மனிதனுடைய கொடூரமான தன்மை வெளிப்படுகிறது. தன் சுகதுக்கத்திற்கு முன் மற்ற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றி மனிதன் எண்ணுவதுகூட இல்லை. 


ஐரோப்பாவிலும் மனிதனுக்குத்தான் முக்கியமான இடம். அவனுடைய வழியோ மிகச் சிக்கலானது. அவர்கள் மற்ற பிராணிகளைச் சாதாரணமான உயிர்களென்றே நினைத்து விடுகிறார்கள். பாரத நாட்டினர், மனிதன் விலங்காக மாறுவதையோ, விலங்கு மனிதனாக மாறுவதையோ பற்றி எதுவும் தவறுதலாக எண்ணுவது இல்லை.


அதனால்தான் நமது சாத்திரங்கள் எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதை, நடக்கமுடியாத ஓர் அதிசயம் என்று விட்டுவிடவில்லை. 


நாட்டுப்புறங்களில் இயற்கையோடு ஒன்றி உடனுக்குடன் இணைந்து பழகும்போது என் உள்ளத்தினுள் பாரத நாட்டின் இயல்பு தலைதூக்குகிறது. ஒரு பறவையின் சின்னஞ்சிறு இதயத்தினுள்ளும் வாழ்க்கையின் களிப்பு எத்துணை அதிகமாக இருக்கும் என்பது பற்றி சிந்திக்காமல் இருக்க என்னால் முடிவதில்லை.


ரவீந்திரநாத் தாகூர்

2 கருத்துகள்

புதியது பழையவை