அண்மை

விநாயகர் சதுர்த்தி: யாருக்கு லாபம்?

விநாயகர் சதுர்த்தி: யாருக்கு லாபம்?


ஒரு வீடு கட்டினாலும், ஒரு கடை திறந்தாலும், கணபதி ஹோமம் செய்யாமல் யாரும் தொடங்குவதில்லை. கோவிலுக்கு சென்றால் கூட முதல் வணக்கம், மூலவரைவிட கணபதிக்குதான்.


விநாயகர் சதுர்த்தியை பிரமாண்டமாக கொண்டாடுவது வட மாநிலங்களில் பிரபலம். குறிப்பாக மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலம்.


கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழகத்திலும் விநாயகருக்காக பெரிய அளவில் சிலைகளை வாங்குவதும், பூஜை செய்வதும், நீர் நிலைகளில் கரைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.


இந்த வருடம் தமிழகத்தில்  இரண்டு  லட்சம் பிள்ளையார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.


ஒரு சிலை ஐந்தாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை செலவு செய்து வாங்கப்படுகிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து பிள்ளையாரை வாங்கி, ஆற்றிலும் கடலிலும் கரைப்பதால் யாருக்கு என்ன லாபம் என்று நான் கூட நினைத்ததுண்டு.


ஆனால் உண்மையில் ஒரு கோடி பேருக்காவது இதில் பிழைப்பு நடக்கிறது என்று நான் அறிந்த போது, என்னாலேயே நம்ப முடியவில்லை.


சிலை தயாரிப்பு


முதல் கட்டமாக இராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் இரண்டு மாதத்திற்கு முன்பே மாவட்டத்துக்கு மாவட்டம் முகாமிட்டு சிலை தயாரிப்பு பணியை தொடங்குகிறார்கள்.


இதனால் சுமார் ஐயாயிரம் தொழிலாளர்களுக்கு ஒரு வருடத்துக்கு உள்ள வாழ்வாதாரமும் வருமானமும்  கிடைத்து விடுகிறது. அவர்கள் வருவதற்கும் போவதற்கும் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களுக்கும்  வருமானம் கிடைக்கிறது.


நிரந்தரமாக சிற்பக்கூடங்கள் வைத்து விநாயகர் சிலைகள் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளது.


விநாயகர் சிலைகள் தயாரிக்க பிளாஸ்டர் ஆப் பேரிஸ் என அழைக்கப்படும்  சாக்பீஸ் தயாரிக்க பயன்படும் ஜிப்சமும், தேங்காய் நாரும், தெர்மாகோலும், களிமண்ணும் பெருமளவில் தேவைப்படுகிறது. இரண்டு லட்சம் விநாயகர் சிலைகள் என்பதால் டன் கணக்கில் ஜிப்சமும் தேங்காய் நாரும் தேவைப்படடுகிறது.


தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் தேங்காய் நாருக்கு கிராக்கி ஏற்படுவதால் தென்னை விவசாயிகள் பலன் அடைகிறார்கள்.


ஒரு அடி முதல் இருபது அடி வரை உள்ள விநாயகர் சிலைகளை செய்ய அச்சு தேவைப்படுகிறது. அந்த அச்சுகளை மொத்தமாக வாங்கி வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை வாடகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.


ஜிப்சம் சாதரணமாக 50 கிலோ மூட்டை 200 ரூபாய் விற்பனை ஆகிறது என்றால் இந்த விநாயகர் சீசனில் 250 வரை விற்பனை ஆகும். இரண்டு லட்சம் விநாயகர் சிலைகளுக்கு 2 கோடி கிலோ ஜிப்சம் பயன்படுத்தபடுகிறது. இதனால் ஜிப்சம் வியாபாரிகளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கிறது.


சிலைகளுக்கு வர்ணம் தீட்ட பத்து லட்சம் லிட்டர் பெயின்ட் விற்பனையாகிறது. இதனால் பெயிண்ட் கடை நடத்துபவர்களுக்கு மட்டுமல்ல, பெயின்ட் அடிக்கும் பெயின்டர்களுக்கும், ஸ்பிரே பெயின்டர்களுக்கும் மாத கணக்கில் வருமானம் கிடைக்கிறது. ஓவியர்களுக்கும் இதில் பங்கு உண்டு.


இந்த சிலைகளை ஏற்றி தமிழ்நாடு முழுதும் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவர டாடா ஏஸ் போன்ற சிறு வாகனங்களும், பெரிய சிலைகளை கொண்டு வர கன்டெய்னர் லாரிகளும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இரண்டு லட்சம் வாகன உரிமையாளர்களுக்கு வாடகை மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது.


வாகனங்களை ஓட்டும்  டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் சம்பளம் மற்றும் படி கிடைக்கிறது. வாகனங்களுக்கு போடப்படும் டீசல் பெட்ரோல் போன்றவை சுமார் ஒரு  கோடி லிட்டர் குறிப்பிட்ட தினங்களில் விற்பனை ஆகிறது. நூறு கோடி ரூபாய்க்கு டீசல் பெட்ரோல் விற்பனை ஆகிறது.


இதனால் பெட்ரோல் டீசல் முகவர்களுக்கும்,  நூறு ரூபாய் பெட்ரோல் டீசலுக்கு ஐம்பது ரூபாய் வரியாக வாங்கும் மத்திய மாநில அரசுகளுக்கும், நல்ல லாபம் கிடைக்கிறது. விழா முடிந்து பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க எடுத்து செல்வதற்கும், இந்த வாகனங்களே பயன்படுத்தபடுகிறது. அப்போதும் அவர்களுக்கு வருமானம்தான்.


ஒவ்வொரு தெருவிலும் வைக்கப்படும் விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி முதல், மூன்று நாளைக்கு  பூ அலங்காரங்கள் பூஜைகள் செய்து, சுண்டல், சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை போன்றவை படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது.


மூன்று நாட்கள் தொடர்ந்து விநாயகருக்கு விளக்கேற்றுவதால் விளக்கேற்றும் எண்ணெயும், சுண்டல் செய்து படைப்பதால் சுமார் இருபதாயிரம் மூட்டை கொண்டைக் கடலையும் மளிகைக்கடைகளில் விற்பனை ஆகிறது. சூடம் சாம்பிராணி பத்தி இல்லாமல் சாமிக்கு பூஜை இல்லை. இதுவும் பெருமளவு விற்பனை ஆகிறது. கொழுக்கட்டை மாவு தயாரித்து விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் பத்தாயிரம் லோக்கல் கம்பெனிகள் உள்ளன.


வெற்றிலை பாக்கு வியாபாரிகளுக்கு ஒரு மாத வருமானம் இந்த மூன்று நாளில் கிடைத்துவிடும்.


பூவன் வாழைப்பழம் மட்டும் இந்த  மூன்று நாட்களில் ஒரு லட்சம் தார் விற்பனை ஆகும். வாழை விவசாயிகள் மட்டும் பத்தாயிரம் பேர் இதனால் பயன் அடைவார்கள்.


பூரணம் வைத்த கொழுக்கட்டை செய்ய  அச்சு வெல்லமும், கடலை பருப்பும் முக்கிய பொருட்களாகும். விநாயகர் சதுர்த்தி ஊர்வல காலங்களில் 30 கிலோ கொண்ட சுமார் பத்தாயிரம் மூட்டை வெல்லம் விற்பனை ஆகிறது.


இதனால் கரும்பு விவசாயிகளுக்கு வெல்லம் மூலம் நல்ல விலைகிடைக்கிறது. மளிகைக் கடைகளில் கடலைப் பருப்பு விற்பனையும் அமோகமாக நடக்கிறது.


பிட் நோட்டிஸ் அடித்து பிள்ளையாருக்கு வசூல் செய்வதால் சுமார் இரண்டு லட்சம் அச்சக உரிமையாளர்களுக்கும், அச்சகத்தில் வேலை செய்பவர்களுக்கும் வருமானம் கிடைக்கிறது.


மாவிலை தோரண  விற்பனை, தென்னை ஒலை தோரண விற்பனை போன்றவை கிராமத்து மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைகிறது.


பிள்ளையார் வீற்றிருக்கும் மூன்று நாட்களுக்கும் டியூப் லைட் மற்றும் வண்ண விளக்குகள் அமைக்கப்படுகின்றன. மூன்று நாட்களும் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. அதனால் இரண்டு லட்சம் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கு நல்ல வருமானம்  கிடைக்கிறது. இதனால் எலக்ரீசியன்களுக்கும் வேலையும், நல்ல ஊதியமும்  கிடைக்கிறது.


பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்து பூஜை நடத்தி தரும் குருக்கள், சிவாச்சாரியர்கள், கிராமப் பூசாரிகள் போன்றோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மேள தாளங்கள் இல்லாமல் பூஜை நடத்த முடியாது.


எத்தனை அடி உயர விநாயகர் சிலைகள் அமைக்கப்படுகிறோ, அத்தனை அடி உயர பூமாலைகள் போடப்படுவதால் பூக்கடைக் காரர்களுக்கு பெரும் தொகை லாபமாக கிடைக்கிறது. இதனால் மாலை கட்டுபவர்கள், பூக்கொல்லை வைத்து பூ உற்பத்தி செய்பவர்கள், கிலோ கணக்கில் பூக்களை வாங்கி சரமாக தொடுத்து வழங்கும் பெண்கள் என பலதரப்பினரும் பொருள் ஈட்டுகிறார்கள்.


ஐந்து லட்சம் தேங்காய்களாவது பிள்ளையாருக்கு உடைக்கப்படுவதால் தென்னை விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் பலன் அடைகிறார்கள்.


களிமண் கூட காசாவது விநாயகர் சதுர்த்தியில்தான். ஒரு கோடி களிமண் பிள்ளையார்கள் வீடுகளில் வீற்றிருக்கிறார்கள்.


வண்ணவிளக்களுக்கும், ஒளி அலங்காரங்களுக்கும், பாடல் ஒலிபரப்புகளுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தி தரும் மின்சார ஜெனரேட்டர் வாடகைக்கு விடுபவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு லட்சம் பேராவது பயன் அடைகிறார்கள்.


கல்யாண காலங்களில் மட்டும் வருமானம் ஈட்டும் தவில் வித்வான்கள் நாயனக்காரர்களுக்கு பிள்ளையார் ஊர்வலங்கள் நல்ல வருமானத்தை ஈட்டி கொடுக்கிறது.


தப்புத்தாளக்காரர்களுக்கும், கேரள செண்டை மேலம் வாசிப்பாளர்களுக்கும்  விநாயகர் ஊர்வலங்கள் பெரும் வருமானத்தை அள்ளித்தருபவையாக உள்ளன.


ஆட்டம் பாட்டம் இல்லாமல் ஊர்வலமா? அதனால் நாட்டுப்புற பாடகர்களுக்கும், குறவன் குறத்தி, கரகம் ஆடும் ஆட்டக்காரர்களுக்கும் விநாயகர் ஊர்வலங்களில் முக்கிய பங்கும் உண்டு, லாபமும் உண்டு.


ஒரே நேரத்தில், ஒரே ஊரில், ஐநூறு முதல் ஐயாயிரம் சிலைகள் கரைக்கப்படுவதால், JCB, கிரேன் போன்ற இயக்கு சாதனங்கள் பயன்படுத்தி சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவதால், அவ்வாகன உரிமையாளர்களுக்கும், ஆபரேட்டர்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது.


தேங்காய், தென்னை ஓலை தோரணம், தேங்காய் நார் மூலம் தென்னை விவசாயிகளுக்கும்,


வாழை இலை, வாழை பழத்தின் மூலம் வாழை விவசாயிகளுக்கும்,


வெல்லம் உற்பத்தி மூலம் கரும்பு விவசாயிகளுக்கும்,


கொழுக்கட்டை மாவு மூலம் நெல் விவசாயிகளுக்கும்,


மலர் மாலைகள் மூலம் பூக்கள் பயிரிடும் விவசாயிகளுக்கும், வெற்றிலை மூலம் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளுக்கும்


வளம் சேர்க்கும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தியும், விநாயகர்  ஊர்வலங்களும்  அமைகின்றன.


விடுதலைப் போரின் போது அனைத்து சாதியினரும் ஒற்றுமையாக போரிட, திலகர்தான் இந்த விநாயகர் ஊர்வல முறையை உருவாக்கினார்.


அவர் வழியில் சாதி, மத பேதமில்லாமல் விநாயகர் ஊர்வலங்களை நடத்தி நாட்டுக்கு பெருமை சேர்ப்போம்.


ஜெ மாரிமுத்து

3 கருத்துகள்

  1. முட்டாள் தனமான கட்டுரை. பார்ப்பனிய பணியா க்களின் அரசியல் லாபத்திற்கு உகந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழை மக்கள் பலர் இதனால் பயன் அடைகிறார்கள். நல்லதை மட்டும் எடுத்து கொள்ளலாம்

      நீக்கு
  2. விநாயகர் சதுர்த்தி மட்டும் அல்ல நிறைய பண்டிகை பலருக்கு வாழ்க்கை தருகிறது. தீபாவளி சிவகாசி மக்களுக்கு நிறைய உதவுகிறது. நம் முன்னோர்க்கள் எல்லோருக்கும் பயன்பட விழா செய்து உள்ளார்கள்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை