அண்மை

பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு

 

பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு

முன்னுரை


இன்று நம் தமிழ்நாடு வடவேங்கடம் முதல் தென்குமரி வரையிலும் நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டிருக்க வில்லை என்றாலும் இந்த மலர்தலை ஞாலம் முழுவதிலும் தன் புகழை நெடிதுயர்த்தி இருக்கிறது. 


மண்திணி ஞாலத்து தொன்மையும் மறனும்

கொண்டுபிறர் அறியும் குடிவரவு உரைத்தன்று


என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுவது போல தமிழக வரலாற்றை செதுக்கிய பல்வேறு தியாகிகளின் போற்றுதலுக்கு பிறகு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு தன் குடிமரபை இந்தியாவிற்கே உணர்த்தியதை இக்கட்டுரை குறிப்புகளில் காணலாம்


சென்னை மாகாணம்


திமுக 1957 ஆம் வருடம் மே 7 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தது. ஆனால் அத்தீர்மானத்துக்கு 42 வாக்குகளே கிடைத்தது. காங்கிரஸின் 127 எதிர்ப்பு  வாக்குகளால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதே வேளையில் தான் காங்கிரஸ் ஆதரவாளரான சங்கரலிங்கனார் அவர்களும் சாகும் வரை உண்ணாவிரதத்தினை மேற்கொண்டார். இருந்தும் அவரை சார்ந்துள்ள பிற காங்கிரஸ் ஆதரவாளர்களே 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றத்திற்கு உடன்படவில்லை.


தமிழக புரட்சி


பின்னர் 1961 ஆம் ஆண்டு ஷோஷலிஸ்ட் உறுப்பினர் பி.சின்னத்துரை கொண்டு வந்த, தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானமும் காமராஜரால் விவாதத்துக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் அதும் அதிகம் கவனித்தம் இல்லாமல் போனது. இருந்தும் அப்போதைய தமிழக நிதியமைச்சர் 'தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறேன்' என்று கூறியே அறிக்கையை வெளியிட்டார். தமிழ்நாடு எனும் சொல் அக்காலக்கட்டத்தில் ஒரு புரட்சி சொல்லாக மாறியது


1961ல் பாராளுமன்றத்தில் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் உறுப்பினர் பூபேஸ் குப்தா மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தார். 


பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு


அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பேரறிஞர் அண்ணா சிலப்பதிகாரம்,மணிமேகலை, பரிபாடல், தொல்காப்பியம் போன்ற இலக்கியக் காலம் தொட்டே தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயர் வழங்குவதை ஆதாரத்துடன் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.


"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற தொல்காப்பிய வரிகளையும் "இமிழ் கடல் வேலியை தமிழ் நாடாக்கின" என்ற சிலப்பதிகார பாடலையும் எடுத்துக்காட்டாக காட்டினார்.


"மெட்ராஸை தமிழ் நாடாக்கி என்ன சாதிக்க போகிறீர்கள்" என காங்கிரஸ் கட்சியினர் கேட்டார்கள். சபை மௌனமானது 


"பார்லிமென்டை லோக்சபாவாக்கி என்ன சாதித்தீர்கள்" என பேரறிஞர் அண்ணா வீர முழக்கம் செய்தார். 


"பிரசிடென்டை இராஷ்டிரபதி என மாற்றி என்ன பலனை கண்டீர்கள்" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனார்.


"மாநிலத்தின் தலைநகராக உள்ள ஊரின் பெயர்தான் மாநிலத்தின் பெயராக அமைய வேண்டும்" என ஆணித்தரமான கூச்சலை சபையினர் எழுப்பினார்கள்


"அப்படியானால் கேரளாவுக்கு ஏன் திருவனந்தபுரம் என்றும் ஆந்திராவுக்கு ஹைதாராபாத் என்றும் கர்நாடகாவுக்கு பெங்களூர் என்றும் ஏன் பெயர் வைக்கவில்லை" என அண்ணா கேட்டார். சபை மீண்டும் மௌனமானது.


காங்கிரஸ் அமைச்சர் ஆர் வெங்கட்ராமன் எழுந்து "மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என ஒப்புக்கொண்டால் மெட்ராஸ் பெயரில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் காலாவதி ஆகிவிடும்" என்றார்.


அதற்கு பதிலடியாக பேரறிஞர் அண்ணா எழுந்தார் "கோல்டு  கோஸ்ட்" என்ற நாடு தனது பெயரை "கானா" என்று மாற்றிக்கொண்டதே! கானா மீது இந்தியா போட்ட ஒப்பந்தங்கள் ஏன் காலாவதி ஆகவில்லை" என அனைவரையும் அசரவைக்கும் விதமாக அண்ணா கேட்டார்.


பார்லிமென்டை "லோக்சபா" என்றும் கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை "இராஜ்யசபா" என்றும் பெயர் மாற்றிய உங்களால் "தமிழ்நாடு" என பெயர் மாற்ற முடியாதா? என பிரதமர் நேருவை பார்த்து நேருக்கு நேராக கேட்டார் அண்ணா. சபையோர் அதிர்ச்சி அடைந்தனர்.


ஆனால் அந்த தீர்மானமும் பின்னர் 1964ல் திமுக அரங்கண்ணனால் கொண்டு வந்த தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது.


தீர்மானம் நிறைவேறியது


“அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடும்போது தமிழ்நாடு என மாற்றி அமைக்கப்பட வேண்டுமென உறுதியாக கருதுவதுடன், அரசியலமைப்பில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்க பேரவை பரிந்துரைக்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா. இதனை வரவேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸின் கருத்திருமன், “தமிழ்நாடு – மெட்ராஸ் ஸ்டேட் என்று பெயர் இணைந்திருக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினார். தீர்மானத்தின் போது நிறைவுறையாற்றிய பேரறிஞர் அண்ணா, “எதிர்காலத்தில் வரும் தலைமுறையினர், நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகு அமர்ந்து பேசுகிற வேளையில் பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நிகழ்வாக தமிழ்நாடு பெயர் மாற்ற நிகழ்வு அமையும்” என்று பீடுபட மொழிந்தார்..


பின்னர் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி கோரினார். அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் காங்கிரஸால் பலமுறை தோற்கடிக்கப்பட்ட தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைந்த பிறகு 1968 ஜுலை 18 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பேரவைத் தலைவர் ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா "தமிழ்நாடு" என மூன்று முறை கூற "வாழ்க" என்று உறுப்பினர்கள் வின்னதிர முழக்கமிட்டார்கள்.


முடிவுரை


நமது நாடான இந்தியா கூட தன் பெயரோடு நாட்டினை கொண்டிருக்கவில்லை ஆனால் அதில் ஒரு அங்கமான தமிழ்தேசமோ தமிழ் நாடு என்னும் தன் பெயரை செவ்வியல் ரீதியாக ஆதாரத்துடன் நிருபித்து பெற்றதாகிறது. பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு நம் இலக்கிய வாசம் இன்றும் அகலாமல் இருப்பதற்கொரு சான்றாகும்


தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் 1968 நவம்பர் 23 அன்று நிறைவேறியது.


1969 ஜனவரி 14 பொங்கல் முதல் அதிகாரபூர்வமாக மெட்ராஸ் மகாணம் பீடுகெழு சிறப்புடன் தமிழ் கூறும் நல்லுலகமான தமிழ்நாடானது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை