"மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்று கவிமணி சொன்னதை "இது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய கருத்து தான்" என சந்தேகத்தோடு ஏற்று கொள்ள வைப்பதே கார்கி.
கார்கி (சாய் பல்லவி) தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு சாதரண பெண்மணி. அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றும் இவரது தந்தை (ஆர்.எஸ். சிவாஜி), ஒரு சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமையில் உள்ளாக்கப்படும் குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார். கார்கி தன் தந்தையை மீட்டாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.
இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன். தமிழ் சினிமாவில் நீண்ட நாளுக்கு பிறகு ஊகிக்க முடியாத கிளைமாக்ஸ் காட்சியை அமைத்தவர் எனும் பாரட்டை இந்த படத்தின் மூலம் பெறுகிறார்.
கார்கியின் தந்தையாக நடித்த ஆர்.எஸ். சிவாஜி, நீதிபதியாக நடித்த திருநங்கை சுதா, குற்ற விசாரணை அதிகாரியாக வந்த காவலர் தங்களது முகத்தை நமது மனத்தில் அழுத்தி பதிக்கிறார்கள்.
நீதி என்பது கல் போன்றது. அங்கே உணர்வுகளுக்கு வேலை ஏதும் இல்லை. சிறுமிக்கு நிகழ்ந்த இன்னலை தங்களது உணர்வுகளோடு பொருத்துகின்ற மக்களை நடுவுநிலைமையோடு எதிர்கொள்கின்ற போக்கு, வக்கீலுக்கு இருக்கக்கூடாத திக்கு வாயோடு படத்தின் இட கண்ணாக இருக்கிறார் காளி வெங்கட்.
தமிழ் சினிமா உலகினால் அதிகம் கவனிக்கப்படாத ஆல்-ரவுண்டர் காளி வெங்கட். காமுகனின் பெண் என சமுதாயத்தின் அனைத்து தரப்பட்ட மக்களின் வெறுப்புக்கும் உள்ளாகிய கார்கி பக்கம் துணை நின்ற வக்கீல் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையை படத்தை உற்று கவனித்து கொண்டே இருந்தால் கேட்கலாம்.
கார்கி சிறுபிள்ளையாய் இருந்த போது நிகழ்ந்த சம்பவமென்று பின்னோக்கு உத்தியில் காட்டும் சில கருப்பு-வெள்ளை காட்சிகளை நீக்கி இருக்கலாம்.
சாய் பல்லவி, காளி வெங்கட், ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன் போன்றோரின் நடிப்பை பாராட்டுவதோடு இந்த படத்தை கடந்துவிட முடியாது.
முகந்தெரியாத ஒருவர் நம்மிடம் சிரித்து பேசினால் பதிலுக்கு பெண்களால் சிரித்து கூட பேச முடிவதில்லை. உதவ முன் வர முடிவதில்லை.
சமீபத்தில் கூட 'Please help me' எனக்கூறிக் கொண்டு இளம் பெண்களின் மொபைல் நம்பர்களை தந்திரமாக பெறும் முறையை 'Prank' என்ற பெயரில் செய்வதை இணையத்தில் காண்கிறோம்.
சமூகத்தால் ஆணும் பெண்ணும் சமமென்று கற்பிக்கப்பட்டாலும் அதே சமூகம் அந்த பெண்ணுக்கு ஆணுக்கு இல்லாத சில கை விலங்கை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.
'பெண் சுதந்திரம்' என்பதையும் சில பெண்கள் தவறான முறையில் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
'கார்கி' இவற்றிற்கான பதில். ஒரு பெண் பாசத்திற்கு முன்னும் நீதி முன்னும் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதை தெளிவாக்குகிறது.
"தர்மம் என்பது பந்த பாசம் அற்றது, குருட்டன்பு இல்லாதது" என்ற பாரதியின் வரிகளை சவுக்கடியாய் காட்டுகிறது.
பெண்கள் மட்டுமல்ல ஒவ்வொரு ஆணும் கட்டாயமாக பார்க்க வேண்டிய படமே 'கார்கி'
திருமங்கை
கார்கி பெண்களுக்கான படம் என்று தான் விளம்பரமே செய்தார்கள். தென்றல் இதழ் மட்டும் தான் இது ஆண்களுக்கான படம் என்கிறது 🔥🔥🔥
பதிலளிநீக்கு