பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இதுநாள் வரை காற்றுவாங்கி கொண்டிருந்த அரங்குகளை கூட ஓயாமல் அலறவிட்டு தமிழ் திரையுலகை திரைகடலோடியும் திரவியம் தேடி வசூல் மழையை வாரி வாரிபொழிய செய்திருக்கிறது...!
அமரர் கல்கி அசராமல் தீட்டிய அமரகாவியம் எவ்வளவோ இருந்தாலும் அவரது படைப்பின் உச்சாணிக் கொம்பாக எப்போதும் நின்று,,, வாசிப்போர் எவரையும் வசீகரித்து வென்று,,, தன் மந்திரசுழலில் மதிமயங்கிட வைக்கிற உன்னத படைப்பாக 'பொன்னியின் செல்வன்' புதினமே இன்றுவரை திகழ்கிறது.
அந்த உலகத்தரம் வாய்ந்த வரலாற்று காவியத்தை வரலாற்று திரைக்காவியமாக மாற்றுவதற்கு பலர் முன்மொழிந்தபோதிலும் அதை வழிமொழிந்து தன்பாணியில் வரைந்து காட்டி இருப்பவர் இப்போதைக்கு இயக்குநர் மணிரத்னம்.. ஒருவர்தான்!
படம் பார்த்தவர்கள்...
நிறைய பேட்டிகளை கண்டவர்கள்.. ஏராளமான விமர்சனங்களை கேட்டவர்கள் இருப்பீர்கள்..
(வணிக நோக்கில் அவை ஒருசார்பு ஜால்ராவாகவோ.. அல்லது
நடுநிலை என்ற பெயரில் இருபக்கமும் ஒத்துஊதுவதாகவோ இருந்திருக்கலாம்..)
அதோடு... இந்த,
இயல்பான ரசிகன் ஒருவனின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், பிரம்மிப்புகள், ஏமாற்றங்கள், வாத பிரதிவாதங்களையும் கொஞ்சம் வாசித்து வையுங்கள்..!
கதை படித்தோருக்கு படம் எப்படி? கதை படிக்காதோருக்கு எப்படி?
நாவலை முழுவதும் வாசித்தோர் எவருமே அதிக எதிர்பார்ப்புடன் அரங்கில் நுழைந்திருக்க போவதில்லை.
நடைமுறை சாத்தியம் எதுவென அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
இருந்தாலும் கதைக்களம் இப்படி கன்னாபின்னாவென்று சிதறி நகரும்..(பறக்கும்) என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு காட்சியும் புரிந்துகொள்வதற்கு முன்னரே அடுத்த காட்சி பாதி ஓடிவிடுகிறது. கதை படித்தவர்களுக்கு படத்தில் காண்பிக்காத சில சம்பவங்களும் மனத்திரையில் ஓடும். அவர்கள் அதை இணைத்துப்பார்க்கவோ ஞாபகபடுத்தவோ முயன்றால் பெரிய குழப்பங்களை இதன் திரைக்கதை பரிசளிக்கும்.
ஒரு ஒரு கட்டத்தில் இது கல்கியின் கதைதானா? என்று கூட சந்தேகிக்க செய்யும். அதே நேரம் படித்து மறந்து போன சின்ன சின்ன சம்பவங்கள் காட்சியாக வந்து நிறைவளிக்கும்.
அரைகுறையாக படித்தோருக்கும்... அவசர அவசரமாக சுருக்க கதை கேட்டவர்களுக்கும்,, MGR ~ சிவாஜி காலத்துக்கு பிறகு தமிழில் சாகசங்கள் நிறைந்த ஒரு முழுநீள வரலாற்று படத்தை நீண்ட காலமாக எதிர்பார்த்தவர்களுக்கும்,, நடிகர் நடிகையர்களின் தீவிர விசிறி களுக்கும் இந்த படம் பிடித்துவிட அதிக வாய்ப்பு உண்டு.
படமே இவர்களுக்காகவே எடுத்தது போல் இருக்கிறது...!
கதையை கடுகளவும் தெரியாதவர்களுக்கு, வெகுஜன வெள்ளந்திகளுக்கு இது சுத்தமாக புரிய வாய்ப்பே இல்லை...! குறைந்த பட்சம் கதாபாத்திரங்களின் பெயர் மனதில் பதிந்தாலே அது ஆச்சரியம் தான்...! கமல் குரல் ஓபனிங்ல தந்த அறிமுக கதை... இந்த காதில் நுழைந்து அந்த காதுவழி போய்விடுகிறது.
அஸ்திவாரமே வலுவாக விதைக்கப்படாததால் முழு கதையும் அவர்களுக்கு தள்ளாட்டமாகவே இருக்கும்.
கதையின் இலக்கு எது என்பதை கிளைமாக்ஸில் கூட அவர்கள் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள்..! (உண்மையில் திரைக்கதையும் இலக்கின்றிதான் எடுக்கப்பட்டுள்ளது)
கதாபாத்திரங்களின் தேர்வு எப்படி? திரைக்கதையில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ளதா?
ஆதித்த கரிகாலன் (விக்ரம்)
ஆழ்வார்க்கடியான் நம்பி (ஜெயராம்)
பெரிய பழுவேட்டரையர்(சரத்குமார்)
சின்ன பழுவேட்டரையர் (பார்த்திபன்)
ஆகியோரது தேர்வு கண கச்சிதம்..!
ஆயினும் வீரத்தழும்புகளுடன் கட்டுடலை காட்டி மிரட்ட வேண்டிய பெரிய பழுவேட்டரையர் நந்தினிக்கு தாதி வேலை செய்யும் கோழைபோல காட்டியது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
சின்னவருக்கு இன்னும் கூட கம்பீரகாட்சிகள் சிறிதளவு காட்டியிருக்கலாம். தஞ்சை கோட்டைத்தளபதி யான அவர் ஏதோ ரவுடி கூட்டத்தின் தலைவன் போல காட்டப்பட்டுள்ளார்.
நந்தினி (ஐஸ்வர்யா ராய்)
சுந்தர சோழர் (பிரகாஷ்ராஜ்)
வானதி (சோபிதா துலிபாலா)
தங்கள் பிரத்யேக நடிப்புத் திறனால் மிளிர்கிறார்கள்..!
பூங்குழலி (ஐஸ்வர்யா லெக்ஷ்மி) பாத்திரம் ஓரளவு ஜீரணிக்க முடிகிறது.
வந்தியதேவனும்
அருண்மொழி வர்மனும் வராமல்... கார்த்தியும்
ஜெயம் ரவியுமே எல்லா படத்திலும் வருவதுபோல் வந்து போகிறார்கள். கதையின் ஓட்டமே அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருகிறதே தவிர அவர்களை நுட்பமான அறிவுடன் உயர்வாக காட்டி ரசிக்க செய்யும் காட்சி எங்குமே வரவில்லை.
ஏமாற்றம் தந்த பாத்திரம் உண்டென்றால் அது குந்தவை (த்ரிஷா) தான்.
நகைக்கடை விளம்பரம்
ஜவுளிக்கடை மாடல்
நவராத்திரி கொலு பொம்மை
என
அவ்வபோது அந்த ஜீவன் வந்து போகிறது. மேதாவி தனமான புன்சிரிப்பு தவிர
நடிப்பில் துளி உணர்ச்சியில்லை. உணர்வுபூர்வமான காட்சியும் அமையவில்லை.
(மனித குரங்குகளைகூட மயக்கும் அழகிகளாக மாற்றுமளவு நவீன ஒப்பனை தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. பார்க்க அழகாய் இருப்பது வேறு..! பாத்திரம் ஏற்று நடிப்பது வேறு..!)
பார்த்திபேந்திர பல்லவன்(விக்ரம் பிரபு)
பெரிய வேளாளர் (பிரபு)
வீரபாண்டியன் (நாசர்)
ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை. அவர்கள் அப்பாத்திரத்தை ஏற்றதாலேயே முக்கியத்துவம் வந்துவிடுமா என்ன?
கடம்பூர் சம்புவரையர்/ கந்தமாறன்/
மதுராந்தகன்/ செம்பியன் மாதேவி /பாண்டிய ஆபத்துதுதவிகள் /இலங்கை வேந்தன் மகிபாலன்/ கருத்திருமாறன் ஆகியோர் தம்மால் ஆனதை சிரத்தையோடு பண்ணியிருக்கிறார்கள்.
"அநிருத்த பிரம்மராயர்" என்றொருவர் வந்து போனதாக சத்தியம் பண்ணிசொன்னாலும் எவனும் நம்பமாட்டான்!
சேந்தன் அமுதன் (அஸ்வின்) தேவாரம் பாடுகிற,,, தெய்வீக மணம் வீசும்,,,
கல்கி தந்த மிக முக்கியமான திருப்பு முனை கதாபாத்திரம். திரைப்பட முதல் பாகத்தில் இவன் வீணடிக்க பட்டிருக்கிறான். தேவாரம் பாடவேண்டியவன் 'தெறி'பட வசனம் பேசுகிறான்.
மணிமேகலை என்றொரு பாத்திரம் வரவேயில்லை...! உச்சரிப்பில் மட்டும் அச்சொல் ஒருதரம் செவிப்படுகிறது.
குடந்தை சோதிடர் முதலான பல நல்ல கதாபாத்திரங்களை திரைப்படம் இழந்து விட்டதற்கு யாரைச்சொல்லி நோவது?
ஊமைராணி முகம்காட்டாமலே யானை மேல்வந்து தன் பங்கை ஆற்றிய தோடு 'மீம்ஸ்' போடுமளவு பிரபலமாகி விட்டார்..!
சோழநாட்டில் சாமான்ய பிரஜைகள் பேசிக்கொள்வது போல ஒரே ஒரு காட்சிகூட இடம்பெறவில்லை..!!
ஆளும் வர்க்கங்களுக்கிடையிலேயே முதல்பாகம் முடிந்து போகிறது!
இசை அமைப்பு & பாடல்கள் எப்படி..?
படத்தின் ஆகச் சிறந்த பலம்
பின்னணி இசை!!
இசை மட்டும் இல்லாமல் போயிருந்தால் படம் பல இடங்களில் சலிப்பை தந்திருக்கும். மட்டமான நாடக பாணி காட்சிகளை கூட ரஹ்மான் தனது மந்திரஜால இசையால் திகிலூட்டி நிமிர செய்கிறார். படம் உலகத்தரத்தில் இல்லை கொஞ்சம் குறைவுதான். ஆனால் இசை உலகத்தரத்தை விஞ்சி நிற்கிறது!!!
நந்தினிக்கு ஒரு இசை..
பழுவேட்டரையர் வரவுக்கு ஒரு இசை..
இலங்கை க்கு வேறு இசை..
கரிகாலனுக்கு என்று ஒரு இசை..
என படமெங்கும் இசையின் சாம்ராஜ்யம் படமெடுத்தாடும்..!
கோட்டை கதவை உடைத்து சோழ படை உள்ளே நுழையும்போது தத்ரூபமாய் சிலிர்பூட்டிவிடுவார்.
இறுதிக்காட்சியில் சுழல்காற்றில் கடல்கொந்தளிக்கும்போது நாமும் கலத்தோடு மூழ்கிவிடுவோம்...!
பாடல்களை பொறுத்தமட்டில்....,
முதல் பாடலும் (பொன்னி நதி)
சோழா சோழா(கொடி கொடி கொடி பறக்க..) பாடலும்
வரிகளும் இசையும் பொருந்தி அமர்க்களமாக இருக்கிறது.
முதலிரு நாட்களில் படம் பார்த்த சில நண்பர்கள் என்னிடம் "பொன்னி நதி பாத்துட்டியா..?"
"டேய் நாளைக்கு பொன்னி நதி பாக்க போறோம்.. நீயும் வரீயா..?" என்றுதான் கேட்டார்கள்.. படத்தின் பெயரையே திரிக்குமளவு அப்பாடல் தாக்கத்தை தந்திருக்கிறது.
கம்சனை கிண்டலடிக்கும்
ராட்சஸ மாமனே..! பாடலும் நன்று..!
பூங்குழலி கடலில் பாடுவது ஒன்னும் புரியல ஏதோ முனுமுனுக்கிறாள்.
தேவராளன் ஆட்டம் திகிலூட்டும்.
(கோச்சடையான், ஜோதா அக்பர் போன்ற வரலாற்று படங்களில் ரஹ்மானின் பாடல்கள் எல்லாம் முதல் தரமானதாக இருக்கும் இதில் மூன்றாம் தரம் தான்!)
காட்சி அமைப்பு/ஒளிப்பதிவு சமாச்சாரம் எப்படி..?
படத்தின் கதாநாயகனே காட்சிகள்தான்...!
அலைஅலையென மக்களை திரையரங்குக்கு வரவழைப்பதும், கதையே புரியாவிட்டாலும் கடைசிவரை இருக்கையில் அமரசெய்விப்பதும் அதன் தெள்ளத் தெளிவான வசீகர காட்சிகள்தான்.
100 ரூபாய்க்கு மேல் பணம் தந்து அரங்கில் அமர்ந்து பெரிய திரையில் படம் பார்க்க வேண்டுமானால் அதற்கு திருப்தி தரும் விதமாக காட்சிகள் இருக்கணும். பிறகு எதற்கு திரையரங்கு??
கதையும் கருவும் உள்ள நல்ல படங்களுக்கு TV யும் smartphone மே போதும் என்றாகிவிட்ட காலம் இது.
சில சின்னத்திரை சீரியல்கள் கூட திரைப்படங்களை விஞ்சி பிரமாதமாக காட்சிபடுத்தப்படுகின்றன. விஜய் டிவி மகாபாரதம் அதற்கொரு முன்னுதாரணம்.
அதற்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு!
இந்திய சினிமாவில் பாகுபலி போன்ற படங்கள் அத்தகைய தாக்கத்தை உண்டாக்கி பிள்ளையார் சுழி போட்டு விட்டனர்.
தமிழில்.. நவீன காலத்தில்... இதுதான்
அதை சாதித்த முதல் படம் !
கிராஃபிக் காட்சிகளை அதிகம் நம்பாமல்...
பழங்கால அரண்மனைகளை தேடித்தேடி இயல்பானதும் உன்னதமானதுமான இயற்கை பிரம்மாண்டத்தை கண்களுக்கு விருந்தளித்தமைக்கு இப்பட கலைஞர்களை மனதார பாராட்டலாம். (இருந்தாலும் சில கிராஃபிக் காட்சிகள் செல்போன் செயலியில் செய்ததுபோல சிறுபிள்ளை தனமாக தெரிகிறது)
தேவராளன் ஆட்டம் அசத்தல்!
அற்புதம்..! மிரட்டல்..! திகில்..!
தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒப்பற்ற ஒப்பனை..! வெறிகொண்ட நடனம். பழமையும் பாவனையும் புதுமையில் பூத்திருந்தது.
ரகசிய வழிபாதை என்ற பெயரில் ஏதோ ஜப்பானில் புல்லட் ரயில் போகிற சுரங்க பாதையை காட்டுவதும்.. அதில் தெருவிளக்கு ஏற்றியது போல தீ பந்தம் வரிசையாக இருப்பதும் தமிழ் ரசிகர்களை குறைத்து எடைபோடுவதாய் தோன்றுகிறது.
அகண்ட காவிரி வெள்ளமென பாய்ந்தோடும் பிரவாகத்தை இன்றைக்கு படம் பிடித்தால் கூட பிரம்மிப்பு தரும்.
படத்தில் சாதாரண சிற்றாறு தான் தென்படுகிறது.
திரைக்கதை எப்படி?? வசனங்கள் எவ்விதம்?
புதினத்தின் மிகப்பெரிய பலமும் பலரை இதை திரைப்படம் ஆக்க தூண்டியதும் கல்கி அணுஅணுவாக செதுக்கி வைத்திருக்கும் திரைக்கதை தான்!
ஆனால் என்னை பொறுத்தவரையில் இத்திரைப்படத்தின் பலவீன பட்டியலில்தான் இதன் திரைக்கதை இடம் பெறும்.
காரணம் எந்த ஒரு இடத்திலும் நின்று நிறுத்தி கதை விளக்கி சொல்லப்படவேயில்லை.
முக்கியமான பாத்திரங்களின் பெயர்கள் திரும்ப திரும்ப வசனத்தில் ஒலித்தால்தான் பார்ப்பவர் மனதில் பதியும்..
ஒவ்வொருவரின் தனித்திறன்/ குணாதிசயம்/ கதையில் அவர்களின் அழுத்தமான இடம்.. ஆகியன கட்டாயம் ஏதும் தாக்கம் தந்திருக்க வேண்டும்.
பரிபூரணமாக இந்த விஷயத்தை கோட்டைவிட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக கடந்த ஆண்டுகளில் வந்த அவெஞ்சர்ஸ் (END GAME)
என்கிற அமெரிக்க படத்தை எடுத்துக்கொண்டால்,, அதில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியே இன்னொரு முழுநீள படத்தின் கதாநாயகர்கள் தான். அவர்களின் தனித்திறமை கள் அந்ததந்த படங்களில் விரிவாக இருந்தாலும். குறிப்பிட்ட
இந்த ஒரு படத்தில் தத்தமது சூப்பர் சக்திகளை தமக்கென வரும் குறுகிய நேரத்தில் சரியான இடத்தில் வெளிப்படுத்தி திரைக்கதையை மேலும் சுவாரஸ்யபடுத்தி போவார்கள். முந்தைய பாகம் பார்க்காதவர்களுக்கும் அது திருப்தி அளிப்பதாக,,, அவர்களைப்பற்றி மேலும் அறிய தூண்டுவதாக இருக்கும்.
இங்கே பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனுக்கே அழுத்தமான கதாநாயக பிம்பம் இல்லை.
சாதூர்யமோ சாகசமோ அணுவளவும் இல்லை.
பாகுபலி படத்தில் ஹீரோ அசகாய சூரனாக இருந்தபோதிலும் போர்க்கள காட்சியில்.. வீரத்தால் அன்றி சாதூர்யமான விவேக செயல்பாடுகளால் வெல்வது போலத்தான் ராஜமௌலி வடித்திருப்பார்.
இலங்கை போரில் கப்பலில் கெத்தாக வந்திறங்கும் சோழ படை முதலில் பின்தங்குகிறது.. அருண்மொழி களம் இறங்கி ஏதோ செய்வார் போலும் என்று பார்த்தால் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் சோழர் படை வென்று விட்டார்களாம். உடனே கொடிதூக்கிவிடுகிறார்கள்.
அந்த காட்சிகள் பார்க்க அழகாய் ஆர்வமாய் இருந்தபோதிலும்
திரைக்கதையில் சொட்டு அழுத்தம்கூட இல்லையே...! ஏன் மணி?
கதைக்களம் நிகழும் ஒவ்வொரு ஊரையும் கீழே போடுகிறார்கள்...
அதை வரைபட பாணியில் வந்தியத்தேவன் பயணமாக காட்டுவதில் என்னசிக்கல் வந்துவிட போகிறது..??
ஒவ்வொரு ஊர்காரர்களுமே படத்தை கொண்டாடியிருப்பார்களே..!
கதையின் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்துவதும் சுவாரஸ்யமான சம்பவங்களின் மர்ம பூமியாக திகழ்வதுமான கோடியக்கரை என்ற ஊரையே படக்குழு முற்றாக புறக்கணித்திருப்பது அவ்வூர் காரன் என்ற முறையில் மாபெரும் வருத்தம் எனக்கு வெஞ்சினம் மிஞ்ச வெளிவருகிறது..!
பெரிய கதை... நீண்ட நாவல்.. நிறைய பாத்திரம்.. ஏகப்பட்ட ஊர்கள்..
குறைந்த நேரத்தில் எப்படி காட்டுவது?? என்று சப்பைக்கட்டு கட்டுவோருடன் என்னால் சமாதானம் செய்துகொள்ள இயலாது.
காரணம் தேவையில்லாமல் கரிகாலன் விக்கிரமுக்கும் குடித்துவிட்டு கூத்தாடும் அந்த படையினர் கூட்டத்துக்கும் அதிக காட்சிகளை அர்த்தமின்றி அநாயசமாய் வீணடித்திருக்கிறார்கள். நந்தினி ~ பழுவேட்டரையருக்குமே தேவையில்லாத காட்சிப்படுத்தல் காலத்தை தின்று தீர்க்கிறது...!
படம் நெடுக மற்றொரு பாத்திரமாக வானில் வால்நட்சத்திரத்தை காட்டினாலே போதும் என்றுநினைத்துவிட்டார்கள் போலும்.... கல்கியின் பெரும்பாலான வர்ணனைகள் தினந்தோறும் வளர்ந்து தேயும் வெண்ணிலவின் பின்னணியில் நிகழ்வதை,, மணி மறந்துவிட்டார்!
வந்தியத்தேவன் பாத்திரம் ஆழ்வார்க்கடியானையும் சேந்தன் அமுதனையும் எத்தனை நாசூக்காக லாவகமாக பக்குவமாக பேசி அணுகி கையாளுவதாக கல்கி
வடித்திருப்பார் என்று படித்தவர்களுக்கு தெரியும். புதினத்தில் வந்தியத்தேவனின் கைஜாலத்தை விட வாய்ஜாலமே ஓங்கி நிற்கும். ஆனால் மணிரத்தினத்தின் வந்தியதேவனோ நம்பியையும் அமுதனையும் பார்த்தமாத்திரத்தில் வரம்புமீறி தாக்கி அநாவசிய வன்முறையை மெலியாரிடத்து காட்டுவது போல அமைந்துள்ளதே இது நியாயமா?? கதாநாயகன் செய்கிற செயலா இது??
அது போகட்டும்...
மற்ற எந்த மொழிபடங்களுக்குமே கிட்டாத வெற்றி தமிழ் படங்களில் வசனங்களுக்காகவும் அதன் மொழிநடைக்காகவும் கிடைக்கும். இது வரலாறு.
அண்மையில் வந்த தெலுங்கு பாகுபலியும்,,
கன்னடத்து KGF படமும் அதன் டப்பிங் வசனங்களால் தான் தமிழகத்தில் மாபெரும் வசூலை எடுத்ததோடு அல்லாமல் மக்களால் இளைஞர் களால் அதிகம் பேசப்படும் பொருளானது என்பதையும் மறுக்ககூடியவர் எவரேனும் உண்டா..??
தென்னக திரையுலகில் சூப்பர் ஸ்டார்கள் உருவானது எல்லாமே 'பஞ்ச்' டயலாக் பேசி தானே..!
தமிழகத்தின் பொற்கால கட்டத்தை காட்டி எடுக்கப்பட்ட இப்படத்தில் எதுகை மோனை வசனங்கள் மருந்துக்கு கூட இல்லாமல் வறண்டு போய் இருக்கிறது... அட..!சங்கத்தமிழ் வேண்டாமய்யா.!!. குறைந்தபட்சம் ஒரு சாலமன் பாப்பையா தமிழாவது இருந்திருக்கலாம்.. அல்லவா? வசனத்தில் சங்கீதமும் இல்லை இங்கீதமும் இல்லை.
குந்தவையும் நந்தினியும் சந்திக்கிற காட்சியில் வசனம் வரிந்து கட்டி விளையாடி இருக்க வேண்டாமா..?
அதுசரி! மணிரத்னம் படத்தில் வசனத்தை எதிர்பார்ப்பது எங்ஙனம்?
ஏதோ அந்த காட்சியும் கூட
ரஹ்மான் இசையால் ஒருவழியாக உயிர் பிழைத்தது..!
மந்திராலோசனை மண்டபத்தில் மதுராந்தகன் வந்து குறுநில மன்னர்களிடத்து தனக்கு ஆதரவு கேட்கும் காட்சி,,, ஏதோ எதிர்கட்சிகாரர்கள் வார்டு மெம்பர் எலக்ஷனுக்கு வாக்கு கேட்டு வருவதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது...!
நகைச்சுவை என்ற பெயரில் உளறுகிற தருணங்களை வெகுஜனங்களும் ரசிக்கவில்லை..! இலக்கியம் பயின்றோரும் ருசிக்கவில்லை..!
வீரர்கள் "வெற்றி வேல்..! வீரவேல்..!" என்று சொல்லும்போதெல்லாம்,, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வடிவேலுதான் ஞாபகம் வருகிறார்..!
படத்தொகுப்பு (Editing) ...?
முதல் பாடலில்...
பாடலாசிரியர் இளங்கோவின் அருமையான வரிகளில்
"நீர்சத்தம் கேட்டதுமே நெல்பூத்து நிற்கும்..
உளி சத்தம் கேட்டதுமே கல்பூத்து நிற்கும்..
பகை சத்தம் கேட்டதுமே
வில்பூத்து நிற்கும்..
சோழத்தின் பெருமைகூற
சொல்பூத்து நிற்கும்..!"
என்று வரும் போது அதை கண்முன் காட்சிபடுத்துவதை தவிர மணி &கோ குழுவுக்கு வேறென்ன வேலை?? எதை எதையோ சம்மந்தமின்றி காட்டுகிறார்கள்.
அடுத்தடுத்த வரிகளில் பொட்டல் கடந்து, புழுதி கடந்து, கரிசல் கடந்து என வருகிறது..
ஆனால் அதை மாற்றி மாற்றி காட்சிபடுத்தியதால்,,, ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானால் கொலைசெய்யப்பட்டு உயிருக்கு போராடும் அந்த நற்றமிழ் சொற்கள் எல்லாம்.. காட்சியும் கைவிட்டதால், வீர சொர்க்கம் எய்திவிட்டன..!!
கொடி கொடி கொடி பறக்க பாடலிலும்..
கூட்டமாக நின்று கள் வெறி ஆட்டம் போடுவதை காட்டாமல் வீரமிகு யுத்தகாட்சி எதையாவது காட்டியிருக்கலாம். நல்ல பாட்டு ,,, but (scene)சீன்...வீண் !!
ஒரே சமயத்தில் இருவேறு இடங்களில் நிகழும் சமகால காட்சியை காட்டுவது. கடந்த நிகழ் எதிர்கால காலபயணம் செய்வது. திரைக்கதையை முன்னும் பின்னுமாக மாற்றி சொல்லி பார்வையாளர்களை யோசித்து புரிந்து கொள்ள வைப்பது.. மூளைக்கு வேலை கொடுப்பது... என பல அம்சங்கள் எடிட்டிங் மூலம் செய்யலாம்.
சொல்லப்போனால் கல்கி இதை தன் எழுத்திலேயே செய்து காட்டி அசத்தியிருப்பார்...!!
திறமையான எடிட்டர் கள் எத்தனையோ திரைக்கதைகளை மெருகேற்றி இருக்கிறார்கள்.
இங்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை..!!! சிம்ப்ளி வேஸ்ட்!!
படமாக்கியதில் ஏதும் அரசியல் செய்துள்ளனரோ...?
திட்டமிட்டு நீக்கப்பட்ட காட்சிகள் யாவும் மதத்தை முன்நிறுத்துபவை...!!
முழுசோழநாட்டில் ஒரு கோயில் கூட காட்டப்படவில்லை..
(தஞ்சை பெரிய கோயில்தான் அக்காலத்தில் கட்டப்பட வில்லை யே தவிர தமிழகத்தின் பெரும்பாலான ஆலயங்கள் அதைவிட மிகப்பழமையானவையே..)
குறிப்பாக படம் எடுத்தபோது சிவனுக்கு உரிய சைவ தடயங்கள் ஏதுமின்றி எடுத்தனர்போலும்..
கோடியக்கரை குழகர்கோயிலும் அதனாலேதான் படக்குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆடிப்பெருக்கு பண்டிகை
குடந்தை சோதிடர்
சம்மந்தப்பட்ட காட்சிகள் காணாமல்போனதும் மத அரசியல் தானோ என்னவோ??!
விக்கிரமுக்கு நெற்றிப்பட்டை போட்டதே பிற்பாடுதானாம்..! (Photoshop)..?
மதுராந்தகன் தன் ருத்ராட்ச மாலையை அறுப்பது போன்ற தேவையற்ற காட்சி திணிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் படம் எப்படி?
தமிழ் திரையுலகிற்கு இது ஒரு நல்வரவு..!
சிறந்த முன்னெடுப்பு..!
ஆடின காலும் பாடினவாயும் சும்மா இருக்காது என்பதுபோல...
இரண்டாயிரம் பக்கங்களை கடந்த நாவலை படித்துவிட்டு ஒருவரால் அதிலிருந்து அவ்வளவு எளிதில் மீள இயலாது.
கதை படித்த பலரது நெஞ்சிலும் பலவித வண்ணங்களில் அது உறைந்திருக்கும்.
மணிரத்னம் தன்மனதில் நின்றதை காட்டிக்கொள்ளும் வரம் பெற்றிருக்கிறார்.
சினிமாவில் விருப்பமுடைய யாவரும் காணவேண்டிய தரமான படம் தான். மாற்றுக்கருத்து இல்லை..! ஆனால் அதேநேரம் அதிலுள்ள குறைகளை சொல்லாமல் கண்மூடித்தனமாக ஆமோதிப்பது அடுத்துவரும் படங்களின் தரத்தையும் ரசனையையும் மேன்மேலும் குறைத்துவிடும்..!!
திருவிளையாடலில் நக்கீரர் சொல்வதுபோல்,,
"தருமியே! சரியான பாடலுக்கு எம் மன்னர் பரிசளிக்கிறார் என்றால் அதைக்கண்டு மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான் தான்...!! அதே நேரம் இறையனாரும் எம்பெருமான் முருகவேளும் அகத்தியரும் கட்டிக்காத்த தமிழ்ச்சங்கத்தில் பிழையான பாடலுக்கு பாண்டியன் பரிசளித்தான் என்றால் அதைக்கண்டு வருத்தப்படுவதும் நான் தான்..!!"
நான் கீரனும் அல்ல!
மணி தருமியும் அல்ல..!
ஆனால் அன்றைய தமிழ்ச் சங்கமும் இன்றைய சினிமா உலகமும் ஒருவிதத்தில் ஒன்று.
ஒட்டுமொத்த சமூகத்தையும் பரிணாம தடத்தில் அடியோடு புரட்டிபோடுகிற வல்லமை இரண்டிற்கும் உண்டு...!
ஆதலால் சொல்கிறேன்..
தரமானதை தேடி நேசியுங்கள்...
உயர்ந்த கொள்கைகளை எதிர்பாருங்கள்..
கலைஞனையும் அவன் கலையையும் ரசித்து பழகுங்கள்...!
இரண்டாம் பாகம் இன்னும் தரம் கூடி மெருகேறி வர வேணும்..!!
சூரியராஜ்
பொன்னியின் செல்வன் பாகுபலி compare செய்ய வேண்டாம்
பதிலளிநீக்குபடம் பார்ப்பதற்கு முன்பு வரை அப்படிதான் நானும் நினைத்தேன். "பார்த்த பிறகு ஏன் செய்ய கூடாது?" என்று தோன்றியது..
நீக்கு2500 பக்கங்களை இரண்டரை மணி நேரத்தில் சுருக்குவதால் இந்த பிரச்சனை.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇரண்டு பாகமாக எடுப்பதால் 5மணிநேரம் கிடைக்கும். ஒவ்வொரு பாகமும் ஒருமணிநேரம் என சுருக்கிக் கொள்ளலாம். திரைக்கதைக்கே நேரமில்லாத போது பாடல் காட்சிக்கு என்று வீணில் நடனமாடிக் கொண்டிருக்க கூடாது
நீக்குநான் பொன்னியின் செல்வன் படித்திருக்கிறேன். படம் மிகவும் நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குகூற்று சரி.காரணம் தவறு.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு