ஒவ்வொரு நாட்டினதும் காவல் தூண்கள் பத்திரிகையே
ஜனநாயகத்தின் நான்கு பிரதான தூண்கள் என நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஜனநாயக தூண்களில் 4 வது இடத்தில் ஊடகங்கள் வருகின்ற போதிலும், அதற்கு மேலுள்ள 3 தூண்களும் சரியாக செயற்படுகின்றனவா? என்பதைக் கண்காணித்து, அவை தொடர்பான விடயங்களினை மக்களுக்கு அறிவிக்கும் முக்கிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஊடகம் (media) என்பது காவுவது அல்லது கடத்துவது என்று பொருள்படுகின்றது. அவ்வாறான ஊடகங்களில் பத்திரிகை மிகப் பிரதானமானதாகும்.
பத்தரிகை என்பது மனிதர்களுக்கு இடையில் தகவல்களை பரப்புகின்ற வேலையினை செய்கின்றது என்று இலகுவாக கூறலாம். மக்கள் எவ்வாறான விடயங்களில் போதிய அறிவினைப் பெறாமல் காணப்படுகின்றார்களோ அவ்வாறான விடயங்களில் அறிவினை மிகத் தொளிவாக, விரிவாக ஊட்டுபவர்களாகவும், மக்கள் நலத்திட்டங்கள் வருகின்ற வேளைகளில் அவற்றினை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதாகவும், மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளைத் தட்டிக் கேட்பவர்களாகவும், மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பெரும்பாலும் தேர்தல் காலங்களில் மாத்திரமே நேரடிச் சந்திப்புக்கள் இடம்பெறும் அவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்து அவர்களுக்கு இடையிலான ஓர் இணைப்புப் பாலமாகச் செயற்படுதல் மற்றும் தேசிய, சர்வதேச நடப்புக்களை உடனுக்குடன் தெரியப்படுத்துவதும், மக்களுக்கு வேண்டிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுமே பத்திரிகை என்று கூறலாம்.
பத்திரிகை நிறுவனங்கள், அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும், தடைகளுமின்றி உள்ளதை உள்ளபடி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகை சுதந்திரம் எனலாம். ஐக்கிய நாடுகள் சபையால் 2022ஆம் ஆண்டிற்கான தொனிப்பொருளாக 'டிஜிட்டல் முற்றுகையின் கீழ் பத்திரிகை' என்பது அமைகின்றது. உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும், மனித உரிமைகள் சாசனம், பகுதி 19இல் இடம் பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும், ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம் பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே 'பத்திரிகை சுதந்திர சாசனம்' முன்வைக்கப்பட்டது. இந்த 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட 'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டு சுதந்திரத்திற்கானதும், ஊடக சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப்பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
பத்திரிகைகளின் பிரதான பணி என்பது செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளைச் சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கியதாகும். பத்திரிகைகள் நாளிதழாகவும், வார இதழாகவும், மாத இதழாவும், ஆண்டிதழாகவும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இந்நாளில் ஊடக சுதந்திரத்திற்காகப் பங்களிப்புச் செய்யும் ஒருவருக்கு ஆண்டு தோறும் யுனெஸ்கோ நிறுவனத்தின் யுனெஸ் கோஃகிலெர்மோ கானோ உலகப் பத்திரிகை சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.
இதன்படி பத்திரிகை சுதந்திரம் என்பதனை நோக்குமிடத்து தான் சேகரிக்கச் செல்கின்ற செய்தியினை எவ்வித தடைகளும் இன்றி, தான் பெற்றுக் கொள்ள சென்ற செய்தியினை உண்மை நிலை மாறாது அதன்படியே பெற்றுக் கொள்வதனைக் குறிக்கின்றது. மேலும் குறிப்பிட்ட விடயங்கள் சம்மந்தமாக தகவல்களை பெறுகின்ற வேளையில் எவ்விதமான இடையூறுகளையும் எதிர் கொள்ளாது செய்திகளை திரிபுபடுத்தாமல் அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களை உண்மைத் தகவல்கள் எதுவாயினும் அதனை அவ்வாறே வழங்குவதனையே பத்திரிகை சுதந்திரம் என குறிப்பிட முடியும். சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கு சம்பவ இடங்களுக்குச் சென்று நிலவரத்தை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் உண்மைகளை அறிவதே பத்திரிகை சுதந்திரமாகும். ஊடகவியலாளர்களின் உயிருக்கு எந்த விலை வந்தாலும், வன்செயல் நாட்டின் எந்த இடத்தில் நடந்தாலும் அங்கு சென்று உண்மையை வெளிக்கொணர்ந்து வரும் நிலையினை பத்திரிகை சுதந்திரம் எனலாம். இதன்படி பத்திரிகை சுதந்திரத்தின் பண்புகளைப் பற்றி பார்ப்போமானால்,
• ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்.
• ஊடகவியலாளர்கள் பிறரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடக்காதிருத்தல்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி பொது நன்மைக்காக செயற்படல்.
• விரும்பிய தகவல்களை எந்த தடையும் இன்றி பெறக்கூடியதாக இருத்தல்.
• உண்மை மற்றும் துல்லியமான செய்திகளை வெளியிடல்.
• சுதந்திரமாக கருத்து தெரிவிக்கின்ற உரிமை காணப்படல்.
• சமூக கலாசாரங்களை பேணும் வகையில் செயற்படல்.
• ஊடகத்தின் சேவையை சிவில் சமூகம் அந்த நாட்டு அரசாங்கங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொண்டு அதற்கான ஆதரவினை வழங்குதல்.
• ஊடகவியலாளர்களின் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றல்.
சர்வாதிகார நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் பற்றிக் கூறுவதானால் பத்திரிகை சுதந்திரம் என்பதனை உதட்டினால் மட்டும் கூறிக்கொண்டு உள்ளதனால் ஒரு நாட்டின் தலைவரும், அமைச்சர்களும் அவர்களது அபிவிருத்தி செயற்பாடுகளை புகழ்ந்து பாடுவதுதான் பத்திரிகை என்று நினைக்கின்றார்கள். பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக செயற்படுகின்ற நாடுகளை சர்வாதிகார நாடுகள் என்று கூறலாம். ஜனநாயக நாடுகள் எனும் பெயரில் இருந்துகொண்டு சர்வாதிகாரத்தினை ஊடகத்துறையின் மீது செலுத்துகின்றமையினையும் நாம் காணலாம். நடுநிலையான கருத்துக்களையும், ஒரு நாட்டில் வாழும் இன்னுமொரு இனம்பட்ட அவலங்களையும், அவ்வினம் சார்ந்த பத்திரிகையாளர்கள் வெளிக்கொண்டு வரும் போது அதனை தடுப்பது பத்திரிகை சுதந்திரம் அல்ல.
பத்திரிகைகள் மீதான கட்டுப்பாடுகள் அடக்கு முறைகள் அரசாங்கத்தினதும், ஆட்சியாளர்களினதும் வெறுப்புணர்வையே காட்டுகின்றன. இது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தலின் வெளிப்பாடே ஆகும். ஊடகங்கள் அரசாங்கத்திற்கெதிரான செயற்பாட்டினை கொண்டவையல்ல. பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். ஜனநாயக நெறிமுறையினை மீறும் போதும், பொது மக்களினுடைய நன்மைளுக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போதும், அவற்றை சுட்டிக்காட்டி நேர்வழியில் அரசாங்கங்களை பயணிக்க செய்யும் பாரிய பொறுப்பையே ஊடகங்கள் கொண்டிருக்கின்றன. இதனால்தான் பத்திரிகைகள் காவல் தூண்கள் என வர்ணிக்கப்படுகின்றன. அந்தவகையில் நல்லாட்சி வளர்வதற்கும், நல்லாட்சி தொடர்வதற்கும்; பத்திரிகைகள் உறுதுணையாக அமைகின்றன.
உலகத்தில் பத்திரிகை சுதந்திர தரவரிசை பட்டியலில் 180 நாடுகள் உள்ளடக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் பத்திரிகை சுதந்திர குறிகாட்டி வரிசை பட்டியல் வெளியிடப்படும். அந்தவகையில் கடந்த வருடம் (2021) உலக ஊடக சுதந்திர குறிகாட்டி பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முறையே நோர்வே, பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் இடம்பிடித்திருக்கின்றது. அதேபோன்று இறுதி மூன்று இடங்களில் முறையே துர்க்மெனிஸ்தான், வடகொரியா, எரித்திரியா, போன்ற நாடுகள் காணப்படுகின்றது. எமது இலங்கை நாட்டின் ஊடக சுதந்திர நிலை பற்றி பார்க்கும் போது 2021 ஊடக சுதந்திர குறிகாட்டி பட்டியலில் 127 வது இடத்தினைப் பெற்றுள்ளது. எமது நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தில் 2015 ஆம் ஆண்டு 165 வது இடத்தினையும், 2016, 2017 ஆம் ஆண்டுகளில் 141 வது இடத்தினையும், 2018 ஆம் ஆண்டு 131 வது இடத்தினையும், 2019 ஆம் ஆண்டு 126 வது இடத்தினையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனால் 2020 மற்றும் 2021 வருடம் ஒரு படி பின்நோக்கி 127 வது இடத்தில் காணப்படுகின்றது.
1973 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை பேரவை ஆரம்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது பத்திரிகை பதிவு செய்தல் முக்கிய விடயமாக அமைந்தததோடு பத்திரிகைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடகங்களுக்கு மிரட்டலும், தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரமாகும். பத்திரிகை ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகின்றது. இலங்கையை பொருத்தவரை சுதந்திரமாக செய்திகள் சேகரிப்பதற்கும் சம்பவ இடங்களுக்குச் சென்று உண்மை நிலவரத்தை ஆய்வு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்களிடம் உண்மைகளைக் கண்டறியக் கூடிய ஒரு சூழல் காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகளின் செய்திகளின் உண்மைத் தன்மை அதிகமாகப் பேணப்படுகின்றது. எவ்வாறாயினும் இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் என்பது பக்கச்சார்பின்றிய தன்மையில் காணப்படுகின்றமை முக்கியமான அம்சமாகும். இலங்கையில் அத்துடன் ஆரம்ப காலங்களில் எமது நாட்டில் பத்திரிகை துறையினர் மீது கொலை மிரட்டல், கடத்தல் நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால் தற்போது பத்திரிகையாளர்களுக்கு தனியான இடம் வழங்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்கதாகும்.
எனவே ஜனநாயகத்தின் பண்பு நிலைப்பாட்டில் உணர்ந்த முக்கியமான அந்தஸ்தை பெற்றுள்ள ஊடகமான பத்திரிகைகள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தினையும் போற்றி புகழ வேண்டும் என்பது தவறு. அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சரியானவை என்று மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக பத்திரிகைகள் செயற்பட முடியாது. ஜனநாயகத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பேணிபாதுகாக்கின்ற பணியில் பத்திரிகைகளின் பங்கு இன்றியமையாதது. ஆட்சியாளர்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி ஜனநாயக செந்நெறிகளில் இருந்து நெறிபுரள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிமாகவே இருக்கின்றன. ஜனநாயக இலக்கில் இருந்து வழிதவறி செல்வதற்கு அதிகார அந்தஸ்து, புகழ், பிரபல்யம், செல்வம் என்பன ஊன்றுகோலாக அமைகின்றன. இவற்றின் ஆதிக்கத்தில் இருந்து தப்பி செயற்படுவதற்கு உண்மையயான ஜனநாயக தன்மை கொண்ட ஊடக செயற்பாடுகள் உறுதுணையாக இருக்கின்றன. ஆகவே பத்திரிகை ஊடகமானது அரசிற்கும், ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வழிநடத்தல் காவலர்களாக திகழ்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் மிக்க பத்திரிகை சுதந்திரமாக செயற்பட விடவேண்டியதும், அந்த சுதந்திரத்தினை பாதுகாத்து பேணுவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த பொறுப்பில் இருந்து அரசாங்கம் தவறுமானால் அந்த ஆட்சி நல்லாட்சியாக அமைய முடியாது. அதுமட்டுமல்ல அந்த ஆட்சி உண்மையான ஜனநாயக ஆட்சியாகவும் இருக்க முடியாது
பஞ்சாட்சரம் ஜோன் டிலக்ஷன்
சமூகவியல் மற்றும் மானிடவியல் சிறப்புக்கற்கை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
சிறந்த கட்டுரை
பதிலளிநீக்குஇடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லாமலே கெட்டுவிடுவான் என்பது நம் அய்யனின் வாக்கு. ஊடகங்கள் அந்த பணியைச் செய்வதால்தான் அரசு தவறு செய்ய முடியாமல் தவிக்கிறது.
பதிலளிநீக்குஎனக்கு ஒரு ஆசை இலங்கை மக்கள் எல்லாம் பெற்று இன்புற்று வாழ எங்கள் இந்தியாவோடு ஒரு மாநிலமாக இணைய வேண்டும்.
பதிலளிநீக்குபத்திரிக்கை சுதந்திரம் நாட்டுக்கு முக்கிய தேவைகளில் ஒன்று. தினசரி வாங்க இல்லாத வீடுகள் அறிவு குறைவான வீடுகளாகும். தினசரி தான் அந்த நாளை அழகாக்கும் அறிவாக்கும். இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை
பதிலளிநீக்கு