அண்மை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கட்டுரை

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கட்டுரை

சுற்றுச் சூழலை பாதுகாப்பது நம் கடமை. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்படுகின்றது. 1972 ஆம் ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹேமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற உச்சமாநாட்டில் உலக சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள் மற்றும் அதன் பிரயோகம் பற்றி கலைந்துரையாடப்பட்டது. அதன் இறுதியில் பூமியையும் அதன் சுற்றுவட்டப்பகுதி மற்றும் இயற்கையைப் பாதுகாத்திடும் வகையில் ஜூன் மாதம் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் நோக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொது மக்களிடம் ஏற்படுத்தி, அவர்கள் பங்களிப்புடன் வளமான சுற்றுச்சூழலை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதாகும்.


எம்மைச்சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்ற கூறுகளின் தொகுதியே சுற்றுச்சூழல் அல்லது சூழல் அல்லது சுற்றுப்புறம் என இலகுவாகக் கூறலாம். மனிதனைச் சுற்றியுள்ள இயற்கையின் மொத்த அம்சம் சுற்றுச்சூழலாகும். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு சிறந்த கோளான புவி மண்டலம் நிலம், நீர், வளி, மற்றும் உயிரினம் எனும் நான்கு பிரதான தொகுதிகளை உள்ளடக்கியது. பிரபஞ்சத்தில் அனைத்திற்கும் முதன்மையானவன் மனிதன். இயற்கையின் மேம்பட்ட உயிரியாக விளங்கும் மனிதனின், அனைத்து செயற்பாடுகளும் சுற்றுச்சூழலை மையமாக கொண்டுள்ளது. மனிதனின் வாழ்க்கைக்கு மூலாதாரமாக விளங்கும் அவனைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற சடப்பொருட்களை உள்ளடக்கிய இன்றியமையாத விடயம் சுற்றுச்சூழலாகும்.


சுற்றுச்சூழல் பெரும்பாலும் இயற்கைச் சூழல், செயற்கைச் சூழல் என இரண்டு விதமாக நோக்கப்படுகின்றது. 

ஆரம்ப காலம் முதல் இன்றுவரை மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்பு தவிர்க்கமுடியாதது. ஆரம்ப காலங்களில் அறிவியல் விருத்தியானது மிக பின்தங்கிய நிலையில் காணப்பட்டதால் சூழல் மனிதனை கட்டுப்படுத்துகின்ற பாரிய சக்தியாக இருந்தது. உதாரணமாக மழை, புயல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதற்கு அடுத்து மனிதன் சூழலை கட்டுப்படுத்தினான். உதாரணமாக மழை பொழிகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இலைகுழைகளைப் பயன்படுத்தி கூடாரங்களை அமைத்துக் கொண்டான். இதற்கு பிற்பட்ட காலங்களில் மனிதன் சூழலை கட்டுப்படுத்தும் அதேவேளை சூழல் மனிதனைக் கட்டுப்படுத்தியது. மனிதன் அறிவியல், தொழிநுட்ப திறன் போன்றவற்றில் உச்சக்கட்டத்தை அடைந்த போதிலும், இயற்கைச் சூழலுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். உதாரணமாக சுனாமி, எரிமலைவெடிப்பு, சூறாவளி போன்ற இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்கின்றான். சுற்றுச்சூழலை மாற்றியமைக்கும் ஒரு சிற்பி மனிதனாவான். தன்னுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு சூழலை பயன்படுத்துகிறான். மிகையான தேவைகளின் அதிகரிப்பால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றது.


