முன்னுரை
திரை உலகில், எழுத்துலகில், இலக்கியத்தில்,இசைப்பாடலில், நாடகத்தில், சிறுகதையில், புதினத்தில், வரலாற்றுக் கதைகளில், கடித இலக்கியத்தில், சங்கத் தமிழை அள்ளித் தருவதில் என எத்தனை துறைகள் உண்டோ, அத்தனையிலும் தன் முத்திரையை பதித்தவர் கலைஞர். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் எழுதத் தொடங்கினால், ஆயிரம் பக்கங்கள் கொடுத்தாலும், அதில் அது அடங்காது.
நான் கூறப்போவது எல்லாம் அரசியல், ஆட்சி பொறுப்பில் கலைஞர் இருந்த போது, இந்தத் தமிழ் மண்ணுக்கு என்ன செய்தார் என்பதுதான்.
இந்தியாவில் இருபத்தெட்டு மாநிலங்கள் இருக்கலாம். எட்டு ஒன்றிய பகுதிகள் இருக்கலாம். படிப்பில், பண்பாட்டில், பகிர்ந்து வாழ்வதில், சாதியற்று வாழ்வதில், சம நோக்கில், சமூக நீதியை பேணுவதில், தலைச்சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான். இதற்கு காரணம் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான்.
அதிலும் கலைஞரது ஆட்சித் திறனால்தான் அனைத்து தரப்பினருக்கும் தேவையான அனைத்தும் கிடைத்தது. அதை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரை. முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் அவரது முக்கிய சாதனைகள் இதோ.
1989 ஆம் ஆண்டு ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டது. இதனால் பெண்கள் மீதான சமுதாயத்தின் அடக்குமுறைக்கு முடிவு கட்டப்பட்டது.
பெண்களுக்கு முப்பது சதவிகிதம் வேலை வாய்ப்பில் முன்னுரிமை.
1989 ஆம் ஆண்டு முதன்முதலாக பெண்கள் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு, இரண்டு கோடி பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம்.
ஊராட்சி நகராட்சி தேர்தலில் பெண்களுக்கு முப்பது மூன்று சதவிகித இடம். இப்போது ஸ்டாலின் ஆட்சியில் 50 சதவிகிதம்.
ஐந்தாம் வகுப்பு வரை பெண்களே ஆசிரியைகள்.
பெண்களுக்கு திருமண உதவித்தொகை.
பெண்களின் கர்ப்ப காலத்தில் 12000 வரை உதவித்தொகை.
இரு பெண் குழந்தைகள் பெற்றவர்களுக்கு ஐம்பதாயிரம் நிலை வைப்புத்தொகை, முதிர்வடையும் காலத்தில் மூன்று லட்சம் வரை கிடைக்க ஏற்பாடு.
சீரிய முயற்சியால் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு
கலப்பு மணம் புரியும் பெண்களுக்கு பத்தாயிரம் உதவி.
விதவை பெண்கள் திருமணத்துக்கும் உதவி.
பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.
உடல்நலக்குறைபாடு உடையவர்களை மருத்துவமனையில் சேர்க்க 108 ஆம்புலன்ஸ் திட்டம்.
இதன்தொடர்ச்சியாக மகப்பேறுக்கு தனி ஆம்புலன்ஸ். அமரர்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல அமரர் ஊர்தி.
ஏழைகளுக்கு நவீன சிகிச்சை வழங்க கலைஞர் காப்பீட்டு திட்டம். இது தற்பொழுது ஒரு குடும்பத்துக்கு ஐந்து லட்சமாக உயர்வு.
1972ஆம் ஆண்டு சேலம் உருக்காலை கொண்டு வரப்பட்டது. இன்று 27 நாடுகளுக்கு பல்லாயிரம் டன் எஃகு ஏற்றுமதி செய்து அன்னிய செலாவனியை ஈட்டித்தரும் நிறுவனமாக வளர்ச்சி.
1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டை முலம் 127 இன்டஸ்டிரியல் எஸ்டேட்கள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.
1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிப்காட் மூலம் 24 தொழிற்பேட்டைகள் 15 மாவட்டங்களில் அமைக்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு கலைஞரால் தொடங்கப்பட்ட டைடல் பார்க் மென்பொருள் பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய மென்பொருள் பூங்காங்களில் ஒன்று. இங்கு உலகத்தின் அனைத்து கம்யூட்டர் நிறுவனங்களுக்கும் பிளேட்ஃபார்ம் உண்டு.
பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாப்ட்ஃபேர் ஏற்றுமதி செய்வதுடன் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அள்ளித் தருகிறது.
முதன் முதலில் மத்திய அரசின் உதவியுடன் மெட்ரோ இரயில் திட்டம்.
பாமர மக்களுக்காக கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு
இந்தியாவிலேயே முதன்முறையாக குடிசை மாற்று வாரியம். குடிசைகள் ஒழிக்கப்பட்டு அடுக்கு மாடி வீடுகள்.
மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்சா ஒழிப்பு. அதற்கு பதில் ஆட்டோ வாங்க உதவி மற்றும் மானியம்.
பதவியேற்ற ஐந்து ஆண்டுகளில் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள். 2010 ஆம் ஆண்டு வரை 700 கல்லூரிகள்.
இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்யும் கண்ணொளித் திட்டம் மூலம் இலவச கண்ணாடி வழங்கப்பட்டது. இது பின்னர் அறுவையின்றி செய்யப்படும் இலவச கதிர்வீச்சு சிகிச்சையாக மாற்றப்பட்டது.
மாவட்டம்தோறும் இடைத்தரகர் இல்லாமல் உழவர்கள், தங்களது விலை பொருட்களை விற்க உழவர் சந்தைகள்.
அரிசனர், பிராமணர் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வாழ வழி செய்யும் சமத்துவபுரங்கள். 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரங்கள் தமிழகம் முழுவதும் 100 இடத்தில் அமைக்கப்பட்டது.
தனியாரிடம் இருந்த பேருந்து போக்குவரத்து பொதுவுடைமை ஆக்கப்பட்டது.
அனைத்து கிராமங்களுக்கும் வருமானம் இல்லாவிட்டாலும் பேருந்து இயக்கப்பட்டது.
கிராமங்களுக்கு குறைந்த கட்டணத்தில் மினி பஸ் விடப்பட்டது.
அரசு உழியருக்காக கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு
அரசு ஊழியர்கள் இறந்தால் குடும்ப நல நிதி. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை, விடுப்பு ஊதியம் போன்றவை உயர்த்தப்பட்டு அரசு ஊழியர் ஓய்வு பெறும் காலத்தில் சுமார் அறுபது லட்சம் பெறும் நிலை உருவானது.
உழவர்கள் தங்கள் உற்பத்தியைப் பெருக்க இந்தியாவிலேயே முதன் முறையாக இலவச மின்சாரம் வழங்கப்பட்டது
1985 முதல் இயற்கை பாதிப்புகளால் கடன் வாங்கி கட்டமுடியாமல் போன விவசாயிகளின், சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் கடனை ஒரே உத்தரவால் ரத்து செய்து அவர்களது கண்ணீரை துடைத்தவர் கலைஞர்.
கிராமப்புற வளர்ச்சிக்கு நமக்கு நாமே திட்டம். இது நூறு நாள் வேலைக்கு முன்னோடி திட்டமாகும்.
ஒக்கேனக்கல் உள்ளிட்ட நான்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
வருமுன் காப்போம் திட்டம். இது கால்நடைகளை நோயிலிருந்து காப்பாற்றும் ஒரு திட்டமாகும்.
செம்மொழியான தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற சிறப்பு நிலையை நடுவண் அரசு மூலம் பெற்றுக் கொடுத்தவர் கலைஞரே.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக கலைஞர் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்த இச்சட்டம் ஸ்டாலின் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.
சமூக நீதியை பாதுகாக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவிகிதமும் பிற்பட்டவருக்கு 31 சதவிகிதமும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டது.
ஏழைகள் பகுத்தறிவாளர்கள் செலவில்லாமல் திருமணம் செய்யும் சீர்திருத்த திருமணம்,சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
சென்னை தமிழ்நாடானது.
அய்யன் திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும் குமரியில் 133 அடி உயர சிலையும் உருவாக்கப்பட்டது.
வள்ளுவரின் வழி நடக்க அனைத்து பேருந்துகளிலும் திருக்குறல் எழுதி வைக்கப்பட்டது.
உலகமெலாம் பரவி கிடக்கும் தமிழோரை அழைத்து வந்து உலகத் தமிழ் மற்றும் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.
அறிவியல் துறை
முதன் முதலாக கணினி தமிழ் உருவாக்கப்பட்டது. மாவட்டத் திட்ட புள்ளிவிபரங்கள் கணினி மூலம் இணைக்கப்பட்டது.
அறிவினை வளர்க்க, ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. இங்கு ஈ லைப்ரரியும் செயல்படுகிறது.
ஆசியாவிலேயே பெரிய, அனைத்து வசதிகளுடன் கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. மதுரையிலும் மிகப்பெரிய மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது.
பொது விநியோகத்திட்டம் மேம்படுத்தப்பட்டு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. பின்னர் தற்பொழுது விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
பருப்பு,எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் குறைவான விலையில் நியாவிலை கடைகளில் வழங்கும் முறை இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டது. பத்து மளிகைப்பொருட்கள் 50 ரூபாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மதிய உணவுத்திட்டம் மேம்படுத்தப்பட்டு வாரம் ஐந்து முட்டையுடன் உண்மையான சத்துணவாக வழங்கப்பட்டது.
அனைத்து வகையிலும் தொழிலாளர்கள், தொழில் ரீதியாக பிரிக்கப்பட்டு நலவாரியங்கள் அமைக்கப்பட்டன. நலவாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் திருமண உதவி வழங்கப்பட்டது. தற்பொழுது நல வாரிய உறுப்பினர் இறந்தால் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் வழங்கும் திட்டம் அமுலில் உள்ளது.
இந்தியாவில் ஏற்றுமதி ஆகும் கார்களில் முப்பது சதவிகிதம் தமிழ்நாட்டின் பங்கு எனக் கூறும் அளவுக்கு ஹூன்டாய் ஃபோர்டு போன்ற கார் தொழிற் சாலைகள் கலைஞர் காலத்தில் தொடங்கப்பட்டன.
இரண்டு கோடி இல்லங்களுக்கும் கலர் டிவி வழங்கப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாத உதவித் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. மொழிப் போர் தியாகிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது.
இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கும், மாற்றுத்தினாளிகளுக்கும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டது.
நில உச்சவரம்பு சட்டம் இயற்றப்பட்டு ஒரு சிலரிடம் குவிந்து கிடந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கபட்டது.
அரசு நிலங்கள் நத்தம் புறம்போக்கு நிலங்கள், சிலவகை கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதனால் பயன் அடைந்தவர்கள் பத்து லட்சம் பேர்.
வேலைவாய்ப்பு தந்த கலைஞர்
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடைவிதித்து இருந்தாலும் கலைஞர் இருக்கும் வரை தமிழ்நாட்டில் அந்த சட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
இதே போல நீட் தேர்வை மத்திய அரசு புகுத்தினாலும் கலைஞர் இருக்கும் வரை தமிழ்நாட்டுக்குள் நீட் நுழையவில்லை.
ஊனமுற்றவர்கள் மாற்றுத்தினாளிகள் எனவும் மூன்றாம் பாலினத்தவரை திருநங்கையர் எனவும் பெயர் மாற்றம் செய்து நலவாரியமும் உதவித்தொகைகளையும் அள்ளி வழங்கியவர் கலைஞர்.
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1967 வரை பஞ்சம் தலைவிரித்தாடிய தமிழ்நாட்டில் பசுமைப் புரட்சி, வெண்மை புரட்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு, அரிசி உற்பத்தியிலும், பால் உற்பத்தியிலும் தன்னிறைவை கலைஞர் காலத்தில் அடைந்தது தமிழகம்.
தமிழ்வழி கல்வியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டது.
காவிரி ஓடும் தடங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டன.
பிச்சை எடுப்போருக்கு கருணை இல்லங்களும் தொழு நோயாளிகளுக்கு தொழுநோய் இல்லங்களும் தோற்றுவிக்கப்பட்டன.
புதிய பூம்புகார் உருவாக்கப்பட்டு கண்ணகிக்கு கோட்டம் எழுப்பப்பட்டது. பத்து தமிழறிகள் சிலைகளோடு சென்னை கடற்கரையில் கண்ணகிக்கும் சிலை வைக்கப்பட்டது.
கல்வி நிலையகங்கள் கல்வி பாகுபாடு காட்டி, கொள்ளையடிப்பதை தடுக்க சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் கலைஞர்.
முதல் பட்டதாரி மாணவருக்கு கல்லூரி கட்டணம் இலவசமாக்கப்பட்டது. குடும்பத்தின் முதல் பொறியியல் பட்டதாரி மாணவருக்கு, 80000 கட்டண சலுகை கொடுத்தவர் கலைஞர்.
மகளிர் காவலர்களை முதலில் நியமித்தவர் கலைஞர்.
அரசின் வளர்ச்சி
குற்றவாளிக்கென மிகப்பெரிய புழல் சிறை உருவாக்கப்பட்டது. சிறைக் கைதிகளும் மனிதர்கள்தானே என்று சுவையான உணவுகள் வழங்கப்பட்டது.
இலவச எரிவாயுத் திட்டம், அடுப்புடன் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கலைஞரால் தொடங்கப்பட்டது.
வட்டம் தோறும் பிற்பட்டோர் நலவிடுதிகள் துவங்கப்பட்டன.
மின்சார மற்றும் குடிநீர் வேளாண்மை தேவைகளுக்காக இருபது அணைகளை கட்டியவர் கலைஞர்.
தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடி, என்னூர் உள்ளிட்ட ஆறு மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது. நெய்வேலியில் இரண்டு யூனிட்கள் தமிழக நிதியில் கலைஞரால் உருவாக்கப்பட்டவை. அதிக அளவில் காற்றாலைகள் உருவாக்கப்பட்டதும் கலைஞர் ஆட்சியில்தான்.
119 நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. அதில் மதுரை உயர் நீதி மன்றமும் ஒன்று. விடுமுறை கால நீதிமன்றங்களையும் மாலை நேர நீதிமன்றங்களையும் கலைஞரே உருவாக்கினார்.
சென்னை போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க இருபது பெரிய மேம்பாலங்களும், தமிழ்நாடு முழுதும் ஐயாயிரம் மேம்பாலங்களும் உருவாக்கப்பட்டன.
ஆயிரம் பேர் கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தி தரப்பட்டது
ஓடாத திருவாரூர் தேரை ஓட்டியவர் கலைஞர். தூர் வாராமல் கிடந்த மயிலை பார்த்தசாரதி கோவில் குளத்தை புணரமைத்தவர் கலைஞர்.
பத்தாயிரம் கோவில்கள் திருப்பணி முடித்து குடமுழுக்கு செய்யப்பட்டது.
அர்ச்சகர்கள் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
சத்ய சாய்பாபா உதவியுடன் சென்னைக்கு குடிநீர் வழங்க தெலுங்கு கங்கை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சென்னையில் நூறு கோடி செலவில் பொது மருத்துவமனை கொண்டு வந்தவர் கலைஞர். மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக்கல்லூரி என அறிவித்து தொன்னூறு சதவிகிதம் நிறைவேற்றி காட்டியவர் கலைஞர்.
மே தினத்தை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தவர் கலைஞர். நபிகள் நாயகம் பிறந்த நாளையும் விடுமுறை நாளாக அறிவித்தார்.
வேளாண்மை துறை
மிகப் பிற்படுத்தப்பட்கவர்களுக்கு இருபது சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதில் 3.5% முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததும் கலைஞர்தான். தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில், ஒரு சதவிகிதம் அருந்ததியருக்கு மட்டும் வழங்கப்பட்டது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. நெல்லுக்கும் கரும்புக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
சரியாக வேளாண்மை கடன் கட்டுபவர்களுக்கு, வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.
13000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டது. 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகளில் 7000 பள்ளிகளை உருவாக்கி சாதனை செய்தவர் கலைஞர்.
பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் ஆக்கப்பட்டது.
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் நீராடுங் கடலுடத்த தமிழ்தாய் வாழ்த்து ஆக அறிவிக்கப்பட்டது.
பொறியியல் படிப்பிக்கு நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது.
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட சட்டம் இயற்றப்பட்டது.
முதன் முதலில் அம்பேத்கார் பெயரில் சட்டப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
காமராஜர் கண்ணதாசன் போன்ற நாட்டுக்கும் மொழிக்கும் பாடுபட்டவர்களுக்கு மணிமண்டபங்கள் எழுப்பப்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு கோட்டை கட்டியவர் கலைஞர்.
கோவையில் வேளாண்மை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் உருவாக்கியதும் கலைஞர்தான்.
கால்நடைகளுக்கு கூட பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கியவர் கலைஞரே.
மாணவர் நலன்
மத்தியப் பல்கலைக் கழகத்தை திருவாரூருக்கு கொண்டு வந்தது கலைஞர்தான்.
நெசவாளர் பயன் பெற இலவச வேட்டி சேலை திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
உருது பேசும் முஸ்லிம்கள் பிற்பட்டவர் பட்டியலில் இணைத்தவர் கலைஞர். உலாமாக்களுக்கு உதவி கொடுத்தவர் கலைஞர்.
மாநில முதல்வர்கள் விடுதலை நாளில் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர்.
இன்று தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழர்கள் இருந்தாலும் உணவு பஞ்சம் என்பது அறவே இல்லை. இன்று பீகார் உபி ஜார்கண்ட் ஒரிசா அஸ்ஸாம்,மேற்கு வங்காளம் போன்ற வெளி மாநிலத்தவர் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு பிழைப்பு கொடுப்பது தமிழ்நாடுதான். அதற்கு கலைஞர் உருவாக்கி சென்ற அடிப்படை தொழில் கட்டமைப்புகளே காரணம்.
> பௌத்தத்தை நோக்கி அம்பேத்கரும் காந்தியடிகளும்
முடிவுரை
முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு தான் இன்றும் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. தனது 94வது வயதில் இறந்த போது அவரது கல்லறையில் உள்ள சந்தனப் பேழையில் எழுதப்பட்ட வாசகம்:
"ஓய்வு இல்லாமல் உழைத்தவன்
இதோ ஓய்வு கொண்டு இருக்கிறான்" என்பதே ஆகும்
ஆம், மரணம் மட்டுமே இந்த நூற்றாண்டின் அந்த மாமனிதனுக்கு ஓய்வு கொடுத்தது.
ஜெ. மாரிமுத்து