அண்மை

மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை

 

மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை

முன்னுரை


'தேசப்பிதா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி 1869 - ஆம் ஆண்டு அக்டோபர் 2 - ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் ‘போர்பந்தர்' என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி', 'கஸ்தூரிபாய்' என்னும் அம்மையாரை காந்தியடிகள் தனது  13 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். 


பள்ளி வாழ்வு


காந்திஜி தனது தொடக்கக்கல்வியை ராஜ்கோட் என்னும் இடத்தில் படித்தார். மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெற்றபின்பு பவநகர் என்னும் இடத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார். இடையிலேயே படிப்பை நிறுத்தவேண்டிய சூழ்நிலை காந்திக்கு வந்தது. 


இதையும் காண்க

> மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

> காந்தியடிகளின் பொன்மொழிகள்

> காந்திஜியா? நேதாஜியா?


இளமைக் காலம்


காந்திஜிக்கு இளமையிலேயே சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக இங்கிலாந்து செல்ல ஆசைப்பட்டார். காந்திஜியை வெளிநாட்டிற்கு அனுப்ப அவருடைய தாயாருக்கு சிறிதும் மனமில்லை. நிலைமையைப் புரிந்து கொண்ட காந்தி தன் தாயாருக்கு, “வெளிநாட்டில் அசைவ உணவு சாப்பிட மாட்டேன், மது அருந்த மாட்டேன், வேறு பெண்களுடன் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று காந்தி தன் தாயாருக்கு மூன்று உறுதிமொழிகளை அளித்தார். அதைக் கடைசி வரை கடைபிடித்தார். 1888 ஆம் ஆண்டு லண்டன் சென்றார். அங்கு நான்கு வருடங்கள் படித்து 'பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 


தென்னாப்பிரிக்கா பயணம்


பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்திஜி ராஜ்கோட், மும்பை ஆகிய இரு இடங்களில் வக்கீல் தொழிலைச் செய்தார். வியாபாரக் கம்பெனி அழைத்ததன் பேரில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அங்கு வெள்ளையர்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் இந்தியர்களை அடிமையாக நடத்தினர். அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்காக காந்திஜி வாதாடினார். ஆகவே வெள்ளையர்கள் காந்தியடிகளை 'கூலிகளின் வக்கீல்' என்று கேலி செய்தனர். 


தென்னாப்பிரிக்காவில் ஒருமுறை இரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் காந்திஜி பயணம் செய்தார். அதே பெட்டியில் ஒரு வெள்ளையனும் பயணம் செய்தான். அவன் காத்திஜியை இந்தியன் என தெரிந்து கொண்டான். உடனே பெட்டியைவிட்டு இறங்கும்படி சொன்னான். காந்திஜி தனது பயணச்சீட்டைக் காட்டி இறங்க மறுத்தார். வெள்ளையன் காந்திஜியினுடைய பெட்டி, படுக்கைகளைத் தூக்கி வெளியே எறிந்தான். அப்போதே வெள்ளையர்களின் நிறவெறியைப் புரிந்து கொண்டார் காந்திஜி.


ஒத்துழையாமை இயக்கம்


1906 - ஆம் ஆண்டு காந்திஜி 'இந்தியர்களைப் பிரிவு படுத்தும் கறுப்பு சட்ட'த்தை எதிர்த்தார். இதனால் தென்னாப்பிரிக்க அரசு அவரைக் கைது செய்தது. பின்னர் விடுவிக்கப்பட்டார். 1914 - ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தைக் கொண்டு வந்தார். அந்த இயக்கத்தின்படி ஆங்கிலேயரின் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படியக் கூடாது. வன்முறையில் ஈடுபடாமல் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும். ஆங்கில அரசு அளித்த 'சர்' பட்டம் மற்றும் வேறு பட்டங்களை விட்டுவிட வேண்டும். பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் பணியாற்றுவோர் தங்கள் வேலையை விட்டுவிட வேண்டும். சிறைக்குச் செல்ல வேண்டி இருந்தால் செல்ல வேண்டும்' என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் காரணமாக காந்திஜி கைது செய்யப்பட்டார் அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. இவ்வியக்கத்தைக் காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமையின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். 


சிறை வாழ்வு


ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்ததைக் கண்டித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் 'தண்டி' என்னும் இடத்தில் உப்பு காய்ச்ச முடிவு செய்தார். அதற்காக தண்டி யாத்திரை மேற்கொண்டார். இதனால் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டார். 


1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தாள் இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொண்டார். 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 ஆம் நாள் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைத் தொடங்கினார். இதன் காரணமாக காந்தி, நேரு, படேல் உட்பட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காந்தி ஆகாகான் மாளிகைச் சிறையில் அடைக்கப் பட்டார். 


இந்தியா சுதந்திரம்


1940 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனியாள் போராட்டத்தைத் தொடங்கினார். இதன்படி ஆங்கில அரசின் முயற்சிகளுக்கு பொருளுதவி செய்யக்கூடாது. ஆள்பலம் சேர்க்கக்கூடாது என்று கூறினார். ஆங்கிலேய அரசு இந்தியாவை இரண்டாகப் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது. 'இந்தியா', 'பாகிஸ்தான்' என்று பிரித்து இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது என்று முடிவு செய்தது. இனக்கலவரங்கள் ஏற்பட்டன. அமைதியை உருவாக்க விரும்பிய காத்தி நவகாளி யாத்திரையை மேற்கொண்டார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. 


மகாத்மா காந்தி


1915 ஆம் ஆண்டு காந்தி கோண்டல் சமஸ்தாளத்திற்குச் சென்றபோது சமஸ்கிருத வித்வானாக இருந்த ஜீவராம் காளிதாஸ் சாஸ்திரி காந்திஜியை 'மகாத்மா காந்தி' என்று புகழ்ந்தார். அதுவே நிலையான பெயராக மாறிவிட்டது. நாட்டின் நன்மைக்காக இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமையை ஒழித்தல், மதுவிலக்கு ஒப்பந்தம், மகளிர் முன்னேற்றம், தொழுநோய் ஒழித்தல் போன்ற திட்டங்களை அறிவித்தார். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். 


காந்தியம்


பகவத் கீதை, சமண சமயம், எழுத்தாளர் லியோ டால்ஸ் டாய் மீது பெரிதும் ஈடுபாடு உள்ள மகாத்மா காந்தியடிகள் கொள்கை இல்லா மனிதன் மனிதனே அல்ல எனும்படி தனக்கென்று 11 விரதங்களை வகுத்துக் கொண்டார். அதுப்படி வாழ்ந்தும் காட்டினார். அவை,


  1. கொல்லாமை
  2. கள் உண்ணாமை
  3. அஞ்சாமை
  4. உண்மை
  5. உடல் உழைப்பு
  6. நாவடக்கம்
  7. பிறர் சொத்து கேட்காமை
  8. தாய்நாடு பேணுதல்
  9. ஐம்புலனையும் அடக்குதல்
  10. தீண்டாமை அகற்றுதல்
  11. உறுதிமனம் கொள்ளுதல்


இந்த பதினொரு விரதங்களையும் பேணுவது காந்தியம் எனப்படுகிறது. அஹிம்சாவாதியில் லட்சியமாகவும் இந்த பதினொரு விரதங்களும் வைக்கப்படுகிறது.


"காந்தியை ஒரு ஆங்கிலேயன் தனது காலால் உதைத்த போது காந்தியின் கீழ் பல் இரண்டும் உடைந்து சிதறிப்போனது, இரத்தக் காயங்களோடு எழுந்த காந்தி அந்த ஆங்கிலேயனைப் பார்த்து 'ஒரு வெள்ளையன் உதைத்து இரண்டு வெள்ளையன் விழுந்தான்' என்று அமைதியோடு கூறினார். இதுவே காந்தியக் கொள்கையாகும்.


மகாத்மா மரணித்தார்


அகிம்சை வழி நடந்த காந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் 'கோட்சே' என்னும் கொடியவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்தாலும் அவரின் அகிம்சை , உண்ணாநோன்பு, சத்தியம் போன்றவை என்றும் நிலைத்து நிற்கும். அவருடைய நினைவாக மதுரைக்கு அருகே 'காந்தி கிராமம்' அமைக்கப்பட்டுள்ளது. 'காந்தி கிராமிய பல்கலைக்கழகம்' ஒன்று செயல்பட்டுவருகிறது. சென்னை, கிண்டியில் 'காந்தி மண்டபம்' அமைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் காந்தியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அகிம்சையே ஆயுதங்களில் வலிமையானது. சத்தியமே வாழ்வில் நிலையானது, உயர்வானது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர் மகாத்மா காந்தியடிகள். பதவிகளை வகிக்காமல் உலக அளவில் புகழ் பெற முடியும் என்று நிரூபித்தார். 'மகாத்மா' என்ற பெருமைக்கு உரியவர் காந்தி ஒருவரே.


இதையும் காண்க

> மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

> காந்தியடிகளின் பொன்மொழிகள்

> காந்திஜியா? நேதாஜியா?


கருத்துரையிடுக

புதியது பழையவை