சுற்றுச்சூழல் பாதிப்பு கைத்தொழில் புரட்சியின் பின்னரே அதிகளவில் ஏற்படத்தொடங்கியது. சனத்தொகை அதிகரிக்க தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தொடங்கியது. இவ்வாறான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சுற்றுச்சூழலலை மனிதன் பன்மடங்கு பயன்படுத்தத் தொடங்கினான். மிகையான வளப்பயன்பாடு, தொழிநுட்ப சாதனங்களின் வருகை, தொழிநுட்ப கண்டுபிடிப்புக்கள், மனித அறிவு விருத்தி, தொழிற்சாலை கழிவுகளை முறையாக அகற்றாமை, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களின் பாவனை, மலைகளையும், காடுகளையும் அழித்தல், வாகன இரைச்சல், வாகனப்புகை, பீடி, சிகரெட் புகை, இரசாயண உரம், பூச்சுக் கொல்லி மருந்துகளின் பாவனை, உயிர்ப்பல்வகைமை அழிப்பு போன்ற பல காரணங்களினால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றது.


வளி மாசடைதல் 


தொழிற்சாலைகளில் வாயுக்களின் வெளியேற்றம், வாகனப்புகை, டயர்களை எரித்தல் போன்ற செயற்பாடு வளி மண்டலத்தை பாதிக்கின்றது. மனிதன் சுவாசிக்கும் காற்றில் இவ்வாறான புகைகளின் வெயியேற்றம் சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமில்லாது ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. மனிதன் பீடி, சிகரெட் போன்ற கொடிய தற்கொலைக்கு ஈடான விடயத்தை உள்ளே இழுத்து அதை வெளியிடுவதால் அருகில் இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், சுவாச உறுப்புக்களில் கோளாறுகள் மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றது.


நிலம் மாசடைதல் 


தொழிற்சாலை கழிவுகள், இரசாயண திரவங்கள் அசுத்தமுள்ள நிலையிலும், விசத்தன்மை கொண்ட நிலையிலும் மண்ணில் செலுத்தப்படுவதால் மண்ணின் மகத்துவம் கெட்டு விடுகின்றது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களும், பொலித்தீன் பைகளும் மண்ணில் புதையுண்டு போவதால் விளைநிலங்கள் மாசுபட்டு வீரியம்மிக்க செடி, கொடி தாவரங்களை வளரவிடாமல் தடுக்கின்றது. அத்தோடு மண்வாழ் உயிரிகளும் அழிவடைகின்றது.


வளிமண்டலம் மாசடைதல்


இன்றைய நவீன யுகத்தில் செய்மதிகள், விண்கமெராக்கள், அதிகளவிலான சமிஞ்ஞை தரும் பொருட்கள் அவ்வப்போது வாண்வெளியில் ஏவப்படுகின்றது.  இவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயலிழந்து விடுகின்றது. மேலும் இந்த விண்கலன்கள் வாண்வெளியில் இப்படியே அநாதையாக மிதந்து வருவதால் புதிய செயற்கைக் கோள்களுக்கு இடையூறு ஏற்படுத்தவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த விண்வெளி குப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும்போது இவை நிலத்தைநோக்கி இரசாயண குண்டுகள் போல வேகமாக வந்து வெடிக்கின்றன. இவைகளின் வெடிப்புக்களினால் இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் இங்கு கதிரியாக்கம் வெளிப்பட்டு மக்களின் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.


நீர் மாசடைதல்


மனிதனின் அத்தியாவசிய நீர்த்தேவையை கிணறு, ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் நிவர்த்தி செய்கின்றன. தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அதிகமான அளவில் நீர்நிலைகளில் நேரடியாக் கலப்பதால் நீர் மாசுபடுவதுடன் அந்த நீரை பருகுவதால் உடல் நோய்களும், மனித பயன்பாட்டிற்கு உபயோகிப்பதால் தோல் நோய்களும் ஏற்படுகின்றது. இவை மனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமன்றி கடல், சமுத்திரம் போன்றவற்றில் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை வீசுவதனால் அவை மாசுபடுவதோடு, இங்கு வாழ்கின்ற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றது.


புவி வெப்பமடைதல்


தாவரங்கள், காடுகள் போன்றவற்றை மனிதன் அழிக்கின்றான். புவி வெப்பமடைதலை தற்ப வெப்பநிலை மாறுபடுவதை மையமாக வைத்து கூறமுடியும். அதாவது புவி நிலப்பரப்பில் நிலம், நீர், வளி ஆகியன மாசுபடுவதால் புவியின் தற்ப வெப்பத்தில் குளறுபடியை ஏற்படுத்தி, அந்தாட்டிக்கா போன்ற பனிப்பிரதேசங்களை உருகச்செய்கிறது. இதனால் கடல், சீற்றங்கள் ஏற்படுவது மட்டுமின்றி சிறிய குட்டித் தீவுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. மேலும் உலக வெப்பமயமாதல் போன்ற பேரழிவுகளுக்கு புவி வெப்பமடைதல் ஒரு வகையில் காரணமாக அமைந்து விடுகின்றது. 


மனித இனம் கூட்டாக வாழும் இயல்புடையது. அதாவது மனிதன் தனது தேவைகளான பாதுகாப்பு பொருளாதார மேம்பாடு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை விருத்தி செய்து கொள்ள குடும்பம், சமூதாயம், சமூகம் எனும் அடிப்படையில் இணைந்து வாழ்கின்றான். அதேபோல மனிதன் தன்னுடைய அடிப்படைத்தேவைகளான உணவு, உடை மற்றும் உறையுள் என்பவற்றை பெற்றுக்கொள்ள சூழலுடனும் நெருங்கிய தொடர்பினை வைத்துள்ளான். இதற்கு உதாரணமாக மரங்களின் துணையோடு வீடு மற்றும் தளபாடம் அமைத்தல், கிழங்குகள், பழங்கள் என்பவற்றை உண்ணுதல், செம்மறியாடுகள் மற்றும் பட்டுப்புச்சி என்பவற்றின் மூலம் பெறப்படும் பொருட்களைக்கொண்டு ஆடைகளை நெய்து அணிதல் என்பவற்றை குறிப்பிடலாம். இவ்வாறான இடைத்தொடர்புகள் மூலமும், நுகர்வுகள் மூலமும் ஏற்படும் தீய விளைவுகளை உணர்ந்து செயற்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது மனித சமூகத்தின் கடமையாகும்.


எனவே மனிதனுடைய செயற்பாடுகள் சூழலில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகின்றது. மனிதன் தனது வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்கின்ற விவசாயம் மற்றும் கைத்தொழில் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு பல்வேறு தொழிநுட்பங்களை பயன்படுத்துகின்றான். உதாரணமாக சமுத்திரத்தின் மேல் விவசாயம் செய்தல், இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தி கனிய வளங்களை அகழ்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறான நடவடிக்கைகளால் சுனாமி, எரிமலை வெடிப்பு, வெள்ளம், வரட்சி, அமிலமழைப்பொழிவு, வாகன விபத்து முதலான அனர்த்தங்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு நீண்டகால மற்றும் குறுகிய கால பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. சூழலில் காணப்படும் நிலம், நீர், வளி ஆகிய உயிரற்ற கூறுகள் மனித வாழ்க்கையினை தீர்மானிக்கும் காரணிகளாகும். இவை தமக்குரிய விகிதாசாரம் அல்லது அளவுகளில் சரியாக இருக்கும் போதுதான் மனித வாழ்வு நீடித்து நிலைக்கின்றது. மாறாக இவ் உயிரற்ற கூறுகளின் அளவு மாறுபடும் போது அது மனித வாழ்வை நிலைகுலைக்கின்றது. ஆகவே சுற்றுச்சூழலை பாதுகாத்து நோய்க்காரணிகளின் தொற்றுக்கு ஆளாகாமல், தன்வாழ்நாளை அதிகரித்து மகிழ்வாக வாழ சுற்றுச்சூழல் பற்றிய அவதானம் மற்றும் அறிவு என்பன ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.


பஞ்சாட்சரம் ஜோன் டிலக்ஷன் 

சமூகவியல் மற்றும் மானிடவியல் சிறப்புக்கற்கை 

கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை.

கருத்துரையிடுக

புதியது பழையவை