அண்மை

தலைப்பிரசவம் - சிறுகதை

 

தலைப்பிரசவம்

வரும் முப்பதாம் தேதி சித்ராவின் தலைப்பிரசவத்துக்கு தேதி குறித்து  கொடுத்துவிட்டார், பிரபல மகப்பேறு மருத்துவர் ரேணுகா தேவி.


ரேணுகா தேவி நர்ஸிங் ஹோமில் கட்டணம் அதிகம்தான். ஆனால் தாய்க்கும், பிறக்கப் போகும்  பிள்ளைக்கும் உயிருக்கு உத்தரவாதம் உண்டு. பிரசவத்துக்கு அட்மிட் ஆகி ஒரு உயிர் கூட  இதுவரை போனதில்லை. அதனாலேயே அவர் ஃபீஸ் ஏறிக்கொண்டே போகிறது.


சித்ராவின் நாத்தனாருக்கு இங்குதான் பிள்ளை பிறந்தது. அப்போதே ஒரு லட்ச ரூபாய் வாங்கி கொண்டார் ரேணுகாதேவி.


இன்னும் பத்து நாளில் பிள்ளை பெறப்போகும் நிறைமாத கர்ப்பினி சித்ராவுக்கோ நிம்மதி இல்லை. காரணம் பிரசவ செலவை யார் செய்வது? என்பதில் மாமியார் உருவாக்கி உள்ள ஒரு புதிய  பிரச்சனைதான். தலைப்பிரசவம் பெண் வீட்டு செலவு என்பது சித்ராவுக்கு தெரியும். ஆனால் இவர்கள் இழுத்துவிடும் செலவை செய்ய அவள் அப்பாவால் இப்போது முடியாது.


"ஏய் சித்ரா! உங்க அப்பாகிட்ட போன்ல சொல்லிட்டியா? பிரசவத்துக்கு ஒரு லட்ச ரூபாயாவது தேவைப்படுமே!" என்றாள் மாமியார் பார்வதி.


"அத்தே, நேத்தே போன்ல  சொல்லிவிட்டேன். இன்னைக்கு நேர்ல வந்து பார்க்கிறாங்கலாம்."


"அந்த இரண்டு பவுன் மாதிரி ஏமாத்திடப் போறாரு"


"இரண்டு பவுன யாரும் ஏமாத்தல. நெலம சரியாயில்ல. யாரையும் எங்க அப்பா ஏமாத்தாது"


"இருபது பவுன் பேசி வச்சிருந்தேன் எம்புள்ளக்கு. நீ எடையில வந்து அவன மயக்கிப்புட்ட. பண்ணெண்டு பவுன் பேசுன, உன் அப்பன், இரண்டு பவுன் இன்னும் போடுறாரு. இதுல புள்ள பொறந்தா, பேர் வைக்கும் போது வெறும் கையோடுதான் நிக்கப் போறாரு. என் தலையெழுத்து! உன்னை சொல்லிக் குத்தமில்ல. என் புள்ளக்கு போனிச்சு பாரு புத்தி! அத சொல்லனும்" தலையில் அடித்துக் கொண்டாள்.


வயிற்றிலும் சுமந்து கொண்டு, மாமியாரின் இழிவான பேச்சையும் கேட்டுக் கொண்டு, கண்ணை கைகளால் பொத்திக் கொண்டு ஊமையாய் அழுதாள் சித்ரா.


மாலையில் சித்ராவின் அப்பா சிவானந்தம் பூ, பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார். சித்ரா தந்தையை அன்புடன் வரவேற்றாள்.


"வணக்கம் சம்பந்தியம்மா, என் மேல கொஞ்சம் கோபமாக இருப்பீங்கன்னு எனக்கு தெரியும். குறுவ சரியில்ல, சம்பாவுல  கொஞ்சம் கெடச்சாலும் முந்துன கடன அடைக்கவே சரியா போச்சு. பருத்தி கை கொடுக்கும்னு பார்த்தா, காய் வெடிச்சு வற்ற நேரத்துல மழை பேஞ்சு கெடுத்துடுச்சு. எப்படியோ தோது செஞ்சு நாற்பதாயிரம் கொண்டு வந்திருக்கேன். வாங்கிகிட்டு நல்லபடியா முடிச்சுக் கொடுங்க" என்று மிகவும் தயவாக பேசினார்.


கிராமத்தில் அதிகாரம் செலுத்தி பேசும் அப்பா தனக்காக கூனிக்குறுகி பேசுவதை பார்த்து கண்கலங்கினாள் சித்ரா.


"நாற்பது ஆயிரத்தை வச்சுக்கிட்டு நாக்கு வழிக்க சொல்றீங்களா" தீயாக சுடும் வார்த்தைகளை வீசினாள் சித்ராவின் மாமியார்.


"நான் வளகாப்பு போட்ட உடனே பொண்ண அழைச்சிட்டு போறேன், பிரசவத்துக்கு பிறகு நல்லபடியா கொண்டு வந்து விடறேன்னு சொன்னேன். வீட்டு வேலைய யார் செய்வான்னு நீங்கதான் அனுப்பல. எங்க ஊர்லேயும் பெரிய பெரிய ஆஸ்பத்திரியெல்லாம் இருக்கு. கிங் ஆஸ்பிடல் மேனேஜர் என்னோட கூட படிச்சவன்தான். அங்கே வச்சு பார்த்தா, நான் முன்ன பின்ன பணம் கொடுத்துக்குவேன். இந்த ஊர்ல நான் என்ன பண்ணுவேன்?. முதலையா இருந்தாலும் தண்ணீல தானம்மா பலம்?


"இதுக்கு மேல பேச ஒண்ணுமில்ல. நாலு நாள் டயம் தர்றேன். மிச்சக் காச கொண்டுவந்து கொடுங்க. இல்லேன்னா ஒங்க பொண்ண ஒங்க வீட்டிலேயே வச்சுக்குங்க" என்று கறாராக சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள், பார்வதி.


"கவலைபடாதே அம்மா அப்பா எப்படியும் வந்துடுவேன்"  என்று சித்ராவின் தலையை தொட்டு ஆறுதல் கூறி சென்றார், சிவானந்தம்.


மாமியார்தான் கொடுமைக்காரி. சித்ராவின் கணவன் ஜெகன் அப்படி அல்ல. சித்ராவின் மீது அதிக அன்புள்ளவன். வேலை முடிந்து மாலை வருவான்.


இரவு அவனது அறைக்கு சென்றதும், தேம்பி தேம்பி அழுதாள் சித்ரா. என்ன நடந்திருக்கும் என அவனால் ஊகிக்கமுடிந்தது. நாள் முழுதும் நடந்ததை சொன்னாள் சித்ரா.


"எவ்வளவு காலத்துக்கு அம்மா, இருக்கப் போறாங்க?. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. நான் வேணும்னா அம்மாவுக்கு தெரியாமல் ஐம்பது ஆயிரம் தருகிறேன். அதை உன் அப்பாவிடம் கொடுத்து, அம்மா கேட்டபடி கொடுக்கச் சொல்" என்றான். கணவனின் யோசனையை ஏற்க அவளுடைய தன்மானம் இடம் கொடுக்கவில்லை.


இருந்தாலும் கணவனின் ஆதரவான வார்த்தைகளால் நிம்மதி அடைந்த சித்ரா, அவனை இறுக அணைத்து கொண்டு படுத்து உறங்கினாள்.


ஜெகன் சித்ராவை திருமணம் செய்ததே ஒரு வினோதமான கதை. டாக்டர் சீட்டு எதிர்பார்த்து கிடைகாகாமல் போகவே  பிவிஎஸ்ஸி படித்து, கால்நடை டாக்டரானவன் ஜெகன். தஞ்சாவூர் சொந்த ஊர் என்றாலும் முதலில் அவனுக்கு வேலை கிடைத்தது திருவாரூரில்தான்.


மாட்டை கிடையில் விட்டும், சினை ஆகாத மாடுகளுக்கு, சினை ஊசி கால்நடை ஆஸ்பத்திரியில்தான் போடுவார்கள். அப்படி ஒரு நாள் தங்கள் பசு மாட்டுக்கு சினை ஊசி போடவந்தார்கள், சிவானந்தமும் அவர் மகள் சித்ராவும். அவர்கள் வீட்டு மாடு ஊசி போட விடாமல், முரண்டு பிடித்தது. காளை மாடு போல முரட்டுத்தனமாக பாய்ந்தது. மாட்டை பிடிக்கவே, ஆஸ்பத்திரி ஊழியர்கள் அஞ்சினார்கள். ஜெகனும் புதிதாக வந்த டாக்டர் என்பதால் என்ன செய்வதென தெரியாமல் திணறினான்.


அப்போதுதான் ஒரு அதிசயம் நடந்தது. சித்ரா தங்கள் மாட்டுக்கு முன்னே வந்து நின்றாள். "ஏய் செல்லம்மா, பெரியவங்க சொன்னா கேட்க மாட்டியா இங்கே வா" என்றாள். அவள் காட்டிய திசையில் மாடு வந்து நின்றது. "இந்தப் பக்கம் திரும்பு" என்றாள். மாடு திரும்பியது. "இப்ப போடுங்க ஊசிய" என்றாள். இரண்டு நிமிடத்தில் எல்லா வேலையும் முடிந்து விட்டது. திகைத்து போய் சித்ராவையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெகன்.


சித்ரா மீது இனம்புரியாத ஈர்ப்பு  ஏற்பட்டுவிட்டது ஜெகனுக்கு. சித்ராவின் அந்த ஆளுமையான, அழகான முகம் அவனை, என்னவோ செய்தது. சித்ராவை பற்றி,  விசாரித்த போது தூரத்து சொந்தமாக வேறு இருந்தது.


ஜெகன் அம்மாவிடம் சொல்லி, சித்ராவை பெண் கேட்க சொன்னான். பார்வதியோ, தன் தம்பி பொண்ணுக்கு ஜெகனை முடிக்கலாம் என ஏற்கனவே திட்டமிட்டு இருந்தாள்.  இருபது பவுன் வரை போட வேண்டும் என கோவில் திருவிழாவுக்கு வந்த போதே பேசி வைத்திருந்தாள். இந்த பெண் வேண்டாம் என எவ்வளவோ ஜெகனிடம் பார்வதி  சொல்லிபார்த்தாள். ஜெகன் பிடிவாதமாக ஒற்றைக் காலில் நின்றான். மகனின் விருப்பத்தை மீறி பார்வதியால் ஒன்றும் பேச முடியவில்லை.


வாயில்லா ஜீவனுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் என்பதால் ஜெகனை சிவானந்தந்துக்கு பிடித்துவிட்டது. இருபது பவுன் கேட்டு பிடிவாதம் பிடித்தாள் பார்வதி. பத்துக்கு மேல் இயலாது என்றார் சிவானந்தம். சம்மந்தம் கைவிட்டு போய்விடுமோ என்ற சூழ்நிலையில் மேலும் இரண்டு பவுனுக்கு ஒப்புக்கொண்டு, இரண்டு பவுனை ஒரு வருடத்துக்குள் போடுவதாக ஒப்புக்கொண்டார். இப்படி பார்வதிக்கு பிடிக்காமலேயே வந்து சேர்ந்தவள்தான் சித்ரா.


தனக்காக பணம் தயார் செய்ய, யார் யார் காலில் விழுகிறாரோ என தன் தந்தையை பற்றி  நினைக்க நினைக்க  சித்ராவுக்கு வேதனையாக இருந்தது. தனக்கு மனசு சரியில்லாத போதெல்லாம் தனது ஊர் தோழி ரேவதியிடம்தான் மனம்விட்டு பேசுவாள் சித்ரா. அவள் தஞ்சையில்தான் நர்ஸாக இருக்கிறாள். அன்றும் நீண்ட நேரம் அவளோடு பேசி தன் கஷ்ட நிலையை பேசிக்கொண்டு இருந்தாள் சித்ரா.


மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை, "அத்தே குழந்தை நல்லபடியாக பொறக்கனும்னு மகமாயி கோவில் வரை போய் வேண்டிட்டு வரேன்" என்று மாமியாரிடம் கூறினாள் சித்ரா. அவள் அதற்கு போ என்றும் சொல்லவில்லை. போக வேண்டாம் என்றும் சொல்லவில்லை. வெள்ளிக்கிழமைகளில் சித்ரா கோவிலுக்கு போவது வழக்கம்தான்.


கோவிலுக்கு போன சித்ரா நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பார்வதிக்கு பகீர் என்றது. பக்கத்து வீட்டு பையனை விட்டு கோவிலில் பார்த்து வர அனுப்பிளாள். கோவிலில் சித்ரா இல்லை.


ஜெகனுக்கு போன் செய்யலாம் என செல்லை எடுத்த போது போன் ரிங் அடித்தது.


"ஹலோ டாக்டர் ஜெகன் வீடா?"


"ஆமாம்" என்றாள் பதட்டத்துடன் பார்வதி.


