அன்று பொங்கல் திருநாள்..!
அதிலும் மாட்டுப்பொங்கல் நன்னாள். மூன்றாம் வகுப்பு அரையாண்டு பரீட்சையை தாண்டியிருந்தோம்.. உறவுக்கார பையன்களோடும் அக்கம் பக்கத்து சக சிறார்களோடும் எங்கள் தாத்தாவின் தலைமையில் பசுமாட்டையும் கன்றுகுட்டியையும் ஓட்டிக்கொண்டு அரசமரத்தடி பிள்ளையார் கோயில் குளத்தை வந்தடைந்தோம். மழைக்காலம் வழங்கி.., பனிக்காலம் பத்திரப்படுத்தி வைத்திருந்த..., சில்லென்ற பச்சை தண்ணீர்,, குளத்தின் இடிந்த மேற்படிவரையில் தழும்பத்தழும்ப நின்றிருந்தது..!
எனக்கு நினைவு தெரிந்து திரையரங்கில் நான் பார்த்த முதல்படம் அனகோண்டா..! 'ஏதோ பாம்பு படமாம்..' என்றுகூறி என்னை தூக்கி சென்றார்கள்.. அப்படத்தில் பரிசல் போன்ற படகில் செல்வோரை பெரிய பாம்பு வந்து விழுங்கிவிடுகிற காட்சியை கண்டு நடுங்கிய எனக்கு,, அது முதலே கரும்பச்சை நிறத்தில் குளம் குட்டையை பார்த்தாலே நடுக்கம் வந்துவிடும். அச்சரேகை நாடி நரம்பெல்லாம் ஓடும்.
ஆனால் அன்றையதினம் எனக்கு ஏனோ அந்த குளம் பிடித்திருந்தது.
இளங்காலை பொழுது.. உள்ளூர் குளம்.. உறவுக்கார பிள்ளைகள் உடன்இருக்க.. தாத்தாவின் மேற்பார்வையில் மாட்டை குளிப்பாட்டும் பணியை சாக்காக வைத்து நாங்களும் குளத்தில் குளிக்கப்போகிறோம்..!
தாத்தா மாட்டின் கயிற்றை அதன் கழுத்திலேயே சுற்றிவிட்டு பின்னால் ஒரு தட்டுத்தட்டி தள்ளிவிட,, மாடு குளத்தில் 'பொதக்' என போய்பாய்ந்தது..! கன்னுக்குட்டியை கரையில் பிடித்துக்கொண்டு நாங்கள் மாடு நீந்துகிற ஜோரான அந்த காட்சியை வியப்போடு கண்டுகளித்தோம்..! எடுத்துவந்த வைக்கோல் மற்றும் சோப்புக்கட்டியால் மாட்டை நன்றாக தேய்த்து குளிப்பாட்டி மாட்டுடனே எங்கள் தாத்தாவும் நீந்தி குளித்தார்.
பிறகு அவ்விடம் வந்து சேர்ந்த ஏறத்தாழ பள்ளிக்கூட படிப்பை முடிக்க போகும் ஒல்லியான எங்கள் சித்தப்பாக்கள் இருவரும் நீந்துகிற மாட்டின் முதுகில் ஏறி நின்று "டைவ்"அடித்து வித்தையெல்லாம் காட்டினார்கள்..
சிறுவர்கள் நாங்கள் கரையோரத்திலே.. படிவரைக்குமான குளத்தில் கும்மாளமிட்டுவிட்டு சேற்றையும் காலடியில் கிடைக்கும் சிறுசெங்கல்/உடைந்த பானை ஓட்டின் சில்லையும் ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டும், வீண்ஜம்பம் பேசிக்கொண்டும் கிடந்தோம். தாத்தாவின் கட்டளை ஏற்று சித்தப்பா இருவரும் கன்றுக்குட்டியை குளிப்பாட்ட முயல.. தண்ணீரை அள்ளி தெளித்த கணத்தில் அது வீறுகொண்டு சிலிர்த்து ஓடிப்பாய்ந்து தாய்ப்பசுவை சுற்றி நீந்தியது...! அட.. இதற்கு யார் நீந்த கற்றுதந்தார்கள்..?
பசுவை குளிப்பாட்டி விட்டு தாத்தாவும் சித்தப்பாக்களும் கரையேறிட.. சிறுவர்கள் நாங்கள் மேலே வர மனமின்றி அடம்பிடித்தோம். ஆனால் கரையேறியதும் மாடு தன் வாலினை உயர்த்தியபடி போட்ட சாணமும் கோமியமும் குளத்து கரையோர நீரில் விழ.. அச்சச்சோ!! என அலறியபடி எழுந்தோடி வந்துவிட்டோம்.
தூரத்தில் அந்த குளத்தோராமாக வளர்ந்திருந்த பிள்ளையார் கோயில் அரசமரத்தின் கிளைகளில் ஏறி.. ஒன்றன்பின் ஒன்றாக மனித மந்திகூட்டம் 'சர்க்கஸ் கூடார சாகசங்களை' செய்து வேடிக்கைகாட்டி கொண்டிருந்தது..!
அதையெல்லாம் பார்த்த பிஞ்சு மனதில் நாமும் சற்று வளர்ந்த பிறகு இதுமாதிரி செய்ய முடியுமா..? என்று ஐயம் கலந்த ஆசை எழுந்தது..!
அதன் பிறகும் இரண்டு மூன்று முறை அந்த உள்ளூர் குளத்தில் நீராடியிருக்கிறேன்.. ஆனால் நீந்தியதில்லை..!
கடலோர பகுதி ஊர் என்பதால் அந்த பிராயங்களில் அடிக்கடி கடலுக்கு செல்வோம். பெரும்பாலும் தந்தையோடு..
சங்கு, கிளிஞ்சல், சிப்பிகளை சேகரிப்பதும்.. மணல் கோட்டை/களிமண் கோயில் கட்டுவதும்.. நீர் ஊறும் கரைமணலில் பெயரெழுதி ரசிப்பதும் என விடுமுறை காலபொழுதுகள் ஓடும். தை அமாவாசை, ஆடிஅமாவாசை என இரண்டு நாட்களில் மட்டும் ஊருடன்கூடி ஜே.. ஜே.. என அலைகடலில் தவழ்கிற வாய்ப்பு கிடைக்கும்.. ஏனைய நாட்களில் கால்களை நனைக்க அநுமதி கிடைத்தாலே அது எங்கள் அதிர்ஷ்டம்.! அலைமோதி அணிந்திருந்த கால்சட்டை நனைந்தாலே வீட்டுக்கு வந்து நுழையும்போது அம்மாவிடம் வசைபாட்டு நிச்சயம்.
அந்த வருட முடிவில் சுனாமி பேரழிவு ஏற்பட்டதாலும்.. அடுத்த ஓரிரு ஆண்டுகள்வரை ஊரார் கிளப்பிய வதந்தி பீதிகளாலும் குளத்தையும் கடலையும் டீவியை தவிர்த்து வேறு எதிலும் எங்களை பார்க்கவே விடவில்லை!!
என்றாலும் அந்த சமயங்களில் கார்டூன்களிலும்.. டிஸ்கவரி மாதிரியான சேனல்களிலும் நீருக்கடியில் தெள்ளத் தெளிவான விசித்திர உலகை காட்டும் காட்சியை கண்டு.. நீர்நிலை மீதான காதல் கரைபுரண்டு ஓடியது. அவர்கள் காட்டுவது போலவே கற்பனையில் தண்ணீருக்கு அடியில் வண்ணமயமான உலகை கற்பனை செய்து அதில் உலாவருவேன். சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகி குளத்திலோ கடலிலோ நீந்த வேண்டும் என பேரவா கொண்டிருந்தேன்.
நாட்கள் வேகமாய் உருண்டோடின பிறகு.... ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையில்.. எப்போதும் போல தாயின் தாய்வீடாம் ,,, தாத்தா பாட்டி வீட்டுக்கு போயிருந்தோம். அங்கு வீட்டருகே அருமையான நிழலார்ந்த குளம் உண்டு. நீர்த்துப்போயிருந்த நீச்சல் கனவுகள் மீண்டும் நிழலாட தொடங்கியது. நிழல்கள் விரைவில் நிஜமாகவும் ஆகியது. நான், இளவல், மைத்துனன் ராமு மற்றும் இளைய மைத்துனன் ஜக்கு என நால்வர் கூட்டணி. எங்களுக்கு தலைமை தாங்கி கண்காணித்து பாதுகாக்க,, எங்கள் தாய்மாமாவும் எனதிரு மைத்துனர்களின் தந்தையுமான முத்துமாமா உடன் இருப்பார். பாதுகாப்பிற்கு வந்தவரே எங்களுக்கு பயிற்சியாளராவும் ஆனார்...!
என்னால் நீந்த முடியும் என்பதையும், நீச்சல் அப்படியொன்றும் அரிதான கம்பசித்திர கலையல்ல என்பதையும் நான் உணர்ந்து உத்வேகம் பெற்றதே எங்கள் மாமாவிடமிருந்துதான். நீந்தும் ஆவல் பெருக்கெடுத்து உள்ளூறியது...மாமாவின் மல்லாந்து நீந்தும் மகிமையை கண்டுதான். மழைநீரோட்டத்தில் வாழைமலர் மடல் ஒன்று மிதந்துபோவதுபோல மிக எளிதாக நீந்திஅசத்துவார். அதுவரையில் நீச்சல் என்றால் ,,,
கையையும் காலையும் கண்ணாபின்னாவென்று சுழற்றி.. சுழற்றி.. தலையை இடதும்வலதுமாக திருப்பித்..திருப்பி.. தண்ணீரோடு ஏதோ துவந்தயுத்தம் புரிவது என்றே.. சினிமாவிலும் டிவியிலும் பார்த்து பார்த்து நினைத்து வைத்திருந்தேன். அதனை தவிடு பொடியாக்கி இப்படியும் நீந்தலாம் என்று எனக்கு சொல்லித் தந்து முதலில் செய்துகாட்டியவர் எங்கள் மாமாதான்.
மாமாவின் மைந்தர்களான என் மைத்துனர்கள் இருவருடன் நானும் என் இளவலும் சேர்ந்து பலமணிநேரங்களை அந்த குளத்தில் கோடைவிடுமுறையின் ஒவ்வொரு நாளும் செலவிட்டிருக்கிறோம். 'பாரு எருமைகள் போல ஊறிக்கொண்டு
கிடக்கிறதை..' என்று எங்கள் காதுபட திட்டிவிட்டு போவோரும் உண்டு.., எங்களுக்கு பிறகு குளிக்கவந்து துவைத்து, துணி அலசி, குளித்துமுடித்து... துவட்டிக்கொண்டு எங்களுக்கு முன் திரும்பிபோகும் பலர் ''இன்னும் கிளம்பலையாடா நீங்க..??'' என்று திகைத்தபடி கூறி செல்வதும் உண்டு.. ஒவ்வொரு சம்பவங்களும் அந்த குளம்போலவே பசுமையாக என் நினைவில் தங்கிவிட்டன.
ஆரம்பத்தில் பாசிபடிந்த படியை பிடித்துக்கொண்டு சைக்கிள் மிதிப்பதுபோல கால்களை சுழற்றி 'தம்பட்டம்' போட்டு பயில்வோம்..
மறுநாள் முதல்,,,, யார் அதிகநேரம் மூச்சடக்கி 'தம்'கட்டி நீரில் மூழ்கிக்கிடப்பது என போட்டிவைப்போம்...
அடுத்ததடவை.. தண்ணீரில் தெப்பம் போல மிதந்து காட்டுவது..! இது கிட்டத்தட்ட தியானம் செய்வதைபோன்றது. எதையுமே செய்யாமல் நீர்ப்பரப்பில் மெத்தையில் படுப்பது போல உடலை பரப்பி ஆடாமல் அசையாமல் மல்லாக்க படுத்து விட்டாலே நாம் மூழ்கமாட்டோம்!!! எனினும் இது நன்றாக பழகும் வரையில் எதாவது பிளாஸ்டிக் வாளி, ரப்பர் டியூப், டயர் போன்ற மிதக்கும் பொருள்களை வைத்துக்கொள்வது உறுதுணையாக இருக்கும்.
அதையெல்லாம் விட ..
மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு எதுவெனில்... அது இதுதான்.. உள்நீச்சல்...! ஓரிடத்தில் மூழ்கி நீந்தி,, வேறு ஓர் இடத்தில் வெளிவருவது.. இதிலேயே கண்ணாமூச்சி/ஓடிப்பிடித்து/கபடி/ரிங் பால் கூட விளையாடுவோம்..
திடீரென ஒருமுறை விளையாட்டாக ஒருபடித்துறையிலிருந்து மறுபடித்துறைக்கு போகமுயன்றோம்.. தினசரி நீந்திய பழக்கத்தில் மைத்துனன் எளிதாக மறுகரையை அடைந்தான். என் இளவல் எப்படியோ தட்டுத்தடுமாறி போய்விட்டான்.. எனக்கோ முக்கால்வாசி தாண்டுவதற்குள் பயங்கரமாக மூச்சுஇரைக்க ஆரம்பித்துவிட்டது. திரும்பிவிடவேண்டும் என மனசு துடித்தது. அவசரபட்டுட்டியேடா.. என என் மூளையே என்னை நொந்து கொண்டது. கொஞ்சம் பதட்டம் தான் கொண்டு விட்டேன். இதயம் படுவேகமாக துடித்தது.. கைகால் எதுவும் செயலாற்றாது முற்றும் ஓய்ந்துவிட்டது. கால் தொடைப்பகுதியில் ஏதோ சுளுக்கிக்கொண்டதுபோல வேறு உணர்ந்தேன். எல்லாம் முடிந்தது என்றே நினைத்தேன். அப்போதுதான் மல்லாந்து நீந்தும் முறையை செய்து பார்த்தேன். அது நல்ல அருமையான பலனை தந்தது. மல்லாந்து வானத்தை பார்த்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு.. உடம்பை நீர்ப்பரப்போடு சமநிலைபடுத்தி போதுமான அளவு மூச்சு வாங்கிக்கொண்டு அப்படியே மெல்ல நீந்தி நகர்ந்தேன்... ஆஹா.. வானில் பறப்பதை விடவும் அதிகமான இன்பம் இப்படி நீரில் நீந்துகையில் கிடைக்கிறது.. (வானில் எப்போது பறந்தாய் என கேட்காதீர்கள்) செவியில் அலைஅலையாக நீர்உள்ளே போய்வரும்.. அதுகூட பழகிவிட்டது. மல்லாந்து நீந்துவதில் ஒரே ஒரு சின்ன பிரச்சினை எனக்கு சரியான ஒரு திசையில் போகத்தெரியாது.. படித்துறையை அடையாமல் அதன் கைப்பிடி சுவரில் போய் மண்டையை மோதிக்கொண்டு விட்டேன்.. பாதகமில்லை.. நீரில் மோதல்விசை அவ்வளவாக எடுபடாது.. ஆதலால் வலிதெரியவில்லை. எனினும் அதிர்வு அதிகம்,, சித்தம் கலங்கிவிட்டது. இதனால் சமநிலை பாதிக்கப்பட்டு இடறி மூழ்கத்தொடங்கினேன்.. காலையும் கையையும் மனம்போன போக்கில் அசைத்தும்கூட மூழ்கவே செய்தேன்.. காரணம் புரியவில்லை... ஆனால் மூழ்கிய கால் வெகுவிரைவில் தரையை தட்டியது.. ஆமாம் கரைநெருங்கிவிட்டது. களிமண் சகதியை பாதங்கள் விரும்பவில்லைஎன்றாலும்.. அப்பாடா..! ஒருவழியாக நீந்தி வந்து தரைஇறங்கிவிட்டோம் என மகிழ்ந்து கொண்டேன். ஏற்கனவே கரைசேர்ந்து எனக்காக காத்திருந்த இளவலும் மைத்துனனும் மீண்டும் இங்கிருந்து அங்கே என அடுத்த ரவுண்டு கிளம்பி விட்டார்கள்.. பின்னாடியே நானும் போனேன்.. இம்முறை எடுத்த எடுப்பிலேயே மல்லாந்து நீந்தினேன்.. அதுதான் சற்று பருமனான என் உடல்வாகுக்கு வசதியாகவும் பட்டது. அவர்கள் தான் மறுபடியும் முதலில் மறுகரையை சென்றடைந்தார்கள். எங்களுடைய
போட்டியில் நான் வெல்ல வில்லை.. ஆனால் குளத்தின் ஒருபடித்துறையிலிருந்து மறுபக்கம் போய் மீண்டும் திரும்பி வந்து காட்டியதால் எங்களுக்கு நீச்சல் தெரிந்து விட்டதாக மாமா தன் திருவாய்மலர்ந்து 'சர்டிபிகேட்' தந்துவிட்டார்கள்..! அதுவே எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை நல்கியது.
அடுத்தடுத்த வருடங்களில் நான் கண்ணில் படும் எந்த நீர்நிலையையும் விட்டு வைத்ததில்லை.. காரணமே இல்லாமல் எத்தனையோ தடவை கடலில் சர்வசாதாரணமாக தன்னந்தனியேகூட நீராடி களித்திருக்கிறேன்.
என்றாலும் நீச்சலில் நான் வல்லவன் என்றோ முழுமை பெற்றவன் என்றோ சொல்லிக்கொள்ள முடியாது. நீரில் தத்தளிக்கும் ஒருவரை காப்பாற்றுமளவு திறன் போதவில்லை... கரைபுரண்டோடும் ஆற்றுவெள்ளத்தில் நீந்தியதில்லை..
கல்லூரி காலத்தில் நண்பர்கள் மத்தியில் நான் பெரிதாக சோபித்தது இல்லை. கல்லூரி இறுதியாண்டு விடுமுறைக்கு எல்லாருமாக தேனீ~ கேரள எல்லையான குமுளி & தேக்கடி.. மேகமலை போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா போயிருந்தோம்.. ஜீப் வண்டியில் ரைடு....வளைந்து நெளிந்து போகும் பாதை எனக்கு.., 'செந்தாழம் பூவில்.. வந்தாடும் தென்றல்..' பாடல் காட்சியை நினைவூட்டியது.. மலையுச்சியில் பிரபலமான ஓரிடத்தில் நீர்வீழ்ச்சியில் நீராட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அங்கு அனுமதி கிடைக்கவில்லை. ஏமாற்றத்தோடு எல்லாரும் திரும்பிவரும் போது இன்னொரு இடத்தில் சாலையோரமாக
மலைப்பாறைகளிடையே குண்டும் குழியுமான இடத்தில் மலையருவியின் சுனை ஊற்று ஒன்றிருந்தது தென்பட்டது... பளிங்குபோன்ற தண்ணீர்...! அப்படியே அள்ளி பருகலாம் அத்தனை இயற்கை சுத்தமான குறிஞ்சுத்தடாகம் அது...!!
ஏழு வண்டியில் முப்பது நாற்பது பேர் வந்திருந்தோம்.. எல்லா ஜீப் வண்டியும் அங்கேயே நிறுத்தி அந்த இடத்தில் குளிக்கலாமா என அக்கம் பக்கத்தில் விசாரித்தோம். (ஆழம் தெரியாமல் காலைவிடக்கூடாது அல்லவா..?)
அங்கு போவோர் வருவோர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தந்தனர். ஒன்று மட்டும் உறுதி. அது நீராட ஏற்ற இடமில்லை. யாரும் இதுநாள் வரை நீராடியதுமில்லை.. எல்லா நாளும் காட்டாறு போல வெள்ளம்பாய்கிற இடம்.. கோடைகாலம் என்பதாலும் பருவமழை இன்னும் அங்கு தொடங்கவில்லை என்பதாலும் அளவில் வற்றிபோய் பள்ளமான பாறைகளிடையே தேங்கிய நீர் மட்டும் குளமாக காட்சி தருகிறது.. அந்த குளத்தின் ஆழமும் அங்குவசிக்கிற யாருக்கும் உறுதிபடதெரியவில்லை.
எவரேனும் உறுதியளிக்கும்வரையில் அதில் இறங்கும் எண்ணம் யாருக்கும் இல்லை. இவ்வளவு தூரம் கடந்துவந்து கைக்கு எட்டியததையும் விட்டு செல்ல கவலையாக இருந்தது. எல்லாரும் செய்வதறியாது கைபிசைந்த வேளையில்...., அந்த மலைத்தடாகத்தின் கொள்ளையழகில் மயங்கியநான் எதையும் சிந்திக்காமல் குளத்தில் குதித்துவிட்டேன். எதிர்பார்த்ததைவிட நல்ல குளிர்ச்சி..!!! நடுவில் ஆழம் சற்று அதிகம்தான் என்றாலும்.. சாலையோரமாக கரையினில் அகண்ட பாறை ஒன்று அமிழ்ந்து இருந்தது.. அதன் மேற்பரப்பில் இடுப்பை தாண்டி தண்ணீர் இல்லை..!! ஒரே வரியில் சொல்வதெனில் அது இயற்கை படைத்த இலவச நீச்சல் குளம்.
நான் முழு தடாகத்தையும் அலசி ஆராய்ந்தேன். அங்கங்கே காலில் தரைதட்டும் பாறைகளையும் சிக்கிக்கொள்ளும் ஏதோ தாவரகொடியையும் தவிர வேறு தடங்கல் ஏதுமில்லை..
சொல்லாமல் கொள்ளாமல் திடீரென இப்படி நீரில் இறங்கி நான் நீந்துவதைக்கண்டு சகதோழர்கள் திகைத்து போயினர்.
"இவனா நீந்துகிறான்..??"
என்றனர் சிலர்..
"இவன் எப்படி நீந்துகிறான்..??" என்றனர் சிலர்.
"எங்கடா கத்துகிட்டுவந்த இந்த வித்தையை..??" என்றனர் சிலர்..
நீந்த தெரிந்த மேலும் ஓரிருவர் அதன்பிறகு துணிவுடன் இறங்கி நீந்திப்பார்த்தனர். பிறகுதான் எல்லாரும் மெல்ல இறங்கி ஆனந்த குளியல் போட்டனர்.
அந்த ஒருநாள்.. நான் அவர்கள் கூட்டத்தில் மதிப்பு பெற்றவனாக திகழ்ந்தேன்.
இதுபோல இன்னும் எவ்ளவோ சொல்லலாம்...
ஆனால் நான் இங்கு சுயசரிதை எழுத விழையவில்லை..
இவ்வளவு நேரம் நீங்கள் வாசித்தது என் ஒருவனது நீந்தல் நினைவுகள்தாம்... இதுபோல் நீந்தத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் உள்ளத்தில் தழும்பிக்கொண்டிருக்கும்.. புறநானூற்றில் கூட இப்படி நீந்தலை நினைவுகூறும் பாடல் இருக்கிறது..! ஆனால் நவீன வாழ்யுகத்தில் அலைபேசி விளையாட்டில் அனுதினம் மூழ்கி எழும் 'மின்'குஞ்சுகளுக்கு இதுபோன்ற நினைவலைகளில் நீந்துகிற வாய்ப்பு கிட்டுவது அரிது.
மாநகரங்களில் வசிக்கும் பலருக்கு நீந்த தெரிவதில்லை.. அவர்களுக்கு அதற்கான தேவையும் இருந்ததில்லை. இதனால்தான் சாதாரணமாக நாய் நரிகள் கூட செய்யும் நீச்சலை அவர்களால் செய்ய முடிவதில்லை.
நீந்தல் என்கிற சுகமான அனுபவம் இக்கால பிள்ளைகளுக்கு வாய்க்கவில்லையே என்கிற கவலையிலும்,, நீர்நிலைகள் எல்லாமே அபாயகரமானவை என்பதுபோல செய்தி ஊடகங்கள் எல்லாம் கூலிக்கு மாரடிக்கின்றனவே என்ற ஆதங்கத்திலும் எழுதுகிறேன்..
,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு காலத்தில் சோழசாம்ராஜ்யத்தில் வங்காள விரிகுடா கடல் முழுதும் அங்குலம் அங்குலமாக மரக்கலங்களையும், நாவாய்-மிதவைகளையும் நிறுத்தி வைத்து நிலத்தில் நடந்ததை விடவும் அதிகமான வணிக போக்குவரத்தை நடுக்கடலில் நடத்தி காட்டியிருக்கிறார்கள்..
ஒரு கப்பலில் இருந்து அடுத்த கப்பலுக்கு பண்டங்களை கைமாற்ற /ஓடங்கள் திசைமாறி போய்விடாமல் கயிறுகளை கொண்டு பிணைக்க / பகைவரது மரக்கலங்களை சேதப்படுத்த நீருக்கடியிலேயே நீந்தி கடந்து தாக்க ... என வகைவகையான பணிகளை ஆற்ற அணி அணியான வீரர்களை கைவசம் வைத்திருந்த வணிகப்பெருங்குடிகள் மற்றும் அரச குடிகள் இருந்திருக்கிறார்கள்.
தெற்காசியாவின் முக்கிய கடல்பகுதியான வங்காள விரிகுடா தமிழகத்தை,, பர்மா-தாய்லாந்து-மலேசியா(கடாரம்) இந்தோனேசியா (சாவகம்) ஆகிய நாடுகளுடன் கடல்வழி இணைப்பாக விளங்குகிறது. இலங்கை இன்னொரு நாடாகவே கருதப்படவில்லை.
நாள்தோறும் நொடி தோறும் நடைபெறும் மரக்கலங்களின் அணிவகுப்பினால் அந்த பரந்துவிரிந்த வங்கக்கடல் "சோழர்களின் ஏரி" என்றே கருதப்பட்டது. ஏரி என்றளவில் இக்கரை அக்கரை என்றே கடலின் எதிரெதிர் நாடுகள் அழைக்கப்பட்டன.
"அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே..!!"
--என சிங்கப்பூரில் டூயட் பாடும் பிரபல ரஜினி பட பாடல்கூட தமிழில் உண்டு.
இது இப்படி என்றால்,,
மனித முயற்சியால் வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியாம் வீரநாராயண ஏரி(வீராணம் ஏரி) அதன் நீர் கொள்ளளவை கருத்தில் கொண்டு 'சோழ சமுத்திரம்' என்று அழைக்கப்பட்டிருக்கிறது..!!!
(இந்த ஏரி கட்டியெழுப்பிய வரலாற்றை தனக்கே உரிய அழகியநடையில் 'பொன்னியின் செல்வன்' நாவலின் ஆரம்ப அத்யாயயத்திலேயே கல்கி எழுத்தால் சொக்கிப் போடுவார்.)
அணைகள் , கண்மாய்கள் , அகண்ட நீர்பாசன ஏரிகளில் பழங்காலத்தில் 'குமிழித்தூம்பு' என்றொரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். (ஷட்டர்) மதகுகள் கூட அப்போதே இருந்த நுட்பம் தான். அதை இயக்கும் விதம்தான் மாறியிருக்கிறது.
அந்த மதகுகளையோ குமிழித்தூம்புகளையோ இயக்குவிக்க பிரத்யேக பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் இருப்பர். நிரம்பி வழியும் அகண்ட நீரணையின் அடி ஆழத்திற்கு மூச்சடக்கி சென்று அசைக்க கடினமான அந்த தூம்பினை/ மதகு மூடியை விசையுடன் எடுத்துவிட வேண்டும். அப்படிச் செய்யும்போது மிகப்பெரிய அழுத்த விசையோடு சேறும் சகதியுமாய் நீர் ஆவேசமாய் அதன் வழியே இழுத்துக்கொண்டு சீறிப்பாயுமாம்... மிகுந்த லாவகமாக அதிலிருந்து தற்காத்துக்கொண்டு இதை அந்த ஆள் சாதிக்க வேண்டும். இல்லாவிடில் சேறுடன் அவன் பூத உடலும் புதைந்து போய்விடும்..!! (நிஜமான 'ஜலசமாதி' அதுதான்.) இதை செய்யாவிடில் கரை உடைந்து வெள்ளம் பாய்ந்து ஊரே பாழாகிவிடும். இதை செய்ய முயன்று உயிரை இழந்த எத்தனையோ வீரத்திருமகன்கள் நடுகல் தெய்வங்களாகி இன்றளவும் நாட்டுப்புறங்களில் வணங்கப்படுகின்றனர்.
ஒரு விவசாய பம்புசெட்டில் பீறிடும் தண்ணீரின் விசையே நம்மை தூக்கி வீசுகிற வல்லமை கொண்டது எனில்..
பல ஆயிரம் மடங்கு கனஅடி தண்ணீர் ஒரு சிறு மதகு/குமிழித்தூம்பு வழியாக வெளியேற வேண்டுமாயின் அந்த இடத்தில் எத்தனை ஆற்றல்வாய்ந்த விசை செயலாற்றும்??
அத்தகைய விசையிடமிருந்து தப்பி நீந்தி ஒரு மனிதனால் வெளியே வரமுடியுமென்றால் அவனது நீந்தும் திறத்தை என்னவென்று புகழ்வது??
சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் பரம்பரை பரம்பரையாக ஆழ்கடலில் மூச்சு அடக்கி உட்புகுந்து முத்துக்குளிக்கும் திறனாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்..!
வீசுகிற புயல்களையும்.. பேய்மழையையும்.. பேராழி சுழல்களையும் கிஞ்சுற்றும் பொருட்படுத்தாமல் துச்சமென நினைத்து..., கார்கால நள்ளிரவில்.. கொந்தளிக்கும் நடுக்கடலில்.... ஒரு கலத்திலிருந்து குதித்து, நீந்தி, மறுகலத்தில் ஏறி சாவகாசமாக அடுத்த வேலையை பார்க்கும் ஊழிக்கே சவால்விடுகிற அசகாய ஊழியர்கள் வாழ்ந்து மறைந்த திமிர் (திறம்) கொண்ட பழம்பெரும் தனிஇனம் அல்லவா? நம் தமிழினம்..!!
இருந்தென்ன..?
இருந்தென்ன....?
அந்த இனத்தின் வழிவந்த பிள்ளைகள்தாம் இன்று முட்டிக்கால் உயரம் கூட எட்டாத தேங்கிகிடக்கும் தடுப்பணை தண்ணீரில் மூழ்கி அடுத்தடுத்து மாண்டு போகிறார்கள்..!
திறம்பெற்ற தீரர்களின் வழிவந்த வம்சத்தின் எச்சங்களுக்கு.. என்னதான் நேர்ந்தது?
மனிதனை தவிர, பெரும்பாலான பாலூட்டி விலங்கினங்கள்.. இயற்கையாகவே யாரும் கற்றுத்தராமலே நீந்திவிடுகின்றன.
நீந்த தெரியாத விலங்கு என ஒட்டகத்தை கூறுவார்கள்..
அது உண்மையில்லை.
இந்திய ஒட்டகங்கள் நீந்தும்!!
குஜராத் கட்ச் வளைகுடாவில் இருக்கிற சதுப்புநிலங்களில் வாழும் ஒட்டகங்கள் ரம்யமாக நீந்துகிற காட்சியை வலையொளியில் தேடி நீங்கள் தாராளமாக ரசிக்கலாம்.
எப்போதுமே தேவை இருக்கிற இடங்களில் கண்டுபிடிப்பு நடந்துவிடும்.
சஹாரா ஒட்டகங்களுக்கு நீந்துவதற்கான தேவை இன்னும் எழவில்லை. அதனால் அவை நீந்தவில்லை.
நாம் எவற்றோடு அதிகம் பழகுகிறோமோ உறவாடுகிறோமோ அவற்றின் மீது இனம்புரியாத அன்பு பாசம் ஏற்பட்டுவிடும்.
அதன்பிறகு அதை பத்திரமாக பார்த்துக்கொள்கிற பக்குவமும் இயல்பிலேயே வாய்த்துவிடும்.
ஆற்றிலும் கிணற்றிலும் குளத்திலும் மனிதன் நீரோடு நீராடி தவழ்ந்து திரிந்த காலம்வரை அந்த நீர் குடத்தோடு மொண்டு சென்று நேரடியாக சமைத்து பருக ஏற்றதாகவே இருந்தது.
தான் குடிக்கிற நீரில் எவனும் அசுத்தம் செய்ய தயங்குவான். அசுத்தம் என்பது உடற்கழிவுகளல்ல.. உயிரியல்சுழலில் ஒன்றின் உயிரியல் கழிவு இன்னொரு உயிரினத்தின் உணவாகிவிடும்.
மனிதன் புழங்க தொடங்கிய சோப்பு -ஷாம்பூ பாக்கெட்களும், உணவுப்பொட்டலங்களும், குளிர்பான பாட்டில்களும், நெகிழி பொருட்களும், ரசாயன மருத்துவ கழிவுகளும், பாலீத்தீன் பைகளும் தான் உண்மையில் அபாயகரமான விஷக்கழிவாக நீர்நிலைகளை மாற்றியமைத்தது!
அவற்றை ஜீரணிக்கிற திறன், பாவம் அந்த நீர்வாழ் ஜீவராசிகளுக்கு இன்னமும் கைவரப்பெறவில்லை..!
என்றைக்கு நீருடன் ஆன தொடர்பு அறுந்ததோ.. நீர் என்பது வெறும் புறந்தூய்மை செய்யும் பௌதீக பொருளாக மட்டும் பார்க்கப்பட்டதோ.. அன்றுமுதலே அது மனிதனுக்கு தூரத்து உறவாக மாறிவிட்டது. நேரடியாக உட்கொள்ள சுகாதாரமற்றதாகிவிட்டது...!
ஔவை பாட்டி சொல்வாளே..
"அற்றகுளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்
- அக்குளத்தின்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே,,
ஒட்டி உறவார் உறவு."
(நீர் அற்று வற்றிய பிறகு அக்குளத்தில் நன்றாக வாழ்ந்துவந்த நீர்வாழ் பறவைகள் பறந்தோடி விடும். அது ஒரு உண்மையான உறவு அல்ல.
அதே குளத்தில் இருக்கும் கொட்டி, ஆம்பல், நெய்தல் முதலான நீர்வாழ் செடிகொடிகள் குளம் வறண்டு போகும்போதும் அதனோடு தானும் கடைசிவரை ஒட்டிஇருந்து வறண்டு போகும்.. ஆபத்திலும் உடன் இருக்கும் அத்தகையே உறவே உண்மையான உறவு.)
தன் தேவை முடிந்தபிறகு நம்மவர்கள் குளத்தையோ ஆற்றையோ மதிப்பதே இல்லை. துணி தொழிற்சாலை சாயங்களை நேராக ஆற்றில்தான் திறக்கிறார்கள். அவர்களது பிள்ளைகள் அந்த நீரைத்தான் நேரடியாக பருகவோ குளிக்கவோ செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்தால் இவ்வாறு செய்வார்களா..?
சிறுவர் சிறுமிகள் நீரில் விளையாடுவதை எல்லா காலங்களிலும் விரும்பத்தான் செய்கிறார்கள். அவர்களை தடுப்பது மடைமாற்றுவது பெற்றோர்களாகிய பெரியோர்கள் தாம்..!
இந்த போக்கை தவிர்த்து வீடருகே நல்ல தரமான நீர்நிலைக்கு அழைத்துச்சென்று முறையாக நீந்த கற்றுத்தருவதும் தமிழகத்தின் பெற்றோர் ஒவ்வொருவரின், தலையாய கடமை. அதுவும் குழந்தை பருவத்திலேயே செய்துவிட வேண்டும். இதில் ஆண்/ பெண் என பேதம் காட்ட கூடாது.
பெரியோர் பலரே நீந்த தெரியாத இந்த காலத்தில் முறையான நீச்சல் கற்றவர்களுடன் குழந்தைகளை அனுப்பலாம்.
சிலம்பம், களரி, வாள்வீச்சு, வில்வித்தை, கரவித்தை(karate & kung-fu) , மல்யுத்தம், மல்லர் கம்பம் என பழங்கால வீர கலைகளை நம் பிள்ளைகளுக்கு தேடித்தேடி கற்றுக்கொடுக்கிற வழக்கு தற்காலத்தில் அதிகரித்துவருவது பாராட்டப்படவேண்டிய விஷயம் தான்.. என்றாலும்
அவை அனைத்தினும் அவசியம்-மிகுந்த நீச்சல் கலையை நீங்கள் கற்று தராது போவீர்களேயானால் அது அசட்டுத்தனமான பேரிழப்பாகும்.
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" எனில்
"நீந்தலும் சமைத்தலும் கரமெனத்தகும் "
எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கண் இருந்தும் எப்படி அவர்களால் அதன் முழுபலனை நுகரமுடியாதோ..
அதுபோன்றே நீச்சலும் சமையலும் கற்காதவர்கள் இரு கை இருந்தும் அதை தனக்கென பயன்படுத்தும் கலையை முழுதாக அறியாதோர் ஆகிவிடுகின்றனர்...!
எப்போதும் இன்னொருவரை எதிர்பார்த்து சார்ந்து இருத்தல் பாதுகாப்பானது அல்ல.. அது வாழும் கலையுமல்ல.
சமைக்க தேவையிராத பண்டங்கள் கூட உண்பதற்கு கிடைத்துவிட வாய்ப்பு உண்டு.
நீந்த தேவையிராத நீர்நிலை என்று ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
(இஸ்ரேலுக்கும் ஜோர்டான் நாட்டுக்குமிடையே 'சாக்கடல்' -dead sea என்று ஒரு பெரிய ஏரி இருக்கிறது.. அங்கு ஒருவேளை நீராட போக நேர்ந்தால் நீந்த தேவையில்லை.. இலகுவாக மிதக்கலாம்..!)
நாம் மறுபடியும் இயற்கையை நேசிக்க தொடங்கிவிட்டோம்...
மரங்களை.. வனங்களை.. வளர்க்க விரைந்துவிட்டோம்..
நீரையும்கூட சேகரிக்க முனைந்து விட்டோம்..
இனி
அவற்றோடு உறவாடவும் பழகிடவேண்டும்..!
முதலில் நீச்சல் பயிற்சியை அடிப்படையிலேயே பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.
ஒவ்வொரு நீர்நிலைகளிலும் அபாயகரமான இடம் என பலகை வைப்பதை விட..
நீச்சல் பயில ஏற்ற இடங்களை உருவாக்கி அவற்றை அதிகரித்தால்.. அதில் பிள்ளைகள் பொழுதை செலவிட்டால்..
அபாயகரமான நீர்நிலை என்று ஒன்று,, நீர் சூழ்ந்த இவ்வுலகினில் எங்கும் இருக்காது...!
சூரியராஜ்
வேண்டாததை எல்லாம் இன்று கற்க வேண்டி உள்ளது. ஆசையாக இருந்தும் வாய்ப்பு இல்லாமல் போனதால் நான் தவறவிட்ட நல்லனுபவம் தான் நீச்சல்.
பதிலளிநீக்குகிடைத்த கொஞ்ச காலத்திலும் எனக்கு வாய்த்த செவிக்கோளாறுகள் தண்ணீரை பார்த்தாலே பயத்தை உண்டு பண்ணின..
படித்துறையை தாண்டி கொஞ்சமாக தலையை முங்கினாலும் காதில் பிரச்சனை வந்துவிடும்...
பயம்... இந்த கட்டுரையை படித்தபோது இத்தனை சுகமான பருவத்தை இழந்துவிட்டோமே என்றேக்கமாகவுள்ளது.
இனி பயிற்சிகள் பலனளிக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் விரும்பமுள்ளது.
கயல்கலை அறிவது கட்டாயமாக வேண்டும். பள்ளிகளே இதை பாடமாக பயிற்றுவிக்கலாம்.
சில பணக்காரப்பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் நீச்சல், குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகளை பார்க்க முடியும்.
தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம் ஒரு பாடம்.
நம்மை போல் காகிதப்பாடமல்ல.. களப்பாடம்..
நான் பள்ளி பயிலும் போது ஒரு மாணவன் தோட்டக்கலை சார்ந்து பணிகளில் ஈடுபடுவதற்கு மதிப்பெண் தரவேண்டும் அதற்கான வாய்ப்பை பள்ளி தரவேண்டுமென கொள்கை தரப்பட்டது.
அக மதிப்பெண் போடுகையில் 10 மரக்கன்று நட்டதாகவும் அதை பராமரித்ததாகவும் எல்லா மாணவரிடமும் கையெழுத்து வாங்கினார்கள்
பிற நாட்டுக்காரன் ஒருவன் ஏமாற்றுவதை கண்டுபிடிப்பதற்கு ஏதும் கண்டுபிடிப்பு செய்தால் இந்தியா காரன் எப்படி அந்த கருவியையும் ஏமாற்றுவது என்பதை கண்டுபிடிப்பான்
கட்டுரையின் கடைசி சில கருதுகோள்கள் சிந்திக்க வேண்டியதே..
இருந்தும் நீச்சல் குளங்கள் ஏற்படுத்துவது வீண். மக்கள் அதை பொழுது போக்காய் தான் பார்க்கிறார்கள்.
அதுமட்டுமன்றி பராமரிப்பு செலவு அதிகம். திருவாரூரிலே இன்று 1 மணி நேரத்திற்கு கட்டணம் 50 முதல் 70 ரூபாய். இத்தனைக்கும் அது அரசு கீழே இயங்கக்கூடியது.
நகரத்து பிள்ளைகள் உண்மையிலே வாய்ப்பை முற்றிலுமாக இழந்தனரென்று தான் கூற வேணும்.
கிராமத்திற்கு சென்றாலொழிய வேறு கதி இல்லை.
தன்னை காத்து கொள்ளவாவது நீச்சலை கற்று கொள் என்பார்கள்
அதெல்லாம் இல்லை... இன்று
நீச்சலை காப்பற்ற தான் நீச்சலை கற்று கொள்ள வேணும்
நீச்சல் பயில ஏற்ற இடங்களை உருவாக்கி அவற்றை அதிகரித்தால்.. அதில் பிள்ளைகள் பொழுதை செலவிட்டால்..
நீக்குஇந்த வரிகளில் சொல்ல வந்தது.... தற்கால ஆடம்பர நீச்சல் குளங்களை பற்றி அல்ல..
ஊர்ப்புறங்கள் தோறும் கரைகளை தூர்வாறுகிறார்கள்... கரையருகே ஆழப்படுத்திடாமல் ஆங்காங்கே ஆழம் குறைவாக பொதுஜனம்/சிறுவர்கள் எளிதாக புழங்க பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சில இடங்களை தடுப்பு வேலிகளுடன் ஏற்படுத்தலாம் என நினைத்தேன்.
காது மூக்கு கண் போன்ற பொறிகள் சிலருக்கு அதீத மென்மையாகவோ அதிக நுண்ணுணர்வு கொண்டதாகவோ இருக்கும்போது ,, நீர்நிலைகளில் மூழ்கி குளித்தால் தலைவலி செவிஅடைப்பு கண்ணெரிச்சல் முதலியன ஏற்படக்கூடும்.
நீக்குஇதை தவிர்க்க.. நீச்சல் வீரர்கள் கைக்கொள்ளும் சில பொருட்களை நாமும் பயன்படுத்திக்கொள்ளலாம். கண்களுக்கு தனி கண்ணாடி.. தலைமுடி முதல் காதுகளையும் மூடி மறைக்கும் தலைப்பாகைபோன்ற இறுக்கமான தொப்பி போன்றவை இருக்கின்றன.. முன்புபோல் அது எங்கே கிடைக்குமோ என கவலைபடவேண்டியதில்லை.. அமேசான் முதலான இணைய வணிகவீதியில் கிட்டாது என்று ஒன்று உண்டோ..??
🏊🏊🏊🏊🏊🤽🤿🤿🥽
நீக்குநீச்சலை காப்பாற் நீச்சலை கற்கணும் 🤣🤣🤣👌👌
நீக்குகுளம் குட்டைகள் எல்லாம் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி போன பின் நீச்சலுக்கு எங்கே போவது? இப்போது கூட ஆற்றில் குளிக்க ஆசையாக உள்ளது. ஆனால் ஆற்றுக்கு போனால் தண்ணீர் பாதி சாக்கடை மீதி உள்ளது. எப்படி குளிப்பது? நடைப்பயிற்சியை விட ஓட்ட பயிற்சியைவிட எல்லா உறுப்பையும் அசைத்து பார்ப்பது நீச்சல் பயிற்சியின்.
பதிலளிநீக்குதலை கீழாகக் கூட தண்ணீரில் நிற்கலாம். காலில் உள்ள இரத்தத்தை தலைக்கு அனுப்பலாம். கை கால் கழுத்து என எல்லா அமைப்புகளுக்கும் அசைவை கொடுப்பது நீச்சல் மட்டும்தான்.
பதிலளிநீக்குகண்ணதாசன் சொல்வார், வைகை ஆற்றில் தண்ணீர் கழுத்து அளவு.... தலைகீழாக நின்றால்....😄😄😄
நீக்கு🙆🛀🛀
நீக்கு