அண்மை

ஆசிரியர் தினம் சில நினைவலைகள்

மோசஸ் நடுநிலைப் பள்ளி


எனக்கு வயது ஐம்பத்து ஏழு.  நான் 1971 முதல் 1987 வரை பதினாறு ஆண்டுகள் பள்ளி, கல்லூரி என பல ஆசிரியர்களிடம் படித்திருக்கிறேன். அதில் பத்தாம் வகுப்பு வரை,  நான் படித்த ஆசிரியர்களோடு எனக்கு ஏற்பட்ட சுவையான நிகழ்வுகளை மட்டும் தொகுத்து தருகிறேன்.


நான் ஒரு சராசரி மாணவன் என்பதால் எனது வாழ்வில் நல்லவைகளும் நடந்திருக்கும், அல்லாதவைகளும் நடந்திருக்கும். அதை வெளிப்படையாக எழுதுகிறேன்.


என்னையும் எனது பெரியப்பா மகன் சுந்தரமூர்த்தியையும், நல்ல நாள் பார்த்து ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள். நாங்களிருவரும் மற்றவர்களைவிட கொஞ்சம் உயரம் என்பதால் கடைசி பலகையில் எங்களை உட்கார வைத்தார்கள்.


எனக்கு ஒன்றாம் வகுப்பு புதிது அல்ல. என்னுடைய அண்ணன் ஒன்றாம் வகுப்பு படித்த போது, நானும் அண்ணனோடு பள்ளிக்கு போவேன் என அடம்பிடித்து அட்மிஷன் இல்லாமல் நாலு வயதிலேயே பள்ளிக்கு செல்வேன். அப்போதெல்லாம் LKG UKG கிடையாது.


ஒன்றாம் வகுப்பில் அண்ணனோடு உட்கார்ந்து இருப்பேன். அட்டென்டன்ஸில் பெயர் இல்லாவிட்டாலும் நானும் ஒரு மாணவனாக படித்தேன். ருக்மணி என்பவர்தான் வகுப்பு ஆசிரியை. அர்ப்பணிப்பு உணர்வோடு அ, ஆ, 1, 2, அணில், ஆடு  எல்லாம் சொல்லி கொடுப்பார். எனது சிலேட்டையும் வாங்கி  நான் எழுதியதற்கு ரைட் போட்டு கொடுப்பார்.


அடுத்த ஆண்டு முறைப்படி ஒன்றாம் வகுப்பு படித்தேன். ஆண்டு முடிந்த போது நான் ஒன்றாம் வகுப்பில் இருந்து, இரண்டாம் வகுப்பு சென்று விட்டேன். ஆனால் எனது பெரியப்பா மகனை பெயில் போட்டு விட்டார்கள். அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பு வரை இலவச பாஸ் கிடையாது.


பெயில் ஆனாலும்  என்னோடு இரண்டாம் வகுப்பில் வந்து உட்காருவேன் என்று அடம் பிடிக்கிறான் சுந்தரமூர்த்தி. இல்லையென்றால், என்னை ஒன்றாம் வகுப்புக்கு வர சொல்லி அழுகிறான்.


அப்போது ஒன்றாம் வகுப்பில் B Class ஒன்று இருந்தது. அதில் அவனை தூக்கி போட்டு ஒரு வழியாக இந்த பிரச்சனையை முடித்தார்கள். பி கிளாஸிற்கு லட்சுமி என்பவர்தான் ஆசிரியை. அவர் அப்போதுதான் குழந்தை பெற்று வந்திருந்தார்.


இப்போது போல அப்போது குழந்தை பெற்ற ஆசிரியைகளுக்கு லீவு கிடையாது. அதனால் பச்சை குழந்தையை தூக்கி கொண்டு வருவார். சில சமயம் அந்த குழந்தையை பார்த்து கொள்ள அந்த டீச்சரின் அம்மா வருவார்.  லட்சமி டீச்சர்  பிள்ளையை பார்த்து கொள்வதே பெரும்பாடு என்பதால், அவரிடம் படிக்கிற பிள்ளைகளுக்கு  எந்த டார்ச்சரும் கிடையாது.


இரண்டு வருடம் ஒன்றாம் வகுப்பு படித்ததால் இரண்டாம் வகுப்பில் நான்தான் சீனியர். இரண்டாம் வகுப்புக்கு சிவப்பிரகாசம் என்பவர் ஆசிரியர். கணக்கு எனக்கு நன்றாக வரும்.


ஒரு தோசை இரண்டு ரூபாய் என்றால் இரண்டு தோசை எவ்வளவு? என்று ஆசிரியர் கேட்கும்போது, நாலு ரூபாய் என்று கரெக்டாக சொல்லிவிடுவேன். ஐந்து இட்டிலியில் காக்கா ஒரு இட்டிலியை தூக்கி சென்று விட்டால் மீதி எத்தனை இட்லி? என கேட்பார். நாலு இட்லி என சரியாக  சொல்லிவிடுவேன். மற்றவர்களுக்கு இது தெரியாது.


நாள் முழுவதும் எதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். ஒரு நேரத்தில் என்னை மிகவும் பிடித்து போய், ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள எனது  வீட்டிலிருந்து, அவர் வரும்போது என்னை ஸ்கூலுக்கு சைக்கிளில் அழைத்து வரும் அளவுக்கு என்னோடு நெருங்கிவிட்டார்.


அப்போது பக்கத்து தெரு கடையில் போய் என்னைத்தான் சாக்பீஸ் வாங்க சொல்வார்கள். இதை பெருமையாக அப்பாவிடம் சொன்ன போது, "சாக்பீஸ் பெட்டி நான் வாங்கி தருகிறேன். நீ அலையாமல் அதையே அவர்களுக்கு விற்றுவிடு" என சொல்லி திருவாரூர் பழனிவிலாஸ் அழைத்து சென்று சாக்பீஸ் பெட்டி வாங்கி கொடுத்தார்கள்.


144 சாக்பீஸ் உள்ள ஒரு பெட்டி ஒரு ரூபாய் இருபத்து ஐந்து பைசா. அதை ஒரு LG காயத்தூள் தகர பெட்டியில் தவிடு கொட்டி, இருபத்தைந்து சாக்பீஸ்களை அடுக்கி கொடுத்து அனுப்புவார்கள். நான் அதை 10 பைசாவுக்கு 5 சாக்பீஸ் என விற்றதாக நினைவு.


முதலில் எனது ஆசிரியர் மட்டுமே என்னிடம் சாக்பீஸ் வாங்கினார். பின்னர் எல்லா ஆசிரியர்களும் என்னிடம் வாங்கினார்கள். அதில் ஒரு ஆசிரியர் கடனுக்கு வாங்கிக் கொண்டு  பின்னர் கொடுப்பார்.  எங்கள் வீட்டில் அப்போது அம்மா அரிசி, நாட்டுக் கோழி முட்டை போன்றவற்றை வியாபாரம் செய்தார்கள். அப்போது கிலோ அளவு கிடையாது, படிதான்.


என் மீது அதிக அன்பு செலுத்திய சிவப்பிரகாசம் ஆசிரியர் பிற்காலத்தில் தலைமை ஆசிரியராகவும், அதன்பின்னர் மாவட்ட கல்வி அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.


கல்வி பணிக்காக ஐம்பது வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த அந்த ஆசிரியர் அதன் பின்னர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் நல்ல பெண்மணிதான். இன்று வரை அவர்கள் நல்லபடியாக வாழ்கிறார்கள்.


அப்போதெல்லாம் எனக்கு, அண்ணனுக்கு, தம்பிக்கு என தரம் வாரியாக 2 காசு 3 காசு என அப்பா பள்ளி செல்லும்போது கொடுப்பார்கள். நாங்கள் நீண்ட நேரம் வாயில் இருக்குமாறு ஜவ்வு மிட்டாய், ஆலம்பால், கமார்கட், கடலை போன்றவற்றை வாங்குவோம். என் தம்பி மட்டும் எங்கள் அப்பாவை ஏமாற்றி அதிக காசு வாங்கிவிடுவான்.


மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கில பாடமும் உண்டு. எனது அப்பா ஆங்கில பாடம் வீட்டில் சொல்லித்தருவார்கள். அதை வைத்து ஆங்கிலம் தெரிந்தவன் போல் சமாளிப்பேன்.


அப்போது வகுப்பு ஆசிரியர் சீனிவாசன். கிளிமூக்கு சார் என மாணவர்கள் அவரை அன்போடு அழைப்பார்கள். பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அவர் வீடு. மதியம் வந்து விட்டால் யாராவது இரண்டு மாணவர்களை பிடித்து அவர் வீட்டிலிருந்து, சாப்பாட்டை கேரியரில் எடுத்து வர சொல்லுவார். நானும் ஓரிரு முறை போயிருக்கிறேன்.


எங்களுக்கு ஸ்கூல் என்றாலே ஆண் என்றால் சார் என்று அழைப்போம். பெண் என்றால் டீச்சர் என்று அழைப்போம். அது போலவே சீனிவாசன் சார் மனைவியிடம், "டீச்சர்! சார் சாப்பாடு எடுத்து வர சொன்னார்" என்று சொன்னேன். குடும்பத்தலைவியான அவரை, நான் டீச்சர் என்றழைத்தது அவருக்கு வேடிக்கையாக இருந்திருக்கும் போல, அதனால் தண்ணீரெல்லாம் எனக்கு கொடுத்து என்னை அன்பாக நடத்தினார்.


நான்காம் வகுப்பில் தருமையன் என்ற ஆசிரியர். நன்றாக பாடல் எல்லாம் பாடி சொல்லி கொடுப்பார். எனக்கு உறவினரும் கூட. ஆனால் உறவினர் என்பதை காட்டிக் கொள்ளமாட்டார். அப்பா அவருக்கு கடன் வாங்க உதவி செய்ததால், அவ்வப்போது அவர் எங்கள் வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியருக்கே ஐநூறு ரூபாய்தான் சம்பளம். 


பிற்காலத்தில் எனக்கு பெண் பார்த்து அவர்தான் திருமணம் முடித்து வைத்தார். அதனால் அவரிடம் நான் நல்ல பையனாக நடந்திருப்பேன் என நினைக்கிறேன்.


நான் நான்காம் வகுப்பு படித்த போது,   அப்பா புதிய செருப்பு ஒன்று வாங்கி கொடுத்தார்கர்கள். பெருமையாக எல்லோருக்கும் தெரியும்படி கிளாசுக்கு போட்டு வந்து, ஓரமாக போட்டேன். வகுப்பு ஆசிரியர், "என்னடா புது செருப்பா?" என்று கேட்டார். நான் ஆர்வத்தில்,"ஆமாம் சார்" என்று இரண்டு செருப்புகளையும் அவர் அமர்ந்து உள்ள நாற்காலிக்கு எதிரில் உள்ள மேஜையில் வைத்து விட்டேன். அவர் தேளை கண்டது போல பதறி,"எடுடா! எடுடா! முதலில் இதை எடுடா!" என அவர் கூச்சலிட்டதை இன்று நினைத்து பார்த்தாலும் வேடிக்கையாக இருக்கும்.


ஏழ்மையில் இருந்தாலும் எனது அப்பா, நான்காம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்தார்கள். ரொம்ப நாள் வரை சைக்கிளில் ஏறத் தெரியும். இறங்க தெரியாது. ஸ்கூல் அருகில் உள்ள ஒரு எல்லைக்கல்லில் மோதி வண்டியை நிறுத்தி குதித்து விடுவேன். எனக்கு டபுள்ஸ் வைக்க தெரியாது என்பதால் எனது தம்பியும், தங்கையும் என் சைக்கிள் பின்னே ஒருகிலோமீட்டர் ஓடி வருவார்கள்.


அந்த சைக்கிளை என் வகுப்பு உள்ளே வரை எடுத்து சென்று பக்கத்திலேயே போட்டுக் கொள்வேன். எந்த ஆசிரியரும், "அதை எடுத்து வெளியில் போடு" என்று சொன்னதில்லை.


ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர் பொன்னுசாமி. அவர்தான் தலைமை ஆசிரியர். ஆங்கில வகுப்பு முக்கியமாக நடத்துவார். எனக்கு ஆங்கிலம் சரியாக வரவில்லை. முதல் நாள் சொல்லிக் கொடுத்தது தெரியவில்லை என்றால் வெளுத்து எடுத்துவிடுவார்.


சுதந்திர தினத்தில், "தாயின்மணிக் கொடி" பாடலை பாட என்னை தேரந்தெடுத்து, அவர் மனைவி மூலம் பாட பயிற்சி கொடுத்தார். அவர் மனைவியும் ஆசிரியைதான். பயிற்சியில் நான் நன்றாக பாடியதால் அவர் வேலை செய்யும் பெண்கள் பள்ளியிலும் என்னை பாட சொன்னார். எங்கள் பள்ளியில் மிட்டாய் வாங்கி கொண்டு பெண்கள் பள்ளிக்கு போவதற்குள், அங்கும் மிட்டாய் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. அங்கும் வரிசையில் நின்று மிட்டாயை வாங்கி கொண்டு வந்துவிட்டேன்.


எங்கள் தலைமை ஆசிரியருக்கு ஒரு

வீக்னஸ் உண்டு. வீட்டில் காய்க்கும் காய்கறிகளை கொடுத்தால் அவர் மனதை மாற்றிவிடலாம். அதனால் அவரைக்காய், பரங்கிக்காய், வெண்டிக்காய் கொடுத்தே அடியிலிருந்து தப்பித்து வந்தேன். "காசு கொடுக்காமல் வாங்க கூடாதுடா" என்று சொல்லி ஒரு ஐந்து பைசாவை கையில் வைத்து அழுத்துவார். அதை வாங்கி ஏதாவது மிட்டாய் வாங்கி கொள்வேன்.  ஐந்தாம் வகுப்பு முடித்த போது டிசியை வீட்டில் வந்து கொடுத்து ஒரு  சிறு தொகையை, அப்பாவிடம் வாங்கி சென்றார்.


தெரு சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக, நடந்து வரும்போது ஆணி லாடம் போன்றவை கிடந்தால் பொறுக்கி எடுத்து வந்து போட வகுப்பில் ஒரு பெட்டி வைத்திருப்பார்கள். அது நிரம்பியதும், பழைய இரும்பு கடையில் போடுவார்கள். இது போல கொஞ்சம் இரும்பு பொறுக்கி வந்தால், பள்ளிக்கு லேட்டாக வந்தாலும் கண்டு கொள்ளமாட்டார்கள்.


ஐந்து வகுப்பு படித்து முடித்தும் அப்போது போதுமான அறிவை நான் பெற்றதாக தெரியவில்லை. அது எனது குறையா? இல்லை ஆசிரியர்கள் குறையா? என்பது இன்று வரை ஒரு புதிராகவே உள்ளது.


அடியக்கமங்கலம் படிப்பு சரியில்லை என என் தந்தையார், என்னை திருவாரூர் மோஸஸ் நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்தார்கள். மோஸஸ் பள்ளியில் சிறு வயதிலிருந்து படிப்பவர்கள் தொன்னூறு சதவிகிதம் பேர். வெளி ஸ்கூலிருந்து வந்து, என்னை போல படிப்பவர்கள் பத்து சதவிகிதம் பேர்.


முதல் நாள் எங்கள் தலைமை ஆசிரியை எங்கள் வகுப்புக்கு வந்து, உங்களுக்கு தெரிந்த ஊர் பெயர்களை தெரிந்தவரை ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்றார். இருபது நிமிடம் டைம் கொடுத்தார். நான் எங்கள் தாத்தா ஊருக்கு போகும்போது பார்த்த எல்லா ஊர்களையும் நினைவுபடுத்தி, இருபது ஊர்கள் வரை, பெயர்களை எழுத்து கூட்டி ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். மற்றவர்கள் அந்த அளவுக்கு எழுதவில்லை. அதனால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த ஸ்கூலில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் ஊர் பெயர் தெரியவில்லை.


மோஸஸ் ஸ்கூலில் நான் படித்த  மூன்று வருட காலத்தில் ஒரு டீச்சரை கூட குறை சொல்ல முடியாது. பாப்பாத்தி, செல்வி, சந்திரா, சாவித்ரி, நாராயணி, கமலா கிறிஸ்டி போன்றவர்கள் தாய்க்கு தாயாக பிள்ளைகளை பார்த்து கொண்டதுடன் நன்றாக பாடங்களை மனதில் பதிய  வைத்தார்கள்.


ஆங்கில உச்சரிப்பில் சிறு தவறு செய்தால் கூட சரியாக சொல்லும் வரை விட மாட்டார்கள். திரும்ப திரும்ப தவறு செய்தால் அடி நிச்சயம் உண்டு.  மொகலாயர் கதைகள் சத்ரபதி சிவாஜி வீரபாண்டிய கட்டமொம்மன் கதைகளை அங்கு உள்ள டீச்சர்கள் சொல்லி கொடுத்தது போல சினிமாவில் கூட பார்க்க முடியாது.


சந்திரா டீச்சர் இரக்கம் ஈகை போன்றவற்றை விளக்கி சொல்லும் கதைகள் கண்ணில் நீரை வரவழைத்துவிடும். கடைசி ரேங்க் எடுப்பவர்கள் கூட நல்ல குணம் வாய்ந்தவர்களாக இருப்பதற்கு அங்கு பணிபுரிந்த ஆசிரியைகளே காரணம். சந்திரா டீச்சர் வேதாரண்யம் குருகுலத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்.


ஏழாவது படிக்கும் போது ஒரு நாள் மதிய சாப்பாடு எடுக்காமல் வந்துவிட்டேன். மாலையில் வீடு போய் சாப்பிட்டு கொள்ளலாம் என நினைத்தேன். இது சிலர் மூலம் எட்டாம் வகுப்பு டீச்சருக்கு தெரிந்து விட்டது. உடனே ஒரு பையனை கூப்பிட்டு மூன்று ரூபாய் கொடுத்து அவனுக்கு நாகப்பன் கடையில்  "சாப்பாடு வாங்கி கொடுத்து அழைத்து வா" என்று சொல்லி அனுப்பினார்கள். அந்த டீச்சர் சின்ன தவறு செய்தாலும் அடிப்பவர். அவரது குணம் என்னை நெகிழச் செய்துவிட்டது.


எங்கள் வகுப்பில் ஏழாவது படிக்கும்போது முதல் ரேங்க் எடுக்கும் ஒரு மாணவன் கடைத்தெரு போன போது ஒரு விசிலை தள்ளுவண்டிக்காரக்கு தெரியாமல் எடுத்து வந்துவிட்டான். இதை பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தான். இந்த செய்தி எப்படியோ கமலா டீச்சருக்கு தெரிந்துவிட்டது. கோபம் வந்து விட்டது டீச்சருக்கு. "உன்னை பற்றி எப்படியெல்லாம் பெருமையாக நினைத்தேன் ஸ்கூல் மானத்தை வாங்கி விட்டாயே" என்று பிரம்பை எடுத்து ஆவேசம் அடங்கும் வரை அடித்து துவைத்துவிட்டார். "இனி இப்படி செய்ய மாட்டேன்" என்று அவன் அழுதான்.


எங்களுக்கெல்லாம் ஈரக்குலையே நடுங்கிவிட்டது. அவனது தங்கை எங்கள் ஸ்கூலில் தான் படித்தாள். அண்ணன் அடிவாங்குவதை பார்த்து அவள் கதறி அழுதாள். அன்றுதான் திருடுவது எவ்வளவு பெரிய தவறு என எல்லோரும் உணர்ந்தோம்.


1978 ஆம் ஆண்டு முதல்வர் எம்.ஜி.ஆர் திருவாரூர் வந்த போது அவரை வரவேற்க கல்வித்துறை உத்தரவுப்படி எங்களை சாலையில் நிற்க சொன்னார்கள். எங்கள் ஊர் கலைஞர் மீது பற்று வைத்திருந்த  நான் "உடம்பு சரியில்லை" என சொல்லி சாலையில் நிற்காமல் பள்ளியிலேயே இருந்துவிட்டேன். இதை சிலர் மூலம்  தெரிந்து கொண்ட கமலா டீச்சர் "யாரும் ஒரு அரசியல் சார்பாக  நடந்து கொள்ளக்கூடாது" என அறிவுரை கூறினார். யார் ஆட்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என சொல்லி என்னையும் அந்த கூட்டத்தோடு நிற்க வைத்தார்.


கல்விச் சுற்றுலா என தஞ்சாவூர் பெரிய கோவில், சித்தன்னவாசல் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றதும் அது பற்றிய செய்திகளை பாடமாக அந்தந்த ஊர்களிலேயே வைத்து நடத்தியதும், இன்னும் எனது நெஞ்சில் நீங்காமல் உள்ளது.


நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புவது போல எட்டாம் வகுப்பு படிக்கும் போது நாராயணி என்ற டீச்சருக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பினேன். அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை.  டீச்சருடைய அப்பா என்ன சொன்னாரோ தெரியவில்லை "இனி இப்படி வாழ்த்தெல்லாம் அனுப்பாதே" என்று சொன்னார்.


மோஸஸ் பள்ளியில் படித்த மூன்றாண்டுகளே என் வாழ்வின் பொற்காலமாகும். ஏதாவது ஒரு தலைப்பை கொடுத்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுத சொன்னால் இப்போது கூட என்னால் எழுத முடியும். அதற்கு விதை விதைத்தது மோஸஸ் நடுநிலை பள்ளியே.


எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் ஒன்பதாம் வகுப்பு முறைப்படி திருவாரூர் VS பாய்ஸ் ஹைஸ்கூலில் சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் உள்ளூர் ஸ்கூலில் படிக்கும் ஆசையில் மீண்டும் அடியக்கமங்கலம் அரசு பள்ளியில் சேர்ந்தேன். திருவாரூரில் படித்து விட்டு வந்ததால் என்னை அதிசயமாக பார்த்தார்கள்.


ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தவுடன் கிளாஸ் லீடராக யாரை போடுவது என்று எங்கள் ஆசிரியர் குழப்பத்தில் இருந்தார். எட்டாம் வகுப்பில் நஜுமுதீன் லீடராக இருந்தான். நான் புதிதாக சேர்ந்தததால் என்னை லீடராக்கலாம் என சிலர் நினைத்தார்கள். நான் ஒரு யோசனை சொன்னேன். இரண்டு பேர் பெயரையும் டிம்மி ஷீட்டில் எழுதி, எல்லா மாணவர்களிடமும் கொடுத்து ஒரு பெயரை டிக் அடிக்க சொல்லலாம் என சொன்னேன். எங்கள் தெரு மாணவிகள் தில்ஷாத், ஷெரின் லட்சுமி, மல்லிகா போன்றோர் என்னை பற்றி நல்லபடியாக சொல்லியதால் பெண்கள் வாக்கு அதிகமாக கிடைத்து நான் லீடராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதை ஆசிரியரிடம் சொன்ன போது "வேறு ஸ்கூலிலிருந்து வந்து மாணவர்களை பிரிக்க பாக்குறியா?" என என்னை திட்டினார். இருந்தாலும் கிளாஸ் லீடராக என்னையே அறிவித்தார்.


கதாராடை மட்டுமே கட்டும் அண்ணாமலை என்ற சைவ பிள்ளை ஆசிரியர், தமிழாசிரியராக இருந்தார். சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளுமளவுக்கு பாடம் நடத்துவார். தமிழுக்கு மட்டும் தான் நடத்திய பாடத்தில், மாதாமாதம் தேர்வு நடத்துவார். இதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு குயர் நோட்டு இருந்தது. தேர்வு முடிந்ததும் ஸ்டாஃப் ரூமில் உள்ள பீரோவில் அந்த நோட்டுகளை கொண்டு போய் வைக்க வேண்டும். கிளாஸில் மாணவனை வைத்து கொண்டே குற்றம் குறைகளை சொல்லி திருத்துவார்.


என்னோடு படிக்கும் அக்பர் அலி சைக்கிள் கம்பெனி ஒன்றை பார்ட் டைமாக நடத்தி வந்தான். அவன் எனக்கு ஒரு சைக்கிளை எப்போதும் கொடுத்து உதவுவான். அவன் ஒரு நாள் "தமிழ் தேர்வை சரியாக எழுதவில்லை பீரோவில் இருந்து டெஸ்ட் நோட்டை எடுத்து கொடு ஏற்கனவே எழுதிய தாளை கிழித்துவிட்டு புதிதாக புத்தகத்தை பார்த்து எழுதி தருகிறேன்" என்று சொன்னான். முதலில் அவனுக்கு உதவுவதற்காக இந்த தவறை செய்தேன். பின்னர் நான்  எப்போதாவது தவறாக எழுதினால் கூட இதே மாதிரி எனது டெஸ்ட் நோட்டையும் எடுத்து திருத்தி எழுதி வைக்க ஆரம்பித்தேன்.


பத்தாம் வகுப்பில் அப்துல் காதர் என்பவர் வரலாறு ஆசிரியர். வெளிநாடு வேலைக்கு போக வேண்டியவர், வாத்யாராகி விட்டார். டிப்டாப் ஆக டிரஸ் உடுத்தியிருப்பார். வகுப்பு நேரத்தை தவிர மீதம் எல்லா நேரமும் சார்மினார் சிகரெட் ஊதிக் கொண்டே இருப்பார். சக  ஆசிரியர்களும் எல்லோருக்கும் டீ, வடை வாங்கி கொடுப்பார். பதினோரு மணிக்கு எங்களை டீ வாங்க சொல்லுவார். பக்கத்து கடையில் வாங்கினால் வடை சூடாக இருக்காது என பஸ் ஸ்டாண்ட் அருகே வாங்க சொல்லுவார். அப்படி டீ வாங்க, மாணவர்களிடையே பெரிய போட்டியே இருக்கும்.  ஏனென்றால் அதை வைத்து முக்கால் மணி நேரம் பொழுதை ஓட்டலாம் அல்லவா? அதற்காக அவர் பாடம் சரியாக நடத்த மாட்டார் என்று சொல்ல முடியாது.


பத்தாம் வகுப்பில் ஜமால் சார் டுயூஷன் சென்டர் வைத்திருந்தார். சிறிய இடத்தில் அறுபது பேரை அடைத்து வைத்திருப்பார். கட்டணமும் அதிகமாக இருக்காது. அவர் டியூஷனில் அவ்வளவு பேர் சேரக் காரணம் அவரிடம் படிப்பவர்கள், நிச்சயமாக ஜஸ்ட் பாஸாகிவிடுவார்கள். அப்படியானால் நன்றாக சொல்லி கொடுப்பாரா?  என்றால் இல்லை. அப்போது SSLC எழுத திருவாரூர் வேலுடையார் பள்ளி செல்ல வேண்டும். வேலுடையார் பள்ளி ஆசிரியர்கள் அடியக்கமங்கலம் பள்ளி மாணவர்களுக்கும், அடியக்கமங்கலம் பள்ளி ஆசிரியர்கள், வேலுடையார் பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வில் ஒத்துழைப்பு செய்ய ஒரு  பரஸ்பர ஒப்பந்தம் இருக்கும். அதனால் ஜமால் சாரிடம் படிப்பவர்கள், குறைந்த பட்ச மதிப்பெண்ணாவது எடுத்து பாஸ் ஆகிவிடுவார்கள்.


எங்களுக்கு தலைமை ஆசிரியர் நரசிம்மன் என்ற அய்யர் ஆசிரியர். கணக்கில் டிகிரி என்றால் பி.எஸ்ஸி கொடுப்பார்கள். ஆனால் நரசிம்மன் சார் அந்த காலத்து பி.ஏ மேத்ஸ். மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் அவரிடம் பயப்படுவார்கள். மிகவும் பொறுப்பாக கணக்கு சொல்லி கொடுப்பார். படிக்கிறவர்களுக்கு அவரை பிடிக்கும். எனக்கும் அவரை பிடிக்கும்.


ஒரு நாள் கணக்கு ஒன்றை சொல்லிக் கொடுத்துவிட்டு, வீட்டுப் பாடமாக புக் பேக் கணக்கு ஒன்றை போர்டில் எழுதி போட்டு, மறுநாள் அதை போட்டு வர சொன்னார். நான் உடனே அந்த கணக்கை போட்டு பார்த்தேன். விடை வரவில்லை. புத்தகத்தை எடுத்து பார்த்தேன். கணக்கை எழுதி போடும்போது அவசரத்தில் ஒரு சிறு தவறு செய்திருந்தார். அதனால் கணக்கை இப்படி மாற்றி எழுதிக் கொள்ளுங்கள் என்று சாக்பீஸ் எடுத்து மாற்றி எழுதி போட்டேன்.


நான் மாற்றிய விபரத்தை இரண்டு மாணவிகள் HM ரூம் சென்று ஆசிரியரிடம் சொல்லி, எதை எழுதுவது என விளக்கம் கேட்டிருக்கிறார்கள்.


உடனே பியூனை அனுப்பி என்னை அவரது அறைக்கு வரச் சொன்னார். நான் எந்த பதட்டமும் இல்லாமல் அவரது அறைக்கு சென்றேன். என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. ஒரு குச்சியை எடுத்து ஆத்திரம் தீரும் வரை அடித்தார். "உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் நான் எழுதி போட்டதை திருத்துவாய்?" என்றார். நான் விளக்கம் சொல்ல அவர் விடவில்லை.


இந்த பள்ளிக்கு வந்ததிலிருந்து நான்தான் முதல் ரேங்க் எடுக்கிறேன். மற்றொரு விஷயம், எங்கள் தெருவை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அப்துல் பத்தா, நான் அடிவாங்கும் போது அந்த அறையில் இருந்தார். அதனால் எனக்கு அவமானமாக போய்விட்டது. வெளியை வந்தேன். செய்தி தெரிந்து நண்பர்கள் கூடிவிட்டார்கள். விளக்கம் கேட்ட இரண்டு மாணவிகளும் இப்படி நடக்கும் என்று எங்களுக்கு தெரியாது என என்னிடம் அழாத குறையாக மன்னிப்பு கேட்டார்கள்.


இந்த நிகழ்வு என்னை பாதித்துவிட்டது. "இனி இந்த பள்ளியில் படிக்க மாட்டேன். என்னை திருவாரூரில் சேர்த்து விடுங்கள்" என்று என் அப்பாவிடம் வற்புறுத்தினேன். இரண்டு நாள் பள்ளிக்கு செல்லவில்லை.


என்னுடைய உறுதியை பார்த்து, திருவாரூர் பாய்ஸ் ஹைஸ்கூலில் வேலை பார்க்கும் கல்லுக்குடியை சேர்ந்த ஆசிரியர் மகாதேவனை  பார்த்து, ஸ்கூல் அட்மிஷனுக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்கள். அரையாண்டு முடிந்து விட்டதால் அதற்கு வாய்ப்பு இல்லை என அந்த ஆசிரியர் கூறிவிட்டார். நான் மறுநாளும் ஸ்கூல் போகவில்லை.


நரசிம்மன் சார் என்னை இழக்க விரும்பவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்தார். நான் அங்கு இல்லாததால் நான் எப்போதும் இருக்கும் ரசூல் சைக்கிள் கம்பெனிக்கு வந்தார். "நீ செய்தது நியாயமா? உன்னை கண்டிக்க எனக்கு உரிமை இல்லையா?" என பாவமாக கேட்டார். என்னை மீண்டும் ஸ்கூலுக்கு வர சொன்னார். அவ்வளவு பெரிய மனிதர் என்னிடம் வருந்திய பிறகு நான் மறுநாளே ஸ்கூல் செல்ல ஆரம்பித்தேன்.


பத்தாம் வகுப்பில் எங்கள் வகுப்பு ஆசிரியர் பெயர் சீனிவாசன். தமிழ் ஆசிரியர். டேபில் மீது ஏறி உட்கார்ந்து பாடம் நடத்துவார். யாராவது பேசிக்கொண்டிருந்தால் பெஞ்ச் மீது ஏறி தாண்டி வந்து அடிப்பார். ஆனால் நன்றாக பாடம் நடத்துவார். இவரது சேஷ்டைகளை பார்த்து எங்களுக்கு முன்னர் படித்த மூதாதையர்கள் அவருக்கு வானரம் என பெயர் வைத்திருக்கிறார்கள். நாங்கள் படிக்கும் போது அந்த பெயர் மருவி வான்றம் அய்யா என அழைப்பார்கள். நான் அவர் வீட்டில் டியூஷன் படித்தேன்.


அந்தப் பழக்கத்தில் என் தமிழ் பேப்பரை எனக்கு திருத்தி காட்டி, அவர் வீட்டிலேயே உட்கார்ந்து எல்லா எக்ஸாம் தமிழ் பேப்பரையும் திருத்த சொல்வார். அவர் வேலையை நான் பார்ப்பதால் எனக்கு போனஸ் மார்க் ஐந்து போடுவார். எனக்கு வேண்டியவர்களுக்கு மார்க் கொஞ்சம் கூடுதலாக போடுவேன். நான் திருத்துவது தெரிந்து கானூர் இராஜேந்திரன், வீடு தேடி வந்து தனக்கு பாஸ் மார்க் போட சொன்னான். வீடு தேடி வந்தவனை மதித்து நான் நாற்பது மார்க் அவனுக்கு போட்டேன்.


ஒரு முறை கபடி சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கு கீவளூர் செல்ல டீம் தயார் செய்து கொண்டு இருந்தார் பி டி சார். ஏழு பேர் கொண்ட இரண்டு டீம் ரெடி செய்து இருந்தார். அதில் நானும் இருந்தேன். ஆட்டம் ஆரம்பிக்கும் போது பார்த்தால் மூன்று பேரை காணோம். எங்கே என்று பார்த்தால் "டிரெயினை வேடிக்கை பார்க்க போய்விட்டோம்" என்று சொன்னார்கள். "உங்களுக்கெல்லாம் யானைக்கு வெள்ளை பெயின்ட் அடித்து காட்டனும்டா" என்று திட்டிக் கொண்டே ஆட்டத்தை ஆரம்பித்தார்.


எனது டீமில் என்னைத் தவிர ஆறு பேரும் அவுட் ஆகிவிட்டார்கள். ஒதுங்கி ஒதுங்கி நின்ற நான் கடைசியாக மாட்டிக்கொண்டேன். அடுத்த ரைடு நான்தான். "கபடி கபடி" என போனேன். நான் ஒல்லியாக இருந்ததால் அலட்சியமாக என்னை பிடித்தார்கள். நான் கழுவுற மீனில் நழுவுற மீனாக தப்பித்து வந்து கிரீஸில் படுத்து விட்டேன். என் மீது நாலு பேரும் விழுந்து அவுட். அவுட்டான நாலு பேருக்கு பதில் எங்கள் டீமில் நாலு பேர் மீண்டும் இறங்கி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டார்கள். அதனால் கீவளூர் போகும் டீமில் நானும் இடம் பெற்றேன்.


ஆசிரியர்கள் செல்வ தியாகராஜன், கணேசன், செல்வதுரை போன்றவர்கள் நன்றாக பாடம் நடத்தினார்கள். அவர்களை மறக்க முடியாது.


ஒரு நாள் மாலை பள்ளி முடிந்ததும் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தோம். ஹெச் எம் நரசிம்மன் சார் அரியர் ஒர்க் பார்த்து கொண்டிருந்தார். திடீரென நாங்கள் விளையாடும் கிரவுண்டுக்கு நடந்து வந்தார். அவரை பார்த்ததும் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சில நண்பர்கள் ஓடி விட்டார்கள். பயத்தோடு அவரை பார்த்தோம். அவர் சகஜமாக, "கிரிக்கெட் விளையாடி பல வருஷமாச்சு! எனக்கு பால் போடுங்கடா" என்றார். நாங்கள் அவருக்கு ஆசையாக பால் போட்டோம். சுமார் இருபது பால் விளையாண்டார். அதுவரை அவர் அவுட் ஆகவில்லை


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனநலம் பாதிக்கப்பட்டு, பல மாதங்கள் கழித்து மீண்டு, நடித்த படம் பொல்லாதவன். அதை பார்க்க ஆசைப்பட்டு ஸ்கூலுக்கு கட் அடித்து விட்டு 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள நாகப்பட்டினம் விஜயலட்சமி தியேட்டருக்கு நாலு பேர் சைக்கிளிலேயே சென்றோம். மறுநாள் எங்கள் வகுப்பு ஆசிரியருக்கு இந்த செய்தி தெரிந்துவிட்டது. நாலு பேரையும் எழுந்து நிற்க சொன்னார். ஒருவனை பார்த்து "நீதான் பொல்லாதவனா?"என்று கேட்டார். "நீ பொய் சொல்லாதவனா?" என்று என்னை கேட்டார். பின்னர் எங்களை கண்டித்து அடுத்த முறை படத்துக்கு போனால் அப்பாவோடுதான் வர வேண்டும் என மன்னித்து விட்டார்.


ஒரு முறை CEO ஆபிஸில் இருந்து இன்ஸ்பெக்ஷன் வந்தார்கள். ஒரு பெண் அதிகாரி சோதனை நடத்த வந்தார். எங்கள் தமிழ் ஆசிரியர் அவரை அழைத்து வந்தார். அவரது குரல் பெண் குரல் போல அல்லாமல் பூனை குரல் போல கீச்சு குரலாக இருந்தது.


"சிவகோச்சாரியார் கனவில் சிவபெருமான் கூறியது என்ன?"என்ற கேள்வியை கேட்டார். அவரது கீச்சு குரலை கேட்டதும் உமர் என்பவன் பெரும் குரலில் சிரித்துவிட்டான். அவன் சிரித்ததை பார்த்து எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். நீ சொல் என்று என்னை பார்த்து சீனிவாசன் சார் சொன்னார். நான் சொல்ல ஆரம்பித்தேன். மீண்டும் அவர் குரலை நினைத்து அவன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். அவனை பார்த்ததும் எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. பேசாமல் அமர்ந்துவிட்டேன்.


பெண் அதிகாரிக்கு அவமானமாக போய்விட்டது. அதைக் காட்டிக் கொள்ளாமல்,  "யாராவது ஒருவர் சொல்லுங்கள்" என்றார். அந்த நேரம் ஷரின் பானு என்ற பெண் எழுந்து தலைகுனிந்தவாறே சரியான பதிலை சொல்லி முடித்தார்.  பள்ளியின் இருபத்தைந்து பர்சென்ட் மானத்தை அந்த மாணவி காப்பாற்றிவிட்டார். குரலை வைத்து, உடலை வைத்து கேலி செய்வது எவ்வளவு தவறானது என இப்போது நினைக்கும் போது மனவருத்தமாக உள்ளது.


பொது தேர்வு நெருங்கியது.  நான்  பத்தாம் வகுப்பு கடைசி மாதங்களில்தான் வேட்டி கட்ட ஆரம்பித்தேன். அது வரை டிராயர்தான். வேட்டி கட்ட ஆரம்பித்தாலும் சேஃப்டிக்கு பழையபடி டிராயரும் போட்டிருப்பேன். தேர்வு நெருங்கியதால் நரசிம்மன் சார் மாலை ஆறு மணி வரை ஸ்பெஷல் கிளாஸ் வைக்க ஆரம்பித்தார். ஆறு மணிவரை உட்காருவதற்குள் தூக்கம் வர ஆரம்பித்துவிடும்.


எப்போது வீட்டுக்கு அனுப்புவார்கள் என்ற நினைவோடு உட்கார்ந்து இருந்ததில், ஒரு நாள் வீட்டுக்கு போக சொன்னவுடன் வேகமாக எழுந்து வந்துவிட்டேன்.  சைக்கிளை எடுக்கும் போதுதான் தெரிந்தது, டிராயர் மட்டும் போட்டு இருக்கிறேன். அவசரமாக வகுப்புக்கு போய் பார்த்தால் உட்கார்ந்த இடத்திலேயே என் வேட்டி இருந்தது.


ஹால் டிக்கட் வந்தவுடன் நரசிம்மன் சார் என்னை அவரது அறைக்கு அழைத்தார். நீதி நேர்மை பற்றியெல்லாம் இது நாள் வரை பேசியவர், நமது பள்ளி அதிக சதவிகத்தில் பாஸ் ஆக எனது ஒத்துழைப்பை கேட்டார். ஜமால் சார் உதவியுடன் ஒன் வேடு போன்ற சிறிய கேள்விகளுக்கு  உள்ள பதிலை ஹாலில் உள்ளவர்களுக்கு மறைமுகமாக பேப்பரை கொடுத்து, அவர்களும் பாஸ் ஆக ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  தன் நிலை தாழ்ந்தாலும் பள்ளிக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என நினைத்தார். அவரது ஆசையை முடிந்தவரை நிறைவேற்றினேன். எட்டு கிலோமீட்டர் சைக்கிளில் சென்று, வேறு பள்ளியில் தேர்வு எழுதியது புதிய அனுபவமாக அமைந்தது.


நரசிம்மன் சார் தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு, ஐம்பதாவது வயதில் தனக்கு திருமணம் செய்துகொண்டு தியாக வாழ்க்கை வாழ்ந்தவர். தலைமை ஆசிரியருக்கு பிறகு சி ஈ ஒ ஆக இருந்தார். மோஸஸ் பள்ளி கமலா டீச்சரும், நரசிம்மன் சாரும் தொன்னூறு வயது தாண்டியும் இன்னும் வாழ்கிறார்கள்.


எனது அண்ணனும் ஆசிரியர்தான். என் தங்கையும் ஆசிரியைதான். அதனால் குறைத்தோ கூட்டியோ நான் ஒன்றும் எழுதவில்லை. யதார்த்தத்தை எழுதினேன்.


பள்ளியில் கண்டிப்போடு நடந்து கொண்ட ஆசிரியர்கள் எல்லாம், பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, என்னை கடைத்தெருவில் பார்த்தால்  அவ்வளவு பாசத்தோடு விசாரிக்கிறார்கள். நானும் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கிறேன்.


ஆசிரியர் மாணவர் உறவு என்பது தாய் தந்தை உறவு போன்றது என்பதை இப்போது உணருகிறேன்.


ஜெ மாரிமுத்து

1 கருத்துகள்

  1. Time travel பண்ணியது போல உணர்ந்தேன்.

    ஆசிரியரையே வருந்தி இரங்கி வரவழைத்த அந்த காலத்து மாணவ மனோ உறுதி இந்த காலத்து மாணவர்களுக்கு ஒரு பாடம்.


    நீ பொல்லாதவனா?
    பொய்சொல்லாதவனா..?
    சம்பவத்தை..

    நினைத்தாலே இனிக்கிறது..!!

    பதிலளிநீக்கு
புதியது பழையவை