"ஒன்றுமில்லம்மா உங்கள் மருமகள் பிரசவ வலி வந்து கோவில் வாசலில் துடிச்சுகிட்டு இருந்தாங்களாம். யாரோ காரில் அழைச்சுட்டு வந்து எங்க இராஜா மிராசுதார் கவர்மென்ட ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. உடனே சுகப் பிரசவம் ஆயிருச்சி. ஆண் குழந்தை பிறந்திருக்கு. தாயும் பிள்ளையும் நல்லா இருக்காங்க. டாக்டர் ஜெகன் மனைவின்னு கேள்விபட்டதால தனி ரூம் கொடுத்திருக்கோம். ரூம் நெம்பர் 106. உடனே புறப்பட்டு வாங்க."


பார்வதி அதிர்ச்சி அடைந்தாள். "அம்மனை கும்பிட்ட ஒரு மணி நேரத்தில் சுகப்பிரசவமா? அப்படியானால் சித்ரா அந்த அம்மன் அருள் பெற்றவளா? இது தெரியாமல் அவளை எவ்வளவோ தூற்றி பேசிவிட்டோமே. இவ்வளவுக்கும் அவள் இழிவாக ஒரு வார்த்தை என்னை பற்றி அவள் சொன்னதில்லையே! எவ்வளவு பெரிய  பாவம் செய்துவிட்டேன்" என புலம்பிய பார்வதி அவசரமாக ஆஸ்பத்திரி விரைந்தாள்.


மகளின் பிரசவத்துக்காக பணத்துக்கு அலைந்து கொண்டிருந்த சிவானந்தத்திற்கு ரேவதி போன் செய்து நல்லபடியாக பிள்ளை பிறந்த செய்தியை சொன்னாள். ஆனந்தத்தில் திக்குமுக்காடி போனார். உடனடியாக மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சை புறப்பட்டார்.


ஆஸ்பத்திரிக்கு வந்த பார்வதி பிள்ளையைத் தூக்கி கொஞ்சினாள். ஜெகன் சித்ரா அருகில் கட்டிலிலேயே உட்கார்ந்து கிடந்தான். எல்லோருக்கும் மகிழ்ச்சி.


பார்வதியை பார்த்ததும் சிவானந்தம், "சம்மந்தி அந்த இரண்டு பவுனை..." என்று சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் பார்வதி "உங்க பொண்ணுக்கு நீங்க போடப்போறீங்க எப்போது முடியுமோ அப்ப போட்டுக்குங்க." பார்வதியின் மனமாற்றத்தை கண்டு ஆச்சரியத்தில் மகிழ்ந்து போனார் சிவானந்தம்.


இரண்டு நாள் கழித்து நர்ஸ் ரேவதி சித்ராவின் ரூமுக்குள் வந்தாள். அவளை பார்த்ததும் கட்டிலிருந்து எழுந்து அவள் கையில் முத்தமிட்ட சித்ரா "நல்ல நேரத்தில் எனக்கு கோயிலுக்கு வரும் யோசனையை சொன்னாய். கார் வைத்து அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்தும் வந்தாய். உனக்கு தெரிந்த டாக்டர் மூலம் பிரசவ வலி உண்டாக்கும் ஊசியும் போட்டு நல்லபடியாக பிள்ளை பிறக்க உதவினாய். உன்னை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். இரண்டு மணி நேரத்தில் என் குடும்ப பிரச்சனை எல்லாவற்றையும் தீர்த்துவிட்டாய். பெண்பிள்ளை மட்டும் பிறந்திருந்தால் உன் பெயரைத்தான் வைத்திருப்பேன்" என்றாள் சித்ரா.


ஆஸ்பத்திரி வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. எட்டிப்பார்த்தாள் சித்ரா. வாசலில் மருமகளையும் பேரனையும் டிஸ்சார்ஜ் செய்து அழைத்து போக பார்வதி காரோடு வந்திருந்தாள்.


ஜெ மாரிமுத்து

1 கருத்துகள்

  1. மற்றுமொரு நல்ல கதை.. !!


    விதவிதமான கதாபாத்திரங்கள் விதவிதமான சூழ்நிலைகள் விதவிதமான பிரச்சினைகள்.. விதவிதமான தீர்வுகள்.. வாண்டுமாமா மாதிரி இந்த முத்துமாமா சிறுகதை பேழையில் இன்னும் எத்தனை எத்தனை முத்தான கதைகள் முகிழ்த்துக்கிடக்கிறதோ....?!

    பதிலளிநீக்கு
புதியது பழையவை