அண்மை

இந்தியா 2047-க்கான தொலைநோக்கு

இந்தியா 2047-க்கான தொலைநோக்கு

>


{tocify} $title={பொருளடக்கம்}




முன்னுரை


இந்தியா விடுதலை அடைந்து எழுபத்து ஐந்து ஆண்டுகள் ஒடோடிவிட்டன. வரும் 2047 ஆம் ஆண்டு  இந்தியா நூறாவது ஆண்டில் நுழைகிறது. ஆங்கில ஆட்சியிலிருந்து மீண்டு விட்ட நாம், வறுமையிலிருந்தும், சாதி, மத, இன  அடிமைத்தனத்திலிருந்தும் மீண்டு விட்டோமா? உணவு உற்பத்தியிலும் தொழில் வளத்திலும் தன்னிறைவை அடைந்து விட்டோமா? நாம் காண விரும்பும் 2047 எப்படி இருக்க வேண்டும்? அதை காணுவதே இந்தக் இந்தியா 2047 ஆண்டிற்கான எனது தொலைநோக்கு பார்வை கட்டுரை.


கல்வி


கல்வியை ஒருவனுக்கு கொடுத்து விட்டால், நாடு முன்னேறிவிடும். காசு உள்ளவனுக்குதான் கல்வி என்ற நிலை உள்ளது. ஆண்டவன் படைப்பில் ஏழைகளும் உள்ளார்கள். பணம் படைத்தவர்களும் உள்ளார்கள். அறிவை ஏழைகள் பெற்றாலும், அறிவால் அவர்கள்  விரும்பும் கல்வியை பெற பணம் தேவைப்படுகிறது.


ஆயிரம் ஆண்டுகளாக நம்மை ஆண்ட மூவேந்தர்களும், மொகலாயர்களும், முஸ்லிம் மன்னர்களும், ஆங்கிலேயர்களும் நமக்கு கல்வி அறிவைக் கொடுக்கவில்லை.  நாடு விடுதலையடைந்த போது எழுத படிக்க தெரிந்தோரின் எண்ணிக்கை இருபது விழுக்காட்டைக் கூட தொடவில்லை.


தமிழகத்தில் காமராஜர் போன்றவர்கள் தோன்றி பள்ளிகளை தோற்றுவித்தார்கள். அவர்கள் பட்ட பாடு வீண் போகவில்லை. கடந்த ஆண்டு லிட்டரசி ரேட் எனப்படும் கல்வி விகிதப்படி சுமார் 77% மக்கள் கல்வி அறிவை பெற்றவர்களாக உள்ளார்கள்.


2047 வர இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் உள்ளன. அதற்குள் இந்தியர்கள் அனைவரும் உயர் கல்வி பெற்றவர்களாக மாற வேண்டும்.


மருத்துவமாகட்டும், வாகனத்துறை ஆகட்டும், கணினி தொழிநுட்பமாகட்டும், விண்வெளி தொழில் நுட்பம் ஆகட்டும், அறிவியல் துறையாகட்டும் இந்தியர்கள் விற்பன்னர்கள் ஆக திகழ வேண்டும். அவர்களை அப்படி உருவாக்கும் கல்வி  நிலையங்கள் இந்தியாவிலையே அமைய வேண்டும். கல்விக்காக அயல் நாடு சென்று நம் அந்நிய செலாவணியை இழக்கும் அவலம் நீங்க வேண்டும்.


அதனால் 2047 ஆம் ஆண்டுக்குள் கல்வியை முற்றிலும் இலவசமாக கொடுக்க வேண்டும். கல்வி அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். கல்வியை ஒருவர் பெற பணம்  ஒரு தடையாக இருக்கக்கூடாது.

மன்னவனுக்கு தன் மாளிகையில்தான் சிறப்பு. கற்றவனுக்கோ அவன் செல்லும் இடம் எல்லாம் சிறப்பு அல்லவா?


கல்வி அறிவு பெற்றவருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். வேலை அரசுத்துறையில் இருக்கலாம் அல்லது தனியார் துறை ஆக இருக்கலாம் சுய தொழிலாகக் கூட இருக்கலாம்.  வேலை இல்லை என்ற நிலை இல்லாமல் போக வேண்டும். பணமோ சாதியோ அரசியல் ஆதிக்கமோ ஒருவரது வேலைவாய்ப்பை தடுக்கும் ஆயுதமாக இருக்கக் கூடாது.


கலவியை கற்று விட்டால் ஆண் பெண் என்ற பேதம் அடிபட்டு போகும். ஆண் பெற்ற கல்வி அவனோடு போய்விடும். ஆனால் பெண் கற்ற கல்வி அந்த குடும்பத்துக்கே வழி காட்டும் விளக்காக அமையும். ஆண் பெண் வேறுபாடுகள், ஊதியம் வரை களையப்படவேண்டும்.


"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற பாரதியின் வரியை விடுதலை பெற்ற இருபது ஆண்டுகளில் இந்திராவை பிரதமராக்கி உண்மையாக்கி காட்டிய இந்தியா, 2047 ஆம் ஆண்டு கண்டிப்பாக பாலின சமத்துவம் பெற்ற நாடாக திகழும்.


விவசாய வளர்ச்சி


இராம இராஜ்யம் எது என்று கேட்டால் கிராம இராஜ்யம்தான் என்பார் காந்திஜி. இந்தியாவில் என்பது சதவிகிதம் கிராமப்புறங்கள்தான். உழவும் நெசவும் வளர்ந்தால்தான் இந்தியா வளம் பெறும். உழவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும்.


உழவர்கள் தானியங்கள் உற்பத்தி செய்யத் தேவையான கடன் தொகை வட்டியில்லாமல் வழங்க வேண்டும். உரம், பூச்சி மருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும். "உண்டி கொடுப்போரே உயிர் கொடுப்போர்" என உணர்ந்து இந்த வையகம் அவர்களுக்கு உதவ  வேண்டும்.


விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேவைக்கு அதிகமான  காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கெட்டுப்போகாமல் பாதுகாத்து, தேவை அதிகம்  உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டும் வாய்ப்பை விவசாயிகளுக்கு அரசே ஏற்படுத்தித் தர வேண்டும்.


தொழில் வளர்ச்சி


நம் நாடு விடுதலை அடைந்த போது நம்மோடு இருந்து, ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவை உருவாயின. பங்காளிகளாக இருந்தவர்கள் ஒரு நேரத்தில் பகையாளியாகி போனார்கள்.


அன்பையும் சகோதரவத்துதத்தையும் வலியுறுத்தும் பஞ்ச சீல கொள்கையை கடைபிடித்த நேரு ஆயுதங்களை வாங்கி சேர்க்காமல் போனார். இதைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு உதவுவது போல வந்த சீனா, நம்மிடம் வாலாட்ட ஆரம்பித்தது. நிராயுதபாணியாக இருந்த இந்தியாவை தாக்கி சிறு பகுதியை ஆக்கிரமிக்கவும் செய்தது. சுதாரித்து கொண்ட இந்தியா, இந்திரா காலத்தில் படையிலும் பலத்தை சேர்த்தது. அணு ஆயுதமும் தயாரிக்கப்பட்டது.


1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் காலத்தில், "தேவையில்லாமல் மோதினால் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதம் எங்களிடமும் உள்ளது" என்பதை உலகத்துக்கு காட்ட நாசாவையே ஏமாற்றி  பொக்ரானில்   அணுகுண்டு சோதனை ஒன்றை இந்தியா நடத்தி காட்டியது.


ஐ.நா வையே தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா  இதனால் ஆத்திரம் அடைந்தது.  தனது ஆதரவு நாடுகள் ஆதரவுடன் இந்தியாவுக்கு பொருளாதார தடையை விதித்தது.


"பொருளாதார தடையால் இந்தியா பாதிக்கப்படும் அதனால் தன் காலடியில் வந்து விழும்" என அமெரிக்கா தப்புக் கணக்கு போட்டது. ஆனால் இந்தியா பாதிக்கப்படவில்லை. வெளி நாட்டில் இருந்து வரும் எல்லா பொருளுக்கும் மாற்று பொருளை இந்தியா தயாரித்தது.


அந்நிய பொருட்களை பகிஷ்கரிக்க அன்று காந்தி சொன்னதை நாம் கேட்கவில்லை. கேட்டிருந்தால் அந்நிய நாட்டை நம்ப வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.


மாறாக மூலப் பொருட்களை இந்தியாவுக்கு விற்று கல்லா கட்டிக் கொண்டு இருந்த அமெரிக்கா, கனடா போன்ற சர்வதேச சமுதாயத்துக்குதான் பாதிப்பு ஏற்பட்டது. ஏனென்றால் 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. பொருட்களை அழிக்கும் சக்தி இந்தியாவுக்கே உண்டு. அதனால் அவர்கள் விதித்த தடை, அவர்களுக்கே எமனாக முடிந்தது. அதனால் தடை தானாகவே காலாவதி ஆகிவிட்டது.


உலகிலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. சுமார் 60 கோடி இளைஞர்கள் உள்ளனர். ஒரு பிள்ளை மட்டுமே பெறலாம் என்ற உத்தரவால் சீனாவில் கூட  போதுமான இளைஞர்கள் இல்லை. மேன் பவர் என்று சொல்லக்கூடிய மனித உழைப்பு குறைவான ஊதியத்தில் கிடைப்பது இங்குதான்.


ஜவுளித் துறையிலும், மருந்து பொருள் தயாரிப்பு துறையிலும், வாகனத் தயாரிப்புத் தொழில்களிலும் வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. அதை இளைஞர்கள் பயன்படுத்தி முன்னேற  வேண்டும்.


இந்தியா தன்னிறைவு அடைந்தவுடன், உலகத்தில் எந்த மூலையில் எந்தப் பொருளுக்கு தேவை அதிகம் இருக்கிறதோ அதைக் கண்டு, இளைஞர்கள் சக்தியை பயன்படுத்தி மூன்று ஷிப்டுகள் போட்டு அப்பொருளை உருவாக்கி ஏற்றுமதியில் ஈடுபட்டால், இந்தியா விரைவில் வல்லரசு என்ற நிலையை அடையும்.


அதுமட்டுமல்லாது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானமும், நாட்டுக்கு அந்நிய செலாவணியும் கிடைக்கும்.


இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டுமானங்களான கட்டிடம், மின்சாரம், சாலை போக்குவரத்து வசதி, குடிநீர் போன்றவைகளை அரசு அமைத்து தர வேண்டும்.


இந்தியா 2047 எனது பார்வை


சாதி மதம் இனம் சாராத ஒருங்கிணைந்த இந்தியா உருவாக வேண்டும்.


பிறப்பால் ஆண், பெண் பேதம் நீங்க வேண்டும். பிறப்பு அடிப்படையிலான சாதியும் ஒழிய வேண்டும்.


மது இல்லாத மாநிலங்கள் உருவாக வேண்டும்.


போதைப் பொருட்கள் இல்லாத இந்தியா உருவாக வேண்டும்.


தேசத்தின் புற்று நோயான லஞ்சமும், ஊழலும் ஒழிய வேண்டும்.


கல்வி எல்லா பிரிவினருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும்.


நோய் தீர்க்கும் மருத்துவமனைகள் குறைவான கட்டணத்திலோ அல்லது  இலவசமாகவோ அமைய வேண்டும்.


உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து, எஞ்சிய பொருட்கள் ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்ட வேண்டும்.


குப்பைகள், பாலிதீன் இல்லாத தூய்மை இந்தியா உருவாதல் வேண்டும்.


பட்டினி என்ற வார்த்தையே இந்தியாவில் இல்லாமல் இருக்க வேண்டும்.


வரிவிதிப்பு என்பது 10% என்ற அளவீட்டை தாண்டாமல் இருக்க வேண்டும்.


எல்லா இந்தியர்களும்  அவர்களது சொத்துக்களும், காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.


அறுபது வயதை கடந்த அனைத்து இந்தியருக்கும் ஓய்வு ஊதியம் அளிக்க வேண்டும்.


கலவி அனுமதி, தொழில் அனுமதி, ஒப்பந்தங்கள் மற்றும் சான்றுகள் அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே இருக்க வேண்டும்.


கல்வியாகட்டும், தொழிலாகட்டும் அதற்கான அனுமதி ஒற்றை சாளர முறையில் அமைதல் வேண்டும்.


குழந்தை தொழிலாளர் என்பதே இல்லை என்ற நிலை உருவாதல் வேண்டும்.


இந்தியாவின்  யோகா கலையை உலகம் முழுதும் பரப்பி,அனைவரும்  நலமுடன் வாழ வேண்டும்.


விவசாயமே உயிர்நாடி என்பதால் விவசாயிகளுக்கு இடுபொருள், கடன், காப்பீடு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும்.


சுரங்கம் மற்றும் கழிவு நீர் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ரோபோ டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும்.


இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும்.


விண்வெளி ஆய்வுகளிலும் இராக்கெட் தொழில் நுட்பத்திலும் இந்தியா தலைமை ஏற்க வேண்டும்.


நமது அந்நிய செலாவணியை இழக்க வைக்கும்  கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு இறக்குமதியை குறைத்து தன்னிறைவு அடைய வேண்டும்.


நமது இதிகாசங்களும் புராணங்களும் காப்பியங்களும் காட்டிய நல்நெறியை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.


முடிவுரை


"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்." என்று 1964 ஆம் ஆண்டே எழுதி வைத்தார் கவிஞர் கண்ணதாசன். இந்த இரண்டு வரியிலேயே எல்லாமும் அடங்கி விடுகிறது.


எவ்வளவுதான் தொழிட்நுட்பத்தில் முன்னேறினாலும் அன்பு, பொறுமை,பாசம், பரிவு, பண்பாடு, சகோதரத்துவம் இவையே இந்தியாவின் அடையாளங்கள். நம் அடையாளங்களை நாம் இழக்காமல் இன்புற்று வாழ வேண்டும். இதுவே எனது இந்தியா 2047 ஆண்டிற்கான எனது தொலைநோக்கு பார்வை



கருத்துரையிடுக

புதியது பழையவை