எலும்பு இல்லாததால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்னும் எண்ணமோ உனக்கு?
யாருக்கு எலும்பு இல்லை! உயிரும் மெய்யும் உண்டெனக்கு! எலும்பும் அவற்றிலே இருக்கு…
எதையும் புரியாத படி புலம்பும் நீ.. இன்று எதையும் புரிந்து கொள்ளும் திறனும் அற்றவன் என்று நிரூபித்தேவிட்டாய்.
புரியாது போனவர் நீர் தானே ஐயா..
இளமை மனத்தை அள்ளி வீசும் இயல்புடையவன் நான். வழக்கொழியும் வழக்கு இல்லை எனக்கு.
போதுமுன் பிரதாபம். 'இலக்கணம்' தான் கவிதைக்கு எலும்பு. எலும்பு இல்லாத தசையும் இலக்கணம் இல்லாத இசையும் 'நிற்காது'. காலத்தைத் தாண்டி நிற்கும் தகுதி அற்றவன் நீ. உனக்கு 'புதுமை' பெயரடை ஒரு கேடு.
'மரபு'.. இந்த பெயரைச் சொல்லி பாருங்களேன். செத்து போனவன் தன் பெயரை தனக்குள்ளே சொல்லிப் பார்ப்பது போல் ஒரு உணர்வு வருகிறது. காலங்கடந்து நிற்பவன் கிழவன். அவன் உலகிற்கு அநாவசியம். புதுமையான இவ்வுலகில் புதுமைப்பட பிறப்பவன், பிறக்கின்றவன், இனி பிறக்க போகின்றவனே நானே. அதுமட்டுமன்றி உங்களுக்கு உட்கார கூட இடமில்லாத போது நிற்க இடமேது?
தம்பீ புதுக்கவிதை, நாவை அடக்கி பேச கற்றுக்கொள். இலக்கணம் இல்லாத உனக்கு தலைக்கணம் ஒரு கேடா! 'யாகாவாராயினும் நாகாக்க' என்று என் பிள்ளை ஒரு பாட்டு வைத்திருக்கிறான். அதை முதலில் படித்து திருந்த பார்.
கிழவ… மன்னிக்கனும். நீங்கள் என்னை தம்பீ என்று அழைத்தாலும் நரை கூடி குழறும் குரல் கொண்ட உங்களை என்னால் அண்ணனென்று அழைக்க முடியாது அல்லவா.
சரியாக சொன்னாய் பிள்ளாய். என்னிடமிருந்து பிறந்தவன் நீ. என் பாதம் பணிந்து 'அப்பனே' என்று அழை. அது தான் உனக்கு பொருந்தும்.
கிழவ, தந்தைக்குரிய இலக்கணம் அறியாமல் பேசுகிறீரே. என்னை பெற்றோர் காலம். காலத்தின் பெருங் கீர்த்தி நான். நீரல்ல!
காலம் உனக்கோர் காரணம். உண்மை அறி! என் பிள்ளை செய்த சிறு பாண்டம் நீ.
யார் அந்த பிள்ளை?
'பைந்தமிழ் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக்குயில் இந்நாட்டினைக்
கவிழ்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா'
அவனே உன்னை பெற்றெடுத்தான். அவன் சோர்வாக இருந்து யாம் கண்டதில்லை. மூச்சு விடுவதும் தளைக்கட்டி பாட்டு செய்வதும் அவனுக்கொன்றே. அவன்….
போதும்…போதும்.. நிறுத்து உன் பிள்ளைப் புகழை. உன்னைப் பாட அவன் எத்தனை காகிதத்தை கசக்கி எறிந்தானோ யார் அறிவார்? யாப்பாம் அணியாம் தளையாம் மாமுன் நிரையாம் விளம்முன் நேராம் எப்பப்பா… கிழவரே இதைக்கேளும்
'இலக்கண செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக் கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை'
இது தான் புதுக்கவிதையா? வரிக்கு இரண்டு வார்த்தை எழுதினால் கவிதை ஆகிவிடுமா? இது புதுக்கவிதையே அல்ல புது உரைநடை. இனி உன் பெயரை அப்படி மாற்றிக் கொள்.
படிப்படியாக தேய்ந்து அழிந்து மறைந்து கொண்டிருக்கும் நீர் மரபுக்கவிதை என்ற நும் பெயரை மறைக்கவிதை என்று ஏன் மாற்றிக் கொள்ளக்கூடாது?
பிள்ளாய்.. என் பெயரை நான் மாற்றிக் கொள்ளத்தான் போகிறேன். நானொன்றும் 'மரபு' பட்டத்தை ஏற்கும் 'பழையவன்' அல்லவே. என்னை எழுதுவோர் இன்றும் உளர். எனக்கு மறைக்கவிதை என்ற பெயர் பொருந்ததாது. முடிந்தால், முறைக்கவிதை என்று அழை.
ஐயா! பார்த்தீர்களா.. பழமையை ஏற்க உங்களுக்கே மனமில்லை. புதுமையை ஏற்பதே நம்போன்ற கவி சாதிக்கு அழகு.
அழகு தான். மிக அழகு. நன்றாய் பேச கற்றுக் கொண்டாய் தம்பீ. நான் என் பெயரை மாற்ற விரும்புவதே உன் போன்றோர்களால் தான். பழமை என்பதால் என்னை வெறுப்போர் முறைமையை அறிய தவறுகிறார்கள். முறை தவறுவோர்களால் சீக்கரம் செத்துப் போகும் கவிதை முளைக்கிறது. கொஞ்சம் நன்றாக யோசித்துப்பார். இன்றும் நிலையாக நிற்கும் புதுக்கவிதையை எழுதிய அனைவரும் முதலில் என்னிடம் இலக்கணத்தை படித்தவர்களே. நினைவில்லையா கொஞ்சம் இதைக்கேள்,
தோட்டத்தில் மேயுது
வெள்ளைப் பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது
கன்றுக்குட்டி
அம்மா என்குது
வெள்ளை பசு - உடன்
அண்டையில் ஓடுது
கன்றுக்குட்டி
நாவால் நக்குது
வெள்ளைப் பசு - பாலை
நன்றாய் குடிக்குது
கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது
வெள்ளை பசு - மடி
முட்டிக் குடுக்குது
கன்றுக்குட்டி
சாகாத கவிதை தான் ஐயா! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இலக்கணம் அறிந்த கவிஞர்கள் தான் சாகாத கவிதையை படைப்பார்கள் என்பதை மட்டும் என்னால் ஏற்கவே முடியாது. இலக்கணமறிந்தோர்க்கு சளைத்தோர் இல்லை எம் பிள்ளை. நீங்கள் கொஞ்சம் இதைப் படியுங்கள்.
'பேசும் பாரென் கிளியென்றான்
கூண்டைக் காட்டி வரவில்லை
வீசிப்பறக்கச் சிறகில்லை
வானம் கைப்பட வழியில்லை
பேசும் இப்போது பேசுமென
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல
பறவை யென்றால் பறப்பதெனும்
பாடம் முதலில் படியென்றேன்'
ஆகா…ஆகா…ஆகா.. கவிதை என்றால் இது கவிதை. உன் பிள்ளைகளில் இவன் கொஞ்சம் சமர்த்தனாய் படுகிறான் தம்பீ. இவனை பத்திரப்படுத்து. இவனுக்கு வேண்டிய வார்த்தையை மறுக்காமல் கொடுத்துவிடு. இவன் தந்த வேறு கவிதை ஒன்று கூறு…
"சற்று நேரம்
அணில் குட்டி எங்கள் வீட்டில் இருந்தது
நாங்கள்
அணில் குட்டியின் கிளையில் இருந்தோம்'
இவன் கொஞ்சம் இயற்கைப் பித்தன். இவனைப் போன்று ஆயிரமாயிரம் பிள்ளைகள் என்னிடமுண்டு. இன்னுமொன்று பாருங்கள்,
'விஞ்ஞானிகளுக்கு ஒரு
விண்ணப்பம்
கண்ணீரைக் குடி நீராக்கும்
மார்க்கத்தைக்
கண்டு பிடியுங்கள்
இந்தியாவிலே
இருக்கவே இருக்காது
தண்ணீர்ப் பஞ்சம்'
இவர்களில் ஒருவன் சினிமாவில் பாட்டெழுதும் பிள்ளை. அவனைக் காட்டிலும் ஆழ்ந்த பொருள் தரும் ஹைக்கூ எழுதுவார் இல்லை. அதில் ஒன்று,
'இன்று வேண்டாம்
நாளை வா நிலா
ஊட்டுவதற்குச் சோறில்லை'
தம்பீ, போதும்! இப்போது தான் நீ எனக்கொரு போட்டி ஆளாகவே படுகிறாய். இருந்தாலும் உலக இலக்கியமே என்னிடம் மண்டியிட்டு தோற்று போன பிற்பாடு உன்னால் என்னை வெல்ல முடியுமென்று நினைக்கிறாயா?
ஐயா, தந்தையை வெல்வது மகனின் கடமை. அதுவே தந்தைக்கு பெருமை. என்னை பிள்ளை என்று சற்றுமுன் நீங்கள் தானே கூறினீர். எனில் நான் உம்மை வெல்வது உங்களுக்கு பெருமையே அன்றி சிறுமையன்று. அதுபோல உம்மிடம் நான் தோற்றாலும் அஃதெனக்கு பெருமையன்றி சிறுமையல்ல…
சபாஷ்! பிள்ளாய், சபாஷ்! நீ என் பிள்ளை தான். உன் வளர்ச்சியை நான் தடுப்பது முறையாகாது. நீ வளர். இனி உன்னை தடுப்பார் எவருமிலர். நம்மை காக்க நம் தாயுள்ளாள். அவள் சூரியனுக்கு நிகரான செல்வத்தை கொண்டு அடக்கமுடன் நிற்பாள். அவள் நம்மை காப்பாள். நான் செய்த தவறை நீயும் செய்யாதே! பெண்ணைப் பற்றி பாடி பாடி இன் பொழுதை வீண் செய்யாதே. பெண்ணை காட்டிலும் அழகான வடிவங்களை இயற்கை நமக்கு அள்ளித் தெளித்திருக்கிறாள். அவளைப் பாடு. சமூகத்தைப் போற்று. அறத்தை ஆக்கு. தவறைச் சுட்டிக் கூற அஞ்சாதே. உண்மையை கூறி விட்டு அஞ்சாதே. புதுக்கவிதையை போற்றுவதோடு இலக்கணத்தையும் படி, அவை உனக்கு உதவும். புதுக்கவிதையில் இலக்கணத்தை சேர், புதுமரபை உண்டாக்கு. எனது லட்சியமே தமிழர்கள் முறையான தமிழ் இலக்கணத்தைப் படிப்பதில் தான் இருக்கிறது. உன்னால் முடியும். என்றுமே மறந்துவிடாதே.
மரபுக்கவிதை
மனம்மாறி தந்த
குறுகவிதையே
புதுக்கவிதை
தீசன்
சபாஷ் சரியான போட்டி!!
பதிலளிநீக்குமிகவும் அருமையான நடை. மேலும் வளர்க
பதிலளிநீக்கு