'களவழி நாற்பது' என்றொரு நூலுண்டு பதினெண் கீழ்கணக்கு நூலுள் இது ஒன்றே புற நூல்.
சோழ அரசன் கோச்செங்கண்ணானுக்கும் சேர அரசன் கணைக்கால் இரும்பொறைக்கும் நிகழ்ந்த போரை பற்றி பேசுவதால் இது போர்களம் பாடும் களவழி. பாடியவர் பொய்கையார்
கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையர் போலே பொய்கையாரும் கணைக்கால் இரும்பொறையும் நண்பர்கள்.
சோழ அரசனுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் திருப்போர்புறம் (கழுமலம்) எனும் ஊரில் நிகழ்ந்த கடுமையான போரில் கணைக்கால் இரும்பொறை தோற்கடிக்கப்பட்டு சோழனால் குடவாயில் கோட்டத்தில் சிறைவைக்கப்பட்டான்.
விஷயம் பொய்கையாருக்கு தெரிய வந்தது. உடனே கிளம்பினார் கழுமலத்திற்கு.. கோச்செங்கண்ணனை நேருக்கு நேரே கண்டார்.
'தண்' என்பது குளிர்ச்சியை குறிக்கும் சுத்த தமிழ் சொல். குளிர்வான நீரையே 'தண்ணீர்' என்போம். சூடாக உள்ள நீரை 'சுடுநீர்' என்போம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு வெந்து தணிந்த நீரையே 'வெந்நீர்' என்றாக வேண்டும்.
ஆனால் 'புனல்' என்பது அவ்வாறல்ல. அது நீரின் பண்பையும் குறிக்கும், வடிவத்தையும் குறிக்கும், நிலையையும் குறிக்கும். நீர், குளம், ஆறு, கடல், தண்ணீர், சுடுநீர் என அனைத்தையுமே குறிக்கும். இது ஏன்? திருஞானசம்பந்தர் சமண பௌத்த துறவிகளை எதிர்த்து பொறுமையாக வாதம் செய்தால் அதை 'புனல்வாதம்' என்று கூறுமளவிற்கு 'புனல்' எனும் வார்த்தைக்கு பலநல் பொருள் உண்டு.
சோழனை நேர்கண்ட பொய்கையார் 'நீர் நாட' என்று கூறவில்லை.
'நெல் நாட' என்று கூறவில்லை. 'வயல் நாட' என்றும் அழைக்கவில்லை. ஏன் சோழரின் பெருமைமிகு பட்டப்பெயரான 'காவரி நாட' என்று கூட கூப்பிடவில்லை. மாற்றாக மாற்றானை 'புனல் நாட' என்றார்.
புனலுக்கு தான் அந்த பக்குவம் உண்டு. தான் எந்த பொருளில் இப்போது இருக்கிறோம் என்பது கூட அதில் தெளியாது.
நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து,
முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல்
துப்புத் துகளின் கெழூஉம் புனல் நாடன்
தப்பியார் அட்ட களத்து.
ஆமாம்… பொய்கையார் என்னதான் பகையை பார்க்க வந்தாலும் அவரொரு புலவர்.
வாள் கொண்டு வரும் வீரன் தன் வேலையை செய்வது போலே கோல் கொண்டு வரும் புலவன் தன் வேலையை செய்தான்.
சோழனை புகழ்ந்தார். பாட பாட நண்பனை மறந்தார். நாற்பது பாட்டு தான். அனைத்துமே இரத்தினம்.
முத்தை ஆக்குவது சிப்பியாகவே இருந்தாலும் அதை அழகு மாலையாக்கி காட்டுவது அதில் மறைந்துள்ள கயிறு தான்.
அதுபோல கோச்செங்கண்ணன் பகையானாலும் அவன் மாவலி தடம் தெரிவதே இந்த களவழி நாற்பதின் துணையால் தான்.
என்றும் அழியாத செந்தமிழில் பாடி இனி தன்னையும் அழியாதான் ஆக்கிய பொய்கையாரை கவனிக்காது போவானா சோழன்.
'உனக்கு என்ன வேண்டும் கேள்?' என்றான் ராஜதொனியில்.
வந்த தடம் பிறழவில்லை. வைத்த குறி தவறவில்லை. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவரென எந்த வார்த்தையை எதிர்பார்த்து பொய்கையார் இவற்றை பாடினாரோ அந்த வார்த்தையை கேட்டுவிட்டான் சோழன். யோசிக்கவே இல்லை அடுத்த கணமே கேட்டார், 'கணைக்கால் இரும்பொறையின் விடுதலையை பரிசாக'
மாற்றானை மன்றாடும் புலவர்க்கு 'ஈண்டிய பொருளை வேண்டுவோர்க்கு விரும்பி வீசின்று' என்பது போலே மறுப்பேதும் இல்லாமல் அடுத்தகணமே அளித்தான் சோழன்.
காவலாளி வேகமாக வந்தான். கணைக்கால் இரும்பொறை சிறையிலே இறந்த செய்தியை தந்தான்.
ஆமாம்.. குடவாயில் கோட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த கணைக்கால் இரும்பொறையை முழுப்பகையாய் கருதிய சோழன் அவனுக்கு சோறளிக்க மறந்தான்.
மாற்றானை மதிக்காத சோழப்படை வீரர்கள் இரும்பொறைக்கு நீர் தரவும் மறுத்தனர்.
ஐயோ… நண்பன் மாய்ந்தான். பாவம் புலவர். என்ன செய்ய முடியும் அவரால்? காக்கத் துடித்து போற்றிய கோல் கண்ணீர் துடைக்க தூற்ற துவங்குமா..? முடியாதே… தமிழுக்கு அந்த திறன் இல்லையே. கொடுத்ததை திரும்ப பெறும் பழக்கம் தமிழுக்கு இல்லையே.
இன்னொரு காவலன் வேகமாக ஓடி வந்தான். சோழனின் காதில் சொல் ஒன்றை கூறி ஓலையொன்றை கையில் தந்தான்.
பிரித்தான்…பார்த்தான்…படித்தான்… அழுதான் சோழன்.
பொய்கையார் கையிலே ஓலையை கொடுத்தான். சோழ தேசத்தின் மீது இதுவரை படியாத கலங்கம் தன்னால் ஏற்பட்டதை எண்ணி கையறுநிலைக்கே சென்றான் சோழன்.
கண்ணீர் ததும்ப பொய்கையார் ஓலையை விரித்தார். இரும்பொறை எழுத்து. சாகும்முன் எழுதிய சேரனின் குறிப்பு.
பொய்கையார் படித்து முடித்தார். சிரித்தார். மேலும் சிரித்தார். சபை அதிர சிரித்தார். தமிழ் தன்னை கைவிட்டு விடுமோ என்று கருதி இருப்பார் போலும்..
சபைக்கே கேட்கும் படி சத்தமாக படித்தார்
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?
ஐயோ…என்ன இது? சோழ காவலர்கள் அழுகிறார்கள். மக்கள் அழுகிறார்கள். மந்திரிமார்கள் அழுகிறார்கள்.
சோழ நாட்டுக்கே வந்த பெருங்கேவலம் அல்லவா இது… அழாமல் எவ்வாறு இருக்க முடியம்.
"எங்கள் இனத்தில் குழந்தை இறந்து பிறந்தாலும் உருவமே இல்லாமல் பிண்டமாக பிறந்தாலும் அதற்கும் கூட மார்பில் வாளால் கீறுவதை தவிர்க்க மாட்டோம். அத்தகைய வீரக்குடிகள் நாங்கள். போர்களத்திலே என்னை கொல்லாமல் சிறையிலிட்டு நாய் போலே சங்கிலியால் கட்டி வைத்ததோடும் நில்லாமல், பசிக்கு உணவு தராமல் விட்டீர்.. வயிற்று பசி தணிய தண்ணீராவது கொடு என்றேன். வறண்ட வாய் 'தண்ணீர் தா' என இரந்து கேட்டும் தண்ணீர் தராமல் இருக்கின்றீரே! நீரெல்லாம் எவ்வாறு மறக்குடி யாவீர்? ஒரு வீரனே வந்து பிச்சை கேட்பது போல் இரந்து கேட்டும் அதையும் மறுக்கும் மானமற்ற மக்களே.. பிச்சை கேட்டும் மறுக்கும் நீங்களெல்லாம் மக்கள் தானா? உங்களையும் இந்த உலகம் தாங்கிக்கொண்டு இருக்கிறதா?.."
மன்றாடி கேட்டும் பசி தணிக்காத இவர் முன்னிலையில் வாழ்வதை காட்டிலும் சாவதே மேல் என மாய்ந்தான் சேரன் சிறையிலே…
சோழ தேசத்திற்கு ஏற்பட்ட பெருத்த அவமானம் இது. என்றும் பெருமைபட உரைக்கும் "சோழ நாடு சோறுடைத்து" எனும் வழக்கை நீங்காத பழியாக்கிற்று இப்பாட்டு.
தீசன்
பழைய தென்றலை இப்போது பார்க்க முடிகிறது. மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு