அண்மை

அறிஞர் அண்ணாவின் சாதனைகள்




இதை காண்க


அறிஞர் அண்ணாவின் சாதனைகள்


அறிஞர் அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி புற்று நோயால் இவ்வுலகத்தில் இருந்து மறைகிறார். தமிழகமே அழுது புலம்புகிறது. ஐந்து கோடி தமிழர்களில், ஒன்றரை கோடி பேர் இறுதி அஞ்சலி செலுத்த சென்னையில் குவிகிறார்கள். சென்னை குலுங்குகிறது. ஒரு தனி மனிதனின் மரணத்துக்கு நூற்று ஐம்பது லட்சம் பேர் திரண்டது, இன்றளவும் கின்னஸ் வேல்டு ரெக்கார்ட்ஸில் இடம்பெறுகிறது.


சாதாரண ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த இந்த மனிதனுக்கு இந்த சிறப்பு எப்படி கிடைத்தது? இக்கட்டுரையில் இதைக் காணலாம்.


அறிஞர் அண்ணாவின் தமிழகம்


இன்று தமிழகத்தின் மக்கள் தொகை எட்டு கோடி பேர். இந்த எட்டு கோடி பேருடன், வடமாநிலத்தவர் சுமார் ஒரு கோடி பேர் நம்மோடு வசிக்கிறார்கள். கட்டுமானத் துறையிலும், ஜவுளித் துறையிலும், உணவகங்களிலும், பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் தமிழ்நாடு அவர்களுக்கு வேலை வாய்ப்பைத்  தருகிறது.


பீகாரால், உத்தர பிரதேசத்தால், ஜார்கண்டால், மேற்கு வங்காளத்தால், டில்லியால், இராஜஸ்தானால், அஸ்ஸாமால், ஒரிஸ்ஸாவால் அந்த மாநில மக்களுக்கு கொடுக்க முடியாத வேலைவாய்ப்பை தமிழகத்தால் மட்டும் எப்படி அவர்களுக்கு  கொடுக்க முடிகிறது?


அதில்தான் திராவிட இயக்கத்தின் மேஜிக் ஒளிந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திலிருந்து, பஞ்சம் பிழைக்க சென்ற தமிழனை, மராட்டியத்தில்  சிவசேனைக்காரனும், பெங்கலூரில் கன்னடக்காரனும் விரட்டி அடித்தான். ஆனால் தனது குடும்பத்தின் பசியை போக்க வழி தேடி வந்த வட நாட்டுக்காரனுக்கு, வேலையும், உணவும் நாம் கொடுக்கிறோம். "யாதும் ஊரே! யாவரும் கேளிர்"  என்று வந்தாரை நாம் வாழ வைக்கிறோம்.


இந்தியாவிலேயே,  1967ஆம் ஆண்டு காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைத்த, இரண்டாவது தலைவர் அண்ணாதான். முதல்வரானாலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள  சிறிய வீட்டில் எளிய வாழ்வு வாழ்ந்தார்.


1967 ஆம் ஆண்டு அண்ணாவால் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட திராவிட இயக்க ஆட்சியை, இன்றுவரை வேறு எவராலும் பிடிக்க முடியவில்லை. அவரது வழி தோன்றல்கள்தான் ஐம்பத்தைந்து ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார்கள்.


பெரிது எல்லாம் அண்ணா


எதைச் செய்தாலும், அதற்கு மூலமாக இருந்தவர் அண்ணாதான். அதனால்தான் கலைஞர் போன்ற அவரது சீடர்கள் எதை பெரிதாக செய்தாலும் அதற்கு அண்ணாவின் பெயரையே சூட்டினார்கள்.


தமிழகத்தின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம்.


சென்னையின் பிரதான சாலையான மவுன்ட் ரோடு பெயர் மாற்றத்துக்கு பின் அண்ணா சாலை.


சென்னையின் விமான நிலைய பெயர் அண்ணா இன்டர்நேஷனல் டெர்மினல்.


சென்னையின் பெரிய மேம்பாலம் அண்ணா மேம்பாலம்.


சென்னையில் அமைந்துள்ள ஆசியாவின் பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.


மாநகரக விரிவாக்கத்தில் புதிதாக தோன்றிய நகருக்கு அண்ணா நகர்.


திமுகவின் தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயம்.


ஆடசிக்கு வந்தவுடன் தமிழர்கள் வாழும் நமது மாநிலத்துக்கு "தமிழ் நாடு" என அழுகு பெயர் சூட்டினார்.


அறிஞர் அண்ணாவின் சீர்த்திருத்தம்


புரோகிதர்களை வைத்து புரியாத மொழியில் மந்திரத்தை ஒதி, பெண்ணை பெற்றவரை கடனாளியாக்கும் திருமண முறைக்கு மாற்றாக,


மாலைகளை மாற்றி, உறுதி மொழி ஏற்று, செலவில்லாமல் திருமணம் செய்யும் சீர்த்திருத்த திருமண முறைக்கு, சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்தார்.


தமிழை விழுங்கத் துடித்த இந்திக்கு கடிவாளம் போட, இருமொழிக் கொள்கையை உருவாக்கினார்.


"பட்டினியாக கிடந்தால், எலியை பிடித்து திண்ணுங்கள்" என அறிவுரை கூறிய பக்தவசலத்துக்கு, பதிலடியாக படி அரிசி திட்டத்தை சென்னையிலும், கோவையிலும் கொண்டு வந்தார்.


இலாப நோக்கோடு நடத்தப்பட்ட தனியார் பஸ்  போக்குவரத்து சேவைகளை அரசுடைமை ஆக்கினார்.


அமைச்சர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்தார்.


ஒரு தனி நபர் 15 ஏக்கர் மட்டுமே நிலம் வைத்திருக்கலாம் என்ற நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம், 1,79,000 ஏக்கர் நிலத்தை  ஏழைகளுக்கு பிரித்து கொடுத்தார்.


தமிழ் புலவர்களுக்கு கடற்கரையில்  சிலை வைத்தார். பேருந்துகளில் திருக்குறளை எழுதி வைத்தார்.


பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நம் தமிழ் மொழியில், பாலில் நஞ்சை கலப்பது போல் வடமொழி கலக்க ஆரம்பித்தது. அதனால் தமிழ், தன் பொலிவை இழக்கத் தொடங்கியது.


சரியான நேரத்தில் ஆட்சிக்கு வந்த அண்ணாவால் தமிழ் ஏற்றம் பெறத் தொடங்கியது.


இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு அண்ணாவால் நடத்தப்பட்டது.


மறைமலை அடிகள், தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் வழியில் தனித்தமிழ் கோலோச்சத்  தொடங்கியது.


பஞ்சாயத்து சமிதி ஊராட்சி ஒன்றியம் ஆனது.


காரியக்கமிட்டி செயற்குழு ஆனது.


அக்கிரசேனார் அவைத்தலைவர் ஆனார்.


மந்திரி எல்லாம் அமைச்சர் ஆனார்.


ஜார்ஜ் கோட்டையில் உள்ள செகரெட்டரியேட்,  தலைமைச் செயலகம் ஆனது.


சட்டசபை சட்டப்பேரவை ஆனது.


அபேட்சகர் வேட்பாளர் ஆனார்


சத்யமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் என மாற்றப்பட்டது.


ரோடு சாலையாகவும், பஸ் பேருந்தாகவும் உரு மாறியது.


அண்ணாவால் ஏற்பட்ட வேகமான வளர்ச்சியால் எதிர்கட்சியினரே திகைத்து நின்றார்கள்.


சிறுவயது பொடிப் பழக்கமும், புகையிலை பழக்கமும் புற்று நோயாக மாறியது.


"கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண் பட்டதோ அதை நான் அறிவேன்" என கண்ணதாசனே கலங்கி நின்றார்.


ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளிலேயே புற்று நோய் அவரை கொன்றுவிட்டது.


அறுபது ஆண்டுகளில் அவரது வாழ்க்கை முடிந்து விட்டது.


அறிஞர் அண்ணாவின் வாழ்வு


1909 ஆம் ஆண்டு செப் 15 அன்று காஞ்சியில்,  நடராஜ முதலியாருக்கும், பங்காரு அம்மையாருக்கும் மகனாக ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். தாயார் மறைவுக்கு பின், தந்தையாரின் இரண்டாவது மனைவி இராஜாமணி அம்மையார் கரங்களால் வளர்க்கப்பட்டார்.


அக்கால கட்டத்தில் நான்கு சதவிகிதமே இருந்த பிராமணர்கள், அதிகாரமிக்க அரசு பதவிகளில் தொன்னூறு சதவிகிதம் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். இதனால் தொன்னூற்று ஆறு சதவிகித பிற்பட்டவரும், தாழ்த்தப்பட்டோரும், பிராமணர்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டது.


அதனால் 1917 ஆம் ஆண்டு "பிராமணர் அல்லாதோர் இயக்கம்" தோன்றியது. பிராமணர் அல்லாதோருக்கு கல்வி வழங்க இந்த இயக்கம் உதவி செய்தது. இந்த இயக்கம் சர் பி டி தியாகராயர்,  நடேசனார் வரவுக்கு பின் தென்னிந்திய நல சங்கம் ஆனது. பின்னர் 1935ல் நீதிக்கட்சியானது. நீதிக்கட்சிக்கு ஒருசமயம் பெரியார் தலைவரானார்.


பச்சையப்பன் உயர்நிலை பள்ளியில் படித்த அண்ணா,  சிறிது காலம்  நகர சபை எழுத்தராக பணி செய்தார். பின்னர் சிலர் உதவியுடன் பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல், அரசியல் பாடங்களில் பட்டம் பெற்றார். பின்னர்  அண்ணா பச்சையப்பன் உயர்நிலை பள்ளியில், ஆசிரியராகவும் இருந்தார். 1930 ஆம் ஆண்டு இரானி அம்மையாரை மணந்தார்.


அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு


பூமியை பாயாக சுருட்டினான், ஆயிரம் பேரை தின்று தீர்த்தான், பிள்ளையை கொன்று பிழைக்க வைத்தான், கங்கையோடு கூடி குழந்தை பெற்றான், தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள், திருதராஷ்டிரனுக்கு நூறு பிள்ளைகள், ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவனே அய்யப்பன்,

சூரியன் உதிப்பதை ஒருமணி நேரம் நிறுத்தி வைத்தான்,

சாபம் பெற்றவள் கல்லாக மாறினாள், வாயைத் திறந்து பூலோகத்தை காட்டினான், பூமியை ஒரு காலடியாலும், வானத்தை ஒரு காலடியாலும் அளந்தான் போன்ற பொய்யும் புனைசுருட்டும் கலந்த, புராணகதைகளை  மக்களுக்கு போதித்து, மக்களை பகுத்தறிவில்லாத ஜடங்களாக மாற்றும், மக்களை எதிர்க்கும் பொருட்டு, பெரியாரை தலைவராக அண்ணா தேர்ந்தெடுத்தார். பெரியார் அப்போது நீதிகட்சியில் இருந்தார்.


கல்லூரி மற்றும் மேற்படிப்புகளால், கற்று தேர்ந்த அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் தன் நிகர் இல்லாத பேச்சாளராக திகழ்ந்தார்.


கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றி, துஷ்ட கடவுளை காட்டி பயமுறுத்தி, அதிகாரம் செலுத்திய பூசாரிகள், சாமியார்கள், பிராமணர்கள் கொட்டத்தை அடக்க தனது பேச்சாற்றலை, எழுத்தாற்றலை பயன்படுத்த தீர்மானித்தார்.


1935ஆம் ஆண்டு திருப்பூர் மாநாட்டில் பெரியாரை சந்தித்தார். பெரியார் அண்ணாவிடம் "படித்துவிட்டு உத்யோகம் பார்க்க போறியா?" என்று கேட்டார். "இல்லை பொதுவாழ்வில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன்" என்றார் அண்ணா.


அண்ணாவின் திறமையை கண்ட பெரியார், தனது குடியரசு பத்திரிக்கையில் மாதம் அறுபது ரூபாய் சம்பளத்துக்கு பணியமர்த்தினார்.


குடியரசு, விடுதலை இதழ்களில் வந்த அண்ணாவின் கட்டுரைகள் சமுதாயத்தில் எழுச்சியை உண்டாக்கின.


1938 ஆம் ஆண்டு இராஜாஜி இந்தியை திணித்த போது அதை எதிர்த்து சிறை சென்றார் அண்ணா. பின்னர் இந்தியின் தீமை உணர்ந்து இராஜாஜி தனது சட்டத்தை வாபஸ் வாங்கினார்.


நிதி நெருக்கடியை காரணம் காட்டி பல மாநிலங்கள்,  மதுவிலக்கு சட்டத்தை திருத்தி மதுவை கொண்டு வந்த போதும், மதுவினால் கிடைக்கும் பணம் என்பது  "குஷ்டரோகியின் கையில் உள்ள வெண்ணை" என அண்ணா கூறினார்.


"அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என முழங்கிய அண்ணா சீன படையெடுப்பின் போது திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார். இது பற்றி கேட்டபோது "வீடு இருந்தால்தானே ஓடு மாற்ற முடியும்? நாடு இருந்தால்தானே பிரிவினை கேட்கமுடியும்?" என்று பதிலளித்தார்.


அறிஞர் அண்ணாவின் பார்வை


பெரியார் எந்தக் கருத்தாக இருந்தாலும் அதிரடியாக பேசக்கூடியவர். ஆனால் அண்ணா அதே கருத்தை பிறர் மனம்  புண்படாதவாறு எடுத்துரைக்கக் கூடியவர்.


தொன்னூறு சதவிகித மக்கள் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கும் காலத்தில் "கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என்றால் கடவுளை வணங்குபவனுக்கு கோபம்தானே வரும்? அதனால்தான் அண்ணா, திருமூலரை துணைக்  கொண்டு "ஒன்றே குலம்.! ஒருவனே தேவன்" என்றார்.


ஒரு முறை வினாயகர் சதுர்த்தி அன்று பெரியார் பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தார். இது பற்றி அண்ணாவிடம் கேட்டபோது "நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என்று சொன்னார்.


நீதிக்கட்சியிலிருந்து விலகி பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கினார். அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பெரியாரோடு இணைந்து பயணித்தார்கள். திராவிடர் கழகத்தவர்கள் "கருப்பு சட்டை மட்டுமே அணிய வேண்டும்" என்று பெரியார் கட்டளை இட்டார். இதை அண்ணா ஏற்கவில்லை. தூய வெள்ளை கைத்தறி ஆடைகளையே அணிந்தார்.


பாகிஸ்தானை போல பெரியார் தனித் தமிழ்நாடு வேண்டும் என சர் கிரிப்ஸ் குழு உள்ளிட்ட, பிரிட்டிஷாரிடம் கேட்டார். அண்ணாவுக்கு இதில் சம்மதமில்லை.


தேர்தல் அரசியலில் திராவிடர் கழகம் ஈடுபடாது என பெரியார் அறிவித்தார். தேர்தலில் ஈடுபட்ட நீதிக்கட்சி வெற்றி பெற்று, அதிகாரத்துக்கு வந்ததால் இட ஒதுக்கீடு, ஏழைகளுக்கு கல்வி, மதிய உணவு போன்ற நன்மைகள் மக்களுக்கு கிடைத்தது. அதனால் தேர்தலில் போட்டியிட்டு, அதிகாரத்துக்கு வருவதே சரியென அண்ணா நினைத்தார்.  அதனால் பெரியாரின் இந்தக் கருத்தையும் அண்ணா ஏற்கவில்லை.


"பிரிட்டிஷ்காரனிடம் இருந்து மீண்டு, வட தேசத்து, ஆரியனுக்கு அடிமை ஆவோம்" என எண்ணிய பெரியார் இந்தியா விடுதலை பெற்ற திருநாளை  துக்க நாளாக அறிவித்தார். இந்திய விடுதலை போரில் பாரதி, வ உ சி, திருப்பூர் குமரன், பூலித்தேவன் போன்ற தமிழக மக்களும் பங்கெடுத்து இருப்பதால், பெரியாரின் துக்க நாள் அறிவிப்பை அண்ணா எதிர்த்தார்.


எல்லாவற்றுக்கும் மேலாக பெண் உரிமை பேசிய பெரியார் எழுபது வயதில், தன்னை விட நாற்பது வயது குறைவான மணியம்மையை, மணந்ததால் எதிர்கட்சிகளின் கேலிக்கு உள்ளானார்.


அண்ணாவுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. "இந்தத் திருமணம் வேண்டாம்" என அண்ணா பெரியாரிடம் சொல்லிப்பார்த்தார். பெரியார் கேட்கவில்லை.  அதனால் பெரியாரை விட்டு பிரிந்து, 1949 ஆம் ஆண்டு சென்னை ராபின்ஸன் பூங்காவில்," திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற தனிக்கட்சியை அண்ணா தொடங்கினார்.


அறிஞர் அண்ணாவின் தி.மு.க


அண்ணாவுக்கு வாய்த்த தம்பிகள் எல்லாம் அறிவுக்கு பஞ்சமில்லாதவர்கள். அண்ணாவின் தம்பிகள் படையில் மு.கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன்,   ஈ.வெ.கி சம்பத், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன், ப.உ.சண்முகம், பேராசிரியர் அன்பழகன், கண்ணதாசன், பாரதிதாசன், பன்மொழி புலவர் அப்பாதுரையார், எஸ். எஸ். இராஜேந்திரன், கே.ஆர்.இராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன், சத்யவாணிமுத்து, எம் ஜி இராமச்சந்திரன், இராமசாமி படையாச்சி போன்றோர் முக்கியமாணவர்கள்.


அண்ணா "திராவிட நாடு" என்ற பத்திரிகையை தொடங்கி பகுத்தறிவு கருத்துகளை பரப்பிவந்தார். கம்ப ரசம், நீதி தேவன் மயக்கம், ஆரிய மாயை போன்ற புத்தகங்களை எழுதினார்.


பெரியார் எழுதிய கட்டுரைகளுக்காகவும், அண்ணா எழுதிய ஆரிய மாயைக்காகவும், காங்கிரஸ் அரசு இருவருக்கும் ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.


இருவரது விடுதலைக்காக தமிழகம் எங்கும் போராட்டங்கள் வெடித்தன. மக்களின் எழுச்சியைக் கண்டு பயந்து போன காங்கிரஸ் அரசு, ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட இருவரையும் பத்தே நாளில் விடுதலை செய்தது.


1957ல் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்ட  தி.மு கழகம் பதினைந்து இடங்களில் வாகை சூடியது. 1962 ல் இந்த எண்ணிக்கை ஐம்பதாக உயர்ந்தது.


ஐம்பது பேர் வெற்றி பெற்றாலும், காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணா  பணபலத்தின் முன் வீழ்ந்தார். அதனால் மாநிலங்களவை  உறுப்பினராக டில்லி சென்றார்.


அறிஞர் அண்ணாவின் பேச்சு


சரியாக வாரப்படாத தலை, ஒழுங்காக பட்டன் போடாத சட்டை, குள்ள உருவம், வெற்றிலை பெட்டி, பொடி டப்பி இவைகளோடு பாராளுமன்றத்தில் நுழைந்த அண்ணாவை பார்ப்பவர்கள், இவருக்கு என்ன தெரிய போகிறது?  என்றே நினைத்திருக்கக் கூடும்.


ஆனால் அவரது மெய்டன் கன்னி பேச்சு, ஆங்கிலம் தெரிந்தவர்களையே ஆச்சரியப்பட  வைத்தது. "ஐ அம் பிலாங்ஸ் டு த டிராவிடியன் ஸ்டாக்" என்ற கம்பீர ஒலி எல்லோரையும் கட்டி போட்டது. அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தும், அண்ணா பேசிக் கொண்டே இருக்கிறார். "அவரை பேச விடுங்கள்" என நேரு அமைதியாக இருக்கிறார்.


காலம் கடந்து பேசும் அண்ணாவை மணி அடித்து நிறுத்த வேண்டிய அவைத்தலைவர், முன்னாள் குடியரசு தலைவர் இராதாகிருஷ்ணன் மெய் மறந்து அவரது ஆங்கில பேச்சை ரசிக்கிறார்.


ஒரு முறை தமிழையும் தேசிய மொழி ஆக்க வேண்டும் என அண்ணா பேசினார். "இந்திதான் அதிகமான பேரால் பேசப்படுகிறது. அதனால் இந்திதான் தேசிய மொழி ஆகும் தகுதி உள்ளது" என  பதில் கூறப்பட்டது. அதற்கு அண்ணா "நாட்டில் காக்கைகள் தானே அதிகம் உள்ளது அதை விட்டு விட்டு, மயிலை ஏன் தேசிய பறவை ஆக்கினீர்கள்? என கேட்டார்.


மெட்ராஸ் ஸ்டேட்டை தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தில் பேசிய போது, காங்கிரஸ் அமைச்சர் எழுந்து "மெட்ராஸை தமிழ்நாடு என மாற்றுவதால் என்ன பயன் அடைய போகிறீர்கள்?" என கேட்டார். அதற்கு அண்ணா "பார்லிமென்டை லோக்சபா என்றும் கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை இராஜ்யசபா என்றும் பெயர் மாற்றி என்ன பலனை கண்டீர்கள்?" என அண்ணா கேட்டார்.


ஒரு முறை வேழ வேந்தன் என்ற கழகத் தோழர் திருமணத்துக்கு அண்ணா  காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வர வேண்டி இருந்தது. வழியில் கார் பழுதடைந்து விட்டது. சரியான நேரத்தில் திருமணத்துக்கு வர வேண்டும் என நினைத்த அண்ணா, கொஞ்சம் கூட யோசிகாகாமல், ஒரு லாரியில் ஏறி திருமண மண்டபத்துக்கு வந்தார்.


சா. கணேசன் மேயராக இருந்த போது அண்ணாவின்  நுங்கம்பாக்கம் வீட்டில் நான்கு பேருடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. தீடீரென மேலும் நான்கு பேர் வந்துவிட்டார்கள். எக்ஸ்டிரா சேர் இல்லை. "நாங்கள் நிற்கிறோம் நீங்கள் உட்காருங்கள்" என்றார்கள் வந்தவர்கள். உடனே அறைக்கு ஓடிய அண்ணா, ஒரு பெரிய சமுக்காளத்தை எடுத்து வந்து ஹாலில் போட்டு எல்லோரும் அமர்ந்து பேசுவோம் என்றார்.


1967 தேர்தல் முடிவுகள் வருகிறது. திமுக பெரும் வெற்றி பெறுகிறது. வீட்டில் அண்ணாவை சந்திக்க முன்னனி  தலைவர்கள் எல்லாம் கூடி உள்ளார்கள். திடீரென தொடர்ச்சியாக வெடிச் சத்தம். அண்ணா "என்ன" என்று கேட்கிறார். "காமராஜரும் நம் சீனிவாசனிடம் தோற்றுவிட்டாராம்: என்று சொல்கிறார்கள். பதறி போன அண்ணா "முதலில் வெடி வெடிப்பதை நிறுத்துங்கள். காமராஜர் போன்ற தலைவர்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கிடைக்க மாட்டார்கள்" என்றார்.


திமுகவிலிருந்து அண்ணாவும் மற்றவர்களும் விலகிய போது பெரியார் அவர்களை திட்டினாலும்," திமுகவுக்கும் தலைவர் பெரியார்தான். அதனால் அந்த பதவி காலியாகத்தான் இருக்கும்" என பொதுச்செயலாளர் பதவியை மட்டும்  ஏற்றுக் கொண்டவர் அண்ணா.


அறிஞர் அண்ணாவின் பண்பு


ஆட்சிக்கு வந்ததும்,"ஏதோ கவர்ச்சியாக பேசி ஆட்சிக்கு வந்துவிட்டோம். தமிழ் மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தர நீங்கள்தான் நல்ல அறிவுரைகளை தர வேண்டும்" என காமராஜரையும், பக்தவசலத்தையும் நேரில் சந்தித்து ஆசி கோரியவர் அண்ணா.


1967 ஆம் ஆண்டு விழுப்புரம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசினர் தங்கும் விடுதியில் தங்குவதற்கு இடம் இல்லை என அதிகாரிகள் சொன்ன போது கொஞ்சம் கூட வருத்தப்படாமல், காரிலேயே படுத்து தூங்கியவர் அண்ணா.


திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தில் அண்ணாவின் கார் சென்றபோது அதை வழிமறித்த கிராமவாசிகள் உள்ளே அண்ணா இருப்பதை பார்த்துவிட்டு "நீங்கள் எம் ஜி ஆர் கட்சியா?"என்று கேட்டார்களாம். அண்ணா சிரித்து கொண்டே "எப்படி கண்டுபிடித்தீர்கள்" என்று கேட்டாராம்.

"எம் ஜி ஆர் படத்தில் காட்டும் கொடியை உங்கள் காரில் பார்த்தோம்" என்று அவர்கள் சொன்னார்களாம். அந்தக் கட்சிக்கே அண்ணாதான் தலைவர் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.


எம்.ஜி.ஆர் ஒரு முறை தேர்தல் நிதி எவ்வளவு வேண்டும் என அண்ணாவிடம் கேட்ட போது "தேர்தல் நிதி எல்லாம் வேண்டாம். உன் முகத்தை காட்டினால் போதும் எங்களுக்கு ஒட்டு விழுந்துவிடும்" என அண்ணா சொன்னாராம்.


அண்ணா வெளிநாடு சென்ற போது, "காங்கிரஸ் எப்படி உங்களிடம் தோற்றது?" என கேட்டார்கள். அந்த நேரத்தில் கூட காங்கிரஸை காட்டிக்கொடுக்காத அண்ணா, "நீண்ட காலம் ஆட்சியில் இருந்ததால் அவர்கள் தோல்வி அடைந்தார்கள்" என பெருந்தன்மையுடன்  கூறினார்.


ஓர் இரவு நாவலை ஒரே இரவில் எழுதினார். புராணங்களில் உள்ள கடவுளை வைத்தும், மன்னர்களை  மையமாக வைத்தும் சினிமா எடுக்கப்பட்ட காலக்கட்டத்தில், சமகால மனிதர்களை வைத்து சமூக படமான "வேலைக்காரி" படத்தை எடுத்தார்.


ஒருமுறை சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் பேருந்துகளில் "யாகாவாராயினும் நா காக்க" என எழுதி உள்ளதே அது யாருக்கு ஓட்டுநருக்கா? நடத்துனருக்கா? இல்லை பயணிகளுக்கா? என்று கேட்டார்.  அதற்கு அண்ணா "நாக்கு உள்ள எல்லோருக்கும்" என பதிலடி கொடுத்தார்.


மேடைப்பேச்சு, எழுத்து, ஊடகம், நாடகம், பத்திரிகை, திரைப்படம்,  பொது வாழ்வு என வாழ்ந்த நம் பண்பாளர் அண்ணாவுக்கு, புகையிலை பழக்கம் மட்டும் இல்லாதிருந்தால், பெரியாரைப் போல, இராஜாஜியை போல, கலைஞரை போல தொன்னூறு ஆண்டுக்களுக்குக்  குறையாமல் வாழ்ந்திருப்பார். தமிழகமும்  ஏராளமான நன்மைகளை பெற்றிருக்கும். என்ன செய்வது? தமிழக மக்கள் அதற்கு கொடுத்து வைக்கவில்லை.


ஜெ மாரிமுத்து

கருத்துரையிடுக

புதியது பழையவை