வள்ளல் பெருமானின் நேசகர்கள் தென்றல் இதழின் வாசகர்களாக இருப்பது மகிழ்வைத் தருகிறது.
சன்மார்க்கிகள் அனைவரும் வடலூரை புனித நகரமாக மாற்றக்கோருவதை கவனித்தேன். நல்லது தான்.
வள்ளல் பெருமானின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை அனைவரும் நன்கு படிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் புலால் மறுத்தல் என்பது முக்கியமான ஒழுக்கம். ஒவ்வொரு சன்மார்க்கியும் அதைக் கடைப்பிடித்தேயாக வேண்டும். ஆனால் அதைக் காட்டிலும் சிறப்பான ஒழுக்கம் ஜீவராசிகளின் 'பசியைக் கொல்வது'.
வள்ளல் பெருமானார் புலால் மறுத்தலைக் காட்டிலும் பசிப்பிணியை நீக்குதலை அதிகம் வலியுறுத்தக் காரணம் இதுவே.
பசி தான் கொலைக்கும் காரணம். பசியைப் போக்கி விட்டால் கொலை முதலிய பாவத்தை குறைக்கலாம். பசித்தோர்க்கு உணவிடலே இதற்கு பரிகாரம்.
"பசியினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருண்யத்திற்கு முக்கிய லட்சிய மென்றறிய வேண்டும். பசியால் வருங் கொலையை ஆகாரத்தாலன்றி வேறு வகையால் நிவர்த்தி செய்விக்கப்படாது" என்று வள்ளலார் கூறுவது கவனிக்கத்தக்கது.
ஆனால் நாம் இங்கே இன்னுமொன்று அறிய வேண்டியுள்ளது. மனிதர்கள் வெறும் பசியினால் மட்டும் ஆடு, கோழி முதலியவற்றை கொலை செய்விப்பது இல்லை. ஆசையினாலும் அறியாமையினாலும் கூட இப்பாவம் நிகழ்கிறது. பாவமெனத் தெரிந்தும் இவைகளைத் தொடர்பவன் ஊழ்வினையை அனுபவிப்பான்.
உடல் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நெருங்குவதற்கு காரணம் இரண்டு. "சமைத்து உண்பதும் புலால் உண்பதும் உடலை நஷ்டஞ் செய்யவன"
பெரும்பாலான மனிதர்களுக்கு தங்கள் உடலைப் பற்றிய கவலை நோய் வரும் வரையில் இருப்பதில்லை. பிற உயிரைப் பற்றிய கவலை எப்போதுமே இருப்பதில்லை.
சரி பசியை ஆகாரத்தால் நிவர்த்தி செய்விக்க உயிர் கொலை செய்யலாமா எனக்கேட்டால், 'அது ஜீவகாருண்யமே அல்ல' என்பது தான் பதில்.
"ஒரு சீவனைக் கொன்று இன்னொரு சீவனுக்கு மாமிசத்தால் பசி ஆற்றுதல் சீவகாருண்ய ஒழுக்கமே யல்லவென்றும், அதற்கு கடவுள் சம்மதமும் அல்ல வென்றும் அறிதல் வேண்டும்"
ஜீவகாருண்யத்தின் முழு அர்த்தத்தினை புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒருவருக்கு உணவிட்டு அவரின் பசியை தீர்க்கிறோம் எனில் அதற்கு பெயர் தான் ஜீவகாருண்யமா? எனில் இல்லை நாம் அவரின் ஜீவனுக்கு அதாவது ஆத்மாவுக்கு கருணை காட்டுகிறோம்.
உடல் தானே பசியைத் தருகிறது, எனில் நாம் உடலுக்கு தானே கருணை காட்டுகிறோம் என்று கேட்போர்க்கு வள்ளலார் மிக ஆழ்ந்த தத்துவமாக பதில் தருகிறார்.
"இன்ப துன்பங்களை வீட்டிலிருப்பவன் அனுபவிப்பானல்லது, வீடு அனுபவிக்கமாட்டாது"
உலகத்தின் சுக துக்கங்களை நமது ஆத்மாவே அனுபவிக்கிறது. தாகத்தை கேட்பது உடல். தாகம் தணிந்த நிறைவை அனுபவிப்பது உயிர். பசியைக் கேட்பது உடல் அது தீர்க்கின்ற நிறைவை அனுபவிப்பது உயிர்.
இதனால் தான் உடல் அனுபவிக்கும் பணத்தாசைக்கு எல்லை இருப்பதில்லை. உயிர் அனுபவிக்கும் சுகம், துக்கம், தாகம், காமம், பசி முதலியவற்றிற்கு எல்லை இருக்கிறது.
"சுகதுக்கங்கள் ஆன்மாவுக்கே அனுபவமென்றும், சுகதுக்கங்களை அறிந்தனுப்பவிப்பதற்குக் கரணேந்திரியங்கள் ஆன்மாவுக்கு உபகார கருவிகளாகுமென்று அறிய வேண்டியது"
இதனால் ஒன்றை தெளியலாம். இந்த உணவு தான் வேண்டுமெனக் கேட்பது உடலல்ல உயிரே.
உடல் குறையை திருத்துதல் அரிது. உயிர் குறையை மனக்கருவியால் நீக்கிக் கொள்ளலாம்.
தன்னிடம் மனிதநேயம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் பலரது வாழ்வு போலியே.
வறியவருக்கு பிணக்கருக்கு ஏழைக்கு முதியவருக்கு இரங்கும் மனிதன் இவர்களைக் காட்டிலும் கீழான நிலையில் உள்ள எறும்பு, தவளை, ஆடு, மாடு, கோழி, மீன் இன்னும் பிற உயிர்களிடத்தே இரக்கம் கொள்ளவில்லையானால் அவனிடம் எப்படி 'அன்பு' இருப்பதாகும்? அவனிடம் நிச்சயம் அன்பும் கருணையும் இருப்பதாக கொள்ள முடியாது. எதிர்ப்பார்க்கவும் முடியாது.
ஒவ்வொரு சன்மார்க்கியின் முதற்கடன் எல்லா உயிர்களையும் தம்முயிர் போல் நினைத்தல். இறைவனை இன்னொரு உயிரிடத்தில் இருப்பதாக எண்ணி அதனை வழிபடல். பசித்தோருக்கு உணவிடல்.
செல்வம் இருப்போர்க்கு, மறுவேளை உணவு தயாராக இருப்போர்க்கு உணவிடுதல் கூடாது. பசி இருந்து உணவு இல்லாதோரைத் தேடித்தேடி சென்று பலன் எதிர்பார்க்காமல் உணவளிக்க வேண்டும்.
அதேப் போன்று இந்த உலகிலேயே தங்கள் மதத்தைப் பற்றி சிந்திக்காது இன்னொருவரின் துன்பத்தைப் போக்கி பசியை நீக்கும் வழியை எந்நேரமும் சிந்திக்கும் மார்க்கம் சன்மார்க்கம் அல்லாது வேறு இருக்க முடியாது. இந்த ஸ்தலத்திற்கு போனால் முக்தி - கடன் நிவர்த்தி போன்று பலனை கூறி ஆசைக்காட்டி ஏமாற்றும் மார்க்கமும் சன்மார்க்கம் அல்ல.
ஆனாலும் சன்மார்க்கிகள் வள்ளலார் சொன்னது போலே என்றும் தங்களை உயர்வாக எண்ணாது பிற உயிர்களையே உயர்வாக எண்ணும் மனநிலையை கொண்டிருத்தல் வேண்டும். அதுவே எல்லோருக்கும் உதவும் மனப் பண்பை தரும்.
"சீவர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். ஒரு சீவனுக்கு துக்கமென்று அறிந்த போதும், துக்கம் உண்டாகும் போதும் மற்றொரு சீவனுக்கு இரக்கம் முண்டாவதே ஆன்மாவின் தன்மை என்றறியே வேண்டும்"
அவ்வாறு அறியாதவனால் ஜீவகாருண்யத்தை என்றுமே அறிய முடியாது. அத்தோடு 'இறை' உணர்வை பெறும் பாக்கியத்தையும் இழக்கிறான்
ஈசதாசன்