➤ பௌத்தத்தை நோக்கி அம்பேத்கரும் காந்தியடிகளும்
➤ முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு
மதிய உணவு திட்டம்
காமராஜர் தமிழ்நாடு முதல்வராக இருந்த போது கிராமப்புற சாலை ஒன்றில் காரில் செல்கிறார். சில சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். திடுக்கிட்ட காமராஜர் காரை நிறுத்த சொல்கிறார். சிறுவர்கள் அருகில் சென்ற காமராஜர் "நீங்களெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லையா?" என்று கேட்கிறார். "எங்கள் ஊரில் பள்ளிக்கூடமே இல்லையே" என்கிறார்கள்.
"பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தால் நீங்கள் பள்ளிக்கு சென்று படிப்பீர்களா?" என்று கேட்கிறார் காமராஜர்.
"நாங்கள் மாடு மேய்த்தால், எங்களை மாடு மேய்க்க சொன்னவர்கள் மதியம் உணவு கொடுப்பார்கள். நாங்கள் பள்ளிக்கு வந்துவிட்டால் எங்களுக்கு யார் சோறு போடுவார்கள்" என்று அந்த குழந்தைகள் கேட்கிறார்கள். பதில் சொல்ல முடியவில்லை முதல்வரால். அவர்களது கேள்வி நெஞ்சில் முள்ளாக தைத்தது.
சென்னை சென்றதும் கல்வித்துறை செயலாளர் கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலுடன் ஆலோசிக்கிறார். அவரும் உணவு அளிப்பதற்கு ஆதரவாக கருத்து சொல்கிறார்.
"ஏழைப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் வர, மதிய உணவு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?" என்று நிதித்துறை செயலக அதிகாரிகளை கேட்கிறார். இப்போதைய நிதி நிலையில் இதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
"நிதி இல்லை என்றால் தெருவில் நின்று பிச்சை எடுத்து தருகிறேன். திட்டத்தை தொடங்குங்கள்" என்கிறார். முதல்வரின் உறுதியைக் கண்ட அதிகாரிகள் பதினாறு லட்சம் குழந்தைகள் சாப்பிடும் மதிய உணவு திட்டத்தை, முப்பதாயிரம் பள்ளிகளில் தொடங்குகிறார்கள்.
இப்படித்தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் காமராஜர்.
பெரியார் கருத்து
நிதி நெருக்கடி என்று இராஜாஜியால் மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளையும் திறந்து புதிதாக ஐந்து ஆண்டுகளில் 14000 தொடக்கப்பள்ளிகளையும் திறந்து கல்விக்கு கண் கொடுத்தவர் காமராஜர். கல்வியை மட்டும் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டால் இந்த நாடு ஒரு நாள் முன்னேறிவிடும் என உறுதியாக நம்பினார்.
"அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
என்றானே நம் தலைமைக்கவிஞன் பாரதி.
காமராஜரை எதிர்த்து அரசியல் செய்த தந்தை பெரியார் கூட 1962 ஆம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டத்தில் சொல்கிறார், "எனக்கு என்பத்திரண்டு வயது ஆகிவிட்டது எப்போது வேண்டுமானாலும் நான் மரணம் அடையலாம். மரண சாசனம் போல சொல்கிறேன். மராட்டியன் காலத்திலோ, நாயக்கர் காலத்திலோ, முஸ்லிம் மன்னர் காலத்திலோ, வெள்ளையர் காலத்திலோ உங்கள் கல்விக்கு வகை செய்யப்படவில்லை. நம்புங்கள் தோழர்களே! இந்த நாடு உருப்புட வேண்டுமானால் கல்விக்கண் கொடுத்த பச்சைத் தமிழன் காமராசரை, இன்னும் பத்து வருடமாவது கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். காமராசரை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை" என்றார்.
யார் இந்த காமராஜர்?
1903 ஆம் ஆண்டு விருதுப்பட்டியில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். குல தெய்வம் பெயரான காமாட்சி என்று பெயர் வைத்துவிட்டு, சிவகாமி அம்மாள் "ராஜா" என்று தனது மகனை வாய் நிறைய அன்போடு அழைத்ததால் காமாட்சி, காம ராஜரானார்.
விருதுப்பட்டியிலேயே 1908 ஆம் ஆண்டு ஏனாதி நாராயண வித்யா சாலையில் ஆரம்பக்கல்வி படித்தார். அது கட்டணம் கட்டி படிக்கும் கல்வி.
பின்னர் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் உயர்நிலை படிப்பில் சேர்ந்தார். நாடார் சமூகத்தினர் பணம் வசூல் செய்து ஏழை பிள்ளைகளுக்கு இலவச கல்வியும் உணவும் கொடுத்த பள்ளி இது.
ஒருவன் படிக்க வேண்டும் என்றால் கல்வியும் உணவும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதை அவருக்கு உணர்த்தியதும் அந்த பள்ளிதான்.
ஆறாம் வகுப்பு படிக்கும்போது காமராஜரது தந்தையார் குமாரசாமி நாடார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நகைகளை விற்று குடும்பத்தை காக்க வேண்டிய நிலை சிவகாமி அம்மாளுக்கு ஏற்பட்டது.
"தாயோடு அறுசுவை போம்
தந்தையோடு கல்வி போம்"
என எழுதினாரே அவ்வை பாட்டி அது காமராஜர் விஷயத்தில் உண்மையாகி போனது.
குடும்பத்தை காப்பாற்ற தாய் மாமாவின் துணிக் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
அரசியல்
துணிக்கடையில் வேலை பார்த்தபோது சேலம் வரதராஜ நாயுடு, இராஜாஜி போன்றவர்கள் பேச்சால் கவரப்பட்டு விடுதலை இயக்கத்தில் இணைந்தார். சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் ஆகஸ்ட் புரட்சி, வைக்கம் சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் அந்நிய துணிகள் எரிப்பு, வெள்ளையனே வெளியேறு, ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் ஈடுபட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைபட்டு கிடந்தார். பின்னர் காங்கிரஸ் தலைவரானார்.
விடுதலை அடைந்த பிறகு பொருளாதார பாதிப்பினால் தமிழக முதல்வரான இராஜாஜி 6000 பள்ளிக்கூடஙகளை மூடினார். பாதி ஆசிரியர்களை நீக்கிவிட்டு, அரை நாள் பள்ளியும், அரை நாள் குலக்கல்வி எனப்படும் தொழிற்பயிற்சியும் கொண்டு வந்தார்.
குலக்கல்வி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு வந்ததால் இராஜாஜி முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார். அடுத்த முதல்வர் பதவிக்கு போட்டி வந்த போது, இராஜாஜி பக்தவசலத்தை முன்மொழிய சொல்லி, சி.சுப்பிரமணியனை நிறுத்தினார். ஆனால், கமிட்டி உறுப்பினர்கள் ஆதரவுடன் யாரும் எதிர்பாராத வகையில் காமராஜர் முதல்வராக தேர்வானார்.
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், எந்த காழ்புணர்ச்சியும் இன்றி திறமைவாய்ந்தவர்கள் என்ற காரணத்தால் எதிர்த்து நின்ற சி.சுப்பிரமணியத்தையும் பக்தவசலத்தையும் தனது மந்திரி சபையில் சேர்த்துக்கொண்டார். தொழிற் துறையை ஆர்.வெங்கட்ராமன் பார்த்துக் கொண்டார்.
கல்வி பணி
தனது ஆட்சியில் கல்விக்கே முதலிடம் கொடுத்தார் காமராஜர். 1957ல் 15800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள் 1962ல் 29000 ஆக உயர்ந்தது. உயர்நிலை பள்ளிகள் மூன்று மடங்காயின.
"கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற பாரதியின் வரியை உண்மையாக்க இரவும் பகலும் பாடுபட்டார் காமராஜர்.
தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 16 லட்சத்திலிருந்து 48 லட்சமாக உயர்ந்தது. அதில் 16 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 3 லட்சம் உயர்நிலை பள்ளிகள் 13 லட்சமாக உயர்ந்தது. தொழிற் கல்வி தொடங்கப்பட்டது. மெட்ராஸ் ஐஐடி தொடங்கப்பட்டது காமராஜர் ஆட்சியில்தான்.
பள்ளிக்கூடத்தை கட்டினாலும் பிள்ளைகள் சரியாக சேரவில்லை. ஒரு முறை ஒரு தாயிடம் "பிள்ளையை ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை" என்று கேட்டார் காமராஜர். அதற்கு அந்த தாய் "என் பிள்ளை படித்து தாசில்தாரா ஆக போகிறான்?" என்று கேட்டார். உடனே காமராஜர் "உன் பிள்ளையை படிக்க வை. நான் தாசில்தார் ஆக்குகிறேன்" என்றார்.
காமராஜரின் சாதனைகள்
கல்விப் பணிகள் அல்லாது தொழில் வளர்ச்சியிலும், பாசன வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும் காமராஜருக்கு இணை யாரும் கிடையாது.
- நெய்வேலி நிலக்கரி அனல் மின் நிலையம்.
- கல்பாக்கம் அனு மின் நிலையம்.
- திருச்சி திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை.
- கிண்டி டெலி பிரிண்டர் ஆலை
- சேலம் இரும்பு உருக்கு ஆலை.
- பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை.
- ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை.
- மேட்டூர் காகித ஆலை.
- அரக்கோனம் ஸ்டீல் பிளான்ட்
- சங்ககிரி சிமென்ட் ஆலை மற்றும்
- 14 சர்க்கரை ஆலைகள்
- 159 நூற்பு ஆலைகள் காமராஜர் காலத்தில் உருவானவை.
பாசன வசதிகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க,
- வைகை அணை
- மணிமுத்தாறு அணை
- கீழ்பவானி அணை
- பரம்பிக்களம் அணை
- சாத்தனூர் அணை
- கிருஷ்னகிரி அணை
- ஆரணியாற்று அணை
போன்றவை ஏற்படுத்தி கொடுத்தவர் காமராஜர்.
இலவச கல்வி, இலவச மதிய உணவு, இலவச பாடப்புத்தகம் எல்லாவற்றுக்கும் முன்னோடி காமராஜரே.
சுதந்தரம் வாங்கிய போது பதினேழு சதவிகிதம் பேர்தான் படிப்பறிவு பெற்றவர்கள். அதை தனது ஆட்சி முடியும்போது 40 சதவிகிதமாக்கி சாதித்தார் காமராஜர்.
திருவெறும்பூரில் பெல் தொழிற்சாலை அமைக்க முடியாது என்று சொன்ன பொறியாளரிடம்,"படிக்காதவன் நான் இப்படி சொல்லலாம். படித்தவன் நீ இப்படி சொல்லலாமா?" என கேட்டு, "பத்து நாளில் புராஜெக்டை ரெடி பண்ணிக்கொண்டு வா" என உத்தரவிட்டவர் காமராஜர்.
முதலமைச்சர் என்ற முறையில் மருத்துவ படிப்புக்கு பத்து சீட் காமராஜருக்கு ஒதுக்கீடு வந்த போது விண்ணப்பங்களில் பெற்றோர் என்ற இடத்தில் கைநாட்டு வைத்தவர்கள் குடும்பத்தை தேர்ந்தெடுத்து, படிப்பறிவில்லா குடும்பத்தவரை டாக்டர் ஆக்கியவர் காமராஜர்.
ஓமந்தூரார் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை (Communal GO) மெட்ராஸ் கோர்ட ரத்து செய்த போது, தனது செல்வாக்கால் நேருவிடம் சொல்லி அரசியல் சட்டத்தை முதன்முறையாக திருத்தி 1951ல் பிற்பட்டவருக்கு 25% மற்றும் தாழ்த்தப்பட்டவருக்கு 15% ஒதுக்கீடு கிடைக்க ஏற்பாடு செய்தவர் காமராஜர்.
எளிமை
சாதாரண வார்டு கவுன்சிலரே ஆடி காரிலும், பிஎம்டபிள்யூ காரிலும், பவனி வரும்போது, இரண்டு முறை முதல்வராக இருந்தவர், இரண்டு பிரதமர்களை உருவாக்கிய நம் காமராஜர் பெயரில் சொந்தக் கார் கிடையாது.
அரசியல்வாதிகள் என்றாலே பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், ஆடம்பர பங்களாக்களுக்கும் அதிபதிகளாக இருக்கும் இக்காலத்தில் வாடகை வீட்டில்தான் கடைசிவரை வாழ்ந்தார் என்பதை யாராலும் நம்ப முடிகிறதா?
மனைவி பிள்ளைகள் என்று வந்துவிட்டால், "இந்த மக்களுக்காக வாழ முடியாது" என திருமணமே செய்யாமல் ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்தாரே அவரை நாம் மறக்கலாமா?
சாப்பிடுவதற்கு தட்டும், குடிப்பதற்கு டம்ளரும், உடுத்துவதற்கு சில கதராடைகளும், நூற்றி ஐம்பது ரூபாய் ரொக்கமும், பாயும் தலையனையும்தான் அவருடைய சொத்துக்கள் என்று சொன்னால் நம்மால் நம்ப முடிகிறதா?
காமராஜர் சாதனைகளை ஒரு குறும்படமாக டாகுமெண்டரியாக எடுத்தால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்று ஒரு திரையுலக நண்பர் கூறினார். "எவ்வளவு செலவாகும்" என்று காமராஜர் கேட்டார். "மூன்று லட்சம் இருந்தால் முடித்து விடலாம்" என்றார் நண்பர். அதற்கு காமராஜர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"அந்த மூன்று லட்சத்தை போட்டால் இன்னும் இரண்டு பள்ளிகளை திறந்துவிடுவேன்" என்பதே ஆகும்.
நூறு கார்கள் அணிவகுத்து சென்றால்தான் மரியாதை என்கிற காலத்தில் சைரன் பொருத்திய கார் பாதுகாப்புக்கு வந்த போது "நான் செத்தா போய்விட்டேன்? ஏன் எனக்கு சங்கு ஊதுகிறீர்கள்" என கேட்டவர் காமராஜர்.
புகழ்
உத்தரபிரதேசத்தில் இந்திரா காந்தியோடு காமராஜர் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். காமராஜரை பேச சொல்லி மக்கள் கூச்சலிடுகிறார்கள். காமராஜருக்கு இந்தி தெரியாது. இருந்தாலும் தமிழில் பேசுகிறார். அதை புரிந்து கொண்டது போல மக்கள் ஆராவாரம் செய்கிறார்கள்.
அவர்களிடம் இது பற்றி பின்னர் கேட்கும்போது "அவர் காலா காந்தி. எங்களை போலவே எளிமையாக இருக்கிறார். எங்கள் உள்ளமும் அவர் உள்ளமும் ஒன்றுதான். அதனால்தான் அவரை விரும்புகிறோம்" என்றார்கள். மாற்று மாநிலத்தவரையும் கவர்ந்தவர் நம் காமராஜர்.
காமராஜரை எதிர்த்து அரசியல் செய்த கலைஞர்தான் காமராஜருக்கு பல்கலைக்கழகமும், மணிமண்டமும், அமைத்தார். கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என பெயர் சூட்டினார்.
காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என 2006 ஆம் ஆண்டு அறிவித்த கலைஞர், வரும் ஆட்சியாளர்கள் அதைக் கொண்டாடாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று அதை பள்ளிகளில் கொண்டாடுவதை சட்டமாக்கினார். அதற்கு நிதியையும் உருவாக்கி தந்தார்.
➤ இந்த கட்டுரையை PDF வடிவில் பெற இங்கே தொடவும்
முடிவு
இன்றைய தமிழகத்தின் ஒரு வருட பைனான்ஸ் பட்ஜெட் 5 லட்சம் கோடி. ஆனால் காமராஜர் ஆட்சிக்கு வந்த 1953 ஆம் வருட பட்ஜெட் வெறும் 50 கோடி. ஆட்சியை விட்டு சென்ற 1963 ஆம் ஆண்டு பட்ஜெட் 125 கோடி. இவ்வளவு சிறிய தொகையை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு ஒரு பொற்கால ஆட்சியை ஏற்படுத்தி தந்தார் காமராஜர் என்றால் படிக்காத அந்த மேதையின் அறிவாற்றலை நாம் அறியலாம். வாழ்க அவரது புகழ்!
ஜெ மாரிமுத்து