அண்மை

மனுஸ்மிருதி என்றால் என்ன? ஆ.ராசா பேசியது சரியா?

மனுஸ்மிருதி என்றால் என்ன?


கொஞ்ச நாட்களாகவே, மனுஸ்மிருதி, மனு சாஸ்திரம் போன்ற சொற்கள் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் வாத பிரதிவாதங்களால் விவாதிக்கப்பட்டு வருவதை காணலாம்.


பெரியார் திடலில் நடந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த ஒரு தீர்ப்பில் இந்தியாவில் இஸ்லாமியனாகவோ, கிறிஸ்தவனாகவோ, சீக்கியனாகவோ, பார்சியாகவோ, புத்த, சமண சமயங்களிலோ, இல்லாத ஒருவன் இந்துவாகத்தான் இருக்க முடியும் என ஒரு தீர்ப்பு கூறப்பட்டதாக கூறினார்.


அதைக் குறிப்பிட்ட ஆ.ராசா மனுஸ்மிருதியில், இந்து என்றால் சூத்திரன் என்றும், சூத்திரன் என்றால் வேசியின் மகன் என்றும் பஞ்சமன் என்றும் கூறப்பட்டுள்ளதே எத்தனை பேர் இந்துவாக இருக்கப் போகிறீர்கள்? அதாவது வேசியின் மகனாக இருக்கப் போகிறீர்கள்? என்று கேட்டார்.


இது பிஜேபியினர் மட்டுமல்ல இந்து என சொல்லிக் கொள்ளும் திமுகவினர் உள்பட பலருக்கு சற்று ஆத்திரமூட்டும் பேச்சாகவே அமைந்தது.


மனுஸ்மிருதி என்பது மனு என்ற ஆரிய பிராமணரால் கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் கிமு ஆயிரத்து ஐந்நூறில் மக்கள் வாழ்வதற்கான விதிகளை வகுத்த நூலாக கருதப்படுகிறது.  அதன் பின்னரும் இரண்டாயிரம் ஸ்மிருதிகள் தோன்றி உள்ளன.


மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு உண்டான மனு சாஸ்திரத்தில் இந்து என்றால், சூத்திரன் வேசியின் மகன் எனக் கூறப்பட வாய்ப்பே இல்லை. ஏன் தெரியுமா?


கிபி 1600 க்கு முன்பு வரை இந்து என்ற பெயரில் மதமோ, ஒரு இனக்குழுவோ இருந்ததாக எவ்வித ஆதாரமும் இல்லை. இந்து என்ற சொல் ஏதோ ஒரு நூலில் இருந்தால் கூட, அது மதம் என்ற பொருளில் இல்லை.


இந்து என்ற வார்த்தை பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை.

திருக்குறளில் இல்லை.  தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்திலேயே இந்து என்ற வார்த்தை இல்லை.

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இல்லை.

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட ஐம்பெரும் காப்பியங்களிலும் இந்து மதம் இல்லை. புறநாநூறு, அகநாநூறு, நற்றினை, குறுந்தொகை, போன்ற சங்க இலங்கியங்களில் கூட,  இந்து என்று ஒரு மதம் இல்லை.


வேண்டுமானால் சைவ சமயம், வைணவ சமயம், பெளத்த சமயம், சமண சமயம் போன்ற சமயங்கள் இருந்துள்ளன.  ஆங்கிலேயர்கள் 1700 வருடங்களில், நிர்வாக வசதிக்காக இந்தியாவை பிரித்த போது, விந்திய மலைக்கும் தெற்கு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியை இந்தூஸ் என குறிப்பிட தொடங்கினார்கள். எல்லா சமயங்களுக்கும் ஒட்டு மொத்த பெயராக இந்து என பெயர் வைத்தவர் வில்லியம் ஜோன்ஸ்.


சிந்து நதிக் கரையில் வாழும் மக்களுக்கும் இந்து என பெயர் இருந்தது. சிந்து சமவெளி பள்ளத்தாக்கு பகுதிகளில் சிந்து என்றும் இந்து என்று மருவியும் காணப்பட்டது.


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று  சொன்ன திருவள்ளுவர், பிறப்பினால் ஏற்றத் தாழ்வு இல்லை என்றும் செய்யும் தொழிலாலேயே வேறுபாடு ஏற்பட்டதாக கூறுகிறார். திருவள்ளுவரை வைத்து பார்க்கும்போது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட சாதியோ மதமோ இல்லை.


சரி மனுஸ்மிருதி எனப்படும் மனு சாஸ்திரத்தில் அப்படி என்னதான் கூறப்பட்டுள்ளது?


புண்ய பாவங்கள் அடிப்படையில் மக்கள் நான்கு வருணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளார்களாம். பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவர்கள்  பிராமணர்களாம். தோள்களில்  பிறந்தவர்கள் சத்திரியர்களாம்.

இடுப்பில் பிறந்தவர்கள் வைசியர்களாம். கால்களிலிருந்து பிறந்தவர்கள்  சூத்திரர்களாம்.


மற்ற மூன்று வருணத்தாரும் பிராமணனுக்கு சேவகம் செய்து வாழ வேண்டும். பிராமணன் எந்தக் குற்றம் செய்தாலும் அவனுக்கு தண்டனை இல்லை. சூத்திர பெண்கள் தனியாக வாழக்கூடாது. ஆணை ஒட்டியே வாழ வேண்டும்.


சூத்திரர்களுக்கு கல்வி அளிக்கக் கூடாது. சூத்திர பெண் தாசியாகவே இருப்பாள். அவர்களுக்கு சொத்து உரிமை கிடையாது. ஒரு பிராமணன் கீழ்சாதி பெண்ணை விரும்பலாம், அது குற்றமில்லை. ஒரு கீழ்சாதி பெண் ஒரு பிராமணனை விரும்பினால் மரண தண்டனை உண்டு.


ஆ.ராசா இந்த பேச்சை நூறு வருடங்களுக்கு முன்பு பேசி இருந்தால், கைதட்டி வரவேற்று இருக்கலாம்.


இப்போது இந்த பேச்சுக்கு என்ன அவசியம்?


மனுதர்மப்படி பெண்ணுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால் இன்று இந்தியாவின் உயர்பதவியான குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினர்.


மனுதர்மபடி பஞ்சமர்கள் எனப்படும் தாழத்தப்பட்டவர்கள் படிக்கக்கூடாது.


ஆனால் இன்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சமமான வாய்ப்பை பெற்று உள்ளார்கள்.


பெண்கள் உயர்கல்வி பெறுவதில் ஆண்களை விஞ்சிவிட்டார்கள். சமீபத்தில் நடந்த TNPSC 1ST GROUP தேர்வில்  தேர்வானவர்கள் 66 பேரில் 58 பேர் பெண்கள்.


வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30% கட்டாய இட ஒதுக்கீடு உள்ளது.


எந்த பிராமணனாவது மற்ற குலத்தவரை தன் அடிமையாக வைத்துள்ளானா?


தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு கூட இக்காலத்தில் பிராமணர்களுக்கு மறுக்கப்படுகிறது.


கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக குப்தர், சமணர், சாளுக்கியர், சேர, சோழ  பாண்டியர், முகமதியர், மொகலாலயர்கள் மராட்டியர்கள், விஜயநகரத்தார் என எவ்வளளோ ஆட்சிகள் மாறினாலும் வருணாசிரமத்தை சாதியாக மாற்றி, ஆரிய பிராமணர்கள் மக்களை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்கள்.


குப்தர் காலம் பொற்காலம் என சொல்லப்பட்டாலும், ஆட்சிக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு பிராமணர் ஆதிக்கம் இருந்தது. அதனால் மனுஸ்மிருதியே ஆரியர்களின் சட்டமாக இருந்தது. பிராமணர் அல்லாதோருக்கு கல்விமறுக்கப்பட்டது. பெண்களுக்கு பிள்ளை பெற்று தருவதைத் தவிர எந்த உரிமையும் கிடையாது.


குறிப்பிட்ட பிரிவினர் கல்வி கற்க கூடாது என்ற மனு தர்மத்தை மாற்றி அமைத்ததே ஆங்கிலேயர்கள்தான்.  பாபிங்டன் மெகாலே என்ற ஆங்கில பிரபு காலத்தில்தான்  இனப் பாகுபாடு இல்லாமல் கல்வியை கற்றுக் கொடுத்தார்கள். இதற்காகவே கோபால கிருஷ்ண கோகலே போன்றவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள்.


1911 ஆம் ஆண்டு வரை ஒரு சதவிகித பெண்களே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள் என்ற புள்ளிவிபரமே பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதை நாம் தெளிவாக உணரலாம்.


நூறாண்டுகளுக்கு முன்பு 99% பெண்களுக்கு படிப்பறிவு கிடையாது என்பதிலிருந்தே மனுஸ்மிருதியின் தீவிரத்தை நாம் உணரலாம்.


இரண்டாயிரம் ஆண்டுகள் மனுஸ்மிருதி என்ற ஆரியரின் சட்டத்தால் அடக்கி, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்களுக்கு கடந்த நூற்றுபத்து  ஆண்டுகளுக்கு முன்பு 1912 ஆம் ஆண்டு விடிவு ஏற்படத் தொடங்கியது.


1912 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் டாக்டர் நடேச முதலியார் வீட்டில் பிராமணர் அல்லாத தலைவர்கள் ஒன்று கூடி சென்னை திராவிட சங்கம் உருவானது. டி.எம் நாயர், தியாகராய செட்டி போன்றவர்களது முயற்சியால் நீதிக்கட்சி உருவானது.


மூன்று சதவிகிதமே இருந்த பிராமணர்கள், ஆட்சியிலும் அதிகாரத்திலும் தொன்னூறு சதவிகித இடங்களை ஆக்கிரமித்து இருந்த கொடுமையை பொறுக்காத மக்கள், கூட்டம் கூட்டமாக நீதிக்கட்சியில் இணைந்தார்கள். வகுப்பு வாரியாக பிரதிநிதித்துவம் கோரி பெரியாரால்  கொண்டு வரப்பட்ட தீர்மானம் காங்கிரஸால் தோற்கடிக்கப்பட்டதால், பெரியாரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நீதிக் கட்சியில் இணைந்தார்.


1920 ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தலில் நீதிக்கட்சி ஆட்சியை பிடித்தது. மனுஸ்மிருதிக்கு முதல் மரண அடி கிடைத்தது. சுப்பராயலு ரெட்டி முதலமைச்சர் ஆனார்.


தமிழ்நாடு முழுவதும் சூப்பர் மார்கெட் ஆனாலும் சரி, ஏஜன்ஸிகளாய் இருந்தாலும் சரி, ஜவளித்துறையானாலும் சரி, கட்டுமானத் துறையானாலும் சரி தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பொதுப்பிரிவினர் எல்லோரும் சமநோக்கில் சகோதர உணர்வுடன் பணியாற்றுகிறார்கள். அக்ரஹாரங்கள் மறைந்து சமத்துவ புரங்களாக தோன்ற தொடங்கிவிட்டன.


இரண்டு கோடி வன்னியர்களுக்காக கட்சி நடத்துவதாக கூறுபவர்களுக்கு பத்து லட்சம் ஓட்டுகள் கூட விழுவதில்லை. இரண்டு கோடி ஆதிதிராவிடர்களுக்காக கட்சி நடத்துவதாக கூறுபவர்களுக்கும் இதே கதிதான். ஏழு கோடி இந்துக்களுக்கும் தங்களை பாதுகாவலர்கள் என சொல்லிக் கொள்பவர்களும் தமிழக மக்களின் ஐந்து சதவிகித வாக்குகளை கூட பெறமுடியவில்லை. ஏனென்றால் எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்க்கும் பகுத்தறிவை பயன்படுத்தும் மண் இந்த தமிழ் மண். இங்கு சாதி மதம் எனும் பேதம் இல்லை.


அதனால் ஆ.இராசா போன்றவர்கள் குறுக்கு சால் ஓட்டி இது போன்ற புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் என்பதே எனது கருத்து.


ஜெ மாரிமுத்து

கருத்துரையிடுக

புதியது பழையவை