அண்மை

ஆசிரியர் பற்றிய கவிதை

 

ஆசிரியர் பற்றிய கவிதை

நாம் அனைவரும் இன்று போதுமான கல்வி அறிவோடு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் நம் பள்ளி ஆசிரியர்களே ஆவர். நாம் அவர்களுக்கு நன்றி செலுத்துவது நம் கடமை ஆகும். இந்த பதிவில் ஆசிரியர்களை வாழ்த்தும் பொருட்டும் கடந்த காலத்தை எண்ணி பார்க்கும் வகையிலும் ஆசிரியர் பற்றிய கவிதைகள் தொகுத்து இருக்கின்றோம். அனைவரும் இதை உங்களது ஆசிரியருக்கு பகிர்ந்து உங்களது வணக்கத்தை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஆசிரியர் என்பவர் வெறும் வார்த்தைகளை படித்து காட்டி கல்வியை போதிப்பவர் மட்டும் அல்லர். அவரே நமது ஒழுக்கத்திற்கும் காரணமாவார். எந்த ஒரு ஆசிரியரும் தனது மாணவரின் வளர்ச்சியினை கண்டு பொறாமை அடைவதில்லை. ஆசிரியரின் அனைத்து குண நலன்களும் தியாகத்திற்கு அடையாளமாகிறது. அப்படி பட்ட ஆசிரியர்களை என்றும் வணங்குவோம்.


ஆசிரியர் பற்றிய கவிதை


அறிமுகம் இல்லாத நம்மை

அரிய ஆளாக்கும் தன்மை

அதுவே

ஆசிரிய பணியின்

மேன்மை


எங்கு என்னை

பார்த்தாலும்

வாழ்த்துகிறாய்

பாதை காட்ட

முயலுகிறாய்

உன்னை பற்றி

விசாரித்தால்

அதே வகுப்பை

காட்டுகிறாய்


பாதியில் விட்டு

செல்லாமல்

நல்ல

பாதையில் விட்டு

செல்லும்

ஆசிரியருக்கு

அன்பு வணக்கம்


ஆசிரியர் பற்றிய கவிதை


ஆசிரியர் பற்றிய கவிதை


என்றோ! எங்கோ

படித்தேன்

இதை நீங்கள்

படிக்கிறீர்களாயின்

அதற்கும் உங்கள்

ஆசிரியரே

காரணம்


அன்று பாதையில்

பார்த்த உடன்

வணக்கம்

கலக்கம்

நடுக்கம்..

அதை

எண்ணி இன்று

பார்ப்பதிலே

இனிக்கும்


வாழ்க்கை

ஏடுகளை

புரட்டி பார்க்கிறேன்

நிறைய பிழைகள்

சில திருத்தம்

கீழே உன்

கையெழுத்து


அடிக்கும் கைதான்

அணைக்கும் என்பதை

அன்னைக்கு பிறகு,

ஆசிரியரிடமே

கற்றுக் கொண்டேன்.


ஆசிரியர் பற்றிய கவிதை


ஏற்றிவிடும் ஏணி ஏறாது.

ஏறுபவன்தான் ஏறி போவான்.

நிலத்தில் ஏணியாகவும் கடலில் தோணியாகவும்

உன் வாழ்க்கை முடிந்து விட்டது.


நான் நூறு மதிப்பெண் எடுத்த போது,

என் தந்தை முகத்தை விட,

ஆசிரியரே

உங்கள் முகத்தில்தான்

அதிக பிரகாசம்.


ஆசிரியர் பற்றிய கவிதை

ஆசிரியர் பற்றிய கவிதை


சிற்பி மலையை

சிலையாக்குகிறான்.

தச்சன் மரத்தை

சிற்பமாக மாற்றுகிறான்.

ஆசிரியன் மனிதனை

முதலில் மனிதனாகவும்

பின்னர்

புனிதனாகவும் மாற்றுகிறான்.


கால்கள் இரண்டால் நடக்க

கற்று கொண்டேன்.

நல்ல பாதை எதுவென

ஆசிரியரைப் பார்த்தே

தெரிந்து கொண்டேன்.


உன்னால் உயர்ந்த

என்னை உலகம்

போற்றிய போது,

நன்றி சொல்ல

உன்னை தேடினேன்.

நீ உயிரோடு இல்லை.


எடுப்பதால் ஊற்று நீர்

குறையாதது போல, கொடுப்பதால்

குருதி குறையாதது போல.

கற்றுக் கொடுப்பதால்

ஆசிரியனின் அறிவு

குறைவதில்லை.


அடியாத மாடு படியாது.

ஒடிக்காத முருங்கை துளிர்க்காது.

அடிக்கும் உரிமை

ஆசிரியருக்கு கிடைத்த போது

படிக்கும் கடமை

மாணவர்க்கு இருந்தது.


ஆசிரியர் பற்றிய கவிதை


ஊதியம் குறைவாக

இருந்த போது உழைப்பு

அதிகமாக இருந்தது.

காசில்லாத காலத்தில்

ஆசிரியனால் நல்ல

கல்வி கிடைத்தது.


திக்கு தெரியாத

அடர்ந்த இருண்ட காட்டில்

முளைத்த

வெள்ளி நிலா நீ.


கெட்டவன் என்பவன்

வேறு யாருமல்ல, 

நல்ல ஆசிரியர்

கிடைக்காதவன்.


துரோணர் இல்லாமல்

அர்ச்சுனன் இல்லை.

அப்துல் கலாமுக்கும் கூட

ஆசிரியர் உண்டு.


என்னுடைய மாணவன் என்று

நெஞ்சை நிமிர்த்தி

ஒரு ஆசிரியனை சொல்ல வைப்பதே

மாணவனுக்கு அழகு.


ஆசிரியர் பற்றிய கவிதை


பாதை தவறிய கால்கள்

விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை.

நல்ல பாதையை காட்டத் தவறிய

ஆசிரியரும்

மக்கள் மனதில் வாழ்வதில்லை.


களிமண்ணை பானையாக

மாற்றுபவன் குயவன்.

வெறும் உடலை

அறிவு கொண்டு

வார்த்தெடுப்பவன் ஆசிரியன்.


கசக்கி கட்டிய கந்தல் துணி.

கக்கத்தில் குடை.

கையிலே பிரம்பு.

கண்களிலே ஊறும் அறிவு

அவர்தான் அந்த கால ஆசிரியர்.


ஐந்தாம் வகுப்பிலிருந்து

உன்னை

ஆறாம் வகுப்புக்கு அனுப்ப

உயிரைக் கொடுக்கும் ஆசிரியர்

தனது ஓய்வு காலம் வரை

ஐந்தாம் வகுப்பில்தான் உள்ளார்.


உணவு ஊட்ட தாயிருப்பாள்.

உதவி செய்ய தகப்பனிருப்பான்.

அறிவை கொடுத்து

உன்னை சான்றோன்

ஆக்குவது ஆசிரியனே.


ஆறாம் வயதில் ஆசிரியர்

அடித்தது மட்டும்தான் தெரியும்.

அடித்து திருத்தியதால்

விளைந்த நன்மை

அறுபதாம் வயதில்தான் தெரியும்.


மடுவில் நின்று கொண்டே,

என்னை மலை மீது ஏற செய்த

ஆசிரியர்

மடுவிலேயே

தான் நிற்கிறார்

2 கருத்துகள்

புதியது பழையவை