அண்மை

எல்லைப்போர் தியாகிகள்

 

எல்லைப்போர் தியாகிகள்

எல்லைப்போர் தியாகிகள்


நமது இந்திய சுதந்திர போராட்டத்திற்கு மகாத்மா காந்தியடிகள் தலைமையேற்ற பிறகு இந்தியாவின் செம்மை தன்மையினையும் தனித்தன்மையினையும் கருதிற்கொண்டு பிரித்தானிய அரசு பிரித்தது போல் அல்லாமல் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதன் அடிப்படையில் 1920களில் உருவானது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. அதன்பிறகு இந்தியாவின் மாநிலங்களும் அதன் எல்லைகள் குறித்தான அபிப்ராயங்களும் அதிகமாயின.


வடவேங்கடம் தென்குமரி

ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்


என்ற தொல்காப்பிய சிறப்புபாயிரத்தின் பானம்பரனார் கூற்றினை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு தன் எல்லையினை வரையறுத்தது. ஆனால் அன்றைய நேரு தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு இதை ஏற்கவில்லை.


தமிழகம் தன் பீடு கலாச்சரத்தை விட்டு கொடுக்கா வண்ணம் தொடர்ந்து போராடியது. இதில் வாழ்வை இழந்தது பலர் தங்களையே அர்ப்பணித்தவர்கள் பலர், மரணித்தவர்களும் பலர்.


அவர்களில் ஒரு சிலரை பற்றி விளக்குவதே இக்கட்டுரை


ம.பொ.சி


ம.பொ.சிவஞானம் என்ற தமிழ்ஞானர் ம.பொ.சி அவர்கள் 1948 செப்டம்பர் 13ஆம் நாள் தார் ஆணையக் குழுவைச் சந்தித்து, 'தமிழ்நாடு' பெயர் மாற்றம் பற்றியும் மொழிவாரி மாநிலம் எல்லை பிரிப்பு பற்றியும் கோரிக்கை விண்ணப்பம் கொடுத்தார். 


அதன் சுருக்கம்


“சென்னை மாகாணத்தைத் தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னடம் என நான்கு மொழிவழி மாநிலங்களாக உடனே ஏக காலத்தில் பிரிக்க வேண்டும். தமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிய வேண்டியது அவசியம் என்பதைத் தமிழர்கள் உணர்கின்றனர். அந்தப் பிரிவினை அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். பிரிக்கப்படும் தமிழ் மாகாணத்தின் எல்லைகள் தெற்கே குமரி முனையாகவும் வடக்கே திருப்பதியாகவும் இருக்க வேண்டும். சென்னை நகரம் தமிழ்நாட்டிலேயே இருக்க வேண்டும். புதிய தமிழகம் சட்டசபை, மந்திரிசபையோடு கூடிய சுயாட்சியுள்ள மாகாணமாக இருக்க வேண்டும். அந்நிய நாட்டுறவு, போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவற்றை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுத்து, ஏனைய எல்லா அதிகாரங்களும் உள்ள சுதந்தர அரசுகளாக மாநிலங்கள் இருக்க வேண்டும்”.


ஆனால் தார் ஆணையம் 1948 டிசம்பர் 10ஆம் நாள் அளித்த அறிக்கையில், மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கக் கூடாது என்றும் நிர்வாக வசதிக்கேற்ப இப்போதுள்ள மாநிலங்களைப் பிரிக்கலாம் என்றும் பரிந்துரை செய்தது. இதனால் ம.பொ.சி அவர்கள் மொழிவாரி மாநில உருவாக்கத்தில் அளித்த பெரும் முயற்சி வீணானது


எல்லை பிரிப்பு பற்றிய வரலாற்று தரவில் தவிர்க்க முடியாத ஒருவராக ம.பொ.சி அவர்கள் விளங்குகிறார்கள். ஆந்திர அரசு திருப்பதியை கொண்ட போதும் சென்னையை தங்களது தலைநகரமாக ஆக்க ஆணை பிறப்பிக்க வேண்டுமென்ற போதும் "தலையை கொடுத்தாவது தலைநகரத்தை காப்போம்" என்று முழங்கியவர் ம.பொ.சி அவர்களே.


சங்கரலிங்கனார்


அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில், ஆந்திராவின் பெரும்பகுதியும், கர்நாடகாவின் பெல்லாரி போன்ற பகுதிகளும், கேரளாவின் மலபார் போன்ற பகுதிகளும் இணைந்து இரூந்தன.


மெட்ராஸ் மாகானத்துக்கு தமிழ் பேசும் ஒருவர் முதல்வராக முடியாத  நிலை இருந்தது.


சென்னையை சேர்ந்த தெலுங்கை தாய் மொழியாக கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் 1952 ஆம் ஆண்டு ஆந்திராவை சென்னையிலிருந்து தெலுங்கர்கள் வாழும் பகுதியை பிரித்து தரக்கோரி 56 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டார். அவரது போராட்டம் காரணமாக எழுந்த எழுச்சியில் 1953 ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திரா உருவானது. 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாடன.


பின்னர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவை  மொழிவாரியாக உருவாகி, உருவான நாளை அங்கெல்லாம் விழாவாக  கொண்டாட ஆரம்பித்தார்கள். எல்லோரும் எடுத்துக் கொண்ட பிறகு மிச்சம் மீதி இருந்த பகுதி மெட்ராஸ் மாகாணமாக தொடர்ந்தது.


உண்ணாவிரதம்


இதைக்கண்டு ஆத்திரம் கொண்ட சங்கரலிங்கனார், மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்பது உள்பட பன்னிரண்டு கோரிக்கைகளோடு விருதுநகர் தேசபந்து திடலில் 1956 ஆம் வருடம் ஜுலை 27 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். பொட்டி ஸ்ரீராமுலு போல ஒரு உயிர் போனால்தான் இதற்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் என நம்பினார்.


உண்ணாவிரதம் இருந்து அவர் உடல் நலிவடையத் தொடங்கியதும் தமிழக மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது.


அப்போதைய தமிழக தலைவர்களான அண்ணா, ம பொ சி, ஜீவா, கக்கன், இராஜாஜி, காமராஜர் போன்றவர்கள் அவரை சந்தித்து உண்ணாவிரத்தை முடித்து கொள்ளும்படி கோரினார்கள். கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டார் சங்கரலிங்கனார்.


சங்கரலிங்கனாரின் கோரிக்கைகள், மாநில அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என காமராஜர் தனது இயலாமையை தெரிவித்துவிட்டார் 


மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும் அசைந்து கொடுக்கவில்லை.


உணவையே தொடாத சங்கரலிங்கனார் தன் லட்சியத்தில் பின்வாங்காது, 76 நாட்கள் உண்ணாதிருந்து அக்டோபர் 13 1956 அன்று உயிர் துறந்தார்.


காங்கிரஸ் கட்சிக்காரர் என்றாலும், தன் கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் கட்சியை நம்பாமல், தான் மரணம் அடைந்தவுடன் தனது உடலை அடக்கம் செய்யும் பொறுப்பை, மாயாண்டி பாரதி என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார்.


உயிர் போனாலும் அவர் மூட்டிய தீ அணையவில்லை.


திமுகவும் ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இப்பிரச்சினையை கையில் எடுத்தன.


மார்சல் ஏ.நேசமணி


குமரி எல்லை தமிழகத்தில் சங்க காலத்திலிருந்தே உள்ள ஒரு அங்கமாகும். ஆனால் எல்லை பிரிவினையின் போது ஆந்திர அரசு எவ்வாறு நமது திருப்பதியை எடுத்து கொண்டதோ, அதே போல் கேரள அரசு குமரியை கைப்பற்ற நினைத்தது. இதை போராடி மீட்டு எடுத்தவர்களில் மார்சல் ஏ.நேசமணி மிக முக்கியமானவர் ஆவார்.


இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் (நாஞ்சில் நாடு) கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்குப் பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக தான் இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். இதற்கான போராட்டம் வெடித்தபோது, அதை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. நேசமணி தலைமையில் இந்தப் போராட்டம் எழுச்சி பெற்றது. நீண்ட போராட்டத்துக்குப் பின், கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்றது. இந்தியாவின் தென் எல்லை குமரி மாவட்டம். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது குமரிமாவட்டம் கேரளாவின் ஆளுகைக்குள் சென்றது. ஆனால் இந்த மாவட்டத்தைத் தாய் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்று இங்குள்ள மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. இதனால் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாகக் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தமிழகத்தின் தென் எல்லையாகக் குமரிமாவட்டம் மாறியது


சித்தூர் அரங்கநாத முதலியார்


வடக்கு எல்லை மீட்பு போராட்டத்தில் வழக்கறிஞர் சித்தூர் அரங்கநாத முதலியார் தவிர்க்க முடியாதவர் ஆவார். காரணம், வடக்கெல்லை பாதுகாப்பு குழுவின் தலைவர் அரங்கநாத முதலியாரே ஆவார்.

தமிழகத்தின் வடக்கு எல்லையான திருத்தணி, திருப்பதி பகுதிகளைத் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் நடத்திய போராட்டங்கள் வரலாற்றில் இடம்பெற்று உள்ளன. அரங்கநாத முதலியாரோடு திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் திருமலைப் பிள்ளை, காஞ்சி ஜோதிடர் சடகோபாலாச்சாரியார், ந.அ. ரசீத் ஆகியோர் அங்கம் வகித்தனர். திருத்தணி, சித்தூர் நகரம், நகரி ஆகிய ஊர்களில் வடக்கு எல்லைப் பாதுகாப்பு மாநாடுகளை இக்குழு ஒன்று சேர்ந்து நடத்தியது. இம்மாநாடுகளில் ம.பொ.சி., செங்கல்வராயன், திருமதி சரசுவதி பாண்டுரங்கன், முன்னாள் அமைச்சர் குருபாதம் மற்றும் பலரும் கலந்து கொண்டு பேசினார்கள். சித்தூர் அரங்கநாத முதலியார் இதில் தவிர்க்கமுடியாத இடத்தினை பெறுகிறார். 


தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள்


வடக்கெல்லை பாதுகாப்புக் குழு 1952இல் அமைக்கப்பட்டது. அதன் தலைவர் ம.பொ.சிவஞானம் ஆவார். செயலாளர் தளபதி கே.வினாயகம் இவர்கள் ஒன்று சேர்ந்து பல போராட்டங்களை நடத்தினார்கள். 144 தடையை மீறி ம.பொ.சி., கே. வினாயகம், மங்கலங்கிழார் உள்ளிட்டோர் 25.06.1953 அன்று கைதாகிச் சிறை சென்றனர்.


வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையிடைக்கப்பட்ட திருவாலங்காடு பி. கோவிந்தசாமி இராஜமுந்திரி சிறையிலும், பழனிமாணிக்கம் தடியடியிலும் பரிதாபமாக இறந்தார்கள். அவர்களது இறப்புக்கு அர்த்தம் கிடைக்க ம.பொ.சி அவர்கள் தீவிரமாக போராட்டத்திற்கு துணிந்தார்.


முடிவுரை


இந்தியா சுதந்தரம் பெற்ற பின்னும் மாநிலங்களுக்காக தியாகிகள் வாழ்ந்தார்கள். இத்தனை தியாகிகளது உழைப்புக்கு பின்னரே நாம் மகிழும் இந்த தமிழகம் நம்மிடையே காட்சிதருகிறது. இருந்தும் நாம் பல முக்கிய நகரங்களை இழந்தது உண்மை தான். அதற்கு பல தமிழ் பற்றற்ற தலைவர்களும் உடனிருந்தார்கள்.


ம.பொ.சி, சங்கரலிங்கனார், நேசமணி, மங்கலங்கிழார், கே.வினாயகம், அரங்கநாத முதலியார், பழனிமாணிக்கம், பி.கோவிந்தசாமி இன்னும் பெயர் தெரியாத பல தமிழரசு கட்சி காரர்களே எல்லைப்போர் தியாகிகளாக எல்லோர் உள்ளத்திலும் உள்ளார்கள்

கருத்துரையிடுக

புதியது பழையவை