முன்னுரை
இந்தியா சுதந்திரத்திற்காக காத்திருந்த 20ஆம் நூற்றாண்டு காலத்தில் மக்களால் பாபு, தேசப்பிதா என்று அன்போடு அழைக்கப்பட்டவரே மகாத்மா காந்தியடிகள். 400 வருடங்களால் எவராலும் நிகழ்த்த முடியாத அரிய காரியங்களை காந்தியடிகள் செய்து காட்டி சரித்திரம் படைத்த இந்தியர்களில் ஒருவராகிரார். 'ஆயுதம் ஒன்றே போரில் வெல்லும்' எனும் வாசகத்தையே அகிம்சை என்னும் ஆயுதத்தால் வென்று காட்டியவர் காந்தி. இதனால் காந்தியடிகளை நாம் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்கிறோம். இத்தகைய மாபெரும் ஆளுமையான மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ் பதிவில் தரப்படுகிறது.
பிறப்பு | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் பெயர் கொண்ட மகாத்மா காந்தியடிகள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் 'போர்பந்தர்' எனும் இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்லிபாய் அம்மையார் ஆவார்.
இதையும் காண்க
> மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை
பள்ளிப் பருவம் | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்
போர்பந்தர் எனும் நகரில் வாழ்ந்த காந்தியை அவரது 5 ஆவது வயதிலே பள்ளியில் சேர்த்தனர். காந்தியடிகள் தனது 12 வயது நிரம்புவதற்குள் மூன்று பள்ளிகளில் இடம்மாற வேண்டி இருந்தது. காந்தி தனது பள்ளிப் பருவ நிகழ்வு ஒன்றினை சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார்.
"சிறுவயது முதலே நான் பொய்யோடு பொருந்திப் போனதில்லை. நான் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த புதிது. கல்வித்துறை இன்ஸ்பெக்டர் வந்தார். மாணவர்களின் படிப்பறிவைச் சோதிக்க நினைத்தார். சில சொற்களைக் கூறி அதை எழுதும்படி 'டிக்டேசன்' கொடுத்தார். எல்லோரும் நின்று கொண்டே எழுதினோம். ஆங்கிலத்தில் 'கெட்டில்' (Kettle) என்று ஒரு வார்த்தை. அதைத் தவறாக எழுதிக் கொண்டிருந்தேன். கவனித்து விட்டார் ஆசிரியர். லேசாக என் காலை மிதித்து, பக்கத்து மாணவன் எழுதுவதைப் பார்த்து 'காப்பி' அடித்து, சரியாக எழுதும்படி ஜாடை காட்டினார். மந்த புத்திக்காரனான எனக்கு அது முதலில் புரியவில்லை. மற்ற மாணவர்கள் எல்லாம் சரியாக எழுதியிருக்க, நான் மட்டும் தவறாக எழுதியிருந்தேன். ஆசிரியர் சூசகமாக உணர்த்திய பொய்மையோடு என் உள்ளம் பொருந்தி போக விரும்பவில்லை.
பள்ளிப்பருவத்திலேயே காந்தியடிகள் சிரவணன் அரிசந்திரன் முதலான தர்மநெறிக் கதைகளில் தேர்ந்து இருந்தார். அரிச்சந்திரன் கதை காந்தியடிகளின் மனத்தில் பெரிதும் தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தது. இதனாலேயே காந்திகடிகள் மனம், வாக்கு, காயம் இவற்றின் மூன்றாலும் பொய்மையை வெறுத்தார்.
இளமைப் பருவம் | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்
காந்திக்கு தனது 13 ஆவது வயதிலே கஸ்தூரிபாயோடு திருமணம் நடந்து முடிந்தது. காந்தியடிகள் இந்நிகழ்வைப் பற்றி தனது சுயசரிதமான சத்திய சோதனையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்,
'என் 13ஆவது வயதில் எனக்கு திருமணம் நடந்தது. அது கசப்பான உண்மை. என் வயதில் உள்ள சிறுவர்களுக்கு அந்த நிலைமை ஏற்படக் கூடாது. பால்ய விவாகம் நியாயமானது அல்ல'
காந்தியடிகள் தனது 16 ஆம் வயதிலே தந்தை உத்தம்சந்த் காந்தியை இழந்தார். காந்திக்கும் கஸ்தூரிபா காந்திக்கும் 4 ஆண் குழந்தைகள் பிறந்தது.
காந்திஜி தனது தொடக்கக்கல்வியை ராஜ்கோட் என்னும் இடத்தில் படித்தார். மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெற்றபின்பு பவநகர் என்னும் இடத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார். இடையிலேயே படிப்பை நிறுத்தவேண்டிய சூழ்நிலை வந்தது. காந்திஜிக்கு இளமையிலேயே சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக இங்கிலாந்து செல்ல ஆசைப்பட்டார். காந்திஜியை வெளிநாட்டிற்கு அனுப்ப அவருடைய தாயாருக்கு சிறிதும் மனமில்லை. நிலைமையைப் புரிந்துகொண்ட காந்திஜி தன் தாயாருக்கு, 'வெளிநாட்டில் அசைவ உணவு சாப்பிட மாட்டேன். மது அருந்த மாட்டேன். வேறு பெண்களுடன் தொடர்பு கொள்ளமாட்டேன்' என சத்தியம் செய்து 1888 ஆம் ஆண்டு லண்டன் சென்றார். அங்கு 4 வருடங்கள் படித்து 'பாரிஸ்டர்' பட்டமும் பெற்றார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்
பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி ராஜ்கோட், மும்பை ஆகிய இரு இடங்களில் வக்கீல் தொழிலைச் செய்தார். வியாபாரக் கம்பெனி அழைத்ததன் பேரில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அங்கு வெள்ளையர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் இந்தியர்களை அடிமையாக நடத்தினர். காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இரண்டே நாளில் பிரபலமான வக்கீலாக அங்கு வாழ்ந்த இந்திய மக்களிடையே பரவத்தொடங்கினார். இந்தியர்களுக்காக காந்தி நீதிமன்றத்தில் வாதாடினார். ஆகவே அவரை வெள்ளையர்கள் 'கூலிகளின் வக்கீல்' என்று கேலி செய்தனர்.
தென்னாப்பிரிக்காவில் ஒருமுறை இரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் காந்தி பயணம் செய்தார். அதே பெட்டியில் ஒரு வெள்ளையனும் பயணம் செய்தான். அவன் காந்தியை இந்தியன் என தெரிந்து கொண்டு உடனே பெட்டியைவிட்டு இறங்கும்படி சொன்னான். காந்தி தனது பயணச்சீட்டைக் காட்டி இறங்க மறுத்தார். வெள்ளையன் காந்தியினுடைய பெட்டி, படுக்கைகளைத் தூக்கி வெளியே எறிந்தான். அப்போதே வெள்ளையர்களின் நிறவெறியைப் புரிந்து கொண்டார் காந்தி. இருந்தாலும் நேர்மையின் பக்கம் நீங்காத காந்தியடிகள் பெட்டியை விட்டு இறங்க வைராக்கியமாய் மறுத்தார். ரயில் பெட்டியில் இருந்த ஆங்கில காவலாளிகள் இறங்க மறுத்த காந்தியை அடித்து பெட்டியை விட்டு வீசி எறிந்தனர். காந்தியடிகளின் மனத்தில் இச்சம்பவம் நீங்காத வடுவானது. நிறவெறியால் இந்தியர்கள் எத்தனை இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவில் இந்தியர் மக்களின் வாக்குரிமை தடுக்கப்பட்டதை எதிர்த்து காந்தி அஹிம்சை வழியில் போராடினார். 1894 ஆம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சி தென்னாப்பிரிக்க வாழ் இந்திய மக்களுக்கு அவர்களின் உரிமையைத் தேடித் தந்தது. ஆங்கிலேயர்களின் நிறவெறிக்கு குட்டு வைக்க இந்த கட்சியின் தலைவராக காந்தியே பொறுப்பேற்று போராடினார். அதன்மூலன் தென்னாப்பரிக்க இந்திய மக்கள் பெரிதும் பயனடைந்தார்கள். தில்லையாடி வள்ளியம்மை போன்ற வீர மங்கையர் காந்திக்கு உதவி அளித்தனர்.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்கா விட்டு இந்தியா திரும்பும் போது தென்னாப்பிரிக்க வாழ் இந்திய மக்கள் காந்தி செய்த இப்பெரும் சேவையை மதித்து அவருக்கு பொன்னும் பணமும் கொடுத்தார்கள். காந்தியடிகள் அவற்றை கண்டிப்போடு மறுத்து இந்தியா திரும்பினார்.
மும்பையில் காந்தி | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்
தென்னாப்பிரிக்காவில் இருந்து கடல்வழி பிரயாணமாக வந்த காந்தியடிகள் 1915 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று மும்பை துறைமுகத்தை வந்தடைந்தார். தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக பணியாற்றிய எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் காந்தியடிகள் விவசாயியின் உடையில் மும்பை வந்து சேர்ந்தார். காந்தியடிகளையும் கஸ்தூரிபா காந்தியையும் மிதவாத கட்சி தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே வரவேற்றார். இந்நாளை நினைவு கூரும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர் நாள் கொண்டாடப்படுகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளின் பங்கு | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்
தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் பலரும் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டிருந்தது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
உப்பு சத்தியாகிரகம் | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்
ஆங்கிலேய அரசு இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்பிற்கு பிப்ரவரி 1930 ஆம் ஆண்டு வரி விதித்தது. பிரிட்டிஷ் அரசு தவிர வேறு யாரும் இந்தியாவில் உப்பு விற்க கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்க காந்தி பிரிட்டிஷாரிடம் மனு கொடுத்தார். காந்தி கொடுத்த மனு பரிசீலனையின்றி நிராகரிக்கப்பட்டது. காந்தி இந்த கொடும் சட்டத்தை சத்தியாகிரக முறையில் எதிர்க்க திட்டம் தீட்டினார். மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் குஜராத் கடலோரப்பகுதியான தண்டிக்கு சென்று அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பைத் தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக உப்பை விநியோகம் செய்தார். அதுமட்டுமல்லாம் இதுபோன்றே இந்தியர்கள் அனைவரையும் உப்பை காய்ச்சி விநியோகிக்க காந்தியடிகள் உத்தரவிட்டார். பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். காந்தியும் அவரது தொண்டர்களும் இன்னும் பல்லாயிர இந்தியர்களும் சத்தியாகிரகத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்
காந்தியக்கவிஞர் என அழைக்கப்படும் வெ.ராமலிங்கப்பிள்ளை தமிழக உப்பு சத்தியாகிரகத்தில் தான் அழியாத இப்பாடலை பாடினார்,
"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!"
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. காந்தியால் தொடங்கப்பட்ட உப்பு சத்தியாகிரகம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாய் உள்ளது.
ஒத்துழையாமை இயக்கம் | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்
ரவ்லட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக காந்தியால் தொடங்கப்பட்ட இயக்கமே ஒத்துழையாமை இயக்கம் எனும் இந்த இயக்கமாகும். இந்த இயக்கம் செப்டம்பர் 1920ல் தொடங்கி பிப்ரவரி 1922 வரை தொடர்ந்தது. இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்தியர்கள் ஆங்கில அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. இவ்வியக்கத்தைக் காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமையின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.
காந்தியம் | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்
பகவத் கீதை, சமண சமயம், எழுத்தாளர் லியோ டால்ஸ் டாய் மீது பெரிதும் ஈடுபாடு உள்ள மகாத்மா காந்தியடிகள் கொள்கை இல்லா மனிதன் மனிதனே அல்ல எனும்படி தனக்கென்று 11 விரதங்களை வகுத்துக் கொண்டார். அதுப்படி வாழ்ந்தும் காட்டினார். அவை,
- கொல்லாமை
- கள் உண்ணாமை
- அஞ்சாமை
- உண்மை
- உடல் உழைப்பு
- நாவடக்கம்
- பிறர் சொத்து கேட்காமை
- தாய்நாடு பேணுதல்
- ஐம்புலனையும் அடக்குதல்
- தீண்டாமை அகற்றுதல்
- உறுதிமனம் கொள்ளுதல்
இந்த பதினொரு விரதங்களையும் பேணுவது காந்தியம் எனப்படுகிறது. அஹிம்சாவாதியில் லட்சியமாகவும் இந்த பதினொரு விரதங்களும் வைக்கப்படுகிறது.
காந்தியடிகள் இந்த கொள்கைகளை பெரிதும் போற்றினார். தன்னை ஒருவன் தாக்கினாலும் அவனது அந்த தவறை அந்த கணமே மன்னித்து பொறுத்து கொள்ளுதலே அஹிம்சையில் மூலப்பாடமாகும்.
"காந்தியை ஒரு ஆங்கிலேயன் தனது காலால் உதைத்த போது காந்தியின் கீழ் பல் இரண்டும் உடைந்து சிதறிப்போனது, இரத்தக் காயங்களோடு எழுந்த காந்தி அந்த ஆங்கிலேயனைப் பார்த்து 'ஒரு வெள்ளையன் உதைத்து இரண்டு வெள்ளையன் விழுந்தான்' என்று அமைதியோடு கூறினார். இதுவே காந்தியக் கொள்கையாகும்.
காந்தியடிகளின் பொன்மொழிகள்
"தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் உண்மையான தியாகியாக இருக்க முடியாது"
"கண் பார்வை இல்லாதவன் எல்லாம் குருடன் அல்ல. எவன் தன் குற்றத்தை உணராமல் அதே குற்றத்தை தொடர்கிறானோ அவனே குருடன்"
"சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று"
"உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் உன்னை மாற்று"
"கடவுள் விண்ணுலுமில்லை மண்ணிலுமில்லை. நீ இன்னொருவருக்கு செய்யும் சேவையில் இருக்கிறார்."
"உண்மையை மறைக்காது சொல்லும் மனத்திடம் உள்ளவனே தைரியசாலி"
மேலும் காந்தியின் பொன்மொழிகளை அறிய இங்கே சொடுக்கவும்
முடிவுரை | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்
அகிம்சை வழி நடந்த காந்திஜி 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் 'கோட்சே' என்னும் கொடியவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்தாலும் அவரின் அகிம்சை, உண்ணாநோன்பு, சத்தியம் போன்றவை என்றும் நிலைத்து நிற்கும். அவருடைய நினைவாக மதுரைக்கு அருகே 'காந்தி கிராமம்' அமைக்கப்பட்டுள்ளது. 'காந்தி கிராமிய பல்கலைக்கழகம்' ஒன்று செயல்பட்டுவருகிறது. சென்னை, கிண்டியில் 'காந்தி மண்டபம்'அமைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் காந்தியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
காந்தி இன்றையத் தலைமுறையினரால் படிக்க வேண்டியதொரு தலைவார் ஆனால் நிலையோ மாறியுள்ளது. இன்றைய தலைமுறையினரால் அதிகம் பழிக்கப்படுவராய் மகாத்மா காந்தி உள்ளார். காந்தியடிகள் உண்மை அவரது சொல்லால் மட்டும் ஒலிவிடாமல் வாழ்க்கையில் எதிரொலித்து கொண்டே இருக்கிறது.
இறுதியாக காந்தி தனது சத்திய சோதனை நூலில் குறிப்பிடும் சொற்கள்: "மனிதன் தன்னை எல்லோரிடத்திலும் கடையனாகக் கருதாத வரையில் விடுதலை அவனிடமிருந்து விலகியிருக்கும் அகிம்சை என்பது பணிவின் கடைசி நிலை. அந்த பணிவு இன்றி விடுதலை ஒருபோதும் கிட்டாது. இது அநுபவத்தில் கண்ட உண்மை. எனவே, அத்தகைய அஹிம்சை கொண்ட பணிவை அடைய வேண்டும். அதுவே உலகத்திற்கும் தேவை"
மகாத்மா என்று ரவீந்தரநாத் தாகூர் அளித்த இப்பட்டம் காந்தியடிகள் ஒருவருக்கே பொருந்தும்.
இதையும் காண்க
> மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை