அண்மை

ஆசிரியர் பற்றிய கட்டுரை

 

ஆசிரியர் பற்றிய கட்டுரை


Download PDF


முன்னுரை | ஆசிரியர் பற்றிய கட்டுரை

"மாணவரிடம் இருந்து மாணவர்களுக்காகவே யோசிக்கும் மனம் கொண்டவரே உண்மையான ஆசிரியர்" இதைக் கூறியவர் சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவரும், இந்தியாவின் இரண்டாது குடியரசு தலைவருமான சர்வப்பள்ளி ராதா கிருஷ்ணன் ஆவார். செப்டம்பர் 5, 1888 ஆம் ஆண்டு பிறந்த இவரையும் இவரது மேன்மை மிகு பணிகளையும் நினைவு கூறுவதோடு நமக்கு எழுத்தும் ஒழுக்கமும் அறிவித்த ஆசிரியரியர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவே நாம் ஆசிரியர் தினத்தை கொண்டாடி வருகின்றோம். இன்னும் பல உலக நாடுகள் இந்த செப்டம்பர் 5ஆம் தேதியினையே ஆசிரியர் தினமாக வழங்கிவருகிறது. "புத்தகங்கள் தான் கலாச்சாரங்களுக்கு இடையேயான பாலங்களை உருவாக்கும் வழிமுறை" - என்பார் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன். அந்த புத்தகங்களை புரியவைக்கும் ஆசிரியர்களை நாம் அப்பாலங்களை தாங்கும் தூண்களாக மதிக்க வேண்டும். 


டாக்டர் APJ அப்துல் கலாம் ஐயா அவர்களும் தனது அக்னி சிறகுகளில், 'எனது பள்ளி ஆசிரியர்களே எனது வளர்ச்சிக்கும் காரணம்' என்கிறார்.


இந்திய திருநாடு பத்தாயிர ஆண்டுகால கலாச்சார பெருமையினைக் கொண்டது என்றால் அந்த சிறப்பினை வளர்த்தும் காத்தும் போற்றியும் பரப்பிய பேறு இந்தியாவின் தொல் வழக்கமான குருகுல முறைக்கே சேரும். ஆசிரிய-மாணவ ஒழுக்கம் இந்தியாவில் மிகத் தொன்மையும் மகத்துவமும் வாய்ந்தது. கடவுளுக்கே வசிஸ்ட முனிவர் குருவாக இருந்தார் என புராணங்கள் சொல்வது குறிப்பிட தக்கது.


எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் ஆசிரியர்களின் பங்கு தவிர்க்க முடியாததாய் இருக்கும். ஆசிரியர் இல்லையேல் ஒழுக்கமும் உயர்வும் இல்லை. அத்தகைய ஆசிரியர்களை போற்றுவதற்கே இந்த ஆசிரியர் தின கட்டுரை.


அறப்பணி | ஆசிரியர் பற்றிய கட்டுரை


எந்த ஒரு ஆசிரியரும் தனது வகுப்பு மாணவரை வேற்று ஆளாக நினைப்பதில்லை. அந்த மாணவனையும் தன் பிள்ளையாகவே எண்ணுகிறார். மாதா பிதா குரு பிறகே தெய்வம் குறிப்பிடுவதற்கு ஆசிரியர் இரண்டாவது பெற்றோர் என்ற கூற்றினை தருகிறது.


ஆசிரியர்கள் என்பவர்கள் புத்தகத்தில் இருக்கும் வரிகளை மட்டும் படித்து காட்டிவிட்டு செல்பவர்கள் அல்ல. அவர்களுக்கு இந்த நாட்டின் எதிர்காலமென்ற கந்தையின் பாகமும் தரப்படுகிறது.


மாணவரின் குணம், நலன், கல்வி, நடத்தை முக்கியமாக ஒழுக்கம் ஆகியவற்றில் ஒரு ஆசிரியரே பெற்றோரை காட்டிலும் அதிக பங்கினை வகிக்கிறார்.


ஒரு பிள்ளை இந்த சமுதாயத்தை உருவாக்கக் கூடிய வாக்குரிமையை பெற்று இச்சமுதாயத்தின் ஒரு அங்கமாகவே ஆகிறான். அத்தகைய ஒரு மேம்பட்ட ஒரு சமூக அமைப்பினை உருவாக்க ஒரு ஆசிரியர் தனது வாழ்வில் ஒரு பெரும் பகுதியை மாணவர்களுடனே கழிக்க வேண்டி உள்ளது.


மாணவ - மாணவிகளுக்கு அற உணர்வுகளை போதிக்கின்ற ஒரு ஆசிரியர் எந்த நிலையிலும் தன்னை காட்டிலும் சமுதாயத்தில் வளர்ந்த தன் மாணவனை கண்டு பொறாமை அடைவதே இல்லை.


ஆசிரியர்களின் சுபாவம் தன் மாணவர்களின் மீது ஒரு தாய்-பிள்ளை உறவு போன்றே அமைகிறது. தன் பிள்ளைகளுக்கு எப்போதும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமென்றே அவர்களது பணிகளும் வருடங்களும் தேய்கிறது.


அத்தகைய அறப்பணியான ஆசிரியப்பணியை மேற்கொள்ளும் நம் ஆசிரியர்களுக்கு என்றும் நாம் நன்றி உணர்வினை செலுத்தி ஆக வேண்டும்


ஆசிரியர் இலக்கணம் | ஆசிரியர் பற்றிய கட்டுரை


ஆசிரியர் தினம் என்பது மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை வணங்குவது மட்டுமல்லாது ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை நேசிப்பதற்கும் தங்களது கடமையினை உத்வேகமாக ஆற்றுவதற்கும் வழிவகுக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆசிரியரும் ஆசிரியரின் இலக்கணத்தை அறிய வேண்டுவது அவசியம்.


நன்னூல் சொல்கிறது | ஆசிரியர் பற்றிய கட்டுரை


குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்

அமைபவன் நூலுரை ஆசிரியன்னே


ஆசிரியர் ஒழுக்கத்திலே உயர்ந்தவராய் இருத்தல் வேண்டும். அப்போது தான் அந்த ஆசிரியரின் மாணவர்களும் ஒழுக்கத்திலே சிறந்தவராய் இருப்பர். இங்கே 'குலன்' என்பது நல்ல ஒழுக்க குணத்தையே குறிக்கிறது.


மாணவரின் நலனை எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் ஆசிரியரானவர் மாணவரின் குடும்ப சூழல் வரையில் அறிந்திருந்து கருணை நிறைந்த மனதுடையவராய் இருத்தல் வேண்டும். எந்நிலையிலும் ஆசிரியரானவர் மாணவரை கடுமையான முறையில் தண்டித்தல் கூடாது.


மனதில் உறுதியும் என்றும் நிலைக்கின்ற தூய்மையான தெய்வ கொள்கையும் ஆசிரியரிடையே இருத்தல் அவசியம். எல்லா மாணவர்க்குமான பொதுவான தெய்வக் கொள்கையும் மேன்மையும் ஆசிரியரிடையே இருத்தல் வேண்டும்.


கற்று கொடுப்பதில் தெளிவு, அதை எழுத்தில் கொடுக்கும் பொழுதிலும் திறன்கூடிய செறிவுமிக்க அறிவு


நிலம், மலை, நிறைகோல், மலர் போன்றவை உணர்த்தும் பொறுமை, உயர்வு, நடுவுநிலைமை, அனைவராலும் மதிக்கக்கூடிய பண்பு ஆகியவை கைக்கூடியவராக ஆசிரியருக்கு மேன்மை தருவனவாகும்


அத்தோடு மட்டுமல்லாமல் தற்போதைய உலகியல் அறிவு மிகைப்பட இருப்பவராகவும் அதை மறவாது மாணவர்களுக்கு வழங்கும் திறனுடையோராகவும் ஆசிரியரானவர் இருத்தல் அவசியம் அப்போதே ஒரு மாணவரால் இன்றைய உலகியல் அறிவினை எளிதில் பெறமுடியும்.


இவ்வாறான மேன்மைமிகு பண்புகளை கொண்டவராலேயே ஒரு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும்.


ஆசிரியர் மாணவர் உறவு | ஆசிரியர் பற்றிய கட்டுரை


இன்றைய காலத்தில் மாணவ ஆசிரிய உறவு முறையானது மிகவும் சிக்கலான முறையில் வடிவமைக்கப்பட்டுவிட்டது. 


"ஹென்றி மிசெலின்" 'மதிப்பெண் - தேர்வு' கொள்கையால் ஆசிரிய மாணவர் உறவு முறை நெருக்கம் குறைந்ததாகி விட்டது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சரியான அங்கீகாரமும் மதிப்பும் தருவதில்லை.


சமீபத்தில் கூட ஆசிரியரை ஒரு மாணவர் தவறான வார்த்தைகளால் வசைபாடியதையும் திமிர் கொண்டு எதிர்த்து பேசியதையும் செய்திகளில் காணமுடிந்தது. 


மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், குடும்ப சூழல்கள், பிடிக்காத கல்வியை மதிப்பெண்-காக கட்டாயப்படுத்தி அழுத்தும் முறை, பெற்றோர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு இவைகளால் மாணவர்கள் தவறான முடிவினை எடுக்கவும் நேருகிறது.


குளிர் காய்பவன் நெருப்பிடத்து நீங்காமலும் நெருங்காமலும் இருப்பதை போன்று மாணவன் ஆசிரியரிடம் ஆர்வம் கொண்டு மிக நெருங்காமலும் அச்சம் கொண்டு நீங்காமலும் இருக்க வேண்டும்.


பொருளை விட்டு நீங்காது செல்லும் நிழலைப் போல ஆசிரியரை தொடர்ந்து மாணவர் செல்ல வேண்டும்.


அன்பு ததும்பும் உள்ளத்துடன் ஆசிரியன் மகிழ்ந்து இருப்பதற்குரிய அறத்திற்கு மாறாகாத செயல்களை செய்து நிற்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் ஆசிரியருடன் பழகும் போது ஆசிரியர் எதிர்கொள்ளும் சவால்கள் குறைகிறது. ஆசிரியர்களும் கண்டிப்புடன் இல்லாமல் மாணவர்களுடன் ஒரு மதிப்புடைய நட்பு வட்டத்தை ஏற்படுத்தி கொள்ளுதல் நல்ல ஆரோக்கியமான ஆசிரிய மாணவ உறவினை மேம்படுத்தும்


ஆசிரியர் பணி | ஆசிரியர் பற்றிய கட்டுரை


ஆசிரியர் பழகும் முறையில் இருந்து மாணவருடன் ஐக்கியமாதலை அதிகப்படுத்தினாலும் ஆசிரியர் என்பவர் மாணவருக்கு பாடம் கற்பத்தலிலேயே மனத்தில் நிற்கிறார்.


ஆசிரியர் மாணவருக்கு ஏற்ற காலத்தில் தக்க முறையில் நல்ல சூழல் அமைந்த இடத்தில் பாடத்தினை நடத்துதல் வேண்டும். சில மாணவர்கள் குதிரை போலும் சில மாணவர்கள் ஆமை போலும் பயில்வர். அவர்களுக்கு ஏற்றார் போலே ஆசிரியர் மாணவர்களுக்கு பாடஞ்சொல்லுதல் வேண்டும்.


கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொள - என்கிறார் பவணந்தி முனிவர்


அதன்படி, யாருக்கு எப்படி சொல்லி கொடுத்தால் புரியுமோ அதன்படி ஆசிரியர் மாணவருக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.


கல்வி என்பது இரண்டாம் நிலையே. முதல் நிலை ஒழுக்கம். மாணவர்களுக்கு ஆசிரியரானவர் ஒழுக்கத்தையும், பெண்களுக்கு ஆண்களை மதித்தல் பற்றியும், ஆண்களுக்கு பெண்களை மதித்தல் பற்றியும் பாலின சமத்துவ கல்வியையும் பாலின வேறுபாட்டு கல்வியையும் தருதல் வேண்டும்.


இக்காலத்தில் நடக்கும் சமூக கேடுகளுக்கு மூலக்காரணம் முன்னைய ஆசிரியர்கள் இக்கல்வியை மாணவர்களுக்கு சரியாக போதிக்காகததே ஆகும்.


சுருங்கச் சொன்னால், ஆசிரியர் பணி என்பது ஒரு மாணவனை ஒழுங்கற்ற கல்லாக நினைத்து கொண்டு அவனை சீரான சிலைபோல ஒழுக்கத்தால் வடிப்பதே ஆகும்.


ஆசிரியரின் சிறப்புகள் | ஆசிரியர் பற்றிய கட்டுரை


இந்திய மரபு பெற்றோர்க்கு அடுத்த நிலையாக ஆசிரியரையே போற்றுகின்றது. எழுத்து அறிவித்தவன் இறைவன் - எனும் ஔவை பாட்டியின் வாக்கு மூலமும் நமக்கு கல்வி கற்று தந்த அனைத்து ஆசிரியர்களும் இறைவன் நிலைக்கு போற்றக்கூடிய மதிப்பினை அடைகிறார்கள். 


அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு தமிழக அரசும் இந்திய அரசும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை அளித்து வருகின்றது


இவ்விருது பெற ஆசிரியர்கள் பதினைந்து ஆண்டுகளும், தலைமை ஆசிரியர்கள் இருபது ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும், சமுதாயத்தில் கண்ணியமானவராகவும், புகழ்மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர்களிடத்தில் அன்பு மிக்கவராகவும், சமுதாய நலனில் பங்கு கொள்பவராகவும் இருத்தல் வேண்டும்.


தற்போதைய நிலையில் இவ்விருதின் மொத்த எண்ணிக்கை 378 ஆகும். இவ்விருதினை பெறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் தொகை காசோலையாகவும், வெள்ளிப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் மேதகு குடியரசு தலைவர் அவர்களால் வழங்கப்படும்.


முடிவுரை | ஆசிரியர் பற்றிய கட்டுரை


நீங்கள் இந்த கட்டுரையை படித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு உங்களது ஆசிரியரே காரணம் ஆவார்கள். இந்த ஆசிரியர் தினத்தில் அவர்களுக்கு நன்றி கூறுதல் ஒவ்வொரு நல்ல மாணவரின் கடமையாகும். 


இந்திய நாட்டின் ஒரு சிறந்த தத்துவ மார்க்கத்தை வெளிப்படுத்திய பரமஹம்ச யோகானந்தரின் ஆசிரியர் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி இறந்த மறுநாளே அவரது மாணவரான யோகானந்தர் அமெரிக்கா செல்ல இருந்தது. மிகவும் கவலையில் இருந்த அவருக்கு அவரது கப்பல் பயணம் இறுதி கட்டத்தில் ரத்து செய்யப்பட்ட போது யோகானந்தர் தனது உதவியாளரை அழைத்து கூறினார்,


"போனால் போகட்டும் போ.. என் கண்ணீர் மறுபடியும் என் குருதேவரின் சமாதியை கழுவட்டும்"


உப தகவல்கள்


ராதாகிருஷ்ணன் யார்?


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் குன்று தோறாடல் எனப்படுகின்ற திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற் பாடமாக கொண்ட இவர் முதுகலை பட்டம் வரையில் பெற்றவர். 


சென்னையில் உள்ள பிரெசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக தன்னுடைய ஆசிரியர் பணியை தொடங்கினார். 


இந்து மத இலக்கியமும் தத்துவங்களான வேதங்கள் உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கராச்சாரியார், ராமானுஜர், மாதவர், போன்றோரின் தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் மேன்மைகளை பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். 


அதோடு, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராவார். தத்துவம், இறையியல், தார்மீகம், போதனை, வகுப்புவாதம் மற்றும் அறிவூட்டுதல் இருந்து தொடங்கி பல்வேறு பாடங்களில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட பல பத்திரிகைகளுக்கு அவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 


மேலை நாடுகளுக்கு சென்று கல்வி கற்காமல் இந்தியாவில் இருந்தே தனது கல்வியறிவை விசாலமாக்கி உலக தத்துவமேதைகளில் புகழ் பெற்ற ஒருவராக திகழ்ந்தார் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்.


தத்துவத்தில் ராதாகிருஷ்ணன்


ராதாகிருஷ்ணன் அவர்கள் 1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைகழகத்தில் தத்துவபேராசிரியராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து 1923 ஆம் ஆண்டு டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின் 'இந்திய தத்துவம்' எனும் பெரும் படைப்பு வெளியிடப்பட்டது.


இந்த புத்தகம் இந்திய நாட்டின் தத்துவங்களை விளக்கும் தலைசிறந்த படைப்பாக இன்றும் பேசப்படுகிறது.


'இந்து தத்துவங்கள்' பற்றி விரிவுரை வழங்க ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. அவரது தத்துவ சொற்பொழிவுகள் இந்திய விடுதலைப் போரில் ஆயுதமாக பயன்பட்டன.


"மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் எல்லா மக்களுக்குமான விசாலமான பார்வையில் இருந்து விலகி இறையியல் சார்புடையதாகவே உள்ளது. இந்தியத் தத்துவங்களைத் தரமான மொழிப்பெயர்புடன் மேலை நாடுகளுக்கு வழங்கினால், உலகம் இந்தியாவை வணங்கத் தொடங்கும்" என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.


இதன் மூலம் இந்திய தத்துவங்களை உலக அரங்கில் எடுத்துக் காட்டியவர் என்னும் பெருமை ராதாகிருஷ்ணனை சேரும்.


ராதாகிருஷ்ணனின் பெருமைகள்


1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பனாரஸ் இந்துமத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் அங்கீகரிக்கப்ட்ட தூதுவராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் விடுதலைக்கு பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் குழுக்கள் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் மற்றும் அவர்களுடைய குழுவின் கோட்பாடுகள் பெரிதும் உதவின. இதன் மூலம் இந்தியாவின் கல்வித்தரம் உயர்ந்தது.


பின் 1952 ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய நாட்டின் முதல் துணை குடியரசு தலைவர் ஆனார். 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவர் ஆனார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை