அண்மை

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியமா?

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியமா?

Download PDF 

READ THIS ESSAY IN ENGLISH - CLICK HERE



🔴 இதையும் காண்க


> செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழலாமா?


> விண்வெளிக் குப்பைகள் தணிக்கும் முறை


முன்னுரை


'மனித நாகரிகம் சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையானதாய் இருக்கலாம்' என்று சில அறிவியல் ஆய்வுகள் கூறுகிறது ஆனால் மனித பரிணாம வளர்ச்சியின் துவக்கம் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்னதாகவே தொடங்கி இருக்கக்கூடும் என்று அறிவியல் அறிஞர்கள் கணக்கிடுகிறார்கள். ஹோமோ எபிலீஸ், ஹோமோ எரெக்ட்டர்ஸ், நியன்ட்ரத்தால் மனிதன், ஹோமோ செபியன் என்ற தற்கால மனிதன் என மனிதனின் பரிணாம வளர்ச்சி கூடவே அவனது செயல்களும் மொழியும் அறிவும் பரிணாமம் அடைந்தது. அதே மனிதனின் தேவையை இன்று அறிவியல் கூடியமட்டில் பூர்த்தி செய்து கொண்டு இருக்கிறது. தற்போதைய ஆய்வின் படி இந்த சூரிய குடும்பம் முழுவதிலும் மிக அறிவான உயிரினம் மனித குலமே ஆகும். அத்தகைய மனித குலத்தினரான நமது அடுத்த இலக்கு செவ்வாய் கிரகம். பூமிக்கு அடுத்தான நிலையில் உள்ள ஒரு கிரகம் நமக்கு கடந்த நூற்றாண்டு முதலே தேவையென உள்ளது. அதன் முக்கியத்துவம் கருதியே 'செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியமா?' என்ற ஆய்வுக் கட்டுரையே இது.


செவ்வாய் கிரகத்தின் தேவை


பரந்து அகன்ற இப்பூமி நம் உள்ளங்கையில் நெல்லிக் கனி போல் இருக்கையில் மின்னி வானில் புள்ளி போல் தெரியும் செவ்வாய் கிரகத்தை மனிதன் அடைய விரும்புவது ஏன்? என்பதை அறிதல் அவசியம் ஆகும்.


"ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்" எனும் புத்தகத்தில் விண்வெளி அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் செவ்வாய் கிரகத்தின் தேவையை இவ்வாறு பதிவு செய்கிறார்:

  1. முதலில் நமது பூமி நமக்கு போதாத அளவுக்கு சிறியதாக சுருங்கிக் கொண்டிருக்கிறது. 
  2. நம்முடைய வளங்கள் அபாயகரமான வேகத்தில் சுரண்டப்பட்டு கொண்டிருக்கின்றன. 
  3. பருவநிலை மாற்றம் எனும் பேரழிவான வெகுமதியை நாம் நம் பூமிக்கு அளித்துள்ளோம். 
  4. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெப்பநிலை
  5. தொடர்ந்து சுருங்கி வரும் துருவ பனி அளவு 
  6. மிகப்பெரிய அளவில் காடுகள் காலி ஆகுதல்
  7. அளவுக்கு மீறிய மக்கட்தொகை பெருக்கம் 
  8. நோய், போர், பட்டினி, நன்னீர் கிடைக்காமை. 
  9. போன்றவை செவ்வாய் கிரகத்தின் தேவையை அறிவியல் அறிஞர்களுக்கு அதிகப்படுத்துகிறது

அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வது படி, செவ்வாய் கிரகத்தை நாம் வாழும் சூழ்நிலைக்கு இன்றிலிருந்தே தயார்ப்படுத்த முனையவில்லை எனில் செவ்வாயில் உயிரை காப்பாற்றி கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம்.


செவ்வாய் கிரகத்தில் உயிர்


தற்போதைய ஆய்வுபடி செவ்வாய் கிரகத்தில் எந்த உயிரும் இல்லை ஆனால் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. 


செவ்வாய் கிரகத்தின் துருவப் பகுதியில் பூமி போன்றே நீர் உறைந்து இருப்பதை நாசா உறுதிப்படுத்தி உள்ளது.


அதேப்போல செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் CO² 'கார்பன்-டை-ஆக்ஸைடு'னால் நிரம்பி உள்ளது. 


இதனால் தாவரங்கள் செவ்வாயில் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை உண்டாக்க முடியும்.


வறண்டு போன ஏரிகளும் தூர்ந்து போன கால்வாய்களும் செவ்வாய் கிரகத்தில் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள். இதனால் செவ்வாய் கிரகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உயிர்கள் வாழ்ந்த தடத்தை அறிய முடிகிறது. ஒரு காலத்தில் அங்கு இளஞ்சூடான ஈரமான ஒரு சூழல் இருந்திருக்க வேண்டும், உயிர்கள் தோன்ற அது வழிவகுத்து இருக்கும்.


தற்போது செவ்வாயில் உயிர்கள் இல்லாமல் போனாலும் உயிர்கள் தோன்றவோ வாழவோ இயலாத சூழலை செவ்வாய் கொண்டிருக்கவில்லை.


செவ்வாய் தரும் சவால்கள்


செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ சாத்திய கூறுகள் அதிகமாக இருந்தாலும் அந்த கொடிய வறண்ட கிரகம் தரும் சவால்களும் அதிகம்.


பூமி நமக்கு வஞ்சகம் இல்லாமல் தருவதும் செவ்வாய் தராததுமான மிகப்பெரிய சவால் 'புவியீர்ப்பு விசை'


செவ்வாயில் பூமிக்கு நிகரான புவியீர்ப்பு விசை இல்லை. இதுவே செவ்வாய் கிரகத்தை காலனிப்படுத்த நினைக்கும் நம் எண்ணத்திற்கு முட்டு கட்டையாய் நிற்கிறது. நாகரிகம் உள்ள மனிதன் இன்னொரு கிரகத்திற்கு சென்று வானத்தில் மிதந்து கொண்டே வாழ விரும்ப மாட்டான். 


அடுத்தது விண்வெளி கதிர்வீச்சு. பூமியைத் தவிர்த்து பிற அனைத்து கிரகங்களும் சூரியனின் வெப்ப வீச்சை வடிகட்டாமல் அப்படியே தனக்குள் இழுத்துக் கொள்கிறது. பூமி மட்டுமே தனது ஓசோன் படலத்தால் சூரிய கதிர்களை வடிகட்டி அனுப்பி உதவுகிறது. இன்றைய மனிதனின் சராசரி வயது 60. ஓசோன் படலம் இல்லையெனில் 30ஆக இருந்திருக்கக் கூடும். இதே நிலை செவ்வாயில் உள்ளது. அங்கே சூரிய கதிரை வடிகட்ட எந்த படலமும் இல்லாதது பெரும் பாதிப்பைத் தரும்.


இத்தோடு செவ்வாய் கிரகத்தில் உணவு வளத்தை பெருக்குவதும் ஆபத்திற்கான மருத்துவ வசதியை உண்டாக்குவதும், போக்குவரத்து கட்டமைப்புகளை அமைப்பதும் அத்துணை எளிதான காரியங்கள் அல்ல. இதனால் அங்கே குடியேறும் மனிதன் உளவியல் ரீதியான பல சவால்களை சந்திக்க வேண்டிவரலாம்.


விண்வெளி மனிதர்கள்


இருந்தாலும் இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் மனிதர்களை நம்மால் உருவாக்க இயலும். பொதுவாக இந்த சவால்களையே வாழ்க்கை பாடமாக கற்போரே 'விண்வெளி மனிதர்கள்'. 


'விண்வெளி மனிதர்கள்' விண்ணில் ஏவப்படும் விண்கலங்களின் உதவியால் செவ்வாய் கிரகத்திற்கு சென்றப்பின் உயிர் வாழ தகுதிவாய்ந்த கிரகமாக செவ்வாயை மாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் அவர் தன்னை செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ தகுதி உள்ளவராய் மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.


இன்றைய சர்வதேச விண்வெளி வீரர்களே இதற்கு உகந்தவர்கள். நான்கு பக்கமும் இருளையும் தனிமையையும் விளையாட்டாக பழகி இருக்கும் அவர்கள் விண்துறை மட்டுமல்லாது பொதுவாக அனைத்து துறையிலுமே சிறந்தவர்களாக இருப்பார்கள். 'தி மார்ஷியன்' எனும் திரைப்படத்தில் செவ்வாய் கிரகத்தில் அசம்பாவிதமாக மாட்டிக் கொண்ட ஒரு விண்வெளி வீரன் தனி ஒரு நபராகவே தான் சிக்கிய பகுதியை தனது சிறுநீர், மலத்தைக் கொண்டே மனிதன் வாழு தகுதி உள்ள பகுதியாக மாற்றுவதை காண்பித்து இருப்பார்கள். வெறும் திரைப்படம் என்பதோடு அஃதை கடந்து விட முடியாமல் நமது இன்றைய அறிவியல் தொழிற்நுட்பத்தினால் செவ்வாய் கிரகத்தை உயிர் வாழ தகுந்த கிரகமாக மாற்றிக் கொள்வதை அதன்மூலம் அறியலாம்


எலான் மஸ்க் திட்டம்


எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் (spaceX) மிஷன் மார்ஸ் திட்டம் வருங்கால தலைமுறை பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு சென்று வரும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதையே தன் தலையாய நோக்கமாக கொண்டு உள்ளது. 


"செவ்வாய் கிரகத்திற்கு சென்று நட்சத்திரங்களுக்கு மத்தியில் நின்று உற்சாகமாக இருப்பதை எண்ணி பார்ப்பதை விட வேறு ஏதும் எனக்கு மகிழ்ச்சியை தருவதில்லை" என்கிறார் எலான் மஸ்க். 


SpaceX மட்டுமல்லாது அமெரிக்க அரசாங்கத்தின் NASA ஆய்வு மையமும் பூமி மக்களை செவ்வாயில் குடியமர்த்துவதையும் செவ்வாய் கிரகத்தை கைப்பற்றி காலனிப்படுத்துவதையும் தனது லட்சியமாக கொண்டு உள்ளது. வளர்ந்த உலக நாடுகளின் ஆதிக்கப் போட்டியாகவும் செவ்வாய் கிரகம் உள்ளது.


எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக் கூடிய அனைத்து சாத்தியமும் இருப்பதாகக் கூறுகிறார். 


"பூமியில் பிறந்த நான் இறக்கும் போது செவ்வாய் கிரகத்தில் இருப்பேன்" என்று எலான் மஸ்க் அவர்கள் கூறியது உலக மக்கள் அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் தன் கனவினை நிஜமாக்க நம்பிக்கைத் தருகிறது


முடிவுரை


மனிதனின் அறிவால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. நிலவைக் காட்டி கதைச் சொல்லிய காலம் சென்று கால் வைத்து கொடி பதித்த காலத்தையுமே கடந்து விட்டோம். ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வது படியே விண்வெளியில் நமது அடுத்த இலக்கு நிலவும் செவ்வாய் கிரகமும் தான். பூமியின் பற்றாக்குறையும் செவ்வாய் கிரகம் தரும் சவால்களும் உண்மையிலே பெரும் அச்சுருத்தலாக இருந்தாலும் மனித குலத்தின் அறிவியல் வளர்ச்சி இந்த பெரும் சவால்களை தகர்த்து எறியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். செவ்வாய் கிரகத்தை காலனிப் படுத்துவதற்கான மனித முயற்சி இன்னும் சில ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ்வதை நிச்சயமாக சாத்தியமாக